ஒரு புத்தக நூலாசிரியரிடம் பாபா தனது அறையில் உரையாற்றி அவருக்கு ஏற்படுத்திய அதி அற்புத அனுபவம் மிக சுவாரஸ்யமாய் இதோ...
ஒரு மர கட்டிலில் பாபா சில கடிதங்களை வாசித்து கொண்டிருக்கிறார்... மிக எளிய அறை அது... அதி நுட்ப சௌகர்ய வசதி எதுவுமில்லை.. இறைவன் பாபா எப்போதும் எளிமை விரும்பி! அப்போது நூலாசிரியர் உள்ளே எட்டிப் பார்க்கிறார்.. வா என அழைக்கிறது ஆயிரம் இதயக் கர அலைகளால் சாயி எனும் கருணைக் கடல்... அப்போது இருவருக்கும் நேர்ந்த தெய்வீக உரையாடல் துவாபர யுக குருஷேத்திரத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது! அதே ஸ்ரீ கிருஷ்ணர் பாபாவே எனும் சத்ய அனுபவம் இது... ஏசுபிரான் உணர்த்திய அதே பரமபிதாவே பாபா எனும் திருச்செய்தி சம்பவமாய் பரவசமாய் இதோ அரங்கேறுகிறது!
கொஞ்ச நேரம் பாபா செய்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறார் நூலாசிரியர் அர்னால்ட் ஷுல்மேன்... "ஏதாவது புரிந்ததா?" பாபா கேட்கிறார்.. எதுவுமே புரியவில்லை என்கிறார் அர்னால்ட்...
"தோற்றம் வேறு வெறுமை வேறல்ல...அதே சமயத்தில் வெறுமையில் எந்த தோற்றமுமில்லை!" என தனது புத்தாவதார ஞானச் சாற்றை பிழிகிறார் பாபா...
"வாழ்க்கை என்பது வெறும் கனவுகளின் ஞாபகங்களே.. அது எந்த மழையிலிருந்தும் எழுவதில்லை.. எந்த கடலிலும் விழுவதில்லை... வெறும் பொருட்களை சேகரித்துக் கொண்டே போவதில் எந்த அர்த்தமும் இல்லை என ஒருநாள் நீயே உணர்வாய்..! எனக்கென்று எந்த நிலமும் இல்லை உணவுக்காக எதையும் நான் சேகரிப்பதும் இல்லை... அது அனைத்தும் வேறொருவரிடமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது... நான் உணவாக எடுத்துக் கொள்வது உங்களுடைய ஆனந்தத்தையும் அன்பையுமே... நீ ஒரு வார்த்தையில் வேறு வேறு அர்த்தங்களை கண்டுபிடிக்க முயல்கிறாய்... எனக்கோ எல்லா வார்த்தைகளும் ஒன்றே! ஆனால் நான் விரைவாக செயலாற்ற வேண்டும்.. இவர்கள் என்னிடமிருந்து விலகுவதற்குள் நான் மிக விரைவாக செயலாற்ற வேண்டும்!" என்கிறார் பாபா..
நூலாசிரியரின் கண்களையே உற்று நோக்குகிறார்... மேலும் தொடர்கிறார்..
"நான் இவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. அது இவர்களின் நம்பிக்கை கலந்த அன்பே...அதை தவிர எனக்கு வேண்டியது எதுவுமே இல்லை! ஆனால் பலர் நான் அவர்களுக்கு பரிசுகளோ அல்லது எனது அற்புதங்களால் ஏதேனும் வழங்காமல் போனாலோ இங்கே வருவதை நிறுத்தி விடுகிறார்கள்...நான் உங்கள் அனைவரிடமும் எல்லாவற்றையும் கேட்கிறேன் தான்.. ஆனால் அது பழமோ.. மலரோ... பணமோ... நிலமோ அல்ல.. அல்லவே அல்ல! உங்கள் மனம், இதயம் , ஆன்மா இவை மூன்றையும் தான் ...! நீங்கள் எனக்கு உடனடியாக தரவேண்டியவை" என்கிறார் பாபா!
அறையில் ஒரே நிசப்தம் நிலவுகிறது! பாபா அவரையே உற்று நோக்குகிறார்!
சற்று நேரம் நூலாசிரியரை கவனித்துவிட்டு பாபா "என்னை விட்டு நீ ஓடிப் போகவே முடியாது.. நான் உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.. நானே அழைக்காமல் யாரும் புட்டபர்த்திக்கு வர இயலாது! அது சாத்தியமில்லை...யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களையே என்னை வந்து தரிசிக்க அழைக்கிறேன்... அந்த தயார் நிலையானது பல படிநிலைகளை கொண்டிருக்கிறது என்பதை மறவாதே!"
என்கிறார் பாபா...ஞான நீர்வீழ்ச்சியில் குதித்தது போல் இருந்தது நூலாசிரியருக்கு...
"உனக்கு ஒரே ஆச்சர்யம் பல மக்கள் இருக்க.. உன்னை ஏன் அழைத்தேன் என்று? இல்லையா? அதையே யோசித்துக் கொண்டிருக்கிறாய்!" என புன்னகை பூக்கிறார் பாபா! தன் மனநிலையே துல்லியமாய் சொல்லியதால் நூலாசிரியர் சிரிக்கிறார்.. அவரின் இறுக்க சூழ்நிலை சற்று தளர்வாகிறது!
"ஆம் நான் வருந்துகிறேன்...என்னால் உங்களை முழுதாக நம்பமுடியவில்லை... கண்மூடித்தனமாக ஒருவரின் கால்களில் விழுந்து அவருக்கு அடிமையாக இருப்பதை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.. நீங்கள் கடவுளோ...இல்லையோ...யோக சக்தி பெற்றவரோ... என்னால் யாரையும் அப்படி நம்பமுடியவில்லை!" என்கிறார் நூலாசிரியர் தன் உள்ளம் திறந்து உள்ளதை உள்ளபடி பேசுகிறார்...
இது தான் துவாபர யுக அர்ஜுனன் தயக்கமும்..
"நீ உன்னையாவது நம்புகிறாயா?" பாபா விடவில்லை...
"அவ்வளவாக இல்லை!" என்கிறார் நூலாசிரியர்!
"உன்னுடைய கடந்த காலம் - நிகழ் காலம் - எதிர் காலம் எல்லாம் எனக்கு தெரியும்! எப்போது உன் துயரம் விடும் என்றும் நான் அறிவேன்!" பாபா சொல்லி முடிப்பதற்கு முன்னே...
"நான் சாகும் போது தானே என் துயரம் விடும் ?" என குறுக்கிடுகிறார்!
"உனக்கு மரண பயம் அதிகம் .. எனக்கு தெரியும்! நீ இப்படித்தான் கடந்து வந்த பிறவிகளிலும் இருந்திருக்கிறாய்... இருந்தபடி இறந்திருக்கிறாய்...!" என்கிறார் மிக தீர்க்கமாய் பாபா!
"எனக்கு அந்த பயம் இல்லை!" என மறு(றை)க்கிறார்...
"அது தான் உன் பயமே... நீ மரணத்தை கெடுதல் என நினைக்கிறாய்.
அது நன்மையும் இல்லை.. கெடுதலும் இல்லை... மரணம் என்பது வெறும் மரணமே!" என தனது புத்தாவதார சீடர் போதி தர்மருக்கு பாபா தான் வழங்கிய ஞானத்தை நூலாசிரியரிடம் தேங்காய் உடைப்பது போல் பேசுகிறார்!
"அது எப்போதும் அதுவே... அது வேறெதுவும் அல்ல! " இதுவே ஜென் பௌத்தம்!
"மரணத்தால் என்ன பயன்?" நூலாசிரியர் கேட்கிறார்!
"இறந்தவன் பிறப்பதில்லையா? பிறந்தவன் இறப்பதில்லையா?" பாபா கேட்கிறார்..
"புரியவில்லை!" இது நூலாசிரியர்!
"வாழ்க்கை என்பது நிஜம் போல் தோன்றுகிற ஒரு கற்பனையே...! மரணம் வரும் வரை அது நிஜம் போலவே தோன்றுகிறது! மரணத்தில் வெறும் உடலே அழிந்து போகிறது... மனிதன் உடம்பு அல்ல.. அவன் உடம்புக்குள் இருக்கிறான் அவ்வளவே! எறும்பு முதல் பறவை, விலங்கு இவை இறக்கிற போதும் உலகை விட்டுச் செல்கிறது.. அவ்வாறே மனிதனும் செல்கிறான்.. ஆனால் அவன் செல்வதற்கு முன் மனிதன் தான் எப்படி வந்தானோ அவ்வாறே சிறந்த இடமாய் இந்த பூமியை வைத்த பிறகே விலக வேண்டும்!" என்கிறார் பாபா!
தீவிரமாய் யோசித்தபடி தைரியம் வந்ததும் திடீரென "நீங்கள் கடவுளா?" எனக் கேட்கிறார் நூலாசிரியர்..
"என்னை விளக்க நீ ஏன் உன் சக்தியையும் நேரத்தையும் விரயம் செய்கிறாய்?" ஒரு மீன் கடலை அளக்க முடியுமா? நான் சங்கு சக்கரங்களோடு வந்தால் என்னை சர்க்கஸ்'சில் காட்சிப்பொருளாய் மனிதன் வைத்திருப்பான்.. ஆகவே தான் மனித உடலெடுத்து வந்தேன்.. அப்போது தானே உங்களோடு என்னால் தொடர்பு கொள்ள முடியும்!" என்கிறார் மிக தீர்க்கமாய் பாபா!
"அப்போது ... நீங்கள் கடவுள் தானா!" என ஆச்சர்யப்படுகிறார் நூலாசிரியர்!
"நீ உன்னை முதலில் உணர்ந்து கொண்டால் மட்டுமே என்னை உணர முடியும்.. நான் ஆணும் இல்லை.. பெண்ணும் இல்லை...இளமையும் இல்லை முதுமையும் இல்லை.. இவை அனைத்தும் நானே!" என்கிறார் பாபா..
ஆச்சர்யப்படுகிறார் நூலாசிரியர்... அதற்கு பாபா...
"சிலருக்கு கடவுளே பூமியில் இறங்கி வந்துவிட்டாரே என இதை அழகாக உணர்கிறார்கள்.. எனக்கு எந்த அழகும் இதில் ஏற்படவில்லை.. உங்கள் அனைவரின் முக்காலமும் எனக்கு தெரியும்... அதை அனுசரித்தே மனிதர் கேட்ட போதும் சிலவற்றை நான் தாமதப்படுத்துகிறேன்.. சிலவற்றை தருகிறேன்.. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது! ஆகவே நீங்கள் என்னிடம் இரந்து கேட்பதால் மட்டும் நான் உடனடியாக உங்களுக்கு எதையும் அள்ளித் தருவதில்லை... எனவே மனிதன் என்னை ஒருசமயம் இரக்கமான இறைவன் என்றும் மறுசமயம் கொடுமைக்கார இறைவன் எனவும் நினைக்கிறான்... மனிதன் வேதனைப்படுவதற்கு நான் எந்தவகையிலும் காரணம் இல்லை... நான் யாருக்கும் வருத்தம் அளிப்பதில்லை... ஆனந்தத்தையே அளிக்கிறேன்! தனக்கு தானே மாளிகையையும்... கை விலங்கையும் மனிதனே தனக்கு உருவாக்கிக் கொள்கிறானே தவிர நான் அல்ல!" என்கிறார் பாபா!
"உங்களைப் பற்றி புத்தகம் எழுதவா?" என நூலாசிரியர் கேட்கையில் ... "என்னை முழுதாய் உணர்ந்துவிட்டாயா... நான் சொல்வதை அவ்வாறே உணர்ந்த வண்ணம் ஏற்கிறாயா? எதை எழுதுவாய்?" என பாபா கேட்க... "அப்போது எழுதக் கூடாதா?" என நூலாசிரியர் கேள்வியை வீச... பாபா சிரித்துக் கொண்டே "எழுது...! அது உன் தர்மம்.. ஆனால் நீ இங்கு வந்து உணர்ந்த உண்மையையே எழுத வேண்டுமே அன்றி உன் ஜோடனையை அல்ல...!" என்று சொல்லி.. நூலாசிரியரின் கைகளையும் இதயத்தையும் நன்றாக தேய்த்துவிட்டு ஆனந்த நிலை அருள்கிறார்!
"நான் எப்போதும் உன் கூடவே இருக்கிறேன்.. நீ என்னை நம்பாவிட்டாலும்.. வெறுத்தாலும்... எள்ளி சிரித்தாலும்... நான் இந்த பூமியின் மறு முனையில் தான் இருக்கிறேன் என்றும் உன் அருகில் இல்லை என்றும் நீ கற்பனை செய்து கொண்டாலும்... நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்.. என்னை நினைத்துக் கொள்ள ஏதாவது ஒரு பொருள் தேவையா?" எனக் கேட்டபடி பாபா தனது கையை சுழற்றி தனது தெய்வத்திரு உருவம் பதித்து அதில் 16 கற்கள் பதித்த கண்கவர் தங்க சிருஷ்டி மோதிரம் அணிவித்துவிடுகிறார்!
பரவசப்பட்டபடி "சுவாமி இதை சுங்கவரி இலாக்காவினரிடமிருந்து நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்!" என புன்னகைக்க...
"நான் பார்த்துக் கொள்கிறேன்.. கவலைப்படாதே... நீ என்னுடையவன்... நான் உன்னுடன் இருக்கிறேன்.. நமக்குள் எப்போதும் எந்த பிரிவும் இல்லை!" என்கிறார் நரம்பு சதை எடுத்துவந்த ஸ்ரீ சத்ய சாயி பரப்பிரம்மம் மிக மிக கருணையோடு...!
(ஆதாரம் : Book - "Baba" by Arnold Schulman / ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் : வைரபாரதி)
🌻பாபா சொன்ன ஒவ்வொரு சத்திய வார்த்தைகளும் நம் ஒவ்வொருவருக்காகவும் பாபா வழங்குகிற நிகழ்கால வார்த்தைகள் என்பதை அணு சிலிர்க்க அனுபவிக்க முடிகிறது!🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக