சேவைத் திலகம் ஸ்ரீ கஸ்தூரி அவர்கள் பெற்ற பாபா அனுபவங்கள் பாற்கடலை விட அகன்று விரிந்தது... அவரே எப்போதும் சாயி வட்டத்தினரில் முதன்மையானவர்... அவரின் கொடுப்பினை நீட்சியே பிரேம சுவாமியின் அன்னையாக அவர் இப்போது பிறந்திருப்பதும்... அந்த பரம பக்தர் பெற்ற பாற்கடல் அனுபவத்திலிருந்து சிறு துளி இதோ..
ஒருமுறை சேவைத் திலகம் கஸ்தூரி அவர்கள் இலங்கை விஜயம் செய்வதாக இருக்கிறது.. சுவாமி உத்தரவிட்டபடி தான் விஜயம் புரிவதற்கான தந்தியும் அனுப்பிவிடுகிறார் இலங்கைக்கு... அந்த அனுமத் தந்தி அவர்களின் கையில் கிடைத்து ... அதனை இலங்கை சமிதியில் வாசிக்கிறார் நல்லை நாதன்... ஏற்பாட்டின் படி சேவைத் திலகம் கஸ்தூரி 10 நாள் தங்கி சுவாமி சேவையாற்ற வருகை புரிவதாக இருக்கிறது.. ஆனால் தந்தியை வாசிக்கும் நல்லைநாதன் கஸ்தூரி அவர்கள் வரலாம் வராமல் கூட போகலாம் எனச் சொல்கிறார்...அது சுவாமி சங்கல்பமே என்கிறார்... அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி! எதற்காக அவ்வாறு சொன்னார் என? நல்லைநாதனுக்கே பிடிபடாத ஓர் உணர்வு... தான் ஏன் அவ்வாறு சொன்னோம்? என அவருக்கே ஒன்றும் விளங்கவில்லை... 1970 டிசம்பரில் ஈழ விஜயம் செய்வதான ஏற்பாட்டை பாபா திடீரென ரத்து செய்யும் படி சொல்லிவிடுகிறார்.. அதனை தந்தி மூலம் தகவல் சொல்லிவிடு என்கிறார்...
அது படி அனுப்பிய தந்திக்கு பதில் கடிதம் வருகிறது ஈழ பக்தர்களிடம் இருந்து...
"உங்களிடம் இருந்து தந்தி வந்தது.. அது பாபாவிடமான எங்களது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாக இருந்தது!" என எழுதி இருந்தது.. அவர்கள் அன்று சேவைத் திலகம் விஜயம் புரியப் போகும் தகவல் தந்தியை வாசித்து அவர் வராமலும் போகலாம் என்று பேசியதை பாபா அந்த சமயத்தில் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார் எனும் சத்திய தீர்க்க உணர்வு அவர்கள் அகத்தில் உறுதியாக பதிந்ததன் விளைவே அந்த பதில் கடிதமும்... பாபா அறியாதது என ஏதுமில்லை இந்த அண்டசராசரத்தில்... இயக்குநரே அவர் தான் எனும்போது திருப்பங்களை விருப்பமாக்குவதும்... விருப்பங்களை திருப்பமாக்குவதும் பாபாவே!
சுவாமியை ஒருநாள் பாத நமஸ்காரம் புரியும் போதே சேவைத் திலகம் கஸ்தூரியிடம் சுவாமி ஈழ பயண ரத்து பற்றி பகிர்ந்து கொண்டு... வா என்னோடு கோவாவுக்கு என பாபா அழைத்துக் கொண்டு போகிறார்... கஸ்தூரிக்கு ஏன்? எதற்காக? என எதுவும் புரியவில்லை.. நமக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட பாபா எது நிகழ்த்தினாலும் அதற்கொரு தகுந்த காரணம் இருக்கவே செய்கிறது..! அது நம் நன்மைக்காக மட்டுமே!
பாபாவின் கோவா பயண சமயத்தில் தான் குடல் வால் சீழ் பிடித்து ஆபத்து நிலையை பாபாவே தனக்கு ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து அந்த கோவா விஜயத்தின் ஒருநாளில் முழுவதுமாக சரிபடுத்திக் கொள்கிறார்... அதற்குள் அந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது.. "நீ போய் ஈஸ்வரம்மாவுக்கு ஆறுதல் சொல்லி... எனக்கொன்றும் இல்லை... எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்! நீ சொன்னால் தான் முழுதாய் பதட்டம் நீங்கி சமாதானம் அடைவாள் ... உடனே புட்டபர்த்தி செல்!" என உத்தரவு இட்டதும்... ஏன் தன்னை கோவாவுக்கு அழைத்தார் என சேவைத் திலகம் உணர்ந்து கொள்கிறார்!
ஒருமுறை பாபா செப்ரோலில் இருக்கிறார்... அந்த சமயத்தில் சேவைத்திலகம் கஸ்தூரியை அழைத்து... "நாம் உடனே சென்னைக்கு புறப்பட வேண்டும்.. ஏற்பாடு செய்!" என்கிறார்! பாபாவுக்கோ ஜுரம் கொதிக்கிறது... அகமும் முகமும் சுண்டிப்போகிறது சேவைத்திலகத்திற்கு... யார் கர்ம வினையை தான் வாங்கி இருக்கிறாரோ தெரியவில்லையே?! என மனம் பதைபதைக்கிறார்.. கார் பின் சீட்டில் பாபாவும் பரமபக்தர் கஸ்தூரியும் அமர்ந்திருக்க.. உலோகக் கார் உர்ர்ர் என வேகம் எடுக்கிறது... அது வேகம் எடுக்க எடுக்க பாபாவின் ஜுரமும் வேகம் எடுக்கிறது.. சரி நாம் முன் சீட்டிற்குப் போனால் சுவாமி சவுகரியமாக படுத்துக் கொள்வாரே என சேவைத் திலகம் நினைத்தவுடனேயே "ஒத்து" (வேண்டாம்) என்கிறார் பாபா! யாரின் மனதைத்தான் அந்தர்யாமி இறைவன் பாபாவால் வாசிக்க முடியாது! அப்படியே சேவைத்திலகம் தோளில் சாய்ந்தபடி தெய்வம் பயணிக்கிறது! என்ன பாக்கியம்!! பாபாவின் சுவாசத் துளாவலும் ஸ்பரிசத் தீண்டலும் அச்சுவை பெரிதும் வேண்டேன் அரங்கமா நகருளானே எனும் படி ஆனந்தமும்... பாபாவுக்கு சரியாகிவிட வேண்டுமே எனும் பதைப்பும் அவருக்கு...
பாபா நிகழ்த்திடும் நாடகத்தில் எப்போது திரை மாற்ற வேண்டும் என பாபாவுக்கு தெரியாதா?! பாபாவின் புஸ் புஸ் எனும் தெய்வத்திரு கேசம் சேவைத் திலகம் கஸ்தூரியை உரசுவதில் மயிற்பீலி ஸ்பரிச இதம் இதயத்தில் பரவுகிறது! வண்டி சென்னையை தாண்டுகிறது.. நெல்லூர் நெருங்குகிறது... நெல்லூரியில் இன்னமும் வண்டி வேகமெடுக்கட்டும் என்கிறார் பாபா... யாரேனும் அறிந்தால் சுவாமிக்கு உடல்நலம் சரியில்லையா என மனம் வருந்துவார்கள் என்கிறார்! ஆகவே நெல்லூர் விழித்தெழும் முன்னரே நெல்லைக் கிழிக்கும் காற்றாய் தடயமின்றி பயணிக்கிறது பாபாவின் கார்!
யாரின் மனதையும் தன் அங்க அசைவுகளால் கூட துன்புறுத்தாதவர் இறைவன் பாபா... அதனால் தான் அவர் இறைவன்!
"ஜல்தி! பெங்களூர் வழியா புட்டபர்த்தி போ... இல்லையெனில் சுவாமியின் உடல்நிலை பற்றிய வதந்தியை கிளப்பிவிடுவார்கள்!" என்கிறார்.
புட்டபர்த்தி விரைகிறது பாபா கார்... சேவைத் திலகம் கஸ்தூரியை எப்போதுமே சாதாரண பக்தர்கள் பயணிக்கிற கிளாஸிலேயே அனுப்புவார் சுவாமி... அனைவரையும் ஒன்றாகவே நடத்துபவர் சுவாமி.. அந்த சம திருஷ்டி தான் இறைவன் பாபா! அந்த சமயத்தில் ஒருமுறை சேவைத் திலகத்திடம் சுவாமி "நீ பெங்களூருக்கு முதல் வகுப்பிலேயே போ... அன்னிக்கு நீ எனக்காக ராத்திரி பூரா கண்முழுச்சு முதுகு வளையாம வந்ததுல எவ்ளோ சிரமப்பட்டிருப்ப?!" என்கிறார் கருணை ததும்பத் ததும்ப... அளவற்ற அந்தக் கருணை தான் இறைவனின் சாமுத்ரிகா லட்சணம்!
(ஆதாரம்: அன்பு அறுபது/ பக்கம் : 19/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பாபாவின் இறை நெற்றியில்... பிரபஞ்ச நேர்த்தியான பிறை நெற்றியில் எப்போதும் மின்னும் ஒரே திலகம் சேவைத்திலகமான இந்த கஸ்தூரி திலகமே! பிடிவாத முதுமையிலும் சந்தனமாய் தன்னைக் கரைத்து கஸ்தூரி சேவை புரிந்தார் எனில் எவ்வளவு பெரிய அக மாற்றத்தை அடைந்திருப்பார் அவர்!! சேவைத்திலகம் கஸ்தூரி முதுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு... முதுமையின் மகிமைக்கு ஓர் சிறந்த உதாரணம்... பாபா இறைவன் என்பதாலேயே அந்த கஸ்தூரி எனும் கற்பூர மலையை உருக வைத்தார்... "சத்தியம் சிவம் சுந்தரம் " என நம்மை அவர் வழி தன்னை பருக வைத்தார்!
பக்தியுடன்
வைரபாரதி
🕉 SRI SAI RAM
பதிலளிநீக்கு