தலைப்பு

புதன், 29 செப்டம்பர், 2021

தீவிர சிகிச்சையில் இருந்த ஒபீலாவின் தலைமாட்டில் சுவாமி திருப்படத்திலிருந்து உதிர்ந்த ஔடத விபூதி!

வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை சுவாமி தன் வழி அதாவது நல்வழிப்படுத்தி இருக்கிறார்.. அவ்வாறு அவர் ஆற்றுப்படுத்திய இருவரின் அனுபவம் இதயத்திற்கு இதமாய் இதோ...


இதை பகிர்ந்தே ஆக வேண்டும்... சுவாமி எவ்வாறு நேர்காணலுக்கு நபர்களை அழைக்கிறார்...எந்த ரீதியில் ஒருசில பேரை மட்டும் அழைக்கிறார் என்ற கேள்வியை பக்தர் ஒருவர் கேட்கிறார்.. அதற்கு சுவாமியோ "என்னால் அவர்களுடைய இதயத்தைப் பார்க்க முடிகிறது... சிந்தனைகளை படிக்க முடிகிறது... யாருக்கு அவசரமான தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கான என் அழைப்பு முதலில் போய் சேருகிறது" என்கிறார்...இப்போது பிரசாந்தி நிலையத்தில் சுவாமியிடமான நேர்காணல் இல்லை.. ஆனால் சுவாமியின் அனுகிரகமானது, வழிகாட்டுதலானது ஒவ்வொருவர் இதயத்திலுமே இயங்கிக் கொண்டே இருக்கிறது... சிலபேருக்கான குணமளித்தலோ... சில செயல்கள் நடைபெறுதலோ அவர்களின் பார்வைக்கு வேண்டுமானால் அவை எல்லாமல் உடனே நிகழாமல் தாமதமாவது போல் தோன்றலாமே தவிர சுவாமி எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் முன்பே காலநேரம் வரையறுத்து அதை அதை இயக்குகிறார்... கர்மரீதியாகவும் துல்லியமானவை மனிதனுக்கான சுவாமியின் செயல்பாடுகள்.  இவ்வாறே சுவாமி ஒரு வெளி நாட்டு இளைஞரின் வாழ்வை மௌனப் புரட்சியாய் மாற்றி அமைக்கிறார் இப்படி...


அவன் பெயர் டேவிட் ஆன்டர்சன். நியூயார்க்கை சேர்ந்தவன். டேவிட் என்ற பெயருக்கு பதிலாக டெவில் என்று வைத்திருக்கலாம்... அத்தனை தீய பழக்கமும் உண்டு... பெண்களின் மானத்தை அபகரிப்பவனாகவும் இருந்தான்...


 L என்ற எழுத்துடைய Tshirt அணிந்திருப்பான்.. அது liberal லா Lust டா அவனுக்கே வெளிச்சம். தீமை சிந்தனையில் பொறியாக பற்ற ஆரம்பித்து வெறியாக அவனை ஆக்கிரமிக்கிறது... எப்போதும் கொலை செய்துவிட வேண்டும் என்பது போல ஒரு ஆக்ரோஷம்... வேகம்... அதனால் படிப்பு ஏறாமல் மூளையிலிருந்து கல்வியறிவு வழுக்கி விழுகிறது... இந்த கருப்பு நாட்களில் தான் சிறிய வெண்கீற்றாய் முன் விடியல் அவன் வீட்டு முன் வாசலை தட்டியது போல் சுவாமி பற்றி கேள்விப்பட்டு புட்டபர்த்திக்கு வருகிறான்..

 தினந்தோறும் பஜனையில் கலந்து கொள்கிறான்... சுவாமியின் ஞான உபதேசங்களை உள்வாங்குகிறான்... சுவாமி நடந்த பாதையில் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் அணிந்து கொள்கிறான்.. சுவாமியின் சர்வ சாஸ்வத பேரிருப்பின் பேரன்பு அதிர்வலைகள் அவனுக்கு சுவாமி மேல் பக்தியை ஏற்படுத்துகிறது... சுவாமி தன்னை நேர்காணலுக்கு அழைப்பார் என தவியோ தவி என தவித்துக் கொண்டிருக்கிறான்...

ஆனால் சுவாமி அவனை கண்டு கொள்ளவே இல்லை.. தனது திருக் கண்களால் பார்க்கக் கூட இல்லை... அவன் செய்த தீய கர்மங்கள் அப்படி... அது கரைய வேண்டும்... இந்த பக்தியும்... தனிமையும்.. உள்ளார்ந்த ஏக்கமும் அதை கரைக்கும்... சுவாமி ஒருவரை கண்டு கொண்டால் அது அவர் நன்மைக்கே... கண்டு கொள்ளவில்லை என்றாலும் அதுவும் அவர் நன்மைக்கே... கர்ம கரைப்புக்கே... வேண்டி ஒன்றை சுவாமியிடம் பெற்றால் அது நன்மையே... வேண்டியும் சுவாமி உடனே ஒன்றை தரவில்லை என்றால் அதுவும் நன்மையே... அப்படியே அக சுத்தி ஏற்படுகிறது.. அகந்தை மிகுந்த மனிதப் பிடிவாதம் இதனை உடனே ஏற்க மறுக்கிறது... "ஏற்றுக் கொள்ளுதலே" சரணாகதிக்கான முதல் படி...

       யாராருக்கு என்னென்ன வழி என சுவாமிக்கு எப்போதும் நன்கு தெரியும். பெற்ற தாய்க்கு கூட அது தெரியாது.. குழந்தைகளை செல்லம் கொடுத்து.. இறை பக்தி இல்லாத குழந்தைகளாய் வளர்த்து.. அகந்தை மிகுந்தவனாய் அவனை கெடுப்பதே பாதி தாய்மார்கள் தான்.. ஆனால் சுவாமி நம் ஞானத் தாய்... நமது நலன் ஒன்றே சுவாமியின் குறி!

      


இந்த புறக்கணிப்பை டேவிட் சிறுக சிறுக ஏற்றுக் கொள்கிறான்... உள்ளே கரைகிறது.. அவன் பழைய டேவிட் இல்லை... தனது மாயையை களைகிறான்... மூன்று மாதங்கள் இப்படியே ஒரு ரசவாத சிகிச்சைக்கு உள்ளாகிறான். கடைசி வரை சுவாமி திரும்பி கூட பார்க்கவில்லை...புது மனிதனாகி அமெரிக்காவுக்கே திரும்புகிறான்.. சுவாமி மேல் வருத்தமில்லை...சுவாமி தன்னை கண்டு கொள்ளவே இல்லை என்ற கோபம் இல்லை... காரணம் அவன் தன் அக மாற்றத்தை அணு அணுவாக அனுபவித்தவன்... அரைகுறை பக்தி தான் சுவாமி மேல் கோபப்படும்.. சரணாகத பக்திக்கு கோபமே வராது... நல்ல மாணவனாக... சுவாமி பக்தனாக தனது கல்லூரி வாழ்க்கையை தொடர்கிறான்...

      அவனே அந்த அனுபவத்தை... "சுவாமி எனக்கு வேதாந்த பாடமோ... மதச் சடங்குகளோ எதுவுமே கற்றுத் தரவில்லை‌...  எந்த கட்டளையும் இடவில்லை... நானாக அவரைப் பார்த்து... என்னுடைய வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டேன்...அன்பு/ பக்தி/ மரியாதை/ உண்மைக்கு மதிப்பு / நல்லொழுக்கம் எல்லாமே என் நெஞ்சில் பூத்து மணம் வீசின... இதை நான் உணர்ந்தேன்...  இறுதியாக அவருடைய அழைப்பு எனக்கு தேவைப்படவில்லை..

என்னுள் இருக்கும் சுவாமி என்னை புது மனிதனாக்கிவிட்டார்!" இவ்வாறு மெய் சிலிர்க்க பகிர்ந்து கொள்கிறான்!


மாரிஸ் மெண்டோசா எனும் இளைஞனும் டேவிட் போன்றவன். அமெரிக்க வாசி. ஆனால் அவனுக்கு நல்வழி காட்ட ரோஸா எனும் பெண்மணி தோழியாக வந்து சேர்கிறாள். அவள் சுவாமி பக்தையும் கூட... மாரிஸ் மனதில் காதல் அரும்பினாலும் அவளோ தூய நட்பை தொடர்கிறாள். ஒரு சுற்றுலா பயணத்திற்கு இருவரும் செல்கையில் இடியைச் சுமந்து வந்தது ஒரு அவசர தந்தி.. அதில் மாரிஸ் தாயான ஒபீலா மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கிறார்.. உடனே வரவும்! என அச்சிட்டிருந்தது. மாரிஸ் துடிதுடித்துப் போனான்.. அவன் செய்த பாவங்கள் எல்லாம் கண்முன் வந்து போயின.. ஆனால் ரோஸா கலங்கவே இல்லை.. 

புது வித நம்பிக்கையோடே அவனுக்கு ஆறுதல் சொல்லி.. சுவாமியின் மகிமை சொல்லி.. சுற்றுலாவை பாதியில் நிறுத்தி அவனை அழைத்துச் செல்கிறாள்... தனக்கோ/ பிறருக்கோ யாருக்கு என்ன நேர்ந்தாலும் பதறாமல் சுவாமி இருக்கிறார் என உறுதியான சலனமற்ற மனநிலையில் சுவாமி பக்தர்கள் இருப்பார்கள். அச்சு பிசிறாமல் அப்படியே இருந்தாள் ரோஸா. பிழைப்பது அரிது என டாக்டர் சொல்லிவிடுகிறார்.. மாரிஸ் துடிக்கிறான்.. ரோஸா அப்போதும் 

பதறவில்லை... அவளின் நம்பிக்கை ஜோதி அணையவில்லை.. அது சைதன்ய ஜோதி ஆயிற்றே! எப்படி அணையும்?


மருத்துவமனையில் தினமும் மாரிஸ் தாயார் ஒபீலாவின் தலைமாட்டில் சுவாமி திருப்படம் வைத்து பிரார்த்தனை செய்கிறாள் ரோஸா.. இவள் கண்கள் மூடி பிரார்த்தனை தொடர சுவாமி திருப்படத்திலிருந்து விபூதி உதிர்கிறது... அதை ஒபீலா நெற்றியிலும் வாயிலும் இட்டிவிடுகிறாள்.நாளுக்கு நாள் படிப்படியாக குணமடைகிறாள் ஒபீலா. தெம்புடன் எழுந்து உட்கார்ந்து ஒருநாள் சுவாமி திருப்படத்தை பார்த்து கை கூப்பி.. நான் இப்போதே சுவாமியை தரிசிக்க வேண்டும் என்கிறாள்...

     மூவரும் பெங்களூர் வொயிட் ஃபீல்ட் செல்கிறார்கள்...  சுவாமி புட்டபர்த்தியில் இருக்கிறார் என அறிந்து உடனே டாக்ஸி புக் செய்து கிளம்புகிறார்கள். சிகிச்சை பெற்ற ஒபீலா உடல் சோர்வடைகிறது.. மாரிஸ் கவலைப்படுகிறான்.. ஆனால் ஒபீலா இப்போது ஒப்பில்லா சுவாமி பக்தை.. அவள் தனது இதய உற்சாகத்தை விடவே இல்லை.. ரோஸாவே பார்த்து ஆச்சர்யப்படுகிறாள்.

சுவாமி தரிசனம் பர்த்தியில்... பஜனையின் போது சுவாமி கூட்டத்தில் ஒபீலாவை பார்க்கிறார். கண்களில் நீர் பெருகுகிறது அவளுக்கு... "நீ பயப்பட வேண்டியதில்லையே... ஆஸ்பத்ரியிலேயே  தினமும் என்னுடைய ஆசிகள் உனக்கு கிடைத்துக் கொண்டிருந்ததே!" என புன்னகை செய்கிறார். ஒபீலாவுக்கு மெய் சிலிர்க்கிறது. சுவாமி எங்கும் நிறைந்தவர் என்பதை உணர்ந்து கொள்கிறாள். பிறகு அமெரிக்காவில் தனது வேலையில் வழக்கம் போல சுறுசுறுப்பாகிறாள் ஒபீலா. ஆனால் சுவாமியிடம் தான் கொண்ட நன்றி கலந்த பக்தியை எதற்காகவும் அவள் கடைசி வரை விடவே இல்லை!

(பகவான் பாபா / பக்கம் : 194/ ஆசிரியர் : எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி எனும் பிரபஞ்ச ஓடக்காரர் மனித ஓடங்களை சம்சார கடலிலிருந்து அக் கரை சேர்க்க மிகுந்த அக்கறையோடு திருச்செயல் புரிகிறார்! சுவாமியின்றி அந்த ஓடங்கள் கடலில் மூழ்குமே அன்றி எந்த ஓடங்களும் தன்னையே கரைசேர்த்துக் கொண்டதாய் சரித்திரமில்லை.. அந்த ஓடங்களுக்கு உடனடித் தேவை துடுப்பு எனும் சுவாமி பக்தியே!

அந்தத் துடுப்பை வைத்தே அந்த பிரபஞ்ச ஓடக்காரர் ஓடங்களை அக்கரை சேர்த்தாக வேண்டும்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக