தலைப்பு

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பிரசாந்தி வளாகத்தில் பிரபஞ்ச அனுபவம் பெற்ற பஞ்சாப் மாணவரின் அற்புதக் கதை!


வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசு எது?

இறைவனை அறிந்துணர்ந்த பின் அவராகவே உய்வதற்கு உள்ளங்கொண்டு இன்றும் உதாரணமாக வாழும் சுவாமியின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் "ஸ்ரீ M. கிஷோர்" அவர்களின் வாழ்வின் ஆச்சர்யமான மற்றும் அதிமுக்கிய சம்பவங்களை விவரிக்கும் கட்டுரைத் தொடர்...








🌹ஒரு 'விபத்தால்' உணர்தல்:

அது  1986ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், 27 வயதான கிஷோர் மதம்ஷெட்டிவார் அதிகாலையில் எழுந்து பஞ்சாபின் மோகாவிலிருந்து புதுதில்லிக்கான 350 கிமீ பயணத்திற்கு தயாராகத் தொடங்கினார். அது அவரின் வாழ்வில் முக்கியமான பயணங்களில் ஒன்றாகும். தன்னுடைய வருங்கால மனைவியின் இல்லத்திற்கு முதன் முதல் அவர் செய்யப்போகும் பயணம் அது. கிஷோரின் அலுவலக ஜூனியர்களில் இருவர் தில்லி செல்லவேண்டியிருந்ததால் அவர்களும் கிஷோருடன் ∴பியட் (பிரீமியர் பத்மினி கார்) காரில் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினர்.

∴பியட் (பிரீமியர் பத்மினி கார்) 

 கிஷோர் மோகாவில் உள்ள NESTLEவின் கன்டென்ஸ்டு மில்க் பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கிஷோர் தனது வீட்டை ஒட்டிய கட்டிடத்திற்கு சென்றார். அந்த கட்டிடம்  பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா 1973 ஆம் ஆண்டு மோகாவிற்கு விஜயம் செய்தபோது அவர் வசிப்பிடமாக செயல்பட்ட கட்டிடம். அன்றிலிருந்து அந்தக் கட்டிடம் ஒரு கோவிலாக கருதப்பட்டது. பயணத்திற்கு முன் கிஷோர் உள்ளே சென்று தனது நமஸ்காரம் செய்ய விரும்பினார். கிஷோர் பாபாவின் பக்தரோ அல்லது பாபாவைப் பின்பற்றுபவரோ அல்ல.

இருப்பினும் அவரது குடும்ப குருவான சந்திரபூரின் (மகாராஷ்டிரா) ஸ்ரீ மல்ஹாரி பாபா அவரிடம், “ஸ்ரீ சத்ய சாயி பரிபூர்ண அவதாரம்” (முழுமையான அவதாரம் ) என்று கூறியிருந்தார். மேலும் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்; "ராமர் அல்லது கிருஷ்ணருடன் சத்ய சாயி பாபாவை ஒப்பிடுவது தவறு, ஏனென்றால் இப்படி ஒரு அவதாரம் இதுவரை நடக்கவில்லை, இனிமேலும் நடக்காது... நேரம் வரும்போது, நீங்கள் அவரைச் சந்திப்பீர்கள்".

மல்ஹாரி பாபாவின் படம்

ஆக பயணத்தைத் தொடங்கும் முன், கிஷோர் தனது குருவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்  விதத்தில் இந்த விதமான மரியாதையை சத்யசாயி பாபாவுக்கு செய்தார். 

வாகனம் சுமூகமாகவும் வசதியாகவும் இருந்தது. இரண்டு மணி நேரத்தில், ஃபியட் கார் லூதியானாவைக் கடந்தது, தில்லி செல்லும் சாலையின் முதல் மைல்கல். அப்போது அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போர் விமானங்களைப் போல, அந்தக் முழுமையாக சுழன்று  உருண்டது ஆனால் சுழன்று முடிவில் அதிசயமாக சாலையில் நேராக நின்றது. கிஷோர் தன் ஜூனியர்களைப் பார்த்தார். அவர்கள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்தனர் ஆனால் அவர்கள் முகத்தில் திகில் தெரிந்தது. அவர்கள் கிஷோரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர், ஏனென்றால் கிஷோருடய தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கார் உருண்டபோது ஏற்பட்ட கலவரத்தில், கிஷோரின் தலையில் ஏதோ ஒன்று கடுமையாகத் தாக்கியதில், அவர் தலை பிளந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர் அவனைப் பார்த்து, “இது மனிதனா அல்லது உயிருள்ள பேயா? மிக மோசமான நிலைமையில்  இருக்கிறார்” என்று அதிர்ந்து கூறினார். டாக்டர் என்ன பேசுகிறார் என்று கிஷோருக்குப் புரியவில்லை. ஏனென்றால் கிஷோர் வலியை உணரவில்லை. ஆனால், அவருக்கு கடுமையான ரத்த இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லை. எனவே மயக்க மருந்து இல்லாமல், ரத்தப்போக்கை நிறுத்த டாக்டர் பதினைந்து தையல் போட்டார். அதோடு  2-3 பாட்டில் இரத்தமும் அவருக்கு ஏற்றப்பட்டது. டாக்டர் கிஷோரிடம் கூறினார் ; " முழுமையான சிகிச்சைக்கு… நீங்கள் விரைந்து  எய்ம்ஸ் (டெல்லி) அல்லது சிஎம்சி (லூதியானா) செல்ல வேண்டும். நான் செய்தது ஒரு தற்காலிக சிகிச்சை மட்டும்தான்”

கிஷோர் , "ஒரு சின்ன முள்" குத்திய வலி கூட உணராததால், டாக்டருக்குக் கீழ்ப்படியாமல் டெல்லிக்கு செல்ல முடிவு செய்தார் - மருத்துவமனைக்கு அல்ல, அவர் முதலில் திட்டமிட்ட வேலைக்காக.  மிகவும் தீவிரமானதென்றால் எப்படி வலியில்லாமல் இருக்கும் ? என்பது கிஷோருடய எண்ணம். ஆனால் அவரது ஜுனியர்களின் வேண்டுகோள்தான் அவரை வீட்டிற்குத் திரும்பச் செய்தது.

அன்று மதியமே தன் சொந்த ஊருக்கு (மோகா) திரும்பினர்,  கிஷோர் தனது வீட்டிற்குள் நுழைந்தார். அவரது சகோதரி அதேவேளையில் தனது மதிய உறக்கம் தடைபட்டு கண்களைத் தேய்த்துக் கொண்டு; “அண்ணா, நான் ஒரு விசித்திரமான ஆனால் தெளிவான கனவு கண்டேன்"  என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள். தலையில் பலமான கட்டுடன் இருந்த கிஷோரைப் பார்த்ததும்; " கடவுளே! என்ன நடந்தது?" என்று அலறினாள். “அது ஒன்றும் பெரிய விஷயமில்லை; ஒரு சின்ன ஆக்சிடென்ட்... தலையில சின்ன காயம் ஆகிவிட்டது”, என்று கிஷோர் பதில் சொன்னார். மேலும் தன சகோதரியிடம் "ஏதோ விசித்திரக் கனவு என்றாயே என்ன?" என்றார். 

அவள் சிரித்தாள்; “சிறிய காயம் என்கிறீர்கள்… என் கனவைக் கேளுங்கள்... என் கனவு இந்த சம்பவத்துடன் ஆச்சரியமாக இணைக்கப்பட்டுள்ளது” என்று தனது கனவை விவரிக்க ஆரம்பித்தாள். கிஷோர் மீது ஒரு பெரிய மலை இடிந்து விழுந்து, அவர் பெரும் குப்பைகளுக்கு அடியில் புதைந்து போக... எங்கிருந்தோ சத்யசாயிபாபா வந்துவிட்டார். உடனடியாக, அவர் இடிபாடுகளை தோண்டி எடுத்தார், அவர் முற்றிலும் காயமடையவில்லை. பாபா இப்போது அவரை கையால் எழுப்பி, உயிரற்ற உடலில் உயிரை ஊற்றினார். அப்போது பாபா கிஷோரிடம்,நீ இறந்துவிட்டாய், ஆனால் நான் உனக்கு அதே உடலில் இரண்டாவது உயிரைக் கொடுத்துள்ளேன்... நீ என்னிடம் வரும் நேரம் விரைவில் வரும்என்று கூறினார்.  

அவ்வளவு பெரிய விபத்தினால் பெரும் காயத்தினால்  ஒரு முள் குத்தும் வலி கூட ஏற்படாததன் காரணத்தை இப்போது கிஷோர் புரிந்து கொண்டார்! தனக்கு  புதிய வாழ்கையே பரிசாகக் கிடைத்திருந்ததை அப்போது தான் உணர்ந்தார்... 

 

🌹கண்டதும் காதல்:

மல்ஹாரி பாபாவின் தலையீடு மற்றும் ஆசிர்வாதத்துடன் கிஷோரின் திருமணம் திட்டமிட்டபடி நடந்தது. விபத்தால் திருமணத்தை நிறுத்த முடியாவிட்டாலும் தள்ளிப்போடவாவது செய்யும்  என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களுடைய குருவின் ஞானம் வேறுவிதமாகச் சுட்டிக்காட்டியது. கிஷோரை அழைத்து,“கல்யாணம் திட்டமிட்டபடி நடக்கட்டும். திருமணத்திற்குப் பிறகு, உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் வரும். ஆரம்பத்தில் கசப்பாக இருக்கும் ஆனால் பின்னர் இனிப்பாக மாறும்." என்று ஆசீர்வதித்தார்.

கிஷோர் கார்கியுடன் திருமணம் செய்து கொண்ட படம்

ஜூன் 16, 1986 அன்று, கிஷோர் கார்கியை மணந்தார். கார்கியின் குடும்பம் முழுவதுமாக ஸ்வாமி மீது பக்தி கொண்டிருந்தது. ஸ்வாமிக்கு தன் வாழ்வில் முக்கியப் பங்கு உண்டு என்பதை கிஷோர் அறிந்திருந்தார். விரைவில் அவர் "கர்னல் சாப்" கீழ் இருப்பார் என்று அவரது குருவும் அவருக்குச் சுட்டிக்காட்டினார். ("கர்னல் சாப்" என்று மலஹாரி பாபா, பகவான் சத்ய சாயி பாபாவைத் தான் குறித்தார்.  ஸ்வாமியை மல்ஹாரி பாபா குறிப்பிட்ட விதம், ராணுவத்தில் உள்ள ஒரு சிப்பாய் தளபதியிடம் பேசும் விதம்!)

கணித்தபடி, திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் 'கசப்பான' ஆரம்பம் கிஷோரை பாதித்தது. இந்த நேரத்தில் தான் பஞ்சாபின்  சர்பத் கல்சா என்ற மனிதர்  , ஒரு மதப்பிரிவை நிறுவி... தனி சீக்கிய நாடு தேவை என்று அறிவித்தார்! கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் கிளர்ச்சி மற்றும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியது. வேலையில் பல பிரச்சனைகள் எழுந்தன மற்றும் பதட்டமான சமூக சூழ்நிலையின் காரணமாக தனது வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும்  கிஷோர் அஞ்சினார்.

அந்தச் சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் கிஷோர். இந்த நேரத்தில் தான் புட்டபர்த்திக்கு பயணம் செய்ய முடிவு செய்தார்.  விபத்துக்குப் பிறகு மறுபிறப்பு, அவரது குருவின் வார்த்தைகள், ஒரு சாயி குடும்பத்தில் திருமணம் மற்றும் இறுதியாக திருமணத்திற்குப் பிறகு கடினமான சூழ்நிலைகள் என்று பல விஷயங்கள் அவரை புட்டபர்த்திக்கு தீர்வுதேடி திருப்பி விட்டிருந்தன. அது ஜனவரி 1987, கிஷோர் புட்டபர்த்தியில் ஒரு வாரம்  தங்கும் திட்டத்துடன் வந்தார். தரிசனத்தில் அவர் முன் வரிசையில் அமர இடம் கிடைத்திருந்தது . ஆனால் அவருக்குள் கவலைகள் நிறைந்திருந்தன, அவை அனைத்தையும் சுவாமியின் தாமரை பாதத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்தார். பாபாவைப் பற்றி தனது குரு சொன்ன அனைத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்; "அவர் ஒரு பூர்ண அவதாரம்".

சிறிது நேரத்தில், சுவாமியின் அழகிய வடிவம் நேர்காணல் அறையிலிருந்து தரிசனச் சுற்றுக்காக வெளியேறியது. கிஷோர் மெய்மறந்தார், இந்த தெய்வீக  வடிவத்தின் மீது தனது இதயத்தில் உடனடியாக ஒரு அன்புப் பெருக்கை  உணர்ந்தார். சுவாமி கிஷோர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் நடந்து வந்தார். கிஷோர் மிகவும் மென்மையாகவும் பயபக்தியுடனும் அவரது கால் விரல்களைத் தொட்டார். கிஷோரின் கவலைகள் அடங்கிய கடிதத்தை ஸ்வாமி எடுத்துக் கொண்டார், ஆசீர்வதிக்க நீட்டிய விபூதி பொட்டலத்தையும் ஸ்வாமி ஆசீர்வதித்தார் .

அப்போது, சுவாமி மெதுவாக தலையில் தட்டி ஆசீர்வதித்தபடி கிஷோரின் கண்களைப் பார்த்து, இனிமையான ஆனால் மிகவும் உறுதியான குரலில், “சிந்தா மத் கரோ; சிந்தன் கரோ.” என்று ஹிந்தியில் கூறினார்.( அந்த ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் இதுதான் - "கவலைப்படாதே; மாறாக கடவுளைச் சிந்தி!"). ஒரு நொடியில், தெய்வீக மருத்துவர் அவரைக் கண்டறிந்து, மருந்துச் சீட்டைக் கொடுத்து, ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கான தூண்டுதலை அவருக்கு வழங்கினார். பிரசாந்தியில் இருந்த எட்டு நாட்களும் உண்மையில்உச்ச அமைதியின்  நாட்களாக கிஷோர் உணர்ந்தார்.  எட்டு நாட்கள் சீக்கிரம் பறந்துவிட்டன, மோகாவுக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது.

 

🌹தெய்வீக மனமாற்றம் - கடவுளால் தொடப்பட்டதற்கான உறுதியான அறிகுறி:

சத்ய சாயி பாபாவின் ஒரே தொடுதலில் கிஷோரின் மனதில் சுவாமி முழுமையாக நிரம்பத் தொடங்கினார்.  பார்ட்டிகளில் ஈடுபடுவதிலோ, நண்பர்களுடன் வெளியே செல்வதிலோ சிறிதும் விருப்பம் இல்லை என்பதை கிஷோர் கவனித்தார். கிஷோரின் சொந்த வார்த்தைகளில் கூறுவதானால், சுவாமி அவருடைய கவனத்தை 'XXX ரம்மில் இருந்து SSS ராம்' பக்கம் திருப்பிவிட்டார் !

”கிஷோர் எப்போதும் லட்சியவாதக் கொள்கை உடையவர்; உதாரணமாக வாழ விரும்புபவர். ஸ்வாமியால் அவரது அழியா லட்சியத்தீ எரிபொருள் கிடைத்து உயரும் என்று அவர் உறுதியாக நம்பினார். ஸ்வாமியால் தனது இறுதிக் கனவு பலிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி, அன்பு என்று சுவாமி கூறுகிறார், ஏனென்றால் அன்பிற்கு மட்டுமே மாற்றும் சக்தி உள்ளது. எனவே, பாபாவின் ஸ்தூல அற்புதங்களைக் கண்டு மக்கள் வியப்படைந்தாலும், அவைகள் அவருடைய "அழைப்பு அட்டைகள்" என்று அவர் எப்போதும் கூறுகிறார். கிஷோருக்கு செய்ததைப் போல மனித இதயங்களை மாற்றியமைத்ததே அவரது மிகப்பெரிய அதிசயம் (அ) மகிமை ஆகும்.

பஞ்சாபில் நிலைமை பெரிதாக மாறவில்லை, கிஷோரின் மாமனார், சுவாமி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க அவரைத் தூண்டினார். கிஷோர் MBA படிப்பிற்காக வெளிநாடு செல்லும் எண்ணத்தில் இருந்ததால், GMAT தேர்வுக்குப் பயின்று தேர்ச்சியும் பெற்றார். ஆனால் அவர் மாமனார் ஸ்வாமி கல்லூரியில் தான் சேர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.  கிஷோருக்கு அவரது மாமியார்  மற்றும் அவரது மனைவியும்,  ஒரு விஷனின் (தெய்வீகக் காட்சியின்)  அடிப்படையில் பிணவருமாறு சொன்னது நினைவுக்கு வந்தது, “நீங்கள் இருவரும் சுவாமியிடம் அவருடைய மாணவர்களாகப் படிப்பீர்கள்.. நீங்கள் ஸ்ரீ சத்ய சாய் பாபாவிடமே குடியேறுவீர்கள்.”

ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதால், ஸ்ரீ சத்யசாயி  இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் லேர்னிங்-கில் சேர்வதற்கு வழியில்லை. பிரசாந்தி நிலைய வளாகத்தில்  திருமணமான ஒருவர் சேர்க்கை பெற வழி இல்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.


🌹கிஷோரின் முயற்சி:

வழக்கம் போல, கிஷோர் தனது பிரார்த்தனையை செய்வதற்காக மோகாவில் உள்ள சுவாமியின் குடியிருப்பு கட்டிடத்திற்குச் சென்றார். தனது புட்டபர்த்தி பயணத்திற்கு பிறகு அவர் அங்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள பராமரிப்பாளர்  கிஷோரின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தார்.  ஒரு நாள், கிஷோரை ஓரமாக அழைத்து, சனாதன சாரதியில் (பிரசாந்தி நிலையத்தின் மாத இதழ்) விளம்பரத்தைக் காட்டி, “பாருங்கள், உங்கள் மனைவியின் குடும்பம் பாபாவிடம் முழு ஈடுபாடு கொண்டவர்கள். எம்.பி.ஏ மற்றும் பி.எட்  படிப்புகளுக்கான சேர்க்கைகள் நடக்கிறது .  நீங்கள் மற்றும் உங்கள் மனைவி இருவரும் ஏன் விண்ணப்பித்து அங்கு சேர்க்கை பெறக்கூடாது? வெளிநாடு செல்வதற்கான உங்கள் முட்டாள்தனமான திட்டங்களை விட்டுவிடுங்கள். இங்கே வெறுமனே விண்ணப்பிக்கவும்...” என்றார்

“பாருங்கள், எனக்கு பாபா மீது அன்பு உள்ளது; அனால் அவர் நிறுவனங்கள் மேலல்ல. அதனால், நான் விண்ணப்பிக்க விரும்பவில்லை...” என்றார் கிஷோர். உடனடியாக, அந்த மனிதன் உரத்த குரலில்,“குழந்தை! அவன் உன்னைப் பிடிக்கப் போகிறான். நீங்கள் அங்கு செல்ல வேண்டும். நான் சொல்வதைக் கேட்டு விண்ணப்பியுங்கள்...” என்றார். குரலில் அதட்டல் இருந்தாலும் அக்கறையும் நிறைந்திருந்தது. கிஷோர் எம்பிஏவுக்கு விண்ணப்பித்தார், அவருடைய மனைவி கார்கி பிஎட்க்கு விண்ணப்பித்தார். 

கிஷோர் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதிற்கான முயற்சிகளை மேற்கொண்டார். விரைவில், அவர் தனது மனைவியுடன் பிரசாந்தி நிலையத்தில் சென்றிறங்கினார். இருவரும் தத்தம் தேர்வுகளை எழுதி முதன்மையில் தேர்ச்சி பெற்றனர். அப்போது, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  தம்பதியர் என்பது தெரியவந்தது. பல்கலைகழகத்திற்கு இது 'முதல்' என்பதால், துணைவேந்தர் டாக்டர் சோம்நாத் சரஃப் சுவாமியிடம் இந்த விஷயத்தை எடுத்துரைத்தார்.

“சுவாமி, இந்த இரண்டு விண்ணப்பதாரர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர்கள் திருமணம் ஆனவர்கள். அவர்களை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? நான் எப்படி அவர்களை நிராகரிக்க முடியும்?"

"காண்பி, இவர்கள் யார்?"விண்ணப்பப் படிவங்களைப் பார்த்த சுவாமி, “திருமணமானவர்கள் என்றால் ஏன் விண்ணப்பப் படிவங்களைக் கொடுத்தீர்கள்?” என்றார்.

டாக்டர் சரஃபிடம் பதில் இல்லை.

“பரவாயில்லை. அவர்கள் என் பிள்ளைகள். சரி செய்து கொள்வார்கள். அவர்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்றார் ஸ்வாமி.

இவ்வாறு, கார்கி பிஎட் படிப்புக்காக பெங்களூருக்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் கிஷோர் எம்பிஏவில் சேர்ந்த முதல் திருமணமானவர் என்ற வரலாற்றைப் படைத்தார். (இன்று வரை, திருமணத்திற்குப் பிறகு புட்டபர்த்தியில் எம்பிஏ முடித்த ஒரே வேட்பாளர் அவர்தான்!) கடவுள் நினைத்தால், வரலாறு மீண்டும் எழுதப்பட்டு உருவாக்கப்படும்! கிஷோர் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் SSSIHL இன் இரண்டாவது batch MBA வகுப்பில் சேர்ந்தார். அன்றோடு அவர் முதன் முதலில் சுவாமியை தரிசனம் செய்து 5 மாதங்கள் ஆகியிருந்தது.


🌹மிகப்பெரிய பரிசு:

திரு கிஷோர் அவர்களின் "ஸ்வாமி" கல்லூரி அனுபவங்கள் ஏராளம் - பலதரப்பட்ட அனுபவங்களால் நிரம்பியது, அவற்றை இங்கே எழுத முயற்சிப்பது மிக்க கடினமாகும் . ஆனால் கதையின் இந்தக் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட வேண்டும். கிஷோர் 1988 கோடையில் சுவாமியுடன் கொடைக்கானலுக்குச் செல்லும் பாக்கியம் பெற்றார். அந்தப் பயணத்தின் போதுதான் கிஷோர் சுவாமியின் சர்வ ஞானத்தைக் கண்டார்.

கிஷோர் தன் தெய்வத்துடன்.. 


ஒரு நாள், சுவாமி நேராக அவரிடம் வந்து சிரித்தார். இனிய வசீகரமான குரலில், ஸ்வாமி இந்தியில் பேசத் தொடங்கினார், “ஃபியட் காரை ரோட்டில் இருந்து பறக்கும் அளவுக்கு வேகமாக ஓட்டினாய்... நீ மனிதனா அல்லது உயிருள்ள பேயா என்று டாக்டர் யோசிக்கும் அளவுக்கு காயம் அடைந்தாய். . ஆனால், உங்கள் சகோதரிக்கு ஒரு கனவு வந்தது, அங்கு சுவாமி உங்களை ஒரு மலையின் அடியில் இருந்து மீட்டு மரணத்திலிருந்து காப்பாற்றினார். ஆனால் நான் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றவில்லை. நீ இறந்துவிட்டாய்! அதே உடம்பில் உனக்கு நான் இரண்டாவது உயிர் கொடுத்தேன்...” என்று ஸ்வாமி சொன்னதை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த கிஷோர் பிரம்மித்துப் போனார். தெள்ளத்தெளிவாக சிறிய விவரங்கள் கூட விடாமல் நிகழ்ச்சியயை விவரித்த  ஸ்வாமி தொடர்ந்து, “இனி உங்கள் வாழ்க்கையில் இரு சக்கர வாகனத்தையோ அல்லது நான்கு சக்கர வாகனத்தையோ நீங்கள் தொடக்கூடாது!”.

கிஷோர் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு குறித்த சூட்சும ரகசியங்கள்  வெளிப்பாட்டால் அவர் பிரம்மிப்பில், ஆனந்தத்தில் மூழ்கியிருந்தார். ஆனால், அப்போது கிஷோருக்குத் தெரியாத உண்மை ஒன்றிருந்தது. வாழ்வின் மிகப் பெரிய பரிசு அவர் பெற்ற இரண்டாம் உயிரல்ல!. உயிரை விட மேலான ஒரு வரம் இருந்தது அதை சுவாமி அவருக்கு வழங்கத் தயாராயிருந்தார் ஆனால் கிஷோர் அதனை ஏற்கத் தயாரா?

 







🌹 நெருங்கிய நண்பராகவும் இருக்கும் கடவுள்:

ஸ்வாமியின் சர்வ வியாபகம், சர்வ வல்லமை மற்றும் எங்கும் நிறைப்பேரறிவு ஆகியவற்றை அனுபவித்த கிஷோர், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தனது சத்குருவாகவும் கடவுளாகவும் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அவரது குருவான மல்ஹாரி பாபாவின் பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகள் பலித்தது அவருக்கு நன்கு விளங்கியது - "சத்ய சாயி பரிபூர்ண அவதாரம்அவரை ராமர் அல்லது கிருஷ்ணருடன் ஒப்பிடுவது தவறுஏனென்றால் இப்படி ஒரு அவதாரம் இதுவரை நடந்ததில்லைஇனியும் நடக்காது... நேரம் வரும்போது அவரை சந்திப்பீர்கள்."

செப்டம்பர் 24, 1987 அன்று, Values Orientation in Higher Learning என்ற தேசிய கருத்தரங்கம் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற இருந்தது. 


அதில் பல துணைவேந்தர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்க இருந்தார்கள்.  
அந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன, மேலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்தையும் சுவாமி தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார். MBA மாணவர்களுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. குறிப்பிட்ட அந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கிஷோர், கல்லூரி கட்டிடத்தை ஒட்டிய மைதானத்தில்... பந்தல்கள் மற்றும் பிற அலங்காரங்களுக்கான கம்பங்களுக்காக உற்சாகமாக குழிகள் தோண்டிக் கொண்டிருந்தார். அது கடினமான வேலை என்பதால் வியர்வை அதிகமாகி அவரது ஆடைகள் ஈரமாகி தூசுமண் படிந்து சேறுபட்டது போலிருந்தது. சுவாமியின் கார் அந்த சமயத்தில் கல்வி நிறுவன வளாகத்திற்குள் நுழைந்தது. இந்த எதிர்பாராத தரிசனப் பரிசை அனுபவிக்க அனைத்து மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் கிஷோர் செல்லவில்லை மாறாக  அவர் கடமையே  கடவுள் என்பதில் உறுதியுடன்… தொடர்ந்து தோண்டும் பணியைச் செய்து கொண்டிருந்தார். அப்போது சுவாமியின் கார் தன் அருகில் நிற்பதை அவர் காண முடிந்தது. காரின் ஜன்னலைக் கீழே இறக்கி சுவாமி கேட்டார்.

"கிஷோர் கிதர் ஹைன் (கிஷோர் எங்கே)?"


கிஷோர் மிகவும் பொதுவான பெயர் என்பதால் அந்த பெயரைக் கொண்ட மற்றொரு மாணவர் முன்னே சென்றார்.
சுவாமி உடனே சொன்னார். “தும் நஹி! வாரணாசி கிஷோர்... (நீங்கள் அல்ல! வாரணாசியில் இருந்து வந்த கிஷோர்)”

கிஷோர் இப்போது தோண்டுவதை நிறுத்திவிட்டார். அவரது மனைவி கார்கி, வாரணாசியைச் சேர்ந்தவர், தம்பதியினர் சுவாமி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். எனவே, சுவாமி இப்போது தன்னைக் குறிப்பிடுகிறார் என்பதில் உறுதியானார். சுவாமியின் காரை நோக்கி பயபக்தியுடன் சென்றார்.

"தும்ஹாரா வொய்∴ப் கிதர் ஹைன் (உனது மனைவி எங்கே?)"

ஸ்வாமியின் அனைத்து கல்விநிறுவன வளாகங்களில் இருந்தும் மாணவர்கள் கருத்தரங்கிற்காக பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்தனர். எனவே கிஷோர் கூறினார்; “சுவாமி, மனைவி இங்கே தான் இருக்கிறார்...”

“வொய்∴ப் கா நாம் க்யா ஹைன் (உனது மனைவியின் பெயர் என்ன)?”

கிஷோர் தன் மனைவியின் பெயரைப் பொது இடத்தில் சொல்ல வெட்கப்பட்டார் . (இது பாரதிய மரியாதை; மனைவியும் கணவரும் ஒருவரையொருவர் பொதுவிடத்தில் பெயரை நேரடியாக உரத்துச் சொல்லாத மரியாதைக்குரிய இந்திய பாரம்பரியம்).

ஆனால் சுவாமி அவரைத் தூண்டினார்; “போலோ... போலோ... (சொல்லு... சொல்லு...)”

மெதுவாகவும் தயக்கத்துடனும் கிஷோர் சொன்னார்; ""சுவாமி, கார்கி..."

“ஷர்ம் நஹி ஆதா? இத்னா லோகன் கே சாம்னே… வொய்∴ப் கா நாம் லேதா ஹைன் (மனைவியின் பெயரைப் பலருக்கு முன்னால் பகிரங்கமாகச் சொல்ல வெட்கமாக இல்லையா?)”

ஸ்வாமி சிரிக்கத் தொடங்கினார், கிஷோர் தனது தேவன் தன்னிடம் இப்படி விளையாடுவது ஒரு இனிமையான குறும்பு என்பதை உணர்ந்தார். ஆழ்ந்த அன்புடன் ஒருவரையொருவர் கண்களைப் பார்ப்பது மிகவும் ரம்யமான காட்சியாக இருந்தது. சுவாமி சத்குரு மற்றும் கடவுள் என்பதில் கிஷோருக்கு ஐயமில்லை, ஸ்வாமியை அதற்கும் மேலானவராக உணர்ந்தார்.

“காயத்ரி... காயத்ரி... காயத்ரி...” என்று ஸ்வாமி வண்டியை ஓட்டும் முன் சொன்னதை கவனித்த கிஷோருக்கு அவர் என்ன குறிப்பிடுகிறார் என்று சரியாக கண்டுணர முடியவில்லை. சுவாமி எதனைக்குறித்து அவ்வாறு சொன்னார் என்பதை  அர்த்தப்படுத்த முடியாவிட்டாலும் தனது சாயி கடவுளின் மீது, தான் முழுமையான பிரேமை கொண்டதை உறுதியாக உணர்ந்தார். அவர் எல்லாவற்றையும்  தவிர்த்து ஸ்வாமியை மட்டுமே விரும்பினார்.


{வெகு காலத்திற்கு பிறகு 2007ல், கிஷோர் ஒரு நாடி ஜோதிடரைச் சந்தித்தார். அகஸ்திய நாடியில் கிஷோருக்கான ஓலையில் காணும் போது, அனைத்து விவரங்களும் கிஷோருக்கு புரிந்தது.
நாடி ஜோதிடர் வாசிக்கும் போது "உங்கள் மனைவிக்கு இரண்டு பெயர்கள் உள்ளன..." என்றார்.

“இல்லையே! எனக்குத் தெரிந்தவரை அவளுக்கு ஒரே ஒரு பெயர்தான்...” என்று கிஷோர் பதிலளித்தார் ..

“இங்கே அவளுக்கு இரண்டு பெயர்கள் உள்ளன... கார்கி மற்றும்... காயத்ரி. பிந்தையது கடவுளால் வழங்கப்பட்ட பெயர்" என்றார் நாடி ஜோதிடர்.

ஸ்ரீ சாயியின் எந்த வார்த்தையும் கேலிக்குரியது  இல்லை, அர்த்தம் பொதிந்தது ! }


🌹நேரடி உபதேசத்திற்கான தேடல்:

கிஷோர் ஸ்வாமியிடம் இருந்து சில உபதேசங்களைப் பெற ஆசைப்பட்டார் - ஆன்மீக அறிவுரைகளை அவர் கண்டிப்பாக கடைபிடித்து முன்னேற எண்ணி அதைப் பெறுவதற்குத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டார். தேவையில்லாமல் பேசமாட்டார், தேவையில்லாமல் யாருடனும் பழகாமல் தன் சொந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார். கிசுகிசு பேசுதல், நேரம் கடத்துதல், வீண் ஓய்வு, கேலி செய்தல் அல்லது புறம் பேசுதல் ஆகியவை அவரது அகராதியில் முற்றிலும் இல்லாத சொற்கள். சுவாமிக்கு எந்த வகையிலாவது  சேவை செய்ய வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையை  சில மாதங்களிலேயே அவர் வளர்த்துக் கொண்டார். இந்த கருத்தரங்கம், அதற்கான ஏற்பாடுகள் அவர் ஆசைக்கேற்ப சேவைசெய்யும் பல வாய்ப்புகளை வழங்கியது.

அந்த நிகழ்ச்சியின் போது பூர்ணச்சந்திரா ஆடிட்டோரியத்தில், பாத்திரங்கள் மற்றும் கட்லரிகளை சுத்தம் செய்யும் சேவைக் குழுவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் அனைவரும் வேலை/சேவை  செய்தபடியே அரட்டை அடித்துக் கொண்டிருக்க, கிஷோர் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து வேலையில் ஈடுபட்டார். முன்புபோலவே... மீண்டும் ஒருமுறை சுவாமி திடீரென சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் நேரடியாக கிஷோரிடம் வந்து எந்த அறிமுகக் குறிப்பும் இல்லாமல் கேட்டார்; "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?"

கிஷோருக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“நீ சாய்பாபாவிடம் வந்து சோகமாக இருக்கிறாய்; பதட்டமாகவும் கடுகடுவெனவும் இருக்கிறாய். மகிழ்ச்சியாக இரு! அதுதான் மிக முக்கியமானது, சந்தோஷமாக இரு. நாளை முதல் தியான வாஹினியை படி, தியானம் கற்று தியானம் செய்” என்றார் சுவாமி.

பின்னர் சுவாமி அங்கிருந்து புறப்பட்டார். கிஷோர் சிலிர்த்துப் போனார் . ஒன்றல்ல, இரண்டு நேரடி அறிவுரைகளை அவர் சுவாமியிடம் இருந்து பெற்றிருந்தார்! தான் தேடிய உபதேசம் இதுதான் என்பதை அறிந்தார்.


ஸ்வாமியின் உபதேசத்தைத் தொடர்ந்து, கிஷோர் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே இருந்தார். இன்று வரை அவர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தவறாமல் வெளிப்படுத்துகிறார்!

ஸ்வாமியின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டார்; தியானம் தனது அன்றாட வழக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதை உறுதி செய்தார். ஆழ்ந்த இரவிலும், அதிகாலையிலும் விடுதி மொட்டை மாடியில் தியானத்தில் அமர்ந்திருப்பார். புட்டபர்த்தியின் கொசுக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன, ஏனென்றால் அவை ஒரு வலியவந்த பலியைப் பெற்றன. கிஷோரின் ஆடைகளில் பல சிவப்பு நிற வட்டக் கறைகள் இருந்தன; கொசுக்கள் சாப்பிடும் விருந்தின் அடையாளங்கள் அவை. ஆனால் கிஷோர் சிறிதும் கவலைப்படவில்லை, ஏனென்றால் கொசுக்களினால் ஏற்படும் கடினத்தை விட அவரது மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. அவர் தியானத்தில் ஆனந்தம் பெற்றார், அது அவருக்கு "வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியும்" மிகப்பெரிய லட்சியத்தைக் கொடுத்திருந்தது. தியானத்துடன் சேர்த்து, கிஷோர் ஹாஸ்டலில் பல்வேறு சேவை நடவடிக்கைகளிலும்  மூழ்கினார், முக்கியமாக சமையலறையில் உணவு பரிமாறினார்.  நோய்வாய்ப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

 நாட்கள் செல்ல செல்ல ஸ்வாமியின் மீதான ஏக்கமும் தாகமும் அதிகரித்தது. பக்தியில் அவர் ஒரு அடிமையாக மாறிவிவிட்டிருந்தார. கடவுள் மீது பக்தியினால் ஒருவருக்கு ஏற்படும் போதைதான் இருக்கக்கூடிய போதைகளிலேயே மிகப்பெரிய மற்றும் அழகான போதை. சுவாமி, கிஷோருக்கு ஸ்பர்ஷன்  மற்றும் சம்பாஷணத்தின் வாய்ப்புகளை வழக்கமாக  வழங்குவதன் மூலம் அவரது பக்தியின் ஆழத்தை, தெய்வீக போதையை  மேலும் பெருகச் செய்தார்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சுவாமி அறிவுறுத்தியதோடு கிஷோர் அதற்குத்  தேவையான முயற்சிகளை மேற்கொண்டபோது "எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாவதை" ஸ்வாமி உறுதியும்  செய்திருந்தார்!

 

🌹உள்ளார்ந்த நம்பிக்கை மற்றும் உடனடி கீழ்ப்படிதல் - உண்மையான சரணாகதியின் பண்புகள்:

ஸ்வாமியின் சொற்பொழிவுகள், தியான வாஹினி மற்றும் பல்வேறு வேத வாக்கியங்கள் மட்டுமே கிஷோர் மனதில் இடம்பெறத்தொடங்கின. இவற்றைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் பேசுவார். இவற்றைப் பற்றி விவாதிப்பவர்களை மட்டுமே அவர் கூட்டாக வைத்துக் கொண்டார். அவருக்கு வேறு எதற்கும் நேரமோ விருப்பமோ இல்லாமற்போனது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, கல்லூரியில் உள்ள விநாயகர் சிலையின் காலடியில் அமர்ந்து, கிஷோர் தைத்திரீய உபநிடதத்தின் தித்திரி பறவைகளைப் பற்றி விவாதித்தார். உபநிடதம் எப்படி உருவானது என்ற கதை மிகவும் சுவாரஸ்யமானது. மகாமுனிவர் யாக்ஞவல்கியர் தனது குருவான வைசம்பாயனுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னிடம் படித்த வேதத்தை திருப்பித் தருமாறு அவரது குரு கேட்டார். யாக்ஞவல்கியர் வைசம்பாயனர் முன்னிலையில் வாந்தி எடுத்தார். வைசம்பாயனரின் மற்ற மாணவர்கள், பறவை-தித்திரிகளின் (partridges) வடிவங்களை எடுத்துக்கொண்டு வாந்தியை உண்டனர். பிறகு உபநிடதத்தைப் பாடினார்கள்!

அன்று, தரிசனத்தின் போது , கிஷோரின் அருகிலிருந்தவர்  மேலே அமர்ந்திருந்த சில புறாக்களைக் காட்டி சொன்னார், "யாருக்குத் தெரியும், ஒருவேளை அந்தப் புறாக்களும் சுவாமியிடம் இருந்து ஞானத்திற்காகக் காத்திருக்கிற முனிவர்களோ என்னவோ..."

கிஷோரும் ஆம் என்பதுபோல தலையசைத்தார். சுவாமியைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?

தரிசனத்தின் சமயத்தில் சுவாமி கிஷோரைக் கடந்து சென்றபோது, ஒரு புறா மண்டபத்தின் குறுக்காகப் பறந்தது. அது குறுக்கே பறந்தபோது ஆசுவாசமாக எச்சமிட்டுச் சென்றது. ஸ்வாமிக்கு சில அடி தூரத்தில் எச்சம் தரையில் விழுந்தது.

ஸ்வாமி கிஷோரின் பக்கம் திரும்பி புன்னகையுடன் சொன்னார். “அது தெய்வீக அமிர்தம்! சாப்பிடு..."

சுற்றியிருந்த மாணவர்கள் அனைவரும் உரக்கச் சிரித்தனர். ஆனால் கிஷோர் ஒரே துள்ளலில் எழுந்ததால் அவர்களின் சிரிப்பு விரைவில் மறைந்தது. சிறுத்தை தன் இரையின் மீது பாய்வது போல, அவர் அந்த இடத்திற்கு விரைந்தார். பறவையின் எச்சத்தை எடுத்து வாயில் போட்டு முழுவதுமாக விழுங்கினார்!

"அதுதான் உண்மையான சரணாகதி." - சுவாமியின் திருவாய் மலர்ந்த அந்த வார்த்தைகளால் ஒரு அதிர்ச்சியான மௌனம் அங்கே நிலவத் தொடங்கியது. சுவாமி கிஷோரைத் தட்டிக்கொடுத்தபடி கடந்து சென்றார்.

தரிசனம் முடிந்ததும், கிஷோர் மீதான அபிமானத்தில் அனைவரும் மெய்மறந்து பாராட்டினார்கள். ஆனால் அது ஒரு பெரிய விஷயமில்லை என்பதாக கிஷோர் உணர்ந்தார். அவர், தன் ஸ்வாமி சொல்வதையெல்லாம் செய்யத் தயாராக இருந்தார். தனது வாழ்க்கையின் நோக்கத்தை அடைய விரும்பினார், சுவாமியால் மட்டுமே அதை அவருக்கு வழங்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். புறாவின் கழிவுகள் உண்மையில் அமிர்தமாக மாறியதா? பிரஹலாதனும் மீராபாயும் உணர்ந்தது போல, பக்தி மயக்கத்தில் விஷம் கூட அமிர்தமாக உணரப்படும் போலும்! கிஷோர் சுவாமியின் பாதத்தினருகில் அமர்ந்து அந்தப் பாராட்டு வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டார். அதுதான் உண்மையான உபநிஷதம் இல்லையா?


கண்டிப்பாக உள்ளார்ந்த நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் தான் கிஷோரை தன் ஸ்வாமிக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது.  இந்த புகைப்படத்தில் கிஷோர் இருக்கும் இடம்/நிலை இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள  "உபநிஷதம்" என்ற சொல்லின் பொருளுக்கு நிச்சயம் உதாரணமாகத் திகழ்கிறது

பகவான் பாபா, அக்டோபர் 11, 2002 அன்று தசராவின் போது ஆற்றிய உரையில் பின்வருமாறு விளக்கினார்கள். “உபநிஷத் என்ற சொல்லின் உள் அர்த்தம் என்ன? 'உப' - அருகில், 'நி' - கீழே மற்றும் 'ஷத்' - அமர்தல். குருவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

கிஷோரின் செயலை உண்மையான சரணடைதலின் செயல் என்று சுவாமி ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், கிஷோர் திருப்தி அடையவில்லை. அவர் ஒரு செயலால் மட்டுமல்ல, தனது முழு வாழ்க்கையே சுவாமியிடம் ஒரு முழுநீள சரணாகதியாக இருக்க விரும்பினார்.

அதனால் தான், அடுத்த முறை சுவாமி அவரிடம் பேசும்போது, “க்யா ஹைன்... போலோ... (சொல்லு, உனக்கு என்ன ஆச்சு...)?

கிஷோர் பதிலளித்தார். “சுவாமி, நான் உங்களிடம் சரணடைய விரும்புகிறேன்”

சுவாமி : "நீ ஏற்கனவே..."

கிஷோர் : “சுவாமி, நான் எப்பொழுதும் உங்களிடம் சரணடைந்ததை  உணர விரும்புகிறேன்”

சுவாமி சிரித்துக்கொண்டே கிஷோர் அருகில் சென்றார். தன் விரலால் கிஷோரின் தலைமுடியை மெதுவாக ஒன்பது முறை வருடி “சரணாகதி... சரணாகதி... சரணாகதி ... சரணாகதி... சரணாகதி... சரணாகதி ... சரணாகதி... சரணாகதி... சரணாகதி ... " என்று திருவாய் மலர்ந்தார்.

பின்னர் ஸ்வாமி "வரம் தந்தாகிவிட்டது! இப்போது பாதநமஸ்காரம் எடுத்துக் கொள்" என்றார்.

மக்கள் பல பிறவிகள் முயன்று சாதித்துப் பெறுவதை கிஷோர் ஒன்பது வினாடிகளில் பெற்றார்!

(அப்படிக் கூறுவது கவித்துவமாகவும் அருமையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு  'பாறை' ஒரே அடியில் உடைந்து விடுமாயின்  அந்தப் பாறை ஏற்கனவே ஆயிரம் அடிகளைப் பெற்றுள்ளது என்றே அர்த்தம். முந்தைய  பல பிறவிகளில் செய்த தவப்பலனே இப்படி ஒரு சூழலையும் வரத்தையும் பெற்றுத் தரும். ஏனெனில் கடவுள் பாரபட்சம் பார்ப்பவரல்ல. எவரின் முன்னேற்றத்தையும் தடுப்பவருமல்ல. ஒவ்வொருவரும் கடந்த பிறவிகளிலும் நிகழ்காலத்திலும் செய்யும் அவரவர்  முயற்சியின்படி பலனைப் பெறுகிறார்கள்.)

 

🌹உலகவாழ்விலே சுவை இல்லை:

எந்த ஒரு மாணவனும் தேர்வில் இருந்து தப்ப முடியாது. கிஷோர் விஷயத்திலும் அப்படியே!. அவர் ஸ்வாமி குறித்த எண்ணங்களில் தொலைந்து போனார், பாடங்களைப் படிக்கவில்லை. வாழ்வியலும் ஞானமும் உலகாயதக் கல்வியாளர்களிடமிருந்து கிடைப்பதில்லை. 


அதேபோல வாழ்வியலில், ஞானத்தில் எல்லா தீர்வுகளையும் கண்ட ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, நிசர்க தத்தா மஹராஜ் - போன்ற மகான்கள்  யாரும் (உலகாயத) கல்விமான்கள் அல்ல!

பரீட்சை நெருங்கும் சமயம் தசரா கொண்டாட்டமும் வந்தது. கிஷோரின் கல்வி நிலை மேலும் மோசமாகும் வண்ணம், தசரா சமயம் ஒரு உரையை வழங்க சுவாமியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்!. கிஷோரின் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் தனது முழு ஆற்றலையும் ஸ்வாமிமுன் பேசுவதற்கு  தயார் செய்வதில் செலுத்தினார். தேர்வுக்கு துணைத்தேர்வு, மறுதேர்வு எல்லாம் உண்டு; ஆனால் தெய்வீக வாய்ப்புகள் அப்படி அல்ல! அதனால் அவர் தனது நேரத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பாடங்களைப் படிப்பதில் செலவிட்டார். பேச்சுக்குத் தயார் செய்கிறேன் என்ற பெயரில் ஸ்வாமியைத் தியானிப்பதிலேயே பெரும்பாலான நேரம் கழிந்தது. சுவாமியின் திருமுன் கிஷோருடய பேச்சு நன்றாகவே நடந்தேறியது. தேர்வுகளோ  கடினமாக இருந்தன, ஆனால் எப்படியோ 'சூட்சுமமாக' கிஷோர்,  எதையெல்லாம் படித்திருந்தாரோ அதுவே எப்போதும் வினாத்தாள்களில் இருந்தன! அதனால், அவர் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையில், சுவாமியுடன் கிஷோர் பெற்ற பல நேர்காணல்களில் ஒன்றில், ஸ்வாமியிடம் இதைக் குறித்து தெரிவித்தபோது, "இந்த அனுபவத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்." என்றார் சுவாமி.

அந்தத் தருணங்களில், கிஷோருக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் முக்கியமில்லை என்று தோன்றியது. சொல்லப்போனால் சுவாமியினிடத்து வரும்போது தன்னுடைய  வாழ்க்கையே அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. அவருக்கு ஸ்வாமி ஒருவரே மேலும் மேலும் தேவைப்பட்டார். அப்போது தான், கடவுள் தன் உயிரை விடவும்  மேலான ஒன்றைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தார் அது என்னவென்றால் "கடவுளை அறியவும்அவரை அனுபவிக்கவும் வேண்டும் என்ற தீவிர ஆசை". ஆதி சங்கராச்சாரியார், விவேக சூடாமணி என்ற தனது முதன்மைப் படைப்பில், ஒரு உயிரினம் பெறக்கூடிய மூன்று பெரிய பரிசுகள் உள்ளன என்று கூறுகிறார்.

முதலாவது மனுஷ்யத்வம் அல்லது மனிதனாக வாழ்வது.

இரண்டாவது முமுக்ஷத்வம் அல்லது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியும் தீவிர ஆசை.


கிஷோர், தனக்கு வாழ்வு அளித்ததன் மூலம் ஸ்வாமி தனக்கு மிகப்பெரிய வரத்தை அளித்ததாக உணர்ந்தபோது,​​சுவாமி அவருக்கு பெரிய பரிசை வழங்கினார். மேலும் கிஷோர் வேறெதுவும் ஸ்வாமியிடம் கேட்டிருக்கவில்லை . ஆனால் ஸ்வாமி அவருக்கு இன்னும் அதிகமாக கொடுக்க திட்டமிட்டிருந்தார்.




 




🌹1988 இலையுதிர் காலம்:

ஸ்ரீ சத்ய சாயி  இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் லெர்னிங்கில் (SSSIHL) எம்.பி.ஏ படிக்கும் கிஷோரின் முதலாம் ஆண்டு பிரமாண்டமான நிகழ்வுகளால் நிறைந்திருந்தது, ஆனால்.... ஹிந்தியில் ஒருவர் சொல்வது போல், “பிக்ச்சர் அபி பாக்கி ஹைன் (படம் இன்னும் முடிவடையவில்லை).” அவரது இறுதி ஆண்டு மிகவும் வியத்தகு முறையில் தொடங்கியது.

பகவானின் இடுப்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாக விடுதிக்கு தகவல் கிடைத்தது. இதை கேட்ட மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்வாமி குளித்துக் கொண்டிருந்தபோது... சோப்புத் துண்டில்  வழுக்கி கீழே விழுந்து முறிவு ஏற்பட்டது; இந்த அறிவிப்பைக் கேட்ட ஹாஸ்டல் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. தனக்குப் பிரியமான ஸ்வாமியின் இடுப்பிற்குப் பதிலாக தன்னுடைய இடுப்பு முறிந்திருக்க வேண்டும் என்று கிஷோர் விரும்பினார். உள்ளபடியே  ஓரிரு நாட்கள் தரிசனம் நடைபெறவில்லை. ஒருவர் தன்  மனதிற்குரியவர்க்கு உடல்நிலை சரியில்லாத போது, நெருக்கமாக இருக்க விரும்பினால் அது வருத்தத்தை அதிகப்படுத்தும்; கவலை  மற்றும் துக்கத்தை அதிகரிக்கிறது.


அவருடைய குழந்தைகள் சோகமாக இருக்கும்போது, சுவாமியும் மகிழ்ச்சியடையவில்லை. உடனே அனைத்து மாணவர்களையும் மந்திருக்கு வரவழைத்தார் . அவர்கள் அனைவரும் வெள்ளி கதவு பால்கனியின் கீழ் கூட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அனைவரும் கூடியதும் சுவாமி சக்கர நாற்காலியில் பால்கனிக்கு வந்தார். ஓ! என்ன ஒரு சோகமான காட்சி அது! எல்லா  மாணவர்களும் சோகத்தின் புலம்பலை/முனகலை வெளியிட்டனர். அவர்கள் தங்கள் அன்பான சுவாமியை இப்படிப் பார்த்ததில்லை. வேதனையின் ஓசைகளைக் கேட்டதும், சுவாமியும் மனம் நொந்து போனார்.

எனவே.. அவர் சக்கர நாற்காலியில் இருந்து, அவருக்கு சேவை செய்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணா என்ற மாணவரின் உதவியோடு எழுந்து நின்றார். ஒரு தூணில் சற்றே சாய்ந்து, தம் பாரத்தையெல்லாம் தன் ஒரு காலில் ஏற்றபடி, பால்கனியில் நின்றார். 


கீழே திரண்டிருந்த மாணவர்களைப்  புன்னகையுடன் அபயஹஸ்தம் காட்டி ஆசீர்வதித்தார் சுவாமி. ராதாகிருஷ்ணாவிடம் ஒரு பையை எடுத்து வரச் சொன்னார், அதில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுக்க ஆரம்பித்தார். பால்கனிக்கு கீழே திரண்டிருந்தவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீச ஆரம்பித்தார்! அவரது மாணவர்களின்  உற்சாகமும் மகிழ்ச்சியும் அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு, அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் முடிந்தது. மகிழ்ச்சியை அளித்து ஆசிகளைப் பொழிந்த சுவாமி, முதல் மாடியில் உள்ள தனது அறைக்குத் திரும்பினார்.

ஒரு நாள் கழித்து, மருத்துவர்களின் 'அறிவுரைப்படி' முழு ஓய்வு எடுக்க சுவாமி, பெங்களூரு ஒயிட்ஃபீல்டுக்குப் புறப்பட்டார். புட்டபர்த்தி அதன் மிகப்பெரிய அழகை இழந்துவிட்டது, கிஷோர் தனது தெய்வத்தின் பல்கலைக்கழகத்தில் மாணவராக வேண்டும் என்ற நோக்கத்தையே இழந்துவிட்டதாகத் தோன்றியது. புட்டபர்த்தியில் நடக்கும் ஒவ்வொரு செயலும் ஒரு இனிப்பான உணவாகவே இருக்கும். ஆனால் அதன் சர்க்கரையாகிய சுவாமி  இல்லாது போனதால் அந்த இனிப்புகள் அனைத்தும் சுவையற்றுப்போயின. அனைத்திற்கும் காரணம் ஒரு 'சோப்புத் துண்டு'!

ஜாகிங் /காலை உடற்பயிற்சிகளுக்குப் புறப்பட்ட கிஷோரின் இதயம் சோகத்தில் கனத்தது. சில சமயங்களில்… உறுதியான விசுவாசத்தின்  பலனுக்கும் கூட, உணர்ச்சியின் தீவிரம் தேவைப்படுகிறது. ஸ்வாமியின் விருப்பத்துடன் கிஷோரின் உணர்ச்சியும் சேர்ந்து, கிஷோர் இதுவரை பெற்றதை விட மிகப்பெரிய பரிசை அவருக்கு வழங்க விருந்தது..


🌹சீற்றமும் நெருப்பும்:

கிஷோர் தனது ஜாகிங்கை முடித்ததும், மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தின் எதிரே உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலையைச் சுற்றி வந்தார். 


பிறகு, அதன் முன் நின்று வணக்கம் செலுத்தினார். அப்போது அவருடைய  உணர்ச்சிகள் எல்லாத் தடைகளையும் உடைத்து வெளியே வந்தன. அடுத்து என்ன நடந்தது என்பது மிகவும் கடுமையானது மற்றும் வியக்கத்தக்கது, நாம் இங்கே நிறுத்த வேண்டும்.

கிஷோர் சார் இந்த அனுபவத்தைச் சொல்லும் போதெல்லாம், இந்த இடத்தில் நிறுத்தி… விநாயகப் பெருமானைப் போற்றும் ஒரு பாடலைப் பாடுகிறார், அவருடைய இந்த உணர்வுப்பூர்வமான செயலைப் பொருத்தமற்றது என்று தவறாக நினைக்கக்கூடாது. எனவே, மேலும் படிக்குமுன் நாமும் தவறாமல் விநாயகரின் மகிமையைக் கேட்பது சரியானது. (நாம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளியை உபயோகிக்கலாம்)

கிஷோர் விநாயகரை கடுமையாக திட்ட ஆரம்பித்தார். “அன்புள்ள நண்பரே விநாயகா ! நான் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையையும் பற்றுறுதியும் வைத்துள்ளேன், நீங்கள் இப்படி செய்யலாமா?  எல்லோருடைய பாதையிலிருந்தும் தடைகளை நீக்குபவர் நீங்கள். உங்களால் ஒரு சோப்புத் துண்டைக்கூட நகர்த்த முடியவில்லையா?”

கிஷோரின் கன்னங்களில் இப்போது சூடான கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவரது காதுகள் இயலாமையிலும் விரக்தியிலும் சூடாக உணர்ந்தன. கோபம் என்ற பெருவெள்ளத்தில் அனைத்து உணர்ச்சிகளும் கிளை நதிகளாகச் சேர்ந்தன. அவர் தனது பெல்ட்டை கழற்றி  விநாயகரை ஆவேசத்துடன் அடிக்கத் தொடங்கினார். “கணேசா, உலகத்தை விடு... உன் தந்தையின் பாதையில் உள்ள தடைகளை உன்னால் அழிக்க முடியவில்லையா?”; கோபம் கொப்பளிக்க, கைக்கு வந்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு, தன் இனிய நண்பனாக நெடுங்காலமாக வணங்கி வந்த கடவுளின் மீது தாக்குதல்-மழையைத் தொடர்ந்தார். “ஏன் இதைச் செய்தாய்? என் சுவாமி ஏன் கஷ்டப்படுகிறார்?” – கிஷோர்; இடம், பொருள், உரிமை, கண்ணியம் அனைத்தையும் மறந்துவிட்டார். அலறிக் கத்தி அவர் ஹிந்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் தொடர்ந்து அவதூறுகளை வீசினார்.  தனது கையில்பட்ட  எதையும் எடுத்து அடித்தார்.

அப்போது விநாயகரிடமிருந்து ஒரு வலிமைவாய்ந்த சக்தி வெளிப்படுவதை உணர்ந்தார். நொடிப்பொழுதில், தரையில் இருந்து ஆறடி 'தூக்கப்பட்டார்'!. “சாய்ராம்!! சாய்ராம்!! என்னைக் காப்பாற்றுங்கள்... என்னைக் காப்பாற்றுங்கள்... உங்களுக்காகத்தான் நான் இதைச் செய்தேன்”, என்று கிஷோர் தன் மீது இரக்கமுள்ள சாயி கடவுளை அழைத்தார். அவரை அந்தரத்தில் மாயமாகத் தூக்கி நிறுத்தப்பட்டதைப் போலவே, மெதுவாக கீழே இறக்கப்பட்டார். அப்படி கீழிறக்கப் பட்டபோது கிஷோர்  சரியான பத்மாசனத்தில் அமர்ந்தார் . அவரின் உடல் கல்லாக விறைத்து உலகம் முழுவதும் மௌனமானது. கிஷோர் தனது கால்விரல்களின் நுனியில் இருந்து "குளிர்ச்சியான ஒளி" ஏறுவதை உணர முடிந்தது. அது அவரது முதுகுத் தண்டுவடத்திற்குள் ஏறி, வழியில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கடந்து சென்றது. பின் அவரது நெற்றியின் மையப்பகுதி வரை பயணித்தது, அங்கு அது குடியேறியது. அந்த நேரத்தில், அவரது புருவங்களின் நடுவில் மற்றொரு கண் திறந்தது. ஆனால் இந்தக் கண் ஸ்தூலமான கண் அல்ல - அந்தக் கண்கொண்டு அவரால் உலகின் வழக்கமான முப்பரிமாணங்களுக்கு அப்பால் பார்க்க முடிந்தது!


அவர் முதலில் பார்த்தது அண்டவெளியில் நர்த்தனம் செய்தபடி பிரமாண்ட  விநாயகப் பெருமானை. அதோடு பின்னர் பல கடவுள்களைக் கண்டார், இளம் வயது பாபா சத்தியநாராயண ராஜுவாக புன்னகையுடன் தரிசனம் அளித்தார். கிஷோரின் இந்த தெய்வீக அனுபவத்தின் தீவிரத்தை படிப்படியாக குறைக்கச் செய்யும் வண்ணம் தனது கையை நகர்த்தினார் பாபா. கிஷோர் மயக்கத்தில் இருந்து எழுந்தார். இந்த அனுபவத்தில் எவ்வளவு நேரம் கடந்தது என்பது பற்றி அவர் உணரவில்லை . பொதுவாக நாம் ஆனந்தத்தில் இருக்கும்போது அளவுகள் தெரிவதில்லை; இதுவோ பேரானந்தம் அல்லவா?

கிஷோர் வார்டனிடம் சென்று நடந்த நிகழ்வுகளைக் குறித்து மெதுவாகப் பகிர்ந்துகொண்டார். அதைக்கேட்ட வார்ட்ன்  முழு ஓய்வு எடுக்குமாறு கூறி அனுப்பினார்.

 

🌹குண்டலினி அனுபவத்தினை சுவாமி உறுதிப்படுத்துதல்:

மறுநாளே சுவாமி பிருந்தாவனத்தில் இருந்து திரும்புவதாக செய்தி பரவியது! கிஷோரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எனவே, அவர் தனது படுக்கையை விட்டு வெளியேறி மற்ற அனைத்து மாணவர்களுடன் சாலைகளுக்குச் சென்றார். இன்ஸ்டிடியூட் கேட் முன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார் சுவாமி. மந்திரை நோக்கி சாலையில் நடக்க ஆரம்பித்தார் ! இதைப் பார்த்ததும் சாலையில் திரண்டிருந்த மாணவர்கள் அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். இது வழக்கமான  தரிசனத்திற்கு மாறுபட்ட இடம். ஸ்வாமி 15-20 மீட்டர் தூரம் நடந்தே சென்று அவர் உடல் நலமுடன் இருப்பதாகக் காட்டினார். சாலை சூடாக இருந்தது, ஆனால் வருண பகவான் இறைவனுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் . சுவாமி காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில், மெல்லிய தூறல் பெய்யத் தொடங்கியது, மண்வாசனை காற்றை நிரப்பியது. அப்படிப்பட்ட ரம்யமான சூழலில் சுவாமியின் புன்னகையைப் பார்த்த கிஷோர் தெய்வீக ஆனந்தத்தில் ஆழ்ந்தார். பின்னர் சுவாமி காரில் ஏறி மந்திருக்குச் சென்றார்.

அன்றே வார்டன் கிஷோரின் அனுபவத்தை சுவாமியிடம் தெரிவித்தார். 'அந்த மாணவனின் குண்டலினி ஷக்தி எழுந்தது' என்றும், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் சுவாமி அந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதன்பிறகு, கிஷோருக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த விடுமுறை கிஷோரை தரிசனத்திற்கு வரவிடாமல் தடுக்கவில்லை !

மாணவர்-கட்டுரைகள் அடங்கிய சிறப்புப் புத்தகம் தொகுக்கப்பட்டபோது, கிஷோர் குண்டலினி அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதினார். துணைவேந்தர் டாக்டர் சராப், அதை நம்பமுடியாமல் படித்தார். புத்தகத்தை அச்சில் சேர்ப்பதற்கு முன்பே அவர் அதை சுவாமியிடம் காட்டினார். கிஷோர் இந்த "பெரிய அனுபவத்தை" இப்போதே எழுதுவதை விட தனக்குக் கிடைத்த பல "சிறிய அனுபவங்களை" பற்றி எழுதட்டும்  என்று சுவாமி கூறினார். இதன் மூலம் அந்த அனுபவத்தின் இரண்டாவது உறுதிப்படுத்தல் ஸ்வாமியின் மூலம் நடந்தது!         

 

🌹வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்?

மனுஷ்யத்வம் (மனித வாழ்வு) மற்றும் முமுக்ஷத்வம் (வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியும் ஆசை) ஆகியவை பெறப்பட வேண்டிய பெரும் வரங்கள் என்று கூறும் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் விவேக சூடாமணி மகாபுருஷ-சம்ஷ்ரயமே மிகப் பெரிய வரம் என்று அழுத்தமாகக் கூறுகிறது.

 மகாபுருஷ-சம்ஷ்ரயம் (இறைவனின் ஆதரவு/பாதுகாப்பு) - அதுவே மூன்றாவது வரம், அது மிகவும் விசேஷமானது, ஏனென்றால் அது உச்ச அமைதியையும் பூரண பேரின்பத்தையும் அடைவதை மிக எளிதாக்குகிறது. முமுக்ஷுத்வம் தான் ஸ்வாமி கொடுத்த மிகப் பெரிய வரம் என்று கிஷோர் நினைத்ததில் தவறு என்று புரிந்தது. சுவாமி தனக்கு அருகாமையையும் அன்பையும் அளித்தார். இப்போது, அது மிகப்பெரிய பரிசு அல்லவா? கிஷோர் அதை ஒருபோதும் விடமாட்டார்.

              

கணவன்-மனைவி… கிஷோர் மற்றும் கார்கி இருவரும் தத்தம் படிப்புகளில் தேர்ச்சி பெற்று, சுவாமியின் அருளால், ஆசிரியர்களானார்கள்! கார்கி ஸ்ரீ சத்ய சாய் தொடக்கப் பள்ளியில் புவியியல் ஆசிரியராகச் சேர்ந்தபோது, கிஷோர் ஸ்ரீ சத்ய சாயி உயர் கல்வி நிறுவனத்தின் School of Business Management Accounting and Financeல் சேர்ந்தார்.


இப்படியே ஒரு வருடம் உருண்டோடியது. கிஷோர் ஒருவித ஆழமான அதிருப்தியை உணர்ந்தார். அவருக்கு என்ன குறை இருக்கிறது என்று பிடிபடவில்லை, ஆனால் புரியாத ஏதோவொன்றை விரும்பி ஏங்கினார். இதற்குமேலும் அவர் இன்னும் என்ன பெற முடியும்? யுக அவதாரத்தின் அருகாமை அவருக்கு ஏற்கனவே கிடைத்திருக்கிறது. ஆழமாக ஆராய்ந்து பார்த்தல் ஒரு உண்மை புரியும், 'அதிருப்தி' மனிதனின் இறுதி நிலையை அடைவதற்காக அவனுக்குள் விதைக்கப்பட்ட ஒரு விஷயமாகத் தெரிகிறது. வாழ்க்கையில் இறுதி இலக்கை அடையும் வரை மனநிறைவு என்பது வராது. இந்த அதிருப்திதான் மனிதன் எந்த ஒரு குறைவான நிலையிலும் தேங்கிவிடாதபடி முன்னேறுவதை உறுதி செய்கிறது. அந்த உள்ளார்ந்த அதிருப்தி உணர்வு கிஷோரை வாட்டி வதைத்தது.

1990 ஆம் ஆண்டு குரு பூர்ணிமாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு. ஸ்வாமி தன் சுண்டு விரலின் நுனியால் கிஷோரின் கூப்பிய கரங்களை மெதுவாகத் தொட்டார். அந்த வினாடியே கிஷோருக்குள் ஒரு மிகப்பெரும் அனுபவம் அரங்கேறியது. மனம் தானாக விலகுவதை அவரால் உணர முடிந்தது, வெறுமையாகவும் ஆனந்தமாகவும் விரிவடைந்தது! அதிலிருந்து  திரும்ப விரும்பாத அளவு ஆனந்தமும் அமைதியும் நிரம்பிய ஒரு தெய்வீக நிலையை உணர்ந்தார். இருப்பினும், சிறிது நேரத்தில் அவர் தலையில் மற்றொரு மென்மையான தட்டலை உணர்ந்தார். அந்த தெய்வீக மயக்க நிலை களைந்து கிஷோர் கண்களைத் திறந்து பார்த்தபோது எதிரில் சுவாமி நிற்க, கிஷோர் தரிசனம் செய்தார். கிஷோருக்கு ஏதோ விசித்திரம் நடந்து கொண்டிருந்தது லேசாகப் புரிந்தது. தரிசன இசை நின்றுவிட்டது, விளக்குகளும் ஏற்றப்பட்டுவிட்டன. ஸ்வாமி என்ன செய்கிறார் என்று எல்லோரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கிஷோரிடம்; "என்ன? எப்படி இருந்தது?”, என்று கேட்டார் சுவாமி.

கிஷோர் வெறுமனே தலையசைத்தார். அது நிச்சயமாக கிஷோர் தன வாழ்வில் அனுபவித்த சிறந்த தருணங்களில் ஒன்று.

"குரு பூர்ணிமாவின் போது உனக்கு பெரிய பிரசாதம் தருகிறேன்" என்றார் சுவாமி.

அப்படி சொல்லிய பிறகு சுவாமி உள்ளே சென்று அன்றைக்கு ஓய்வு பெற்றார்! அப்போது தான் கிஷோருக்கு திகைப்பு ஏற்பட்டது. தரிசன இசை முடிந்து, ஹாலின் விளக்குகள் ஆன் செய்த்தபின் பஜனை நடக்குமே? இன்று என்ன பஜனைகள் ரத்து செய்யப்பட்டதா? என்று யோசித்தார். ஒரு சில கணங்களில் அவருக்கு உண்மை விளங்கியது. அதாவது  ஸ்வாமி அருளிய இரண்டு ஸ்பரிசங்களுக்கு இடையே இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கழிந்திருக்கிறது. சுண்டு விரலால் முதன் முதலாகத் தொட்ட பிறகு, சுவாமி பல நேர்காணல்களை வழங்கினார். பின், பஜனை நடந்தது. ஆரத்தி பெற்று வெளியே வந்து கிஷோரை மீண்டும் உலகுக்கு திரும்ப அழைத்து வந்திருந்தார் சுவாமி!. கிஷோருக்கு ஆத்மாவின் எல்லையற்ற/காலமற்ற  தன்மையினை  சுவைக்கும் ஒரு வாய்ப்பை சுவாமி வழங்கி இருந்திருக்கிறார்!

 

🌹குரு பூர்ணிமா அனுபவம்:

அடுத்த நாள், (அதாவது குரு பூர்ணிமாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்), காலை தரிசனத்தின் போது… சுவாமி கிஷோரை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். கிஷோர் அப்படி ஒரு நீண்ட பார்வையைப் பெறுவது இதுவே முதல் முறை, அதன் அர்த்தம் என்னவென்று கிஷோருக்குப் புரியவில்லை. அவர் மதியம் வரை தனது அன்றாட அலுவல்களை வழக்கமாகச் செய்தார். பின்னர் ஒரு பிரச்சனை உருவாகத் தொடங்கியது. கிஷோர் தனது வயிற்றில் கடுமையான வலி காரணமாக தனது வழக்கமான மதிய தூக்கத்தை அனுபவிக்க முடியவில்லை. அவரின் உடல் வெப்பம் 102 F ஆனது, வகுப்புகள் எடுக்க முடியாது என்று உணர்ந்தார். எனவே, அவர் ஆசிரமத்தில் உள்ள தனது அறைக்குத் திரும்பினார் - W6 A22. போர்வையைப் போர்த்திக் கொண்டு மாலை 3 மணி வரை தூங்கினார். அவரது காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. எனவே, அவர் மேல் சால்வையை சுற்றிக் கொண்டு தரிசனத்திற்குச் சென்றார் .

"ஏய், புட்டபர்த்தியை சிம்லா ஆக்குகிறாயா?" சுவாமி தரிசனத்தின் போது அவரிடம் கேட்டார் .

கிஷோர் சிரித்தார் . சுவாமி தொடர்ந்தார், “உனக்கு வயிறு வலிக்கிறதா? இது வயிற்று வலி அல்ல, கர்ப்பம்! ; ஸ்வாமியின் நகைச்சுவையைக் கேட்டு அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.

சுவாமியும் அந்த நகைச்சுவையை மிகவும் ரசித்ததாகத் தோன்றியது. அவர் மந்திர் வராந்தாவுக்குச் சென்று, அங்கு அமர்ந்திருந்த துணைவேந்தரிடம்; "உங்கள் ஆசிரியர் கிஷோருக்கு கர்ப்ப வலி ஏற்பட்டுள்ளது..." என்றார்.

“சுவாமி? அதாவது... அவர் மனைவி...?” - துணைவேந்தர்.

"இல்லை! கிஷோருக்குத் தான் கர்ப்ப வலி!" - சுவாமி.

மீண்டும், அந்த நகைச்சுவையைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். எப்படியோ அடுத்த ஒரு மணி நேரத்தில் கிஷோரின் வலி குறைந்து; காய்ச்சலும் சுவடே இல்லாமல் போய்விட்டது!. அன்றைக்கு கிளம்புமுன், சுவாமி கிஷோரிடம், "நாளை இரவு அனுபவத்தை தருகிறேன்..." என்றார்.

இதனால் குரு பூர்ணிமா கொண்டாட்டங்களுக்கு முந்தைய இரவு கிஷோர் ஆவலுடன் காத்திருந்தார். ஸ்வாமி தமக்கு என்ன அருளப் போகிறார் என்று யோசித்தபோது ஒரு சிலிர்ப்பான உற்சாகத்தை உணர முடிந்தது.

கிஷோர் திடீரென்று விழித்தபோது கடிகாரம் 12 மணியைத் தாண்டியிருந்தது. அவர் ஒரு முழுமையான  அமைதி மற்றும் சிந்தனையற்ற தன்மையை உணர முடிந்தது. ஆனாலும், அவரது முதுகுத்தண்டில் ஏதோ நடுக்கம் இருந்தது. அது மிக வேகமாக நகர்ந்து, அவரது உள்ளத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் தீவிர அனுபவம் தோன்றியது. கிஷோர் காரணங்கடந்த ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்!


மந்தமான வயிற்று வலி இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. விரைவில், முதுகுத்தண்டில் உள்ள கூச்சமும் நின்று விட்டது. கிஷோருக்குள் ஆழ்ந்த மௌனம் ஒரு வெற்றிடம் போல் உணரப்பட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும் கிஷோர் உணர்ந்த அந்த வெற்றிடம் என்பது  'ஒன்றுமில்லாத'  ஒரு நிலை என்றாலும் 'எல்லாம் உள்ளடக்கியது' போன்ற நிலையாகவும் உணரப்பட்டது!

அந்த நிலையில் கிஷோர் தனது தொப்புளில் இருந்து ஓம்காரப்  பிரணவ ஒலியைக் கேட்டார். {பந்தங்களின் மூன்று முடிச்சுகளில்; பிரம்ம கிரந்தி என்ற முதல் முடிச்சு அவிழ்வதை இது குறிக்கிறது.} இரவு முழுவதும் சில நிமிடங்களாக கழிந்தது, கிஷோர் தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தார். அவர்  உறங்க முயலுவதற்கு முன்பே, குரு பூர்ணிமா நிறைவடைந்துவிட்டது . கிஷோர் உடல் சோர்வுடன் இருந்ததால், குரு பூர்ணிமா அன்று காலை அவர் தரிசனத்திற்கும் பஜனுக்கும் செல்லவில்லை .

மறுநாள் காலையில் எழுந்ததும்,  கிஷோர்  உடல் ரீதியாக சோர்வாக இருந்தார் ஆனால் மிகப்பெரிய அமைதியை அனுபவித்தார். சுற்றிலும் அன்பினால் சூழப்பட்டிருப்பதை உணர்ந்தார். பின்னர் காலைப்பொழுதில்; “சுவாமி வருகிறார்... சுவாமி வருகிறார்...” என்ற மக்கள் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்டது. காரில் சுவாமி தனது கட்டிடத்தைக் கடந்து செல்லப்போகிறார் என்பதை கிஷோர்  யூகித்தார். மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்து சாலையில் நின்றார். சுவாமியின் கார் அவரைக் கடந்து சென்றபோது, சுவாமி, ஜன்னலைத் தாழ்த்தி, அவரைப் பார்த்து ஆசிர்வதித்து... பின்னர், “அறைக்குள் சென்று… தலையணை வைத்து… அயர்ந்து தூங்கும்படி சைகை”யும் செய்தார்!

மறுநாள் காலை, வராந்தாவில் கிஷோரிடமும், துணைவேந்தரிடமும் சுவாமி பேசினார். “துணைவேந்தரே, நேற்று இரவு கிஷோரின் பிரசவம் முடிந்தது! நீங்கள் அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டிய நேரம் இது! “.

கிஷோர் புன்னகைத்தார், துணைவேந்தர் வெறுமனே தலையசைத்தார், திகைத்தார்.

பின்னர் சுவாமி கிஷோரையும் அவரது மனைவியையும் ஒரு நேர்காணலுக்கு அழைத்தார், அதில் அவர் ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்கும்படியும், கிச்சடி சமைத்து வழங்கி அவரை கவனித்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தினார் .

 

🌹ஒரு மகாமந்திரம் பரிசு:

சில வாரங்களுக்குப் பிறகு, கிஷோர் மற்றொரு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார். அந்த நேர்காணலில், சுவாமி இதுவரை கொடுத்திருந்த அனைத்து சாதனா குறிப்புகளையும் மாற்றினார்.

“இன்று முதல், நீ இதுவரை செய்த அனைத்து ஆன்மீகப் பயிற்சிகளையும் மறந்து விடு. எதுவாக இருந்தாலும், யார் சொல்லியிருந்தாலும் நிறுத்தப்பட வேண்டும். இனி நீ ஒரே ஒரு சாதனா தான் செய்ய வேண்டும் - நன்றாக சாப்பிடு, நன்றாக தூங்கு மற்றும் ஜபம் செய். ஆனால் என்ன ஜபம் ? கடவுளின் பெயர் எதுவும் இல்லை. 'நான் சுவாமி... நானே சுவாமி...' என்று ஜெபித்துக்கொண்டே இரு. நான் உனக்குப்  பரிந்துரைக்கும்  சாதனா அவ்வளவுதான் .

ஸ்வாமி, உன்னால்  முடிந்தவரை பல்கலைக் கழகத்தில் பணிபுரி எனச் சொன்னார். கிஷோர்- சாரும் பணிபுரிந்து பின் 2004 இல் 'ஓய்வு' பெற்றார்.

தன்னை ஸ்வாமியை நோக்கி வழியனுப்பிவைத்த தன் குருவான மல்ஹாரி பாபாவிடம்; தன்னுடைய சாதனா மாற்றப்பட்டதைப்  பற்றி சொல்வதுதான் மரியாதை என்று கிஷோர் நினைத்தார். கிஷோர் எதுவும் செய்ய முடிவதற்குள் மல்ஹாரி பாபாவிடமிருந்து போன் வந்தது; “கிஷோர் பாபு, நேற்று நீங்கள் சத்ய சாய்பாபாவிடமிருந்து மிகப் பெரிய மந்திரத்தைப் பெற்றீர்கள் . வேறு எதையும் செய்வதை நிறுத்துங்கள். நான் சொன்னதையெல்லாம் நிறுத்துங்கள். பாபாவிற்கு மேல் குருவோ கடவுளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் . அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் அவர் சொல்வதை மட்டும் அப்படியே செய்யுங்கள்".

இந்தச் செய்தியை தனது இதயத்தில் பதிக்கும் வகையில், மல்ஹாரி பாபாவும் மராத்தி மற்றும் இந்தியில் கிஷோருக்கு ஸ்வாமியைப் பற்றி எடுத்துரைத்து பல கடிதங்களை எழுதினார். கிஷோர் இப்போது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

 

🌹 உண்மையில் மிகப்பெரிய பரிசு என்னவென்பது நம்மில் எவருக்கும் தெரியாது:

 நான் படித்தவை மற்றும் கிஷோர் சாரிடம் கேட்டவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நான் (அரவிந்த் பாலசுப்ரமண்யா) சொன்னேன்; “ஐயா, நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். வாழ்வில் மிகப் பெரிய பரிசுகள் அனைத்தையும் பெற்றுள்ளீர்கள்.”


மல்ஹரி பாபா கிஷோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஒன்று

"ஒரு பிரபலமான கஜலைப் பாடுவதன் மூலம் நான் அதற்கு பதிலளிப்பேன் ..." என்று பதில் சொன்னார் கிஷோர் சார்.

அவர் ஆத்மார்த்தமாக " ஹங்காமா ஹைன் கியோன் புரபா தோடி சி ஜோ பீலி ஹைன் " என்று பாடத் தொடங்கினார். (எல்லா கஜல்களையும் போலவே, இந்த தலைசிறந்த படைப்பிற்கும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன - ஒன்று மேலோட்டமானது மற்றொன்று ஆழமானது!)

கிஷோர் சார் விளக்கினார்; “அமுதத்தை ஒரு துளி குடித்துவிட்டு ஏன் இப்படி ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த கஜல் கேட்கிறது! ஸ்வாமி தனது ஞான வாஹினியில் ஆத்மாவை உணர நான்கு தடைகளை கடக்க வேண்டும் என்று கூறுகிறார்: 

1.லயா (தூக்கம்), 

2.விக்க்ஷேபம் (வழிதவறுதல், அறியாமை உண்மையை மறைத்தல்), 

3.க்ஷயா (சரிவு, மறைதல்) மற்றும் 

4.ரச ஆஸ்வாதனம் (ஆனந்தத்தின் இன்பம்).

முதல் மூன்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தாலும், இறுதியாக… பேரின்பத்தை அனுபவிப்பதும் கூட உச்சநிலையை அடைவதற்குத் தடையாகிறது என்பதை ஒருவர் உணர வேண்டும். ரசம், அல்லது  சமாதியின் இனிமை என்பதும் கூட  ஒருவர் தவிர்க்க வேண்டிய ஒரு சலனமேயாகும், ஏனெனில்  சிறப்பிடம் என்று பார்த்தால் அது இரண்டாவது இடத்தையே பெறுகின்றது. ஆன்மிகப் பாதையில் சிறுசிறு சந்தோஷங்களில் திருப்தி அடைவதே மிகப்பெரிய தடையாக அமைந்துவிடும் என்று கிஷோர் சார் நம்புகிறார்.

ஸ்வாமியிடம் இருந்து மிகப்பெரிய வரத்தை அடைந்துவிட்டதாக நினைக்கும் போதெல்லாம், ஸ்வாமி அதற்கும் மேலாக ஏதோ பெரியது காத்திருக்கிறது என்று காட்டுவதாக கிஷோர் சார் உணர்கிறார். எனவே, அவர் தன்னிடம் இருப்பதில் மிகவும் திருப்தி அடைகிறார். இருந்தாலும் தன்னுடைய சாதனையில், ஆன்ம முன்னேற்றத்தில்…   அவர் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. சுவாமி அவருக்குச் சொல்லிய மந்திரத்தை அடையும் வரை அவர் ஓயமாட்டார். அந்த மந்திரம், " நான் சுவாமி... நானே சுவாமி..." என்பதாகும்.


🙇🏻‍♂️ கிஷோர் சார் இறுதி அறிக்கையாக கீழ்வருவதைக் குறிப்பிடுகிறார்:


🌻“சுவாமி நமக்கு அளிக்கும் மிகப் பெரிய பரிசு எது என்பதை மதிப்பிடக்கூட முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். அவருடைய எந்தெந்த பொக்கிஷங்களை நாம் இதுவரை ருசித்திருக்கிறோம்மேற்கண்ட கசல்  பாடலில் சொல்வது போல்நாம் சிறிது குடித்துவிட்டுநம்மிடம் எல்லா ஆன்மீகப் பொக்கிஷங்களும் வந்துசேர்ந்துவிட்டதாக நினைக்கிறோம். அவரை முழுமையாகக் கொள்ளையடிக்கும் வரை நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் அவரைக் கொள்ளையடிப்பது எளிதல்ல. அவர் மிகப் பெரிய திருடர்- சித்த சோரன்- அவரைப் போன்றே  பெரிய திருடராக மாறினால் தான் அவரையே கொள்ளையடிக்க  முடியும்!”🌻


ஜெய் சாய்ராம் 🙏🏻 

மூலம் : சாயிராம் திரு.அரவிந்த் பாலசுப்ரமண்யா அவர்கள்

தமிழாக்கம்: கவிஞர் சாய்புஷ்கர், பர்த்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக