தலைப்பு

புதன், 6 ஏப்ரல், 2022

நாயகன் சாயி உதிர்த்த நகைச்சுவை முத்துக்களின் ஞான ஒளி!

வாழ்க்கை ஒரு பெரிய நகைச்சுவை.. சிரித்த முகத்தோடு வாழ்வை அனுபவியுங்கள் என்பதையே ஞானம் சொல்லித் தருகிறது.. மனதை அது லேசாக்குகிறது... அப்படி லேசாக மனதை வைத்து தூசாக துயரை துடைக்க பாபா  பொழிந்த நகைச்சுவையில் நவமணியாய் ஒளிர்ந்த ஞானங்கள் இதோ...


ஒருவர் பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்ள சுவாமி பாதத்தின் முன்பு குனிய முயல்கிறார்... அவரை உடனே தடுத்து "இப்போது முடியாது ஜீரணமாகட்டும்!" என்கிறார்..அதற்கு அவர் சுவாமி தான் செய்து வந்த காரியம் தெரிந்து விட்டதே என லேசாக சிரிக்கிறார்... அருகில் உள்ளோர்க்கு எதுவும் புரியவில்லை.. அவரை அனுப்பிவிட்டு "அது ஒன்றும் இல்லை அவர் வயிறு புடைக்க இப்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தார்.. நடக்க முடியாமல் நடந்து என்னை பார்த்ததுமே குனிய முயன்றார்... கழுத்து வரை சாப்பிட்டால் எப்படி குனிய முடியும்?" என்றவுடன் அனைவரும் சிரித்தனர்.. இதற்கான ஞானம் : "அமுதமாயினும் அளவோடு உண்!"


அதைப் போல் சுவாமி பிறர் நடந்து வருவதைப் போல் தானும் நடந்து காட்டி சிரிக்க வைப்பார்.. இதில் கிண்டல் தொனி இல்லை.. சுவாமியின் கிருஷ்ண குறும்பே மேலோங்கி இருக்கிறது.. மற்றும் தன் பக்தர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே எப்போது அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார் பாபா! யோக சிரோன்மணி அமெரிக்க இந்திரா தேவி அம்மையார் போல் நடந்து காட்டி அந்த யோகத்தை ஹாஸ்ய யோகமாக சிரிக்க வைப்பார்! சுவாமியோடு சேர்ந்து சிரிப்பது என்பது பாற்கடலில் நீந்திக் கொண்டே பால் பாயாசம் குடிப்பது போல் ஆன்ம சுகம்.. அதை அனுபவித்தால் தான் உணர முடியும்!

பாபா நடத்திய கல்யாணத்தில் வீட்டு மாப்பிள்ளை உணவை பரிமாற வருகிற போது.. மாப்பிள்ளை பரிமாறுவது சரியில்லை என அவருக்கு இலை போடச் சொல்கிறார்... தட்டுத்தடுமாறி இலைக்கு வருகிறார்... "அதற்குள்ளாகவா...என சுவாமி அவர் தடுமாறியதை பாவனை செய்து காட்டி உணவு உண்கிறவர்களை சிரிக்க வைத்து புரை ஏற வைக்கிறார்!

     "சுவாமி எனக்கு ஒரு ஸாதனை உபதேசியுங்கள்!" எனக் கேட்க.. "சாதம் சாப்பிடு.. அது தான் சாதனை!" என்கிறார்... இது நகைச்சுவை தான் ஆயினும் அதில்  அவர் உணவுப் பற்றை சுவாமி சுட்டிக் காட்டியதில் ஞானம் மிளிர்கிறது! 


ஒரு பக்த தம்பதியை அழைக்கிற போது "ஓ.. மன்மதன் ரதி! வாங்க வாங்க!" என வரவேற்று அவர்களை வெட்கப்பட வைக்கிறார்! அந்தப் பெண்மணி தனது பெற்றோரோடு கணவரில்லாமல் சுவாமி தரிசனம் செய்ய வருகிற போது "உங்க வீட்டு துர்வாசர்... எப்படி இருக்காரு?" எனக் கேட்கிறார்...வாஸன் என்ற ஒரு பக்தர் வேறு ஒருவரிடம் கோபமாக பேசிவிட்டு சுவாமியை தரிசிக்க வருகிறார்... அவர் வந்ததும் வராததுமாய் அவரிடம் சுவாமி "அப்பறம் துர்வாசர் என்ன சொல்கிறார்?" எனக் கேட்டு அவரின் கோப சுபாவத்தை சுட்டிக் காட்டுகிறார்! 

    தனது பக்தர் சேஷன் என்பவர் ஒருமுறை கோபப்படுகிற போது "என்ன ஆதிசேஷன் விஷ நெருப்பை கக்குகிறதா?" எனக் கேட்கிறார்.. பாபாவின் கவித்துவம் அபாரம்.. அதிலேயே பாபா ஞானத்தை ஊட்டி விடுவதால் தான் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே சுவாமி என உணர முடிகிறது!

சூரையா எனப்படும் சூர்ய நாராயண ராவுக்கு மாரடைப்பு உண்டாகிறது.. அதற்கு இளம் டாக்டர் ஸ்ரீநிவாசனை அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி சொல்கிறார் பாபா... அவ்வளவு பெரிய பிரசாந்தி நிலைய முக்கியத்துவமானவர்க்கு தாமா வைத்தியம் பார்ப்பது?! என தயங்குகிறார்... உடனே பாபா "அந்த அவதூதனுக்கு ஏற்ற எமதூதன் நீ தான்!" எனச் சொல்லி அந்த இறுக்கமான சூழ்நிலையையே லேசாக்கி சிரிக்க வைக்கிறார்.. அது தான் ஞானம்... பாபாவுக்கு ஆத்ம ஞானம் சிறுவயதிலேயே வந்துவிட்டது என யாரேனும் நினைத்தால் அது அறியாமை... அந்த ஆத்ம ஞானம் தான் பாபாவாகவே அவதரித்தது... பாபா எதையும் அடையவில்லை..‌எதை மனிதன் அடைய முற்படுகிறானோ அதுதான் பாபா!


சுவாமியிடம் ஒருவர் ஏதேதோ சந்தேகம் கேட்க வருகையில்.. அவர் கேட்பதற்கு முன்பே சுவாமி "உன் சமாச்சாரம் என்ன தெரியுமா? உனக்கு நிறைய சந்தேகம் இருக்கு... அதை தெளிவாக்கிகணும்... அப்பத் தானே புதுசு புதுசா சந்தேகம் வரும்.. அது தான் உன் பிளான்!" என்கிறார்.. எவ்வளவு பெரிய ஆன்ம ஞானம் இதில் இருக்கிறது! மனம் எப்போதும் சந்தேகப்படும்.. அதற்கு தேவை விடைகள் அல்ல.. மனதின் உணவே சந்தேகங்கள் தான் .. அதனால் எந்த பதிலையும் ஜீரணிக்க முடியாது... விரிவடையும் இதயத்திற்கே அதற்கான ஜீரண சக்தி இருக்கிறது... மனமற்ற நிலை தான் ஞானம்... இதனை எவ்வளவு எளிதாக சொல்லிவிடுகிறார் சுவாமி.. அதனால் தான் சுவாமி இறைவன்!

ஒருவர் எதிலும் ஸ்டெடியாக இல்லாமல் இருப்பதை "ஸ்டெடியாக இல்லாமலிருப்பதில் மட்டும் தான் அவர் ஸ்டெடி" என்கிறார்.. இது கவித்துவத்தின் ஆகச்சிறந்த அழகியல் முரண்... அந்தக் கவித்துவமே பாபா தான்... கீதையே போர்க்களத்தில் மொழிந்தவர் இப்படி பேசுவதெல்லாம் சர்வசாதாரணம்!

    ஒரு பக்தர் சுவாமியை சர்வாந்தர்யாமி ஹிருதயவாசி என சொல்லி தரிசனத்துக்கே வரமாட்டார்.. நீ போறியேன்னு நானும் வரேன் என நண்பரோடு இணைவார்.. இப்படி சொல்கிறவரின் கார் பழுதாகிறது... உடனே அதனை சரி செய்ய சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.. தரிசனத்தில் அவர் நண்பரிடம் சுவாமி "பார்த்தியா...என்னை ஹிருதயவாசி.. சர்வாந்தர்யாமின்னு சொல்லிட்டு இப்ப லெட்டர் எழுதறான்.. அதுவும் ஓசி'யில மனு!" எனச் சிரிக்கிறார்.. அந்தச் சிரிப்பு நம் இதயக்கறைகளை எல்லாம் ரின்'னை விட சுத்தமாக்கி.. ஆன்ம ஞானத்தில் வின்'னாக்கி.. விண்ணாக்கிவிடுகிறது!


ஒருமுறை ஜெகா என்பவரிடம் பாபா "Wife is not life... Wife is wife.. life is life!"* என்கிறார்.. ஆஹா இந்த ஞானம் ஒருவருக்கு வந்துவிடுமானால் வீட்டு முருங்கைமரமே போதிமரமாகிவிடுகிறது!

பிரேம சுவாமியின் தாயாக பிறந்த பாக்கியத்தை பெற்ற சேவைத் திலகம் கஸ்தூரியின் தாயார் ஜானகி அம்மையார் "சுவாமிக்கு ஜூஸ் கொண்டு போகலாம் என இருக்கிறேன்" என்கிறார்.. "அவர் ஏற்றுக் கொண்டால் அது அவர் சங்கல்பம்.. இல்லை என்றால் நான் குடித்துவிடுகிறேன்.. ஒரு பிரச்சனையும் இல்லை!" என்கிறார்.. சுவாமிக்கு ஜூஸ் தர... "ஓ.. ஜூஸா.. கஸ்தூரிக்கு ஜூஸ்'னா  ரொம்ப இஷ்டம்!" என்கிறார். நம் மனதை ஜூஸ் போட்டு பக்குவமடையச் செய்து பருகுவது தான் சுவாமிக்கு பிடித்தமான ஒரே ஜூஸ்... பழ ரசங்களை விட நமது மனப்பக்குவ ரசங்களையே பாபா மனமுவந்து ஏற்கிறார்!


(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 234 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


"உங்களுடைய Lust -Dust - Rust போக என்னிடம் Trust' டோடு வந்து Rest பண்ணி கொள்ளுங்கள்!" என்பது பாபாவின் சத்திய மொழி! அந்த Rest தான் சரணாகதி... அந்த Trust தான் ஆன்ம சாதனை! பக்தி இல்லாமல் தியானம் இல்லை.. தியானம் இல்லாமல் மனப்பக்குவம் இல்லை.. நாம் அடையும் மனப்பக்குவமே மாநிலத்திற்கு நாம் மாசற்று புரியும் மாபெரும் சேவை!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக