பாபாவின் பேரன்பு பாற்கடலை விடவும் பளிங்குத் தூய்மையானது... அது ஆயிரம் கோடி கைகளை நீட்டி அரவணைக்கக் கூடியது... அப்படி நிகழ்ந்த ஓர் உன்னத சம்பவம் மிக சுவாரஸ்யமாய் இதோ...
ஸ்ரீமதி. நாகமணி பூர்ணையா என்பவர் பாபாவின் பரம பக்தை...ஒரு வாரம் பாபா தரிசனம் காணாவிடில் கூட அம்மையாரின் அகமும் முகமும் சுண்டிப் போய்விடும்! அன்று புதன்கிழமை.. பூஜையறை செல்கிறார் அம்மையார்.. அங்கே நடுநாயகமாய் ஒரு பாபா படம்...அதனை தரிசித்தால் பாபாவை நேரே தரிப்பது போன்ற உணர்வு மேலோங்கும் அவருக்கு... பாபாவின் பல திருப்படங்கள் அப்படி ஓர் மெய்யுணர்வை இப்போதும் தரத்தான் செய்கிறது... அந்த பூஜையறையில் ஒரே எண்ணெய் பிசுக்கு.. ஆகவே சீயக்காய் வைத்து வேலை செய்யும் பெண்மணியை தேய்க்கச் சொல்லியிருக்கிறார்.. அவர்கள் தேய்க்க.. அந்த சீயக்காய் கலவை பாபாவின் படத்திலும் தெளித்து விடுகிறது... இது என்ன சோதனை என மிகுந்த மன வேதனையுடன் படக்கடைக்காரரிடம் சுத்தம் செய்து தரும்படி பாபா படத்தை தருகிறார் அம்மையார்... விடிந்தால் வியாழன்.. சுவாமி நாள்.. சரி மாலைக்குள் பாபா படம் கிடைத்துவிட வேண்டும் என நினைக்கிறார்...
ஹும்ஹும்... பாபா சோதனை இடாமல் அவ்வளவு எளிதாக எதையும் தருவதில்லை அல்லவா! ஆகவே அம்மையாரின் பொறுமையை சோதிக்கிறார்! பாபா சோதிக்கும் போதே பாபா பக்தர்களால் சோபிக்க முடிகிறது! சோதனை இதயத்தை புடம் போடுகிறது.. "யாவும் சுவாமி சங்கல்பம்" என்பதை அனுபவப்பூர்வமாக உணர வைக்கிறது... பாபா இப்படி சோதித்தால் நாம் என்ன செய்ய முடியும்? என அப்படியே பாபாவையே நினைத்து உறைந்து போய்விடுகிறார்! அப்போது எதிர்பாராத விதமாக அவர் வீட்டு தொலைபேசி மணி ஒலிக்கிறது.. ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்
நாகமணி அம்மையார் தனது அமர்வை கலைத்து நாற்காலியை விட்டு எழுந்து "இந்த நேரத்தில் நம்மை யார் அழைப்பது?" என தொலைபேசி அருகே மனச்சோர்வோடு சென்று ரிசீவரை எடுக்கிறார்... "ஹலோ" என்கிறார்! மறுமுனையில் ஒரு குரல்...
"என்ன நாகமணி பாய்...நான் தான் சுவாமி பேசறேன்!" என அது பதில் சொல்கிறது...
அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய்விடுகிறார் அம்மையார்... ஹலோ என்று சொன்னதோடு சரி.. பாபா பேசிய அந்த முதல் வார்த்தைக்கே என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அம்மையாருக்கு.. பாபா பேசுவார் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.. எதிர்பாரா நேரத்தில் தான் பாபா அற்புதங்களை நிகழ்த்துகிறார்!
"சுவாமியை பார்க்கத்தான் வர்றதில்ல.. பேச கூட மாட்டியா? அவ்வளோ கோபமா சுவாமி மேல?" என்கிறார் கருணையே வடிவான பாபா! அம்மையாரால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை... "எப்போம்மா வரப்போற ? சீக்கிரம் வா வா!" என்கிறார் பாபா.. "வரேன் சுவாமி" என்று மட்டும் சொல்கிறார் அம்மையார்... ஆனால் அந்த சமயம் கார் டிரைவர் விடுப்பில் சென்றுவிடுகிறார்..நாகமணி கணவரான பூர்ணையாவோ கண்டிப்பானவர்.. கார் தவிர வேறு எந்த பயணத்திற்கும் தடா போடுபவர்... ஆகவே அம்மையாருக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையால் என்ன பேசுவதென தெரியவில்லை.. இறைவன் பாபாவுக்கு தெரியாத மனித சூழ்நிலையா? அம்மையார் அந்த சூழலை விவரிக்க தர்மசங்கடப்படுகிறார்... பாபாவே உடனே.. "டிரைவர் தானே இல்ல.. பரவாயில்ல.. சுவாமியே கார் அனுப்பறேன்!" என்கிறார்!
அம்மையாரோ கண்கலங்குகிறார்... "சரி சுவாமி!" என நா தளுதளுக்கப் பேசுகிறார்... கண்ணீரை தவிர வேறு என்ன வார்த்தை நன்றியை அவ்வளவு துல்லியமாய் வெளிப்படுத்திவிட முடியும்!
(ஆதாரம் : அன்பு அறுபது/ பக்கம் : 40 / ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)
இறைவன் பாபா ஆட்கொள்வது என்பது அவரே புரியும் கருணை... ஒரு காற்றைப் போல் சுவாமியின் கருணை நம் உத்தரவால் நிகழ்வதில்லை! ஒரு கோட்டை வரைந்து அதில் நிற்கச் சொன்னால் இறைவன் பாபா நிற்பதில்லை... ஆகவே தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாபாவை வழிபட வேண்டும்.. அப்படி வழிபட்டு மனம் பக்குவமாக வேண்டும்... பிறகு பாபாவே இரங்குவார்... நாம் அல்ல இறைவன் பாபா தான் நம் மனப்பக்குவத்திற்காக ஒவ்வொரு நொடியும் நமக்காக காத்திருக்கிறார்... பாபா சொல்படி தியானம் எனும் ஆத்ம சாதனை புரிந்து வர நம் வாழ்வே அவராகிவிடுகிறது! ஆம் அந்த ஆத்ம சாதனை மட்டுமே பக்தியை ஆழப்படுத்துகிறது! ஆழ ஆழியில் தான் நித்திலம் நித்தியம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக