தலைப்பு

சனி, 25 செப்டம்பர், 2021

கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சியிலிருந்து உகாண்டா டாக்டரை காப்பாற்றிய கடவுள் சாயி!


ஒரு தீங்கு நேரப்போகிறதென்றால் முன்பே சுவாமி எச்சரிக்கிறார்.. அப்படி எச்சரித்தும் கேளாத ஒரு பக்தரை சுவாமி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி காப்பாற்றிய உன்னத பதிவு மிக சுவாரஸ்யமாய்...


1968ஆம் ஆண்டு சுவாமி கிழக்கு ஆப்ரிக்காவிலிருக்கும் உகாண்டாவிற்கு விஜயம் செய்கிறார் (இதுவே சுவாமியின் முதல் மற்றும் கடைசி வெளிநாட்டு பயணமாகும்). தனது பக்தர் டாக்டர் சோட்டாபாய் ஜி. பட்டேல் அவர்களின் தீவிர பிரார்த்தனையால் அவரின் இல்லம் வருகிறார். அது கம்பாலா, உகாண்டாவில் இருக்கிறது. டாக்டர் பட்டேல்  இடி அமீனுக்கு மருத்துவராக இருந்தபடியால் அவரது வீட்டிற்கு வந்திருந்த இடி அமீன் அந்த நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்கிறார்... அவர் மட்டுமல்ல உகாண்டா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒனாமா.. தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஒகிரா ... இந்திய உயர் ஆணையர் கே.பி.ஆர் சிங் அங்கே சுவாமியை தரிசனம் செய்கின்றனர். 


கொடுங்கோலன் ஒருவனை சந்திக்கும் சூழலை ஏன் சுவாமியே தனக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ? என வாசிப்பவர்கள் யோசிக்கலாம்.. சுவாமிக்கு எந்த பேதமும் இல்லை... மனிதனை போல் பேதமையும் இல்லை... கொடுங்கோலன்... குணவான் என நாம் பிரித்துப் பார்க்கும் அனைவரும் சுவாமியின் குழந்தைகளே! அப்படி அந்த நேரம் சுவாமி அங்கே இருந்த பக்தர்களிடம் "இந்திய குடும்பங்கள் இங்கிருந்து இந்தியாவுக்கே சென்று விடுவது நல்லது" என்கிறார்... மேலும் "அப்படி செல்லவில்லை எனில் இன்னும் நான்கு ஆண்டுகளில் நீங்கள் யாவரும் தப்பி ஓட வேண்டியிருக்கும்.. இப்போதே போய்விட்டால் சொத்து சுதந்திரத்துடன் கௌரவமாக போகலாம்" என்றும் சொல்கிறார்.  டாக்டர் சி.ஜி பட்டேல் குடும்பத்தினரோ.. மற்றவர்களோ சுவாமி சொல்லும் அந்த சத்திய வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... சுவாமி அதற்கு மேல் சொல்ல‌‌ விரும்பவும் இல்லை... சுவாமியின் உதட்டிலிருந்து ஒரு வார்த்தை வருகிறதென்றால் அது சத்தியம்.. எப்படி பூரணத்திலிருந்து வருவது பூரணம் என வேதம் சொல்கிறதோ...அப்படி சத்தியத்திலிருந்து வருவது சத்தியமே.... ஆனால் சில மனிதர்கள் தான் அதை சந்தேகிக்கிறார்கள்.. 


மர உச்சிக் கிளையில்  இருக்கும் ஒருவன் மரத்தடியில் இருக்கும் இன்னொருவனை நோக்கி உன்னை தாக்க புலி வருகிறதென்று சொல்கையில் .. இல்லையே புதர் தானே சுற்றிலும் இருக்கிறது புலியை காணோமே என சொன்னானாம்...அதைப் போல் தான் .. உச்சிக்கு செல்லாத வரை தூர தரிசனம் தெரியாதது போல்... மனிதன் இறைவனின் சொற்களை ஏற்க மறுப்பது. யாருக்கு நஷ்டம்? கங்கையின் புனிதத்தை சந்தேகித்து குளிக்காமல் நகர்ந்தால் யாருக்கு நஷ்டம்?

சுவாமியின் அந்த வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சுவாமியை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் புட்டபர்த்தி வருகின்றது உகாண்டா டாக்டர் பட்டேலின் குடும்பம். அப்போதும் அவர்களிடம் சுவாமி "இன்னும் உகாண்டாவில் தான் இருக்கிறீர்களா? ஏன்? இந்தியாவுக்கு வரவில்லையா? என கேட்கிறார்.  பெற்ற தாயே ஒருமுறைக்கு மேல் இன்னொரு முறை அறிவுறுத்த மாட்டாள்... இது உருப்படாத பிள்ளை என மனதிற்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொள்வாள்.. ஆனால் கோடி தாய்க்கு ஈடான சுவாமி நல்வழிப்படுத்துவதே தன் அவதார கடமை என இன்று வரை சதா அதை செய்து கொண்டே வருகிறார்.


அவர்களோ சுவாமியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கையில் சுவாமி தன் விரலை அசைத்து எச்சரிக்கை என்பதாய் செல்கிறார். 

கடைசியாக நாலாவது ஆண்டில் டாக்டர் பட்டேல் இந்தியாவுக்கு வந்து சுவாமியை தரிசிக்கும் போது அவரிடம் சுவாமியோ "இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது... இப்போதே நீ குடும்பத்துடன் புறப்படவில்லை என்றால் உங்கள் உயிருக்கே ஆபத்து" என்கிறார். அந்த வார்த்தைகள் டாக்டரின் வயிற்றில் புளியை கரைத்தன... மிகுந்த பயத்துடன் உகாண்டா திரும்பி... தனது தொழிலையும்... ஜனாதிபதி கொடுத்திருந்த உயர் பதவியையும் உதறிவிட்டு உகாண்டாவை விட்டு மொத்தமாய் குடும்பத்துடன் கிளம்புகிற அவசரத்தில் அசையும் சொத்துக்களை மீட்க முடிந்தவரால் அசையா சொத்துக்களை மீட்க முடியவில்லை...அதனை விற்கவும் வழியில்லை... 

சுவாமி நான்கு வருடங்கள் முன்பே சொன்னாரே ...பிறகும் மூன்று முறை எச்சரித்தாரே... அப்போதே நாம் அதை கேட்டிருந்தால் சம்பாதித்தது இப்படி வீணாக வேண்டியதில்லை என டாக்டரின் புத்திக்கு உறைக்கிறது. மிகுந்த குற்ற உணர்ச்சியில்  கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.. தன்னை விட்டுவிட்டுப் போகிறாரே.. இனி என்ன நடக்குமோ? என உறைந்து போயிருந்தது அவர் உழைப்பில் வேர்வைக் குழைத்து கட்டிய பெரிய வீடும்... வாசலும்...


சுவாமி சொன்னவாறே அதே நான்கு மாதம் கடந்து...  உகாண்டாவில் வெளி நாட்டினரை எதிர்த்து... குறிப்பாக இந்தியர்களை எதிர்த்து பெரும் புரட்சி உருவாகிறது... இந்தியரின் கடைகள் சூறையாடப்பட்டன... வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன... பெண்கள் கவர்ந்து சென்று மானபங்கப்படுத்தப்பட்டார்கள். உகாண்டாவை விட்டு அவர்களுக்கு வெளியேறவும் அனுமதி கிடைக்கவில்லை... அன்றே சுவாமி சொன்னதை கேட்டிருந்தால் பல இந்தியக் குடும்பங்கள் தப்பித்திருக்கும் என உகாண்டா இந்தியர்கள் உணர்ந்து கொண்டனர். இப்படித்தான் துரியோதனனை சுவாமி எச்சரித்த போதும்.. அவன் கேட்கவில்லை.. மகா பாரதப் போரால் அவன் வம்சமே அழிந்தது!

            பிறகு இந்தியா வந்த டாக்டர் பட்டேல் நல்ல முறையில் தொழில் செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார். சுவாமி சொல்லை கேட்டால் மட்டுமே நமக்கு நிம்மதி ஏற்படும் என்பதும் டாக்டர் பட்டேல் வழி புரிந்து கொள்ள முடிகிறது. 

(பகவான் பாபா / பக்கம் : 191 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


ஏன் சுவாமியால் அக்கிரமங்கள்/ அட்டூழியங்கள்/ போர்கள் இவற்றை எல்லாம் நிகழாமல் தடுக்க முடியாதா? பிறகென்ன கடவுள் அவர் ? என பலர் யோசிக்கலாம். இது கர்ம பூமி. நாம் செடி வளர்த்தால் செடி வளர்ந்து தலையில் பூக்கள் விழும்... இடி வளர்த்தால் இடி வளர்ந்து தலையில் இடி தான் விழும்!  நாம் செய்கிற எல்லாவற்றுக்கும் எதிர்வினை இருந்தே தீர்கிறது!  இருந்து அது தீர்க்கிறது..ஜென்ம ஜென்மமாகவும் அது தொடர்கிறது...  தெரியாமல் செய்கிற பிழைகளை விட தெரிந்தே செய்யும் பிழைகளுக்கு கேடுகளின் வீரியம் அதிகம்.  

மனிதன் அமைதியாய் வாழ அவன் செய்ய வேண்டிய ஒரே விஷயம் மனதை அமைதியோடு வைத்துக் கொள்வதே.. அதற்கு சுவாமி மேலான பக்தி.. பக்தியால் ஏற்படும் ஆன்ம சாதனையே அமைதிக்கு வழிவகை ஏற்படுத்துகிறது!


   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக