தலைப்பு

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆன்ம யாத்திரைக்கு உங்களை தயார் செய்யவே வந்திருக்கிறேன்! -- ஸ்ரீ சத்ய சாயி இறைவன்


பாபா தனது அவதார நோக்கம் குறித்து பலமுறை வலியுறுத்தி இருந்தாலும் பலரின் பலவிதமான சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்திருக்கிற நித்ய மங்கள ஞானாமுதமும் மிக சுவாரஸ்ய விருந்தாக இதோ...


"சுவாமி உங்களின் 60 ஆவது பர்த் டே'க்கு அப்றம் எங்களை விட்டு வெகு தூரம் சென்றுவிடுவீர்களா? இந்த சமீபம் கிடைக்கவே கிடைக்காதா?" என ஒரு குழந்தை மாணவர் கேட்கிறார்..

"யார் சொன்னார்? எவர் சொன்னார்?"

என பாபா அவரிடமே கேட்கிறார்!

"சுவாமி நீங்க ஏதோ உங்க ஸ்பீச்ல சொன்னீங்கன்னு" என அந்த அப்பாவி மாணவர் இழுக்கிறார்..

"அப்டீன்னா என்ன அர்த்தம்.. விட்டுட்டு போய்டுவேன்னு அர்த்தமா? இல்லை...  சுவாமி டே பை டே சரீரத்தால் செய்கிற காரியங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது... அதனால அப்படி சொன்னேனே தவிர... சுவாமி கிடைக்கவே மாட்டார்னு அர்த்தம் இல்ல!" என்கிறார் பாபா.. மேலும் மிக மிக தீர்க்கமாக "உன்னை சுவாமி பார்த்துக் கொண்டே...பேசிக் கொண்டே தான் இருப்பேன்! எப்போதுமே!" என்கிறார்!

பாபா ஒருமுறை தனது பேரன்பை பொக்கிஷ வார்த்தைகளால்...

"ஒவ்வொருவரும் வாருங்கள்... அனைவரும் வாருங்கள்.. என்னில் உங்களையே காணுங்கள்! ஏனெனில் உங்களில் நான் என்னையே காண்கிறேன்! உங்களை சுவாமி அன்பு செய்யும் போது என்னையே அன்பு செய்து கொள்கிறேன்! என் வாழ்வு , என் மூச்சு, என் பேரான்மா நீங்கள்! என் பார்வையே பிரேமை தான்! வேறு வித்யாசமான பார்வை என்னிடம் இல்லவே இல்லை ! என்னிலிருந்து நான் பல ஜீவன்களை படைத்துக் கொண்டதே நானே என்னை நேசித்து... என் பேரன்பை உலகம் முழுவதும் பரவச் செய்வதற்குத் தான்!" என்கிறார் தனது சமுத்திர கருணையை ஆயிரங்கோடி கரங்களால் நீட்டிய படி...


ஏன் எதற்காக பாபா உலகாயத காரியங்களுக்கே நிறைய வழிகாட்டுகிறார் என்ற ஒரு சந்தேகம் பல பக்தர்களுக்கு எழுகிறது... அதை பாபாவே தான் இரு கையால் உடைக்கும் தேங்காய்ப் போல சந்தேக நிவர்த்தியை 

"நான் செய்வது பலருக்கு புதிராகவே இருக்கிறது என்பதை அறிவேன்...இதென்ன தினம் தினம் உலக ஆசைகளோடு வருபவர்களின் விருப்பங்களையே நிறைவேற்றுகிறேன் என சுவாமி விந்தை அவதாரம் என்று நினைக்கிறீர்கள்... தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேறு எவரிடமும் செல்லாமல் அவர்கள் சுவாமியிடம் வருவது சுவாமிக்கு மகிழ்ச்சியே! ஆனால் அவர்களை சுவாமி அப்படியே விட்டுவிடுவதில்லை... ஓசைப்படாமல், நிதானமாக , படிப்படியாக , பிடி நழுவாமல் அவர்களை நான் ஆன்ம யாத்திரையிலேயே திருப்பிவிடுகிறேன்!" எனத் தெள்ளத் தெளிவாய் உண்மையை உடைத்துப் பேசுகிறார்! பாபா மிகவும் நேர்மையான இறைவன்.. நேர்மையான இறைவனை நமது நேர்மையான செயல்முறையாலேயே மிக உண்மையோடும் இதய மென்மையோடும் அணுகமுடியும்!


தாவண்கெரேயில் கல்லூரி முதல்வராயிருந்த ஒரு பக்தரின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை சுவாமி சூட்சும ரூபமாய் சென்று தவறைத் திருத்தி.. அவருக்கு நேர்காணல் அளிக்கையில் "அம்மா...நீ தவறு செய்வது இதுவா முதல் முறை...? எத்தனையோ முறை உன் தவறுகளை சரி செய்திருக்கிறேன்.. தாங்கிப் பிடித்து நேராக உன்னை மாற்றி இருக்கிறேன்... உன் தடுக்கி விழப் போகும் சமயத்தில் எல்லாம்... சுவாமியே உன் பின்னால் தொடர்ந்து வந்து தாங்கிப்பிடிக்கிறேன்!" என்கிறார் இறைவன் பாபா.. பாகுபாடற்ற அந்தப் பெருங்கருணை... பாரபட்சமற்ற அந்த மன்னிக்கும் குணம்... ஆகையால் தான் பாபா இறைவன்!

பக்தர் எம்.வி.என் மூர்த்தியும் அவரது மனைவியும் தங்களது பிள்ளைகளை சென்னையிலேயே விட்டுவிட்டு அலுவல் விஷயமாக கனடாவுக்கு செல்கிறார்கள்... அந்தப் பிள்ளைகளிடம் பாபா "அம்மாவை பார்க்கணும்னு ஏக்கம் வரச்சே என்னை நெனச்சுக்கோங்க!" என்கிறார்... பாபாவின் இந்த தாயன்பை மிஞ்சிய தாயன்பு தரணியில் எங்கே இருக்கிறது!


பாபாவின் சில சமயத்து பக்தர்பாலான பாராமுகத்தை பாபாவே "சில சமயங்களில் சுவாமி உங்களை விலகிச் செல்வதாக நினைக்கிறீர்கள்! சுவாமிக்கு நம்மிடம் கோபம் என எண்ணுகிறீர்கள்... சாலை ரிப்பேராக இருந்தால் அதில் எப்படி பயணிக்க முடியும்? உங்களுடைய மனம் என்ற சாலை துர்குணத்தால் பழுதாகி இருக்கிறது! அதனால் தான் சுவாமி டைவர்ஷனில் போகிறார் என உணருங்கள்! அப்படி நீங்கள் உணர்ந்துவிட்டால் சுவாமியே இஞ்சினியராகி உங்களின் மனச்சாலையின் பழுதை நீக்குகிறேன்! டைவர்ஷனில் போக்குவரத்தை திருப்பி விடுவது தற்காலிக ஏற்பாடுதானே!" என்கிறார் பாபா மிகுந்த ஆணித்தரமாக...


(ஆதாரம் : அன்பு அறுபது/ பக்கம் : 92 / ஆசிரியர்: அமரர் ரா.கணபதி) 


சுவாமியின் அத்தனை இதய‌ அன்புக்கும்.. உதய கருணைக்கும்... வலிக்காமல் சுவாமி செய்து வருகிற நமது அக மாற்றத்திற்கும் என்ன மாதிரியான நன்றியை நம்மால் சுவாமியின் பாதங்களில் சமர்ப்பிக்க முடியும்? நமது பரிபக்குவமான வாழ்க்கையும்... பவ்யமான குணமும்... பாங்கான நடத்தையும்... பௌர்ணமி மின்னுவதான அக சாதனையுமே ஆன்ம மலர்கள்.. அவற்றை வைத்து மட்டுமே சுவாமிக்கான நித்திய நன்றியை நம்மால் செலுத்த முடியும்!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக