தலைப்பு

புதன், 20 ஏப்ரல், 2022

இறைத் தாய் ஸ்ரீ ஈஸ்வராம்பாவின் கடைசி ஆசை!


தன் மனதிற்குள் இறைத்தாய் பொத்தி வைத்திருந்த ஒரு ரகசிய ஆசையை நிறைவேற்றிய இறைவன் பாபாவின் உன்னதமும்... தாயின் இறுதி ஐக்கியம் குறித்த உயரிய வாக்குமூலமும் சுவாரஸ்ரமாய் இதோ‌..


தாயை பாபா மாயை என்றுதான் அழைத்தார்... பாசம் கொள்ளாது பேரன்பு எனும் சுவாசமே கொண்டார்... அனைவரையும் எப்படி நடத்தினாரோ அப்படியே தனது பௌதீக தாயையும் நடத்தினார்... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்து விளக்குவதற்கே பேராவதாரமாய் மண்ணில் இறங்கியவர் நம் சுவாமி பாபா! தனது அவதாரப் பிரகடனத்திற்கு பிறகு கடைசியாக மூன்றே மூன்று கவளம் தாயிடம் இருந்து வாங்கி சோறு உண்டார்.. அத்தோடு சரி.. அதிலிருந்து தாய் தந்து அவர் எதையும் உண்ணவில்லை... ஆதிசங்கரரே தனது தாயின் கடைசி தருணங்களில் விரைந்தோடி மாத்ருகாஷ்டகம் ஓதி தகனம் செய்தார்.. பட்டினத்தாரும் கடைசிவரை தாய்க்காக உருகி தமிழ்ப்பாடல் இசைத்தார்... ஆனால் பாபாவோ பந்தபாசத்திற்கு இம்மி அளவு கூட மசியாதவர்! பந்த பாசம் விடுத்த பாபாவை வழிபடுவதே நம் பற்று நீங்க வேண்டியே அன்றி வேறெதற்காகவும் அல்ல.. அதுவே உயரிய வழிபாடு!


தனது பௌதீக தாய்க்கு தான் நிகழ்த்திய ஒரு சம்பவத்தை பாபாவே விவரிக்கிறார்... "அவள் "போவதற்கு" முதல் நாள் அவளோடு பேசிக் கொண்டிருந்தேன்... உனக்கு இன்னும் ஏதாவது ஆசை இருக்கிறதா? எனக் கேட்டேன்... அவளோ "ஒரு ஆசையும் இல்லை... சுவாமி நீ என்னை ஷேத்ராடனம் எல்லாம் கூட்டிட்டு போயாச்சு... வேறென்ன பாக்கி" என்றாள்.. ஆயினும் ஒரு ஆசை அவள் அடிமனதில் இருந்தது எனக்கு மட்டுமே தெரியும்!" என்கிறார்...

"அவளுடைய பேத்தி ஒருத்திக்கு வரப்போகிற பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என ஆசைப்ட்டாள்.. ஆனால் அதை என்னிடம் வெளிப்படுத்தவில்லை... நானே ஐநூறு ரூபாயை அவள் கைகளில் திணித்து... கடைக்கு போய் ஏதாவது வாங்கிக் கொள் எனச் சொல்லிவிட்டேன்... !" என்றார் பாபா..

பிறகு தாய் அந்தப் பணத்தை வைத்து தனது பேத்திக்கு பரிசு வாங்கி அளித்து மகிழ்கிறார்! தாயினுடைய ஆசையையும் சுட்டிக்காட்டாமல் அவர் ஆசையை நிறைவேற்றியது தான் எப்போதுமே சுவாமியின் தனித்தன்மையான அப்ரோச்! 


"யாரும் மரணத்திலிருந்து தப்பிக்கவே முடியாது.. ஆனாலும் அந்த கடைசி நேரத்தில் தெய்வ சிந்தனை வருவதே புனிதம்... அந்த சிந்தனையை நினைவுப்படுத்தும் தினமே இது!" என ஈஸ்வராம்பா தினத்தன்று பாபா பேசுகிறார்! 

"அவளுடைய மரணத்தின் போது சம்மர் கோர்ஸ் நடந்து கொண்டிருந்தது... அன்று காலை ஆறுமணிக்கு நான் நகரசங்கீர்த்தனத்தில் இருந்து திரும்பியவர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு குளிக்கப் போனேன்.. அதற்குள்ளாகவே அவள் குளித்துவிட்டு... காபி அருந்திய படி அமர்ந்திருந்தாள்...உடனே எழுந்து கழிப்பறை செல்லும் வழியில்...பக்கத்தில் அவள் மகள் வெங்கம்மாவும் , பேத்தி சைலஜாவும் இருந்த போதும் கூட "சுவாமி சுவாமி " என என்னையே அழைத்தாள்! மேலே இருந்த நான் "வருகிறேன் வருகிறேன்!" என்றேன்... அவ்வளவு தான் அவள் மூச்சு அடங்கிவிட்டது! அவளுடைய நல்லகுணத்துக்கும் பக்திக்கும் இதைவிட என்ன பெரிய அடையாளம் வேண்டும்?!" என பாபா தனது பௌதீக தாயின் இறை மேன்மையை... நற்குணத்தை வெளிப்படுத்துகிறார்! 

அவர் சாதாரண தாய் அல்ல... இதிகாசத் தாய்... இறைத் தாய்மையின் ஒரே இலக்கணம்... அப்பேர்ப்பட்ட தாயின் முகத்தை புகைப்படத்தில் நாம் கண்ணால் பார்க்கின்ற பாக்கியம் பெற்றிருக்கிறோமே! அவரின் திவ்ய தரிசனம் நமது அக பாவம் அனைத்தையும் கழுவட்டும்!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் - 11 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பிற உயிர்களையும் அரவணைக்கும் பேரன்பே தாய்மை... பிறர் மகன்களையும் தன் மகன்களாக உணர்வது... நாய் பூனை என சகல ஜீவராசிகளிடமும் தாய்ப்பாசம் காட்டுவது.. தனக்கு தீங்கிளைத்தவரிடம் பேரன்போடு நடந்து கொள்வது.. அப்படிப்பட்ட கள்ளம் கபடமற்ற பெருந்தூயப் பேரன்பே இறைத் தாய் ஈஸ்வராம்பா! சாதாரண கர்ப்பப் பை எப்படி பரப்பிரம்மத்தை சுமந்திருக்க முடியும்! அவர் சாதாரண மனுஷியும் அல்ல.. அது சாதாரண கர்ப்பப்பையும் அல்ல.. சர்வ பூதாந்தராத்மாவை சுமந்த சன்னிதானம் அது! கும்பேஷ்வரன் குடியிருந்த கோவில் அது! பரந்தாமனே பள்ளி கொண்டிருந்த பள்ளியறை அது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக