தலைப்பு

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. பரந்தாம சாயி புகழ் பாடுங்களேன்!


சம்பவாமி யுகே யுகே என்பது சம்பவாமி சாயி யுகே'வாக கலியில் மலர்ந்திருப்பது மனித குலமே செய்த மாபெரும் புண்ணியம்.. அதர்மத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி பாபா பாதத்தின் வழியே தர்ம பாதையை அடைவது.. ஆம் பாபாவே சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணர் எனும் அனுபவப்பூர்வ திருச்சான்றுகள் சுவாரஸ்யமாய் இதோ...


பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர்... யுகயுகமாய் இறைவன் தொடர்கிறார்.. அந்தந்த யுகத்திற்கு மிக மிகத் தேவையான அந்தந்த திருவுருவெடுத்து அதே சத்தியத்தை அந்தந்த யுகம் புரிந்து கொள்ளும் ரீதியில் இறைவன் தொடர்ந்து தர்மத்தை அதர்ம முள்ளினிடையே ரோஜாவாய் பூக்க வைக்கிறார்! மனித அறியாமை மனம் ஏற்க மறுத்தாலும்... தூங்கிக் கொண்டிருப்பவர் எப்படி சூர்யோதயத்தை காணாது இருளில் தொலைந்திருக்கிறார்களோ அப்படியே சத்தியம் பிரகாசிக்கிற போது பலர் மயங்கிய படி இருக்கிறார்கள்.. பலர் என்பது எண்ணிக்கையில் சிலராகும்! அந்த சத்திய பிரகாசத்தை திரு ஜே.எஸ் ஹிஸ்லாப் உணர்ந்திருக்கிறார்! ஒருமுறை பாபாவோடு காரில் முன்வரிசையில் அமர்ந்து கொண்டு செல்கிறார்.. அப்போது பின்னால் திரும்பி ஒருமுறை பாபாவை எதேர்ச்சையாக உற்று நோக்குகிறார்.. பாபாவின் பேரழகு வதனத்தை கண்டு கண் அசையவில்லை.. இமைக்குடைகள் கண்ணோடு கண் உரச மறக்கின்றன... திடீரென பாபா திருமுகம் நீலமாய் மாறுகிறது...! ஹிஸ்லாப் அவர்களால் அதனை நம்பவே இயலவில்லை... தனக்குத்தான் பிரமையோ என மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறார்.. கழுத்தே சுளுக்கிக் கொள்ளும் அளவிற்கு திரும்பிப் பார்க்கிறார்..அதே நீலத் திருமுகம்... "ஏன் திரும்புகிறீர்கள் ?" என பின் இருக்கையில் பாபாவோடு அமர்ந்தவர்கள் கேட்கிறார்கள்... அவர்கள் அருகே இருந்தும் பாபா அந்த நீலத்திருமுகத்தை அவர்களுக்கு காட்டவில்லை... "உருவ அருகாமையில் இருப்பதல்ல.. இதய அருகாமையில் இறைவனோடு இருப்பதே ஆன்மீகம்!" வியக்கிறார் ஹிஸ்லாப்.. கப்பல் பயணத்தில் தான் தரிசித்த பசிபிக் கடல் நீலம் போல் இருந்ததாக அதனை அவர் வர்ணிக்கிறார்! "அதென்ன சுவாமி நீலம்?" என பாபாவிடம் கேட்கிறார்... பாபாவோ "ஓ அதுவா... அளக்க முடியா ஆழமுள்ள எதுவும் அப்படிப்பட்ட நீலமாகத்தான் இருக்கும்!" என புன்னகைத்தவாறு பதில் தருகிறார்! 


அதனை பிற்பாடு ஹிஸ்லாப்'பிடம் "நான் உனக்கு காட்டியது எனது கண்ணன் வதனமே (திருமுகமே).. ஓவியர்கள் வரைந்த கற்பனை முகமல்ல.. நிஜமுகம்!" என்கிறார்!

"கண்ணனின் காலத்திற்குப் பிறகு ஷிர்டி சாயி அவதாரத்தில் தானே இறைவன் மண்ணுலகிற்கு குருவாக வந்து உபதேசித்தது?" என ஹிஸ்லாப் ஆர்வ மிகுதியில் கேட்க..‌"கண்ணனின் காலத்திற்குப் பிறகு" என்பதை கேட்டவுடனேயே பாபா "கண்ணனாவது காலமாவது.. நான் தான் கண்ணன்!" என்கிறார்! 

ஒருமுறை டாக்டர் பெனிடோ ரேயிஸ்ஸுக்கு சிருஷ்டி மோதிரம் ஒன்று அளிக்கையில் அதில் ஸ்ரீ கிருஷ்ண உருவம் பதிவாகி இருந்தது..‌அவர் உடனே மனதிற்குள் "பாபா உருவம் பதிவாகி இருந்தால்..நன்றாக இருந்திருக்குமே!" என நினைக்கிற அடுத்த விநாடி.. பாபா திரும்பி பெனிடோவிடம் வந்து "கண்ணன் - பாபா இரண்டிற்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லை!" என சொல்லிவிட்டுச் செல்கிறார்.. புல்லரித்து கண்கலங்குகிறார் டாக்டர் பெனிடோ ரேயிஸ். 


90'களில் கோகுலாஷ்டமி வைபவத்தில் ஒயிட்ஃபீல்ட் கல்லூரி மாணவர்களிடம் பாபா தனது துவாபர ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தை வர்ணக்கிறார்... "நீங்கள் நினைப்பது போல் எனது கண்ணன் முகம் அட்டைக் கருப்பல்ல.. அடர்ந்த நீலநிறத்தில் ஒருபங்கு வெள்ளை நிறமும் சேர்ந்திருந்தது... யசோதையும் நந்தகோபரும் விஷ்ணு பக்தர் என்பதால் நெற்றியில் எனக்கு விபூதி இடவில்லை.. கஸ்தூரி திலகமே இட்டார்கள்.. அதுவும் பொட்டாக இல்லை சிறிய மேற்கோடாக இட்டார்கள்...கண்படாமலிருக்க முந்தைய காலத்தில் ஆண் குழந்தைகளுக்கும் மூக்கு குத்துவார்கள்... அப்படியே கண்ணனுக்கும் மூக்கு குத்தி.. ஒரு கம்பியில் முத்து கோர்த்து வளைத்திருந்தார்கள்... ஆயர் வழக்கப்படி வெள்ளியிலான மூன்று ஜோடி சிறு வளையல்கள் அணிவித்தார்கள்... திருஷ்டிப் படக் கூடாது என கன்னத்தில் கரும்பொட்டு... இதற்கும் மேலாக மார்பில் கௌஸ்துபப் பதக்கம்...இதோ நான் அப்போது அணிந்த கௌஸ்துப பதக்கத்தை இப்போது காட்டுகிறேன்!" என பாபா சிருஷ்டித்து காட்ட.. கொடுத்து வைத்த மாணவக் கண்மணிக்குள் கௌஸ்துபம் ஒளி விட்டது... பரப்பிரம்மம் இதயத்துக்குள் பக்தியாக நுழைய... மாயை வழிவிட்டது!


(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 148/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


பண்டரி பஜனில் சிறுபோதில் பாபா தனது கண்ணன் நடனத்தை அரங்கேற்றுவார்... கோபர்களாய் சூழ்ந்திருந்த தனது பால நண்பர்களை குதூகலப்படுத்துவார்...  அவர் இயற்றி நடித்த "செப்பினட்லு சேஸ்தாரா?" என்ற நாடகத்தில் அவர் ஏற்ற கதாப்பாத்திரத்தின் பெயரே கண்ணன் தான்... துவாபர யுகத்தில் யசோதை இட்ட கன்னத்து திருஷ்டிப் பொட்டு.. தான் நித்ய குழந்தை வடிவம் என்பதால் தெய்வத் திருமச்சமாகவே தனக்குத் தானே ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் சுவாமி சிருஷ்டித்து கன்னத்தில் பொரித்துக் கொண்டார்.. சுவாமி மச்சத்தின் உச்சப் பேரழகைக் காணக்காண நமது ஆன்மா மிச்சமில்லாமல் உறைந்துவிடும்! வாழ்க்கை எனும் வாக்கியத்தில் நமது மன மாயையை முடிக்க இருக்கும் முற்றுப்புள்ளியே சுவாமியின் கன்னத்து மச்சம்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக