பகவான் பாபாவின் லீலா விநோதங்கள் அலாதியானவை. அவை பல தரப் பட்டவை. மானிடர்களின் ஊகத்திற்கு அப்பாற்பட்டவை. அற்புதங்கள் எனது விசிட்டிங் கார்டு என பாபா கூறுகிறார்.மக்களை தம்மிடம் ஈர்த்து நல்வழிப் படுத்த அவர் அதை உபயோகிக்கிறார்.
திரு.ராமச்சந்திரன் ஒரு விஞ்ஞானி. அவர் இந்திய ராணுவத்தின் தென்பகுதி தலைமையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக இருந்தவர்.
🌹பாபாவின் தந்தி திகைத்தார் ராமச்சந்திரன்:
அது 1965ம் ஆண்டு ஏப்ரல் மாதக் கடைசி. புனாவில் தமது இல்லத்தில் இருந்த ராமச்சந்திரன் அவர்கள் "சார் தந்தி" என்ற குரல் கேட்டு விரைந்த வந்தார். என்னமோ ஏதோ என்று நினைத்தவருக்கு இன்ப அதிர்ச்சி.தந்தியின் வாசகம் பின்வருமாறு:
"சத்ய சாயி பாபா உங்கள் இல்லத்திற்கு மே 5ந் தேதி வருகை தந்து, உங்கள் இரண்டு மகன்களுக்கும் உபநயனமும், பிரம்மோபதேசமும் செய்து வைப்பார்"
தந்தியின் செய்தி ராமச்சந்திரன் அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. உண்மையில் அவரது இரண்டு மகன்களுக்கும் உபநயனம் செய்வதற்கான பருவம் சற்று கடந்து கொண்டிருந்தது. அது பற்றி அவர் ஏற்பாடுகள் செய்ய நினைக்கும் முன்பே, பாபாவின் தந்தி வந்துவிட்டது.
"இது கனவா அல்லது நிஜமா, நான் இந்த ஆசீர்வாதத்திற்கு தகுதியானவன் தானா, பகவான் பாபா வந்தால் அவரை வரவேற்கும் முறை என்ன" இதுபோன்ற ஐயங்கள் அவரை சுற்றிசுற்றி வந்தன. ஆயினும், அவர் பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து, மே 5ந்தேதி அன்று உபநயன முகூர்த்தத்தை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன், நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்தார். அவரது கணிப்புப்படி சுமார் 50 நபர்களுக்கு விருந்து சாப்பாடு தயாரிக்க எண்ணி அதன்படி முடிவெடுத்தார்.
🌹சொல்லாமலே சேர்ந்த கூட்டம்:
பகவானின் வருகை பாதுகாக்கப்பட்ட ரகசியமாக வைக்கப்படிருந்த போதிலும் இனிப்பை தடம் கண்டுகொள்ளும் எறும்புபோல, பக்தர்கள் கூட்டம் 5 ந்தேதி காலைமுதல் ராமச்சந்திரன் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் சாரை சாரையாகக் கூட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் 1000 அன்பர்களுக்கு மேல் வருகை தந்து, வரிசையாக அமர்ந்து பாபாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர். பாபாவின் வருகைக்காக, மலர் அலங்காரமும், தோரணங்களும் கட்டப்பட்டன.மேடையில் பகவான் அமர ஒரு அலங்கரிக்கப்பட்ட நாற்காலி போடப்பட்டது. நிமிடங்கள் மணிகளாகி காலம் தன் கடமையைச் செய்ய, பாபா வந்தபாடில்லை. காலை மணி 11ஐ எட்டியது. நல்ல நேரம் நெருங்கவே ராமச்சந்திரன் அவர்கள் செய்வதறியாது பூஜை அறைக்குள் சென்று, பகவான் பாபாவை வழிபட்டார்..பிறகு தானே முன்நின்று, உபநயன சடங்குகளை நடத்தி முடித்தார்.
🌹வந்தார் பாபா - சிறுவனாக:
இந்த நேரத்தில், ஒரு அழகிய சிறுவன் திருமதி .ராமச்சந்திரனை அணுகி, "அம்மா நான் ஒரு அனாதை. பசியாய் இருக்கிறது. புசிக்க சிறிது அன்னம் கொடுங்கள்" என கேட்டு, பெற்ற உணவில் ஓரிறு கவளங்களே உண்டு, திரும்பிப் பார்க்கும் முன்னே மறைந்து விட்டான். அச் சிறுவன் யாரென்று ஒருவருக்கும் தெரியவில்லை. மேலும் பாபா உட்கார போடப்பட்டு இருந்த நாற்காலியின் சாட்டின் துணி யாரோ உட்கார்ந்திருந்ததைப் போல அமுங்கி இருந்தது. நாற்காலியின் கைப்பிடிகளில் இருந்த பூக்கள் யார் கையோ பட்டு நசுங்கிய தோற்றம் அளித்தன. ஒருவேளை பாபாதான் வந்திருந்தாரோ?ஆம். வருகிறேன் என்றவர் வாராது இருப்பாரோ? எப்படி? அசைக்க முடியாத ஆதாரத்தைச் சொல்கிறார், ராமச்சந்திரன் அவர்களின் மூத்த மைந்தன் ராஜா.
உபநயன சடங்கில் பிரம்மோபதேசம் என்பது முக்கியமானது. இதில் பிரும்மோபதேசம் பெறும் சிறுவனும், அவனது தந்தையும், புரோகிதரும் ஒன்றாக அமர்ந்திருக்க, அவர்களை ஒரு பட்டுத் துணிகொண்டு, கூடாரம்போல் மறைத்திருப்பர். இந்த மறைவின் உள்ளேதான், பிரம்மோபதேசம் என்னும் காயத்ரி மந்த்ரம் உபதேசிக்கப்படும். ராஜா என்னும் அச்சிறுவன் கூறியதாவது" "காயத்ரி மந்திரத்தை எனது தகப்பனார் உபதேசிக்கும்போது, அவரது முகம் மாறி, அந்த இடத்தில் பாபாவின் முகம் தோற்றமளித்தது." அடுத்து நடந்த நிகழ்வும் பாபாவின் அற்புதங்களுக்கு மற்றுமொறு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. 50 பேர் விருந்துண்ண சமைக்கப்பட்ட உணவு வகைகள், பரிமாற பரிமாறக் குறையாமல் அட்சயமாக நிரம்பி கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்பதுபோல வந்திருந்த 1000 அன்பர்களுக்கும் வயிறு நிறைய பரிமாறப்பட்டது.
திரேதா யுகத்தில் ராமராக வந்து, "ஒக மாட்ட" என்று சத்தியத்தை கடைபிடித்தவர், துவாபர யுகத்தில் பிருந்தாவன கண்ணனாக லீலைகள் புரிந்து, கலியுகத்தில் சாயியாக அவதரித்தவர். அவரின் லீலைகளைக் கேட்க கேட்க தெவிட்டுமோ? இணைந்திருப்போம் அவருடன், வழி நடப்போம் பணிவுடன்...
ஆதாரம்: திரு. பாம்பே சீனிவாசன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக