தலைப்பு

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

ஒரு அறுவை சிகிச்சையின் அடுத்த நொடியே நடமாடிய சுவாமியின் 'அப்பெண்டிசிடிஸ்' நாடகம்!

சுவாமி எவ்வாறு இந்தப் பூவுலக மனிதர்களை இயக்குகிறார் என்பதையும்.. குறிப்பாக தன் பக்தர்களுக்கு தான் இறைவன் என்பதை எவ்வாறு உணர வைக்கிறார் என்பதையும்... தன்னை ஒரு அறுவை சிகிச்சையில் உடன்படுத்தி தான் உபாதைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை எவ்வாறு உணர்த்தினார் என்பதையும் அட்சய பாத்திரம் அருளும் சுவாமி அனுபவத் தொகுப்பாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...


சுவாமியின் அவதாரத் திருநாளை ஒட்டி அவர் கழுத்தில் ரோஜாப்பூ மாலைகள் அரவணைத்த வண்ணம் இருக்க.. அதனை ஏற்றுக் கொள்கிறார். ரோஜா மாலைகள் சுவாமியை ஸ்பரிசிக்க தான் வைகுண்டத்திற்கே வந்திறங்கியதாய் புளகாங்கிதம் அடைய...பிறகு சுவாமி ஆண்டர்ஸன் அருகே நிற்கிறார். வெளிநாட்டு வாழ் சுவாமி பக்தர் அவர். அவரின் மனைவி எல்ஸாவுக்கு இடுப்பு எலும்பில் புற்று நோய்.. நடக்க இயலாது.. சுவாமியோ சிருஷ்டி விபூதி தந்து "உன் நோய் சரியாகிவிடும்.. தொடர்ந்து பஜனையில் கலந்து கொண்டிரு" என்கிறார். ஒரு வாரம் கடந்து போகிறது.. பஜனை நேரத்தில் கைத் தாளமிட்டு சுவாமி வர.. எல்ஸாவின் அருகில் வந்து "எழுந்திரு.. நட" என்கிறார்.. கையைப் பிடித்து தூக்கிவிடுகிறார்‌..‌சுவாமி நடக்க வைக்கிறார்.. அந்த எல்ஸாவை மட்டுமா?? பிரபஞ்சத்தையே நடக்க வைப்பவரால் மனிதர்களை நடக்க வைப்பதென்ன கடினமா! சுவாமி நன்நடத்தையையே பக்தரிடம் விரும்புகிறார்.. அந்த நடத்தையே சுவாமி அருள் நடமாட்டத்திற்கு அச்சாரம் இடுகிறது!


ஒருமுறை இந்திராதேவி அம்மையாரிடம் சுவாமி "உன் விபூதி பெட்டி எங்கே?" எனக் கேட்கிறார்... எப்போதுமே ஒரு வெள்ளிப் பெட்டிக்குள் விபூதி வைத்திருப்பார்.. அதை எடுத்து பவ்யமாய் சுவாமியிடம் தருகிறார். "உனக்கு என்ன வேண்டும்?" என சுவாமி கேட்கிறார். இந்திராதேவி எப்போதும் தனக்காக எதையுமே கேட்டதில்லை ... சுயத்தில் யோகமாய் தோயும் போது சுயநலம் தேய்ந்து போகிறது! சுவாமி என்னிடம்  கேட்பவர்க்கு எல்லாம் விபூதி தர வேண்டும் என கோரிக்கைவிடுக்கையில்.. சுவாமியோ மிகுந்த பரிவுடன் "உனக்கு நான் அட்சயப் பாத்திரமே தருகிறேன்" என சுவாமி சிருஷ்டி செய்து பித்தளை கமண்டலம் தருகிறார்.. அதில் விபூதி பொங்கி வழிந்த வண்ணம் இருக்கிறது.. ஆச்சர்யத்தில் அம்மையாரின் அகம் பூச்சொரிய.. சுவாமியின் கிருபையால் திணறிப் போகிறார்.. "சுவாமி இது என்ன!!!" என அவர் கேட்க... "இது தான் நான் உனக்கு கொடுக்க இருக்கும் அட்சய பாத்திரம்.. இனி இதில் உள்ள விபூதி காலியே ஆகாது" என்கிறார். இதில் உள்ள விபூதியை எவ்லோருக்கும் நான் வழங்கலாமா? என அவர் கேட்டதற்கு.. சுவாமியோ "இல்லை... எளியவர்களின் நோய்களை தீர்க்க மட்டும் இதை பிரசாதமாக பயன்படுத்து" என்கிறார் ..

அது தான் சுவாமி .. தீனர்களுக்காக எழுந்து வந்த தெய்வம் சுவாமி... நிர்கதியாக விடப்படுபவர்களை தன் நிபந்தனை அற்ற பேரன்பால் நிமிர வைத்து ஆன்மீக முன்னேற்றம் அளிப்பவர்.. மனிதரின் பார்வை ஆடம்பர வாழ்வையே கழுகாக வலம் வரத் துடிக்கிறது.. ஆனால் சுவாமியின் இதயமோ எளியவர்களுக்காகவே துடிக்கிறது!


 ஒருமுறை சுவாமி டில்லி கிராமங்களுக்கு சென்று ஆன்மீக உரையாற்றுகிறார். அப்போது கர்நாடக பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் அட்கேவுடன் இந்திராதேவி அம்மையார் சுவாமி தரிசனத்திற்கு செல்ல... சுவாமியோ "எங்கு வந்தாய்?" என கேட்க.. உங்கள் தரிசனத்திற்கு..

 "அப்படியானால் பக்தர்களுடன் நீயும் கிராமத்துக்கு வா" என்கிறார் 

 மறுநாள் ஐந்து கிராமங்களுக்கு விஜயம் செய்கிறார்கள்.. அங்கே சுவாமி அம்மையாரை பாடச் சொல்ல... "சுவாமி என்ன இது‌.. எனக்கு ஒன்றுமே தெரியாதே" என குழம்ப... "உன்னைப் பற்றி உனக்கே தெரியாது... நான் சொல்கிறேன் .. நீ பாடு" என்கிறார்.. அன்று பாட ஆரம்பித்தவர் தான்.. அந்த பஜன் பாடல் ஆராதனை அவரின் வாழ்நாள் இறுதி நொடி வரை வற்றாத அமுதம் போல் பொழிந்தது. சுவாமி ஒன்று சொல்கிறார் என்றால்.. அதை நாம் அப்படியே கடைபிடிக்கும் போது.. அதற்கான வலிமையையும் .. அனுகிரகத்தையும் சுவாமி தன் சொற்களிலேயே வழங்கிவிடுவதால் சுவாமி சேவையில் எந்தவித தடையும்.. தொய்வும் வருவதே இல்லை!

கோவாவிற்கு லெப்டினண்ட் கவர்னர் நகுல் சென்னின் அழைப்பின் பெயரில் சுவாமி கோவா விஜயம் புரிகிறார். ராணுவ மரியாதையோடு சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. போர்த்துகீசிய ஆட்சியில் இருந்ததால் கோவாவில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்களே... அங்கே ஸ்ரீ சத்ய சாயி பரமபிதாவை தரிசிக்க ஏராளமானோர் திரள்கின்றனர். மலர் மாலைகள் குவிந்த வண்ணம் இருந்தன... 


 மறுநாள் சுவாமிக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் பரிசோதித்து 'அப்பெண்டிசிடிஸ்" என்கிறார்கள். அறுவை சிகிச்சை நிகழ்த்தியே ஆக வேண்டும் என்கிறார்கள்.  அப்படி அறுவை சிகிச்சை நேர்ந்தால் இரண்டு வாரங்களாவது குணமாக தேவை என்கிறார்கள். தரிசனம் அரங்கேற வேண்டும்.. மக்கள் கூட்டம் காத்திருக்குமே.. பஜனை ஆராதனை நிகழ வேண்டுமே என ஏற்பாடு செய்ய வேண்டியவர்கள் யோசிக்கிறார்கள். அறுவை சிகிச்சை நிகழ்கிறது.. பஜனைக்காக அனைவரும் திரண்டிருந்தனர்.. காலை ஆறு‌... சுவாமி அறுவை சிகிச்சை முடித்து இந்நேரத்துக்கெல்லாம் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாரே... கூட்டத்தை எப்படி சமாளிப்பது என கையைப் பிசைகிறார்கள்... பஜனை தொடங்குகிறது... பக்தர்கள் இதயத்திற்கும் தரிசன ஏக்கமும்.. சுவாமியை தரிசிக்க முடியாதோ என பெருந்துக்கமும் தொண்டையை கவ்வி .. விம்மி விம்மி பாடலை இசைக்கிறார்கள்... அப்போது மண்டபத்தின் கதவு திறக்கிறது.. *சுவாமி ஆசி வழங்கிய படி நடந்து வருகிறார்.. சோக கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய் வழிந்தோடுகிறது.. தனக்கு ஏதுமே நிகழாதது போல் புன்னகை செய்து பக்தர்களின் பக்கத்தில் அமர்கிறார்...

   இது எப்படி சாத்தியம் என வியக்கிறார்கள்.. அபெண்டிசிடிஸ் ... அறுவை சிகிச்சை ... இவை எல்லாம் சுவாமிக்கு ஒரு விளையாட்டு நாடகமே!! எப்படி சுவாமி சமாதி ஆகிவிட்டார்.. இனி அவர் அவதரிக்கப் போவதில்லை என சிலபேரை நம்ப வைத்து நாடகம் ஆடுகிறாரோ அப்படி... நாடக லீலை துவாபர யுகத்திலிருந்தே சுவாமிக்கு கை வந்த கலை...

(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 166 / ஆசிரியர் : எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி லீலா நாடக சாயி. ஷேக்ஸ்பியர் பூமி ஒரு நாடக மேடை என ஆன்மீக மொழி தான் பேசினார்... இந்த நாடக பூமியில் சுவாமியை பக்தி செலுத்தியபடி அமைதியாக வாழ்வதே ஆன்மீகம் என்பது எல்லாம்... உணர்ச்சி வசப்படுதல்.. பற்று வைத்தல் என்பது மீண்டும் இந்த பூமிக்கு நம்மை அழைத்துவரும் சுரங்கப்பாதை...

சுமாரான திரைப்படத்தை யாராவது 100 முறை பார்ப்பார்களா? மனிதர்கள் சலிக்க சலிக்க பிறந்து கொண்டே சலித்த படி வாழ்கிறார்கள். இந்தத் தொடர் சங்கிலியை அறுப்பதற்கு பக்தி ஒன்றே பரசுராம கோடரி!


   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக