தலைப்பு

புதன், 15 செப்டம்பர், 2021

சுருள் முடியோடு சீரடி பாபா தோற்றம்... குருவார பூஜையில் நிகழ்ந்த வினோதம்!


சீரடி பாபாவின் மறு அவதாரம் என தன்னை , ஸ்ரீ சத்ய சாயி பாபா அறிவித்தார். பாபாவின் சத்ய வாக்கிற்கு சாட்சிய பிரமாணங்கள் தேவையில்லை. ஆயினும் பாபாவின் பல லீலைகளில் அவரது இந்த பிரகடனம் பிரகாசிக்க, அரைகுறை நம்பிக்கை கொண்டவர்கள் கூட பூரண நம்பிக்கை அடைந்தனர்.  இறைவன் பாபாவின் அத்தகைய லீலைகளில் ஒன்றை இங்கு காண்போம்... 


தானே தேடி வந்து, துயர் தீர்த்து பின் அவர்களை பக்தர்களாக மாற்றிய பல நிகழ்வுகள், ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சரித்திரத்தில் உண்டு. அதில் ஒன்றுதான் கிண்டி லோகநாத முதலியாரின் கதை. மந்திரவாதியின் செய்வினையால் சித்தப்பிரமை பிடித்து இன்னல்பட்ட அவரின் கனவில் வந்து, அபயமளித்த பாபா, மறுநாள் நேரிலேயே வந்து, தமது சக்தியால் அவரை குணப்படுத்தினார். அதனால் லோகநாத முதலியார் பாபாவின் பரம பக்தராகி, பாபவின் அன்புக் கட்டளயின்படி, கிண்டியில் சீரடி பாபா கோயிலை கட்டினார். அப்போது சீரடி பாபாவும் தாமும் ஒன்றே என பாபா நிகழ்த்திக் காட்டிய ஒரு அற்புதத்தை இந்த கோயிலில் இன்றும் காணலாம்.

இது பற்றி திரு.லோகநாத முதலியாரின் மகள், குமாரி லீலா அவர்கள், 1975 மார்ச் மாத சனாதன சாரதி இதழில் பகிர்ந்த அவரது சொந்த  அனுபவத்தை இங்கு காண்போம்... 

சீரடி பாபாவின் மறு அவதாரம் தான் சத்யசாயி பாபா. அவர் எனக்கும் மற்றும் பலருக்கும் தமது முந்திய அவதாரமான சீரடிபாபாவின் தோற்றத்தைக் காட்டி அருளியுள்ளார். கிண்டி சீரடிபாபா கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்தபின் சத்யசாயி பாபா தமது சின்ன காலடித் தடத்தை சந்தணக் குழம்பின்மீது வைக்க, அதில் பதிவானதோ , சீர்டி பாபாவின் நீண்ட பாத பதிவுகள். ( இந்த புனிதப் பாதப் பதிவை இன்றும் கிண்டி கோயில் கர்ப்பக் கிரஹத்தில் காணலாம் ).

 பல சமயங்களில் சீர்டி பாபா சென்ற இடம், அவர் உபயோகித்த பொருட்கள், அவர் பேசிய பேச்சுக்கள் இவைகளை, சிஞ்சோலி மகாராணி போன்ற சீரடி பக்தர்களிடம் கூறி, பாபா வியப்பில் ஆழ்த்துவார். சீரடி பாபாவின் பெயர் சொல்லி புகழ்தேட எந்த அவசியமும் சத்யசாயி பாபாவுக்கு இல்லை. மற்றுமொறு அவதாரமாக தனியே பிரகாசிக்க பாபாவால் முடியும். நமது பாரத புண்ணிய பூமியில் இதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் சந்தேகம் என்பது மனித மன நம்பிக்கையை கரையானாக அரிக்கும் ஒரு வியாதி. அது ராம பக்தராகிய ஹனுமாரையும் விட்டு வைக்கவில்லை . ஸ்ரீ கிருக்ஷ்ணர், தான்தான் ராமாவதாரம், என கூறியபோதும்  ஹனுமன் அதை நம்பவில்லை. ஆகவே ஸ்ரீகிருஷ்ணர் ராமராக தோன்றி ஹனுமனது சந்தேகத்தை நிவர்த்தித்தார். பர்த்தி பாபாவோ இந்த சந்தேக நிவர்த்தியை பல முறை செய்த போதும், அவை மற்றவர்களை நம்பச் செய்ய அல்ல. அது அவருக்கு அவசியமும் இல்லை. கலியுகத்தில் சாயியின் முப்பெரும் அவதாரம் நிகழும் என்ற சத்திய உண்மையை, அனைவரும் அறிய வேண்டும், அறிந்து நல்வழி நடக்க வேண்டும் என்கிற அவதார சங்கல்ப்ப நோக்கில் தான், பலமுறை அவர் இவ்வாறு அறிவித்து, அற்புதங்களை நிகழ்த்திய செயல்.. பாபா நிகழ்த்திய          மற்றுமொரு லீலை என் நினைவில்  நீங்காமல் உள்ளது. 

நான் பள்ளியில் படித்த நேரம் அது நிகழ்ந்தது.  ஒரு வியாழக்கிழமை அன்று, பூஜை அறையில், சீர்டிசாயி விக்ரஹத்திற்கு பூமாலை அணிவித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சீரடி பாபாவின் தலையில் இருந்த தலைப்பாகைத் துணி, வெகு வேகமாக சுற்றத் தொடங்கி அவருடைய தலை, சுருட்டை முடியுடைய சத்யசாயி பாபாவின் தலைபோல மாறியது. ஆனந்த அதிர்ச்சியில், மனம் திக் திக் என்று படபடக்க, வியர்வை பெருக, அம்மா என்று அலறியபடி வெளியே ஓடிவந்தேன். கடந்த 35 ஆண்டுகளாக பகவானின் பெருங்கருணை   என்னை காப்பாற்றுகிறது. மஹாபாரதப் போரில், தம் கருணையாம் படகில் ஏற்றி பாண்டவர்களை காத்த ஸ்ரீ கிருஷ்ணர் போல, சம்சார சாகரத்தின் துயர்களை சந்தித்து, அதைக் கடக்க , எனக்கு அருள் புரிகிறார்.

அவரே நான் என சத்திய சாயி பாபா அறுதியிட்டுக் கூறியபின் ஆராய்ச்சி எதற்கு? இது பரிபூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், கடிகார பெண்டுலம் போல, நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடும் அறிவு ஜீவி என  நினைப்பவரிடையே எந்த விளக்கமும் எடுபடாது. எனினும் பகவான் அவதாரம் எடுத்தது பக்தர்களுக்காக மட்டுமல்ல. உலக மக்கள் அனைவரும் உய்ய வேண்டும், உண்மை உலாவந்து சத்தியயுகம் மலர வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆகவே தான் பகவான் சாயி மூவரின்(ஷிர்டி, சத்ய, பிரேம) அவதார ரகசியங்களை நம்மிடையே பகிர்கிறார். நம்மை பகவான் சோதிப்பது, தங்கத்தை புடம் போடுவது போன்றது. ஆனால் பகவானை நாம் சோதனை செய்ய நினைப்பது , கண் பெற்றவன் இருட்டு அறையில் இருந்துகொண்டு  சூரியனே இல்லை என்று  கூறுவது போலாகும். ஆகவே கண்பெற்ற நாம் இவ்வுலகை சாயியின் விழிகொண்டு பார்த்து அவர் அடியொற்றி நடந்து பலனடைவோம்.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


கிண்டி லீலாம்மா சுவாமியுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்...

👇👇



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக