தலைப்பு

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

சாயி கோபாலனின் குறும்புத்தன சாந்நித்ய லீலைகள்!


ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணனே சாட்சாத் ஸ்ரீ சூர்ய குல கிருஷ்ணன் எனும் அனுபவம் உணர்த்தும் அற்புத அனுபவங்கள்... குழந்தைகளின் இதயத்தில் கடவுள் அமர்வார்.. அப்படி அமர்கையில் குழந்தையாவே அமர்வார்...குழந்தையின் இதயங்களில் மட்டுமல்ல இதில் குழந்தை இதயங்களிலும் அப்படியே எனும் ஆழப்புரிதல் ஏற்படுத்தும் உன்னத அனுபவம் இதோ...

பெங்களூரில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார்... அவர் பெயர் திருமதி கித்வானி... ஒருமுறை அவர் வீட்டுச் சுவரில் ஏதோ கறைகள் இருப்பதைப் பார்க்கிறார் கோலாலம்பூரை சேர்ந்த திரு ஜே.ஜகதீசன்... அவர் ஒரு நூலாசிரியர்... "Journey to God" ("கடவுளை நோக்கி ஒரு பயணம்") எனும் ஒரு சுவாமி அனுபவ நூல் அது! சுவரின் கறை பற்றி விசாரிக்க.. சுவரில் ரங்கோலி அடித்திருப்பதைப் போன்ற தோற்றம்.. "ஓ அதுவா.. பாபா தான் அப்படி குறும்புத்தனம் செய்திருக்கிறார்!" என்கிறார் திருமதி கித்வாணி... வர்ண நீர்த்துளிகளைத் தெளித்தாற் போல் இருக்கிறது.. சுவாமியின் இரக்க மனம் வழிவதைப் போல்... வர்ணங்கள் வழிகின்றன‌..

சுவாமியின் கையெழுத்து முதல் சுவாமியின் செய்திகள் வரை சுவாமி கையெழுத்திலேயே சுவரில் இடம் பெறுகின்றன... வியந்தும் சுவாமியின் குறும்பை நினைந்து நெகிழ்ந்தும் போகிறார் ஜகதீசன்...


ஒருமுறை பாபாவோடு வொயிட் ஃபீல்டிலிருந்து புட்டபர்த்திக்கு பயணமாகிறார்கள் அணுக்கத் தொண்டர்கள்...அதிகாலையிலேயே எழுந்து கொண்டு காபியும் அருந்தாமல் பாபாவோடு புறப்படுகிறார்கள்... ஒரு காபியாவது குடித்திருக்கலாம் என்ற ஒரு அங்கலாய்ப்பு அவர்களிடம்... பாபாவுக்கு தெரியாமல் ஒரு பக்தரின் சிறு எண்ணம் கூட தப்பித்து காற்றில் கலக்க முடியாது.. பாபா திடீரென கையசைத்து சிருஷ்டி பெப்பர்மின்ட்'களை வரவழைக்கிறார்... அது மிகச்சரியாக எத்தனைப் பேர் தன்னோடு வந்திருக்கிறார்களோ...அத்தனைப் பேர்க்கும் கன கச்சிதமாய் தருகிறார் அந்த வெள்ளை நிற பெப்பர்மென்ட்'களை... காலையிலேயே பெப்பர்மென்'ட்டா என நினைத்தபடி அவர்கள் வாயில் போட்டுக் கொள்ள... ஒவ்வொருவரின் முகம் ஆச்சர்யத்தில் மலர்கிறது! நாக்கில் பட்ட அந்த பெப்பர்மென்ட்'டிலிருந்து காபி சுவை.. காபி மணம் என அந்த குறும்பு லீலை ஆச்சர்யப்பட வைக்கிறது... விஞ்ஞானிகள் விண்வெளியில் செல்லும் மாத்திரைகளே உணவாக எடுத்துக் கொள்வார்கள்.. பிரபஞ்சப் பெருவிஞ்ஞானியான பாபா காபியையே மாத்திரையாக தனது கார் யாத்திரையில் தந்தது கூடப்பயணித்தவரை குதூகலப்படுத்துகிறது!


பாபா ஒருமுறை அடியார்களோடு சில கார்களில் புட்டபர்த்தியில் இருந்து பெங்களூருக்கு புறப்படுகிறார்.. ஒரு இடைவெளியில் காரில் இருந்து இறங்கி ஒவ்வொரு காரின் ஜன்னல் வழியே தனது தெய்வத்திரு சிரசை நுழைத்து பயண சவுகரியங்களை விசாரிக்கிறார்... விசாரிப்பதில் பாபாவுக்கு நிகர் பாபாவே! அந்தப் பேரன்பு இதயத்தை கரைக்கும்.. தன்மேல் அன்பே இல்லாதவர்களைக் கூட "அவன் எப்படி இருக்கான்" என விசாரிப்பார்... சுவாமியின் பெருங்கருணையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையையே அவரின் காலடியில் சமர்ப்பிப்பது ஒரு அனிச்சை செயலே! அப்படி விசாரிக்கிற போது ஒரு காரின் ஜன்னலில் எட்டிப் பார்த்து "நான் ஏன் இப்படி செய்கிறேன் தெரியுமா... வெளியே இருந்து போகும் வண்டிகளில் என்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாதல்லவா ... அதற்காகத்தான்!" என்று சொல்லி சிரிக்கிறார்! பாபாவுக்கு எப்போதுமே தனது பக்தர்களின் சவுகரியம் மிகவும் முக்கியம்.. பாபா தன் பக்தர்கள் மீதே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்! அப்படி ஒரு இறைவனை அடைய பக்தர்கள் உண்மையில் பல ஜென்ம தவ காத்திருப்பு நிகழ்த்தியே அடைந்திருக்கிறார்கள்!


சுவாமியின் பிருந்தாவன இருக்கை முன் ஹாலில் சில முக்கிய அங்கத்தினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... குழந்தை சுவாமி.. கோப சுவாமியாக மாடியிலிருந்து கீழே இறங்குகிறார்... "உங்களுக்கெல்லாம் சுவாமி சாட்சாத் சுவாமியே தான் உணர்வு இருக்கிறதா.. இப்படியா வம்பு பேசுவீர்கள்.. சுவாமி இருக்கும் இடம் கோவில் என நீங்கள் உணர்ந்திருந்தால் இப்படியா பேசிக் கொண்டிருப்பீர்கள்? இப்படி இருந்து கொண்டே.. பிறரிடம் சுவாமியை பற்றி பேசுவது பாசாங்குத்தனம்... உள்ளூர பயம்-பக்தி- விநயம் வேண்டாமா? நிறுவனத்தின் அங்கத்தினராக இருந்து கொண்டு இப்படியா நடப்பது? உங்களை அங்கத்தினராக்கி இந்த கட்டிடத்தின் உள்ளே விட்டதே சுவாமி நான் செய்த மிகப் பெரிய தப்பு!" என பூகம்பமாய் வெடிக்கிறார்.. பிருந்தாவன பாபா அப்போது ஷிர்டி பாபாவின் கோப சுபாவத்தை வெளிப்படுத்துகிறார்... இப்படித்தான் சுவாமி.. பாபா ஒரு குழந்தை.. அவர் எதையும் கண்டு கொள்ளவே மாட்டார் என நினைத்தால்... அது நம் அறியாமையே... பாபாவிடம் எப்போதும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.. அகந்தையும்... தற்பெருமையும்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும்... அதிகாரத் திமிர் எல்லாம் சுவாமிக்கு பிடிக்கவே பிடிக்காது! பாபா ஒரு நெருப்பு... நெருப்போடு விளையாடினால் நெருப்புக்கல்ல விளையாடுபவர்க்கே சேதாரம் என்பதை உணரமுடிகிறது!

கோகுல லீலைகளில் வெண்ணை திருடுவது மட்டுமல்ல பூதகியை வதம் செய்ததும் அடங்கிக்தானே இருக்கிறது.. அப்படி ஒரு மனவதம் சுவாமி நிகழ்த்தியது!

ஒருமுறை உதகமண்டல 'வால்டாம் ஸ்டவ்' மாளிகையில் விஜயம் புரிந்த சுவாமி...வால்டஸ் நடனப்படி சுழன்று சில அடிகள் எடுத்து வைத்து நாட்டிய அறைக்குள் நுழைந்து.. கண்களில் குறும்புத்தனம் பிரகாசிக்க "இங்கிலீஷ் டான்ஸ்" என்று சொல்லி நடனமிட்டு அனைவரையும் பேராச்சர்யப்பட வைக்கிறார்! 


சுவாமியின் தெய்வத்திரு மேனிக்கு ஒரு முப்பது வயதிருக்கும்.. பிரேம சுவாமியின் தாயாகப் பிறந்த பரம பாக்கியம் பெற்ற ஸ்ரீ கஸ்தூரியின் இல்லத்திற்கு பாபா விஜயம் செய்கிற போதெல்லாம்... பல்வேறு அடியார்கள் சுவாமியின் தரிசன- ஸ்பரிச- சம்பாஷனைக்காக வெளியே காத்துக் கொண்டிருக்க... பாபாவோ அங்கு உள்ள ஒரு கரடி பொம்மையோடு விளையாடுகிறார்.. அதை கீ கொடுத்தால் அந்த கரடி பொம்மையின் கையில் உள்ள பெல் தட்டி.. குதிக்கும்.. பாபா அந்தக் கீ'யைச் சுற்றி அதனை கைதட்ட வைத்து அது குதிக்கும் போது.. பாபாவும் கை தட்டி சந்தோஷப்படுகிறார்... அந்தக் கீ'யை சுற்றும் போது 'இந்த மனிதர்களும் நான் கீ கொடுத்து அசையும் பொம்மைகளே' என சந்தோஷப்பட்டிருப்பார்... திடீரென அதை தனியாக தூக்கிப்போட்டு  கஸ்தூரியை திரும்பிப் பார்த்து "நீயும் இந்த கரடி பொம்மை தான்... உன்னை ஆடற வரைக்கும் ஆட வைத்து.. அப்றம் தூக்கிப்போட்டுவிடுவேன்!" என்கிறார்..

பிறர் என்றால் அதைக் கேட்டுவிட்டு பக்குவமில்லாமல் ஒருவாரம் அழுவார்கள்... ஆனால் கஸ்தூரி ஒன்று கேட்கிறார்...அது தான் கஸ்தூரி... ஸ்ரீ கஸ்தூரி போன்றே இன்றளவும் நிறைய பக்தர்கள் உருவாக வேண்டும்..! முழுதாய் வெந்த பானை தான் தண்ணீர் நிரப்பவும்.. கடம் வாசிக்கவும் பயன்படும்‌... அரைவேக்காடுகள் ஆன்மீகத்திற்கு ஆபத்தானவர்கள்... "ஓஹோ என்னை பாபா தூக்கிப்போடுவாரா... அப்போ என்னை தன் சுயநலத்திற்குத்தான் பயன்படுத்துகிறாரா?" என அபத்தமாய் பக்குவமில்லா கற்பனையை வளர்த்து பாபாவையே தூக்கிப் போட்டிருப்பார்கள்...

      ஆனால் ஸ்ரீகஸ்தூரி அப்படி நினைக்கவில்லை... சுவாமி சொன்ன பதத்தை சரியாகப் புரிந்து கொள்கிறார்..

 "சுவாமி... நீங்கள் தூக்கிப் போடுவேன் என்று சொன்னது...என் உடலைத் தானே! உயிரை நீங்கள் தானே அணைத்துக் கொள்வீர்கள்!" என ஒரு கேள்வி கேட்கிறார்...! அதுதான் கஸ்தூரி.. அதனால் தான் அவர் கஸ்தூரி..

 பாபாவோ ஒரு விநாடி கூட தாமதிக்காமல் "ஆமாம் ! ஆமாம்!" என்கிறார்.. அது தான் இறைவன்... அதனால் தான் பாபா இறைவன்!

(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் - 44 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பாபா ஆட்டுவிக்கும் பொம்மையே நாம்! தன் இஷ்டத்துக்கு நாம் ஆட ஆரம்பித்தோம் என்றால் அந்த ஆட்டத்தையும் கொட்டத்தையும் ஜென்மத்திற்கும் மறக்க இயலாதவாறு அனுபவம் நிகழ்த்தி அழுத்தமாய் உணர்த்துவார்! சுவாமி ஒரு குழந்தை.. அதே சுவாமியே ஒரு நெருப்பும்... வித்தியாசமான கலவையே எப்போதும் கடவுள்... ஆகவே தான் சுவாமியை யாராலும் கணிக்கவே இயலாது! அப்படி கணித்து இதுதான் விடை என்று அறிவிக்க பாபா விஞ்ஞானம் இல்லை.. அதனையே உள்வாங்கி ஏப்பம் விடும்  மெய்ஞானம்.. அவர் இயற்பியல் இல்லை அதையே புதிரடைய வைக்கும் பேரியற்கை! பக்தி எனும் கயிற்றால் மட்டுமே இதய உரலில் இந்த கிருஷ்ண பாபாவை ஒருவர் கட்டிப்போட முடியுமே அன்றி வேறெதனாலும் அல்ல...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக