தலைப்பு

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தேவசிற்பி மயன் எழுப்பிய மாளிகையோ என வியக்கும் பாபாவின் பிரசாந்தி மந்திர்!


சாயி வாக்கு சத்திய வாக்கு. அவரது சங்கல்பம் வஜ்ர சங்கல்பம். தடைகளைப் பொடியாக்கி, தரணியில் ஓங்கி நிற்கும் சங்கல்பம். இடையறாது பக்தர்களின் நலன் நாடும் இனிய சங்கல்பம் ஐயம் கொண்டவர், இடையூறுகளைக் கண்டு மலைத்தவர் என அத்தனை அவநம்பிக்கையாளர்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி, தன் அவதார வரைபடத் திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பாபா நிறைவேற்றினார். அதில் ஒன்றுதான் பிரசாந்தி மந்திரின் நிர்மாணம்... 


🌹என்னை இவ்வளவு அருகில் நீ காண இயலாது -பாபா:

பாபா அவதாரப் பிரகடனம் முடிந்து, மூன்று ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் ,17 வயது சுந்தர சாயியாக சுடர் விட்டு ஒளிரும் வேளை.  பாபாவின் பால் ஆழ்ந்த அன்புகொண்டவரான லக்ஷமய்யாவிடம் பாபா  கூறினார், "பார் லக்ஷமய்யா. சாயியின் பிரவேசத்தால், இந்த இடமே பிரசாந்தி பிரதேசமாக மாறப்போகிறது. இங்கு ஒரு திருமாளிகை உருவாகும். நம் நாட்டவர் மட்டுமல்ல, அயல் நாட்டவரும் லட்சக்கணக்கில் கூடி,சாயி தரிசனம் காணக் காத்து நிற்பர்." பாபாவின் இந்த சூளூரையை லக்ஷமய்யாவால் நம்ப இயலவில்லை.அவரது முகபாவம் கண்ட பாபா மேலும் கூறினார்.

"நீ நம்பும் நாளும் வரும். அப்போது நாம் நிற்கும் இதே இடத்தில் நீ நிற்பார். நான் அந்த பவனத்தின் முகப்பில் நின்று தரிசனம் தருவேன்.அப்போது கூடி இருக்கும் ஏராளமான மக்கள் கூட்டத்திற்கு பின்னால் நீ நிற்பாய், அப்போது என்னை முழுமையாய் தரிசிக்க முடியாமல் ஏங்குவாய்."


🌹வெடி வைக்காமலே பொடியான ராட்சதப் பாறை:

பாபாவின் புகழ் பரவ பரவ பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பழைய மந்திரத்தில் இடவசதிகள் போதாத காரணத்தால் , புதிய மந்திரம் கட்ட   பாபா முடிவெடுத்தார். ஓரு தேர்ந்த பொறியாளராக பாபாவே செயல்பட்டு கட்டிட நிர்மாணத்தில் நேரடியாக ஈடுபட்டார்.  மேலும் அங்கு வேலை செய்தவர்களுக்கு வாராந்திர சம்பளப் பட்டுவாடாவையும் அவரே தம் கைப்பட வழங்கி ஆசீர்வதித்தார். புகழ்பெற்ற துங்கபத்ரா அணைக்கட்டிலத லைமைப் பொறியாளராக இருந்த திருமலை ஐயங்கார் என்பவர் பிரசாந்தி மந்திரின் பொறியாளராக செயல்பட்டார் கட்டிடம் கட்ட கடைக்கால் போடப்பட்டது. சுவர்கள் எழுப்ப கற்கள் தேவைப்பட்டன. அக்காலத்தில் கருங்கற்களால்தான் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதற்கான ஒரு பெரிய பாறை  (60 அடி உயரம், 100 அடி சுற்றவு) சித்ராவதி கரையில் இருப்பதைக் கண்ட திருமலை ஐயங்கார் அதை உடைக்க பாபாவிடம் அனுமதி வேண்டினார். பாபா அவரை சிலநாட்கள் தாமதிக்கும்படி கூறினார்.  மறுநாள் இரவு, பெருத்த  இடி மின்னலுடன் கன மழை பொழிந்தது. காலையில் சென்று அந்த பாறையைப் பார்க்க, அது இடி விழுந்ததால் சுக்குநூறாகச் சிதறி கட்டிடம் கட்ட ஏற்றதாக மாறி இருந்தது. இயந்திரம் கொண்டு உடைக்க  வேண்டிய பாறையை, இந்திரனைக் கொண்டு ,இடி  மூலம் பாபா தூளாக்கினாரோ? இருக்கலாம்!!


🌹தரிஷனும், ஸ்பரிஷனும் பெற பாக்யம் செய்த "கிரேன்":

திருச்சியிலிருந்து ,பெனுகொண்டா ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது அந்த , பிரம்மாண்ட 40 அடி நீள, மந்திர் கட்டுமானத் தூண். அங்கிருந்து அதை புட்டபர்த்தி எடுத்துச் செல்லவேண்டும்.

25 கிலோ மீட்டர் சாலை.  சாலை என்றுதான் பெயர். குறுகலான,  குண்டும் குழியுமான,மணல் நிரம்பிய சாலை. கனம் தாங்காத கால்வாய் வளைவுகள், சில இடங்களில் குக் கிராமங்களின் தெரு வழியாக..இப்படி எண்ணற்ற சோதனைகளைக் கொண்ட சாலயில் எப்படி, எதன்மூலம் ,அந்த கர்டரைப் பர்த்திக்கு கொண்டு செல்வது?வழி தெரியாத பொறியாளர்கள், மாற்று ஏற்பாடுகள் செய்யலாம், கர்டர் வேண்டாம் என பாபாவிடம் அனுமதி கேட்க, அவர் மறுத்துவிட்டார்.                பிறகு நடந்ததென்ன.?

பாபாவின் பக்தரான சாலைப் பணி அலுவலர் (R.T.O.) ஒருவர், தன் வீட்டு வாசலில் ஒரு கிரேன் பழுதுபட்டு நிற்பதையும், அதன் ஓட்டுனர் அதை இயக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் இருந்ததையும் கண்டார். இந்த கிரேனை  உபயோகித்து கர்டரை பர்த்தி கொண்டு செல்ல திட்டமிட்ட அந்த. RTO  பக்தர், பாபாவிடம் சென்று நிலைமையை விளக்கினார். பாபா தமது சர்வரோக நிவாரணியான விபூதியை ஸ்ருஷ்டித்து அளிக்க, அந்த விபூதி கிரேனின் இஞ்சின்மீது  தூவப்பட்டது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல், அந்த இஞ்சினும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது.

பிறகு என்ன! அந்த பிரம்மாண்ட கர்டர் கிரேனில் ஏற்றப்பட்டு, பெனுகொண்டா விலிருந்து பர்த்தி யாத்திரையைத் தொடங்கியது. கர்நாடகபள்ளி வரை சமர்த்தாக சென்ற கிரேன், மறுபடியும் மக்கர் செய்ய ஆரம்பித்து நின்றுவிட்டது. பாபாவுக்கு செய்தி செல்ல, அவர் நேரடியாகவே கர்னாடகபள்ளி வரை வந்தார்.  கருட  வாஹனத்தில் ஆரோஹணித்த  ஸ்ரீ சாயி நாராயணன், கர்டர் ஏற்றிய கிரேன் வாஹனத்தின் மீது ஏறி அமர்ந்தார். அதன் இஞ்சின், அவர் திருக்கரம் பட்டவுடன், உயிர்பெற்று அதன் இதயம் இயங்கத் தொடங்கியது. பிறகென்ன,அந்த அதிர்ஷ்டக் கர்டரும்  பிரசாந்தி சென்று அடைந்து, மந்திரின் ஒரு அங்கமாகி சங்கமித்தது.


🌻பிரசாந்தி மந்திர் 1950 ம் ஆண்டு நவம்பர் 23 ம் நாள், பாபாவின் 25வது பிறந்த நாளன்று கோலகலமாக திறக்கப்பட்டது. இந்த மந்திர் சத்ய யுகத்தின் நித்திய சாட்சியாக, சர்வ மதங்களின் ஒருமைத் தன்மைக்கு ஆதாரமாக, பகவானின் வைகுண்ட வாசஸ்தலமாக , துயருற்றோர்களின் புகலிடமாக, பக்தர்களின் பாவன யாத்திரை ஸ்தலமாக , விளங்கி நம் இதயங்களில் ஒளிவிளக்காய் ஒளிர்கின்றது. பிரசாந்தி மந்திர் வெறும் கல்லும் கான்கிரீட்டும் கொண்ட கட்டிடமல்ல. இது பக்தர்களின் இதயத்துடிப்பும், அவர்களின் உயிரான உயிர்த் துடிப்பும் ஆகும். 🌻


ஆதாரம்: www.sathyasai.org/ashrams/prasanthi/history.html

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக