தலைப்பு

சனி, 4 செப்டம்பர், 2021

தட்ப வெப்பநிலை மாறுதலை எதிர்க்க உதவும் சுவாமியின் ஆன்மீகத் தீர்வுகள்!

இன்றைய காலக்கட்டத்தில் உலகாயத மக்களின் சர்வதேச பிரச்சனையான தட்ப வெட்ப நிலை மாறுதல் குறித்து சுவாமி அறிவுறுத்திய தீர்வுகளையும் சேர்த்து தன்னுடைய ஆராய்ச்சியை தெளிவுறவும் மிக சுவாரஸ்யமாகவும் பதிவு செய்கிறார் அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் மோகன் இதோ‌...

பாகம் - 1

இயற்கையைப் பாதுகாக்க, மனிதன் தனது ஆசைகளுக்கு ஒரு வரம்பு விதிக்க வேண்டும். மனிதன் இயற்கையின் எதிர்மறை அம்சங்களைத் தூண்டிவிடக்கூடாது.  வசதிகளைத் தமக்கு அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் அதிகப்படியான வசதிகள் மனிதனின் மனதைப் பாழ் செய்து மகிழ்ச்சிக்குப்  பதிலாகத் துன்பத்தையே உண்டாக்குகின்றன.  சில கட்டுப்பாடுகள் இல்லாமல் எவ்வித நன்மையையும் அடைய முடியாது.  தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அதிகப்படியான வசதிகளால், வாழ்வு வெறும் இயந்திரமயமாக மாறிவிட்டது.  ஆன்மிகம் குறைந்து விட்டது.  - ஸ்ரீ சத்ய சாயி பாபா 21 ஜனவரி 1993.


உலகாயத சத்ய சாயி பக்தர்களின் எதிர்கால தொலை நோக்கு கீழ்க்கண்டவற்றில் உள்ளது. 

(1) இயற்கையுடன் நமக்கு உள்ள இடையறாத இணைப்பை உணர்ந்து கொள்ளுதல் 

(2) இயற்கை ஆதாரங்களை மிகவும் நன்றியுடன், சுருக்கமாக தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துதல் 

(3) இயற்கையின் மீது கருணையை வெளிப்படுத்துதல் மற்றும் அதற்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே துன்பம் விளைவித்தல்.

உலகின் பாரம்பரிய கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் அனைத்தும் "இயற்கை இறைவனின் சங்கல்பத்தை அறிவிக்கிறது" என்ற செய்தியைப் பிரச்சாரம் செய்கின்றன. மேலும் மனிதன் இயற்கையுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்து அன்னை பூமியைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிக அளவில் நம்மை இந்த நெருங்கிய ஆன்மீகத் தொடர்பில் இருந்து தள்ளி வைத்து விட்டன. நாம் பூமியின் ஆதாரங்களை வெகுவாகப் பயன்படுத்தி, நமது நிலங்கள், ஆறுகள், சமுத்திரங்கள் மற்றும் காற்று மண்டலத்தைப் பாழ் செய்து விட்டோம்.  அச்செயல் நம்மை இப்போது நேரடியாகவும் அதிக அளவிலும் பாதிக்கிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாபா கூறுகிறார், "இந்த உலகம் தனது சமநிலையை இழந்து வருகிறது. ஏனெனில் மக்கள் தங்களது சுயநலத்தாலும் மிகைப்படியான ஆசிகளாலும், பூமியிடம் இருந்து வாழ்வு ஆதாரங்களைத் திருடி எல்லா உயிர்களுக்கும் கேடு விளைவித்துள்ளனர். பூமி எதிர்விளைவாக நில நடுக்கம் மற்றும் புயல்கள் ஆகியவற்றைப் பிரதிபலனாக அளித்து உலகமெங்கும் உள்ள முழு மனித சமுதாயங்களையே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் கேடு ஒரு ஆன்மீகக் கேடு ஆகும்.  நாம் வெளிப்புறத்தில் காணும் சுற்றுப்புற மாசுபாடு மனித மனதிற்குள்ளும் இதயத்திற்குள்ளும் ஏற்பட்டுள்ள மாசுபாட்டின் பிரதிபலிப்பே ஆகும்.  நாம் இறைவனின் படைப்பைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்துகொண்டு, அதே நேரத்தில் இறைவனின் அன்பு, அருள் மற்றும் பாதுகாப்பைத் தேட முடியாது.  மாற்றம் என்பது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

🌹முதலாவதாக...

 நாம் தனியாகவும், கூட்டாகவும் இயற்கையுடன் நமக்குள்ள தொடர்பினைப் பரிமாற்றம் செய்தாக வேண்டும்.  அதற்கு நாம் உலகம் தழுவிய ஐந்து மனிதப் பண்புகளான சத்தியம், தர்மம், அமைதி, அன்பு மற்றும் அஹிம்சை ஆகியவற்றைத் தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பண்புகள் யாவும் எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்கள் மற்றும் மதச்சார்பற்ற சமுதாயங்களின் நீதி முறைகள் இவற்றிற்கும் மிகப் பொதுவானவை ஆகும்.  சுற்றுப்புற சூழலுடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றிய அனைத்து அம்சங்களையும் விரிவாக செயல் முறையில் அவை அளிக்கின்றன.  சத்யம் நமது செயல்கள் எப்படி சுற்றுப்புற சூழலையும் நம்மையும் துன்புறுத்துகின்றன என்பதையும் அந்த அறிவை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறது. தர்ம வழி நடத்தல் நமது கெட்ட பழக்கங்களை பரிமாற்றம் செய்து எல்லா ஆதாரங்களையும் எப்படி மிதமாகவே பயன்படுத்துவது என்றும் அந்த ஞானத்துடன் செயல்படுவது எப்படி என்றும் வழிகாட்டுகிறது. அஹிம்சை வழி நடத்தல் நமக்கு சுற்றுப்புற சூழலை எப்படி மாசுபடுத்தாமல் இருப்பது என்று போதித்து பிராணிகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள நமக்குக் காட்டுகிறது. அமைதி வழி இருத்தல் சுய ஒழுக்கம் மற்றும் பணிவை வளர்கிறது.  இறுதியாக, அன்பு இயற்கையிடம் அக்கறை மற்றும் கருணையாக நடந்து கொள்வதை ஊக்குவிக்கிறது.


🌹இரண்டாவதாக...

நமது ஆசைகளுக்கு ஒரு வரம்பு விதிப்பதன் மூலம் நாம் குறைந்த அளவே வாழ்வு ஆதாரங்களைப் பயன்படுத்துவோம், எளிய வாழ்வு வாழ்வோம்.  அதன் மூலம் பூமியின் ஆதாரங்களை அதிகப்படியாகப் பயன்படுத்துதலைத் தவிர்ப்போம்.   அதன் மூலம் நாம் சேமிக்கும் நேரம், சக்தி, பணம், மற்றும் உணவைப் பிறரது நன்மைக்காகப் பயன்படுத்துவோம். இந்த சுயத் தியாகம் மற்றும் சேவை, உலகாயதப்  பொருட்கள் மூலம் குறைந்த, தற்காலிக இன்பம் அடைதலில் இருந்து நம்மை விடுவிக்கும். நமது ஆசைகளும் உச்ச வரம்பு விதிப்பதன் மூலம், நாம் பூமியின் மீது குறைவாக நமது பாரத்தைச் செலுத்தி, நமது கார்பன் வெளிப்பாட்டைக் குறைக்க இயலும். 

"அனைவரையும் நேசியுங்கள், எல்லோருக்கும் சேவை செய்யுங்கள்" மற்றும் "எப்போதும் உதவி செய்யுங்கள், ஒருபோதும் துன்புறுத்தாதீர்கள்" ஆகிய கோட்பாடுகள் நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்த வேண்டும் மற்றும் நாம் இயற்கையுடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை வழிகாட்டுகின்றன. 

பஞ்ச பூதங்களும் இறைவனின் சங்கல்பத்தால் படைக்கப்பட்டவை.  அவை மிகுந்த வணக்கத்திற்குரிய கவனத்துடனும், விழிப்புடனான பகுத்தறிவுடனும் பயன்படுத்தப்பட வேண்டும். பொறுப்பற்ற விதத்தில் அவற்றில் எது ஒன்றையும் பயன்படுத்தினால் அது உங்கள் மீது பெரும் துன்பம் விளைவிக்கும் விதத்தில் எதிர்விளைவையே ஏற்படுத்தும். - ஸ்ரீ சத்ய சாயி பாபா, 23 நவம்பர் 1968

மனிதர்களாகிய நாம் அன்னை பூமி நமக்களித்த எத்தனையோ பொக்கிஷங்களை அனுபவிக்கும் அதிமிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.  சொல்லப்போனால், நாம் கொண்டிருக்கும் அனைத்துமே அன்னை பூமி நமக்கு உவந்தளித்த பரிசே ஆகும். பூமி என்பது ஸ்ரீ சத்ய சாயி பாபா எனப்படும் இறைவனின் வெளிப்பாடே ! அன்னை பூமி எப்போதும்  பிரதிபலனாக நம்மிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காமல் நமக்கு வாழ்க்கையையே (உணவு/ உடை/ உறைவிடம்) கொடுத்து வருகிறார்.  பல்லாண்டுகள் முன்னர், மனித குலம் இயற்கையுடன் மிக நெருங்கிய நல்ல தொடர்பு கொண்டு வாழ்ந்தது.  தொழிற்துறை மற்றும் வியாபாரம் பெருகப்பெருக பேராசை, சுயநலம் அதிகரித்து நாம் அன்னை பூமியிடமிருந்து தொடர்பு அறுந்து போய் விட்டது. அதே போல் நமக்கு நமக்குள் இருக்கும் தெய்வீகத்துடனும் தொடர்பு அற்றுப்போய் விட்டது.  இறைவன், இயற்கை அன்னை மற்றும் மனிதன் இவற்றின் ஒருமைத்தன்மையை நாம் மறந்துபோய்விட்டோம்.  

நாம் இயற்கை ஆதாரங்களைத் துஷ்பிரயோகப்படுத்தி, மேன்மேலும் புதைபடுகை எரிபொருட்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி வருகிறோம்.  நமது காடுகள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் யாவும் மறைந்து வருகின்றன.  நமது சூழல் மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது.  சுற்றுப்புறச் சூழல் மிகுந்த அளவில் மாசுபட்டுப்போய்விட்டது.  

சுற்றுப்புற சூழல் விஞ்ஞானிகள் வெகு காலமாக மனித குலத்திற்கு அபாய எச்சரிக்கை அளித்து கோள அளவிலான தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் சுற்றுப்புற சூழல் சமமற்ற நிலை ஆகியவற்றின் தவிர்க்க முடியாத விளைவுகளை எடுத்துரைத்துள்ளனர்.  நமது அன்பான ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களும் நமது சுயநலமிக்க ஆசைகளும் பேராசைகளுமே பூமியின் மூலங்கள் பாதிக்கப்பட்டு இயற்கையின் சமநிலை குலைந்து விட்டதற்குக் காரணமென்று எடுத்துக்கூறுகிறார்.  இதனை மாற்றி முன்னேறும் வழி நமது சொந்த தெய்வீகத்தை விழிப்புறச் செய்வதே ஆகும்.  நாம் இனிமேலும் தாமதிக்காமல் இயற்கையுடன் திரும்பவும் நமது தொடர்பை வலுப்படுத்தி, சரியான நடவடிக்கைகள் எடுத்து, தினசரி ஆன்மீக சாதனைகளைப் புரிந்து, நமது நன்றியையும் வணக்கத்தையும் அன்னை பூமிக்குத் தெரிவிக்க வேண்டும்.  நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமியே.  அது பாழடிக்கப்பட்டுவிட்டால், நமது எதிர்கால சந்ததியினரும் பிற உயிர்களும் வாழ முடியாது.  மேலும் நாம் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளான தூய குடி நீர், காற்று, உணவு மற்றும் நிலம் ஆகியவற்றை அடைதல் முடியாமல் போய்விடும்.

நாம் நமது தினசரி செயல்கள் மற்றும் பழக்கங்கள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவை யாவும் இந்த கிரகத்தையும் எதிர்காலத் தலைமுறைகளையும் பாதிக்க வல்லவை.  ஆனால் நாம் அனைவரும் அன்னை பூமியினைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அளவு மிகச் சிறந்த செயல் புரிந்தால் இந்த கிரகம் மேலும் பசுமையானதாக மாற நேர்மறை மாற்றங்களை நிகழ்த்த முடியும்.  அதற்கு மிகச் சிறந்த வழி மனிதப்பண்புகளான சத்யம், தர்மம், சாந்தம், பிரேமை மற்றும் அஹிம்சை ஆகியவற்றை பூமியின் மீது நோக்கிப் பின்பற்றுதல் ஆகும்.  மேலும் நாம் நமது ஆசைகளுக்கு உச்ச வரம்பு விதித்தல் என்பதை பின்பற்ற வேண்டும்.  அதன் மூலம் இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க இயலும்.  நாம் அனைவரும் ஒன்றாகப் பணிபுரிவதன் மூலம் நமது கிரகம் பல வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு மனிதர்களும் பிற உயிர்களும் வாழ உகந்ததாகவும், எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் உயிர்வாழ்தல் இவற்றை அளிக்கும் ஆதாரமாக விளங்கும். 

தட்ப வெப்ப நிலை சமன்படுத்தலுக்காக சுவாமி அறிவுறுத்தி... நாம் அத்தியாவசியமாக கடைபிடிக்க வேண்டிய செய்முறை விளக்கத்தை அடுத்த பாகத்தில் அறிந்து கொள்வோம்!!


பாகம் - 2

நமது அன்னை பூமியைப் பாதுகாக்க பல்வேறு இயற்கை ஆதாரங்களை உபயோகிப்பதில் நமது தினசரி வாழ்வில் உச்ச வரம்பு விதித்தல் மற்றும் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் 


🌹1. உணவை வீணாக்குவதைக் குறையுங்கள்:

சாமர்த்தியமகவும் யதார்த்தமாகவும் கடைகளில் உணவுப் பொருட்களை  வாங்குங்கள் 

உங்களுக்குத் தேவையானதை மட்டும் வாங்குங்கள்.

உங்கள் சமையலறை குளிர்சாதனப்பெட்டியில் ஏற்கனவே என்ன உணவுப்பொருட்கள் உள்ளன என்று பட்டியலிட்டபின் கடைகளுக்குச் செல்லுங்கள்.

பெரிய சூப்பர் மார்க்கெட்டில் புதிய காய்கறிகள் வாங்குவதைத் தவிர்த்து உள்ளூர் உழவர் சந்தைகளில் அந்தப் பருவங்களில் விளையும் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்!

உங்கள் குளிர்சாதனப்பெட்டி, உறையவைக்கும் பெட்டி (freezer) மற்றும் சமையலறை அலமாரிகளில் சாமான்கள் யாவற்றையும் எளிதில் அடையாளம் காணும்படி ஒழுங்காக அடுக்கி வையுங்கள். (ஒவ்வொன்றும் கலைந்து இருந்தால் கண்டுபிடிப்பது கடினம்).

ஒவ்வொரு வேலை உணவு சமைக்கும் முன்னரும் எத்தனை பேருக்கு, எவ்வளவு உணவு தேவை என்பதை முன்னரே தீர்மானியுங்கள்.

பல மக்கள் கூடும் விழாக்களுக்குத் தேவையான உணவின் அளவை முன்கூட்டியே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

அருகிலுள்ள உணவு வங்கிகள் மற்றும் கொடை நிறுவனங்களது தொடர்பு விவரங்களை எளிதில் கண்டுபிடிக்கும் விதத்தில் வைத்திருங்கள்.

தட்டில் அளவுக்கு அதிகமாகப் பரிமாறாதீர்கள்.

ஒவ்வொரு முறையும் சிறிதளவு உணவையே தட்டில் இடுங்கள். 

தட்டில் பரிமாறப்பட்ட உணவை வீண் ஆக்காமல் சாப்பிடுங்கள். 

மிச்சமாகும் உணவைச் சேமித்திடுங்கள்.

வீண் ஆகும் உணவின் அளவை ஒவ்வொரு முறையும் ஒரு நோட்டில் குறித்து வையுங்கள்.

உணவைப் பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.

சமையலறையில் வெட்டிய காய்கறி மீதங்களை (சமைக்காதவற்றை) தொழு உரமாக மாற்றுங்கள்.

வீண் ஆகும் உணவுக் கழிவுகளைப் பிரித்து வையுங்கள்.


🌹 2. தண்ணீர் உபயோகிப்பைக் குறையுங்கள்:


ஷவரில் குளிப்பதை 5 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்துங்கள். அல்லது குளிப்பதற்கு ஒரு வாளி நீர் மட்டும் பயன்படுத்துங்கள்.

காய்கறிகளைச் சுத்தம் செய்த நீரை மறுபடி உபயோகியுங்கள் (செடிகளுக்கு ஊற்றவும்).

பாத்திரம் அலம்பும் கருவி மற்றும் துணி துவைக்கும் இயந்திரம் இவற்றை முழுக்க நிரப்பிய பின் உபயோகியுங்கள்.

எல்லா நீர் ஒழுக்குகளையும் சோதனை செய்து சரி பாருங்கள். 

ஃபிளஷ் கழிப்பறை இருவிதத்தில் (மலம் / சிறுநீர்) இருக்கும்படி புதிதாகப் பொருத்தங்கள்.

குளியலறையில் குறைந்த அளவு நீர் கொட்டும்படியான ஷவர் மற்றும் குழாய் இணைப்புக்களைப் பொருத்தங்கள்.

உங்கள் மோட்டார் வாகனத்தை வாகனம் குளிப்பாட்டும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் அங்கே நீர் மறுபடி திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகிறது.

அல்லது ஒரு பக்கெட் நீரில் உங்களது வாகனத்தைக் குளிப்பாட்டுங்கள். டியூப் மூலம் நீரைப்பீய்ச்சி அடிக்க வேண்டாம்.  அது அதிக நீரை வீண் ஆக்கும்.

சூடு நீர் வேண்டுமென்பதால் அது குழாயில் வரும் வரை குளிர்ந்த அல்லது இலேசாக சூடுள்ள நீரைக் கீழே செல்லும்படி குழாயில் இருந்து திருப்பி விடாமல் அதனை ஒரு வாளியில் பிடித்து வைத்து சேமித்து பிறகு வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்துங்கள்.

பின்புற சவ்வூடு பரவல் மூலம் நீர் சுத்திகரிப்பான்கள் சேமிக்கும் நீரைப் பயன்படுத்துங்கள்.

ஏற்கனவே இருக்கும் நீர்க் குழாய்களுக்கு காற்றூட்டக் கருவியைப் பொருத்துங்கள்.

உங்கள் தோட்டத்திற்கு வளரும் செடிகளின் வேர்களை உலர்வதில் இருந்து காப்பாற்ற வைக்கோல் அல்லது மரத்துண்டுகள் கொண்டு மூடுங்கள் (mulch).

விளைநிலங்களுக்கும் தோட்டங்களுக்கு சொட்டு நீர்ப்பாசனத்தைப் பின்பற்றுங்கள்.

சமையலறையில் பாத்திரங்கள் அலம்பும்போது நீரை சேமியுங்கள். வேண்டும்போது மட்டும் குழாயைத் திறந்து நீரை விழ அனுமதியுங்கள். வெறுமனே நீர் கொட்டும்படி விடாதீர்கள். 

அதே போல் பல் துலக்கும்போதும், கைகளை அலம்பும்போதும் வேண்டியபோது மட்டும் நீரைத் திறந்து விடுங்கள். வெறுமனே நீரை ஓடவிட்டு வீண் ஆக்காதீர்கள்.

மழை பெய்யும்போது அதைப்பிடித்து சேமிக்க ஒரு பீப்பாயை உபயோகியுங்கள்.

செடிகளுக்கு இளங்காலையில் நீர் விடுங்கள்.

உங்கள் நாயை வீட்டுக்கு வெளியில் குளிப்பாட்டுங்கள்.


🌹 3. பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

இயற்கையாகவே அழிந்துவிடும் அல்லது திரும்ப உபயோகமாகும் உணவுத் தட்டுக்கள், கிண்ணங்கள், கரண்டிகளைப் பயன்படுத்துங்கள். ஸ்டைரோபோம் பொருட்களைத் தவிருங்கள்.

உலோகம் அல்லது கண்ணாடி தண்ணீர் பாட்டில்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைத் தவிர்த்து விடுங்கள்.

காப்பிக் கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உங்களது சொந்த உணவுக்கலன்கள் மற்றும் காப்பி கோப்பையைக் கொண்டு செல்லுங்கள்.  ஒருமுறை பயன்படுத்தித் தூர எறியும் ஸ்டைரோபோம், காகித அல்லது பிளாஸ்டிக் தம்ளர்கள் / கோப்பைகளைத் தவிருங்கள்.

காய்கறிகளும் பழங்களும் வாங்கும்போது பிளாஸ்டிக் உறைகளால் மூடப்படாதவற்றை மட்டும் வாங்குங்கள்.  அதன் மூலம் பிளாஸ்டிக் அடித்தட்டுகள், உறைகள் முதலியவற்றைத் தவிருங்கள்.

இசை ஒலி மற்றும் காணொளி இவற்றை இணையத்தில் மென்பொருள் வடிவத்தில் (digital) மட்டுமே வாங்குங்கள். குறுந்தகடு (CD), காணொளித் தகடுகள் (DVD) இவற்றை வாங்குவதைத் தவிருங்கள்.

பிளாஸ்டிக் சாண்ட்விச் பைகளைத் தவிருங்கள். அதற்குப்பதிலாக காகிதப் பைகளையோ அல்லது இயற்கையாக அழிந்துவிடக்கூடிய உணவுக்கலன்களைப் பயன்படுத்துங்கள்.

உல்லாச சுற்றுலாக்கள் மற்றும் விருந்தினர்கள் கொண்டுவரும் உணவுப்பண்டங்கள் கொண்ட விருந்துகளுக்கோ செல்லும்போது மறுபடியும் உபயோகப்படும் உணவுக்கலன்கள் மற்றும் கரண்டிகளைப் பயன்படுத்துங்கள்.

உணவுப்பண்டங்களை வெளியில் வாங்கும்போது அல்லது வாங்கி உண்ணும்போது ஒருமுறை மட்டும் பயன்படும் விதத்தில் விற்கப்படும் பொருட்களையும், நீர் உறிஞ்சிகள் (straws) ஆகியவற்றையும் தவிருங்கள். 

சாமான்கள் வாங்க திரும்ப உபயோகப்படும் பைகளையும் கொள்கலன்களையும் மட்டுமே பயன்படுத்துங்கள்.

உணவுப் பண்டங்களின் பொட்டலங்களையும் உறைகளையும் கடைகளுக்கு அல்லது தயாரிப்பாளருக்கு திருப்பி அனுப்பி விடுங்கள். 

மேற்புற உறைகள் மூடாத பொருட்களை வாங்குங்கள்.

கதவருகே விநியோகம் (door delivery) பெறும்போது பிளாஸ்டிக் முள்கரண்டிகள் மற்றும் கத்திகளைத் திருப்பி அனுப்புங்கள்.

நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் கொண்ட உற்பத்திப்பொருட்களைத் தவிர்த்துவிடுங்கள்.  அவை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துபவை ஆகும்.


🌹4. சக்தியை சேமித்தல்:


துணிகளை இயந்திரத்தில் துவைக்கும்போது குளிர்ந்த நீரை மட்டும் உபயோகியுங்கள்.  

துணிகளை உலர்த்தும் இயந்திரத்தில் உள்ள சலவைத்திரி (lint) அவ்வப்போது நீக்கப்பட்டு விட வேண்டும்.

பூமி பாதுகாப்பு மணி நேரத்தை மாதத்திற்கு ஒருமுறையாவது பின்பற்றுங்கள். அப்போது எல்லா மின்னணு சாதனங்களும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

சமையலறை பாத்திர சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவு நீர் பயன்படுத்தும் முறையை (economy option) மட்டும் பயன்படுத்துங்கள். 

உங்களது மடிக்கணினி மற்றும் அலைபேசிகளை மின்னூட்டம் செய்த உடனேயே மின் இணைப்பில் இருந்து விடுவித்து (unplug) விடுங்கள். 

பகல் நேரத்தில் ஜன்னல் திரைகளைத் திறந்து வெளிச்சம் வரும்படி செய்யுங்கள்.

உங்கள் வீட்டிலுள்ள மத்திய வெப்பக்கட்டுப்பாட்டினைக் குறைத்து வையுங்கள்.

மின்விளக்குகள் யாவற்றையும் ஒளி உமிழும் இருமுனையம் (LED) கொண்டவையாக மாற்றுங்கள் 

உங்கள் வீட்டின் சுவர்களை ஒரு வெளிரான நிறத்தில் வர்ணம் பூசுங்கள்.

வீடு உபயோக மின் சாதனங்களை பயன்படுத்தாத போது நிறுத்தி வையுங்கள்.

உங்களது குளிர் சாதனத்தின் வடிப்பான்களை மாதம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள். 

உங்களது வீட்டிலுள்ள குளிர்சாதன (AC) வெப்பநிலையை 24ºC (75ºF) to 25ºC (77ºF) அளவில் வைத்திருங்கள்.

பயன்பாட்டில் இல்லாத தொலைக்காட்சி மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்களை நிறுத்தி வையுங்கள்.

மின்விளக்குகள், மின்விசிறிகள், மற்றும் குளிர்சாதன இயந்திரங்களை வேண்டாதபோது நிறுத்தி விடுங்கள்.

உங்கள் உணவு சேமிக்கும் குளிர்சாதனப்பெட்டியை சூடு வெளியேற்றும் அடுப்பு முதலியவற்றில் இருந்து தள்ளி வைத்திடுங்கள்.

குளிர் சாதனப்பெட்டிக்கும் சுவற்றிற்கும் இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்சாதனப்பெட்டியின் கதவை மூடும்போது இறுக மூடுகின்றதா என்று பரிசோதியுங்கள்.

உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வெப்பநிலை 2ºC (35ºF) and 3ºC (38ºF) என்ற அளவில் வைத்திடுங்கள்.

இறுதி சமையல் முடிய சில நிமிடங்கள் இருக்கும் முன்பே அடுப்பை அணைத்து விடுங்கள். 

நீண்ட நேரம் சமைக்க வேண்டிய உணவுப் பொருட்களை ஒரு பிரஷர் குக்கரில் சமைக்கவும்.

துணிகளை உருண்டு விழச் செய்து உலர்த்தும் இயந்திரங்களைத் தவிர்த்து விடுங்கள். முடிந்த அளவு வெளியில் துணிகளை உணர்த்துங்கள். உலர்ந்த துணிகளை உடனே மடித்து வையுங்கள். அதன் மூலம் இஸ்திரி போட வேண்டியது குறையும்.

முடிந்த அளவில் சூரிய ஒளிச் சட்டங்களை (solar panel) பயன்படுத்துங்கள்.

சக்தியைச் செவ்வனே பயன்படுத்தும் வீட்டு மின் சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.

மறுபடி மின்னூட்டம் செய்யக்கூடிய பேட்டரிகளை வாங்கி உபயோகியுங்கள். 


🌹 5. அலுவலகத்திலும் பள்ளியிலும் செய்யக்கூடியவை:

மறுபயன்பாடுள்ள காகிதத் தாள்களைப் பயன்படுத்துங்கள்.

அறிவிப்புகளைத் தெரிவிக்க ஒரு அறிக்கைப்பலகையை நிறுவுங்கள்.

காகிதத்தில் அச்சிட்டு விநியோகிப்பதற்குப் பதிலாக மின்-அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் சொந்த உணவுக்கலன்கள்  மற்றும் பான  பாட்டில்களைக் கொண்டு செல்லுங்கள்.

அச்சுப்பொறியின் பொதியுரைகளை மறுபயன்பாட்டிற்கு அனுப்புங்கள்.

உற்பத்திப்பொருட்களைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் செய்யுங்கள்.

உங்களது பழைய நோட்டுப்புத்தகங்களைத் தூர எறியாதீர்கள்.

பள்ளி அல்லது அலுவலகத்தை விட்டுத் திரும்பும்போது மின் சாதனங்கள் யாவற்றையும் நிறுத்தி விடுங்கள்.


6. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு:


சைவ உணவு  அல்லது தாவர உணவு மட்டும் உண்ணுங்கள்.

உங்கள் வீட்டின் அறைகளை நல்ல மணமுள்ளதாக ஆக்க இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். 

வீட்டில் சுத்தம் செய்ய பேக்கிங் தூள் மற்றும் வினிகர் உபயோகியுங்கள்.

குளோரின் இல்லாத பொருட்களை வாங்கி சுத்தம் செய்யப்பயன்படுத்துங்கள்.

பாஸ்பேட் குறைவாக உள்ள துணி துவைக்கும் சலவைத்தூள் அல்லது சலவைத் திரவத்தைப் பயன்படுத்துங்கள்.

நச்சு/விஷப்பொருட்களைக் குப்பையில் வீசாதீர்கள்.

எவ்வளவு குறைவாக முடியுமோ அந்த அளவில் அச்சுப்படிவங்கள் எடுங்கள்.

உள்ளூரில் விளையும் காய்கறிகளையும் உணவுப்பொருட்களை வாங்கி உபயோகியுங்கள்.

உங்களால் முடிந்த அளவு செடிகளை வளருங்கள்.

உங்களுக்கு வேண்டிய காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்களை நீங்களே வளருங்கள்.

உங்கள் தோட்டம் சுற்றுப்புற சூழலுக்கு ஓர் நண்பனாகவே இருக்கட்டும்.

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத பரிசுப்பொருட்களை மட்டுமே வாங்குங்கள்.

பரிசுப்பொருட்களை துணியினால் சுற்றி ரிப்பன்களால் கட்டுங்கள். பிளாஸ்டிக் உறை, காகிதம் இவற்றைத் தவிர்த்திடுங்கள்.

மறுபடி பயன்படும் குழந்தை இடுப்புத்துணி மற்றும் துடைக்கும் துணிகளை உபயோகியுங்கள்.

புத்தகங்களை வாங்குவதற்குப் பதிலாக ஒரு நூலகத்தில் உறுப்பினர் ஆகுங்கள்.

வெளியில் நடந்து செல்லுங்கள் அல்லது ஒரு சைக்கிளை உபயோகியுங்கள்.

பிரயாணத்திற்கு பொதுவான பேருந்துகள் உபயோகியுங்கள் அல்லது குழுவினராக வாகனத்தில் செல்வதைப் பின்பற்றுங்கள்  

உங்களிடமுள்ள தனிநபர் வாகனங்களைக் குறைத்திடுங்கள்.

மின்னணு சாதனங்களை மறுபயன்பாட்டிற்கு அனுப்புங்கள்.

நீங்கள் பயன்படுத்தாமல் விட்ட துணிகள் மற்றும் காலணிகளை மற்றவர்களுக்கு கொடையாக அளித்திடுங்கள்.

நீங்கள் கடற்கரைக்குச் செல்லும்போது உங்களை சுற்றி உள்ள இடத்தை ஐந்து நிமிட செலவழித்து சுத்தம் செய்யுங்கள்.

தேவையான அளவு இடவசதி உள்ள வீட்டை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

மின்னணு சாதனங்களுடன் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்திடுங்கள்.

மௌனத்தைப் பயிற்சி செய்யுங்கள்!!!

உங்களது எண்ணம், சொல், செய்ய இவற்றில் ஒற்றுமையைப் பின்பற்றுங்கள்.

சுவாமி ஒவ்வொரு வீட்டிலும் வாழ்கிறார். தனது பக்தர்களின் இதயத்திலும் இல்லத்திலும் சுவாமியே குடியிருக்கிறார். நம் குடும்பத் தலைவரும் அவரே!! சுவாமி மேற்சொன்ன அத்தனை அத்தியாவசியமான செயல்முறையை நாம் மிக மிக லட்சியமாக கடைபிடித்தால் தான் தொடர்ந்து சுவாமி அருள்பாலிப்பார். மனிதனின் மாறுபட்ட தீய வழிமுறையே இயற்கையின் இத்தகைய கேடுகளுக்கு காரணம்... ஒவ்வொரு வினைக்கும் ஒவ்வொரு எதிர்வினை இருக்கிறது. ஆக சுவாமி அறிவுறுத்தும் கோட்பாடுகளை கடைபிடித்து தர்ம வழியில் நடந்து இயற்கையின் கோபத்தை தணிக்க வேண்டிய காலகட்டம் இது!! 


தொகுத்தளித்தவர்: Dr. Mohan Manikkam, PhD

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக