தலைப்பு

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கிண்டி ஷீரடி பாபா திருக்கோவிலின் வியத்தகு 9 சிறப்பு அம்சங்கள்!


தம் முந்திய அவதாரமாகிய ஷீர்டி பாபாவுக்கு , உலகிலேயே முதன் முதலாக சத்ய சாயி பாபா நிர்மாணித்த திருக்கோயில். சென்னை வாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக,1949 பிப்ரவரி 3 ந்தேதி பாபாவின் திருக்கரங்களால் திறந்துவைக்கப் பட்டு , உயிர்ப்பூட்டப்பட்டது... 


🌹சிறப்பு அம்சங்கள்:

1. லோக நாதராகிய சாயி, தானே வலியச் சென்று பிணி தீர்த்த பக்தர் ( லோகநாத முதலியார்) ஒருவரால் உருவாக்கப்பட்டது.


2. ஷீரடி பாபாவைப் பற்றி பெரிதும் தெரியாத அக்காலகட்டத்தில் அவரது மாதிரி திருவுருவச் சிலையை  சிருஷ்டித்து அளித்து, ஒரு முன்பின் தெரியாத சிற்பியை அனுப்பி சிலா வடிவத்தை உருவாக்கி பாபா அமைத்த ஆலயம்.


3. உலகின் முதல் கருங்கல் சிற்பமாக ஷீரடிபாபா விக்ரஹத்தை அமைத்தது. ஷீர்டியில் கூட 5 வருடங்கள் கழித்துதான் பாபா விக்ரஹம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.      


4. இங்குள்ள சர்வதர்ம ஸ்தூபியை பாபா  1973ல் அமைத்தார். இதன் பிறகுதான் புட்டபர்த்தியில் 1975 ல் , சர்வதர்ம ஸ்தூபி அமைக்கப்பட்டது.


5.  இக் கோயில் எனது ஆன்மீக மையம் என பாபா அறிவித்தார். அதன்படி இங்கு விநாயகர் சந்நிதி, நாகப் புற்று, நவக்கிரக சந்நிதிகளுடன் ஷீரடி பாபா குடிகொண்டு அருளுகிறார்.


6. இத் திருக் கோயிலின் ஆரம்பத் திருநாள் அன்று, பாபா ஒரு வெள்ளிப் பிள்ளையாரையும் , நவ ரத்தினக். கற்களையும் சிருஷ்டித்து, பாபா விக்ரஹ ஸ்தாபன குழியில் போட்டார். பிறகு ஸ்ரீசக்ரம் ஒன்றை சிருஷ்டித்து, பாபா விக்ரஹம் அமரும் குழியில் இட்டு,அதன் மேல் ஷீரடி பாபா விக்ரஹத்தை அஷ்ட பந்தன முறைப்படி பிரதிஷ்டை செய்தார். பிறகு அனைவரும் பார்க்கையில், "இப்போது ஷீரடி பாபா சிலைக்கு உயிர்சக்தி அளிக்கிறேன்" என்று கூறி தமது  உள்ளங்கையை மேற்புறமாக அசைத்து சைகை செய்ய, ஷீர்டிபாபா சிலை பீடத்திலிருந்து ஒருசில நொடிகள் மேல் எழும்பி, பிறகு பீடத்தில் அமர்ந்தது. இதன்பின் பொன்னாலான பூக்களைச் சிருஷ்டித்து, திரு. லோகநாத முதலியார் அவர்களிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வைத்தார்.


7. பிறகு பாபா ,தமது காலடி தடத்தை சந்தணக் குழம்பில் பதிக்க,அது பாபாவின் சிறிய காலடித் தடமாக பதியாமல், ஷீர்டி பாபாவின் நீண்ட காலடித் தடமாக பதிந்தது. அந்த அற்புத காலடிப் பதிவை இன்றும் கிண்டி கோயில் கருவறையில் காணலாம்.


8. இதன் பிறகு ஒரு மாத காலத்திற்கு பாபா, காலையிலும் மாலையிலும் கிண்டி கோயிலுக்கு வருகை தந்து தம் அருளை வாரி வழங்கினார்.


9. அதன் பிறகு ஒவ்வொரு 10 வருட இடைவெளியிலும் , பகவான்  பாபா இந்த திருக் கோயிலில் பிராணப் பிரதிஷ்டையை செய்தார். கடைசியாக 1984ம் ஆண்டு பிராணப் பிரதிஷ்டை வைபவத்தில் ஒரு சுதர்ஷண சக்கரம் சிருஷ்டித்து,அருள் பாலித்தார். அதையும் நாம்  கருவரையில் தரிசிக்கலாம்.


சாய்ராம்... கிண்டி ஷீரடி பாபா திருக் கோயில் , பாபாவின் இரு அவதார சக்திகளின் சங்கமம். பாபாவின் பரிபூரண சக்தியின் பரவு மையம். செல்வோம் அங்கு. தரிசிப்போம் மனம் உருகி. அருள் பெறுவோம் நிம்மதிக்கு.


ஆக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக