தலைப்பு

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கோடி ராமநாம ஜபத்தால் ராமபக்தருக்கு ஸ்ரீராம ரூப தரிசனம் அளித்த சாயி ராமர்!

பாபா எல்லாம் அறிந்தவர்... எல்லா இறை வடிவங்களின் சங்கமமான பரப்பிரம்மம் என்பது வெறும் புகழுரை அல்ல அனுபவத் தெளிவு எனும் பரம சத்தியத்தை உணர்த்தும் உன்னத சுவாரஸ்ய அனுபவம் இதோ...


ராமசரண் எனும் ஒரு ஸ்ரீ ராம பக்தர்.. ஸ்ரீராமர் தான் அவருக்கு எல்லாம்... தியாகையர் போல் வாழ்கிறார்.. ஸ்ரீ ராம பக்தியில் தினசரி உருகுகிறார்.. ஒவ்வொரு அரிசியை எடுத்து 'ராம ராம ராம ராம' என ஜபித்தவாறே உலையில் இட்டு உணவாக உண்கிறார்... அது சாதாரண செயல் அல்ல... பக்தியே வைராக்கியம் தருகிறது.. நமக்கு அதுவே பொறுமையையும் தருகிறது என்பதற்கு மகானுபாவர் ராமசரணின் செய்கையே பெரிய உதாரணம்!! அவர் ஒரு கோடி நாம ஜெபம் எழுத சங்கல்பித்து எழுதுகிறார்... ஒரு கோடி முறை எழுதினால் ஸ்ரீராம தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகமோ நம்பிக்கையோ அல்ல.. நடைமுறை ஆன்மீக அனுபவம்...! அப்படி கிடைத்த மகான்களும் இருக்கிறார்கள்... காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராமதாஸ் அதற்கு பெரிய உதாரணம்... 


அப்படி ராமசரண் லிகித ஜபம் செய்கிறார்.. ஒருநாள் அவருக்கு சுவாமி ஸ்ரீராமராய் தரிசனம் அளிக்கிறார்.. பாபாவும் ராமரும் ஒன்றே எனும் பேருணர்வு அப்போது இல்லை.. அப்போது அவர் பாபாவை பற்றி கூட கேள்விப்பட்டது இல்லை.. ஸ்ரீ ராமரூபத்தில் சுவாமி தரிசனம் அளித்து "உனக்கு என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்கிறார்.. "சுவாமி...நான் விரைவில் ஒரு கோடி லிகித ஜபம் பூர்த்தி செய்ய அனுகிரகிக்க வேண்டும்!" எனக் கேட்டுக் கொள்கிறார்.. "அது தான் நீ ஏற்கனவே நிறைவு செய்து விட்டாயே!" இது ஸ்ரீ ராம ரூப சுவாமி... "இல்லை சுவாமி! பாதி தான் எழுதியிருக்கிறேன்!" என்கிறார்.. அதற்கு சுவாமியோ "நீ எழுதுவதற்கு முன்பே மனதில் ஒரு முறை என் நாமம் சொன்னாய் அல்லவா!"

"ஆம் சுவாமி" இது ராமசரண்..


"மனதில் சொன்னால் என்ன... எழுதினால் என்ன... எல்லாம் ஒன்று தான்! அதனால் தான் சொல்கிறேன்... நீ ஒரு கோடி ஜபித்துவிட்டாய்‌..அதனால் தான் தரிசனம் அளிக்க வந்தேன்!" என்கிறார் சுவாமி.. சுவாமியிடம் என்ன கேட்பார் ராமசரண்...? என்ன கேட்கும் பக்தி? எதுவும் கேட்காமல் சுவாமியின் பாதத்தில் விழுவது தான் பக்தி! உருகி உறைந்து போகிறார் ராமசரண்! 


ஒருமுறை அவர் ஊரில் ஸ்ரீ ராம உபந்யாசம் ஆற்ற வேண்டி.. சிலர் அழைக்க சில இடங்களுக்குச் சென்று வருகிறார்... ஆகையால் மரியாதை கூடுகிறது! பக்தி என்பது மகிமையையே எதிர்பாராத போது மரியாதையை எப்படி எதிர்பார்க்கும்? பக்தியே பக்திக்கு போதுமானது! அப்படி திகழ்ந்தார் ராமசரண்... அப்போது தான் சுவாமியை பற்றியே கேள்விப்படுகிறார்.. சில சுவாமி பக்தர்கள் அவரிடம் பாபாவை பற்றி எடுத்துரைக்க... "இப்படி ஒரு மகானா?" என ஆச்சர்யப்படுகிறார்... பாபா சாட்சாத் இறைவனே என அப்போது அவர் உணரவில்லை... அவ்வாண்டு தசராவின் போது புட்டபர்த்திக்கு பிரவச்சனம் (உரை) புரிய அழைக்கப்படுகிறார்.. ஆடிட்டோரியத்தில் ஆயிரமாயிரம் கூட்டம்... மகானுபாவர் ராமசரண் பரமசாதுவாய் அமர்ந்திருக்கிறார்.. "பேச அழைத்திருக்கிறார்களே .. தலைப்பு தரவில்லை... நமக்கோ பாபாவை பற்றி அவ்வளவாக தெரியாது... என்ன பேசலாம்.. நாம் எப்போதும் பேசுவது போல் ராமாயணமே பேசி விடுவோம்.. ராமாயணத்தில் என்ன பேசலாம்? காயத்ரி ராமாயணம்.. சரி அதையே பேசிவிடலாம்!" என மனதிற்குள் நினைத்து முடிவு செய்யும் போது.. பாபா தரிசனத்திற்கு வருகிறார்... அழகழகாய் அசைந்து ராமசரண் அருகே நின்று "காயத்ரி பற்றி இப்போது பேச வேண்டாம்.. அதற்கு வேறொரு முறை உனக்கு சந்தர்ப்பம் தருகிறேன்.. இந்த முறை பக்தியை பற்றி பலரும் உணரும் விதமாக பேசு!" என சொல்லிவிட்டு நகர்கிறார்...


பாபாவின் அனைத்தும் அறியும் ஆற்றலை அறிந்து உறைந்து போகிறார் திரு ராமசரண்.. பாபாவையே கண்கொட்டாமல் தரிசித்த படி இருக்க.. பாபா முன்னால் செல்கிறார்.. நீல நிறத்தில் அம்பு வில் சகிதமாக ஸ்ரீராமச்சந்திரராய் தரிசனம் அளிக்கிறார் பாபா... விக்கித்து அழுகிறார் ராமசரண்... அவர் ஏற்கனவே ஸ்ரீராம தரிசனம் அடைந்தவர்... அதே தரிசனம் மீண்டும் அடைகிறார்... பாபாவே ஸ்ரீராமர் என தீர்க்கமாய் அனுபவிக்கிறார்! ஆம்! ராமசரண் சாயிராம சரணாய் மாறிவிடுகிறார்!

(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 136 / ஆசிரியர் : அமரர். ரா.கணபதி) 


ஒருகோடி ஜபத்திற்கு ஒருமுறை அல்ல இருமுறை கூட ஸ்ரீராம தரிசனம் பெற முடியும் என்பது அவரவர் ஆழமான பக்தியை பொருத்தது! அப்படிப் பார்க்கையில் தியாகையர் எத்தனை முறை தரிசித்திருப்பார் சுவாமியை...! அதற்கு சாட்சியாய் வெறும் வரிவடிவம் மட்டுமல்ல இசை வடிவமே அதனை நம் ஆன்மா வரை பாய்ச்சி ஆமோதிக்கிறது! அந்த ஆமோதித்தலே ஆரோஹனம்... சுவாமியிடம் சரணாகதி அடைவது என்பது ஞான மௌனத்தோடு தியான ஐக்கியம் நிகழும் அவரோஹனம்!

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக