தலைப்பு

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஈழத்து போர் சூழலில் இருந்து சுவாமியால் காப்பாற்றப்பட்ட பக்தையின் திக் திக் நேரங்கள்!

எங்கும் குண்டு வெடிப்பு... இன பேதம் சார்ந்த கொக்கரிப்பு... அதிகார துஷ்ப்ரயோகம் என வஞ்சக சாட்டை சுழற்றப்பட்ட பரபரப்பு சூழலில் எவ்வாறு ஒரு சுவாமி பக்தை ஈழத்திலிருந்து பாதுகாப்பாய் கடல் கடந்தார் என்பதை அவரின் வாக்குமூலத்திலேயே உணரப் போகிறோம் இதோ...


"சுவாமியுடனான எனது அனுபவம்.                         இலங்கை வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராமம்   எமது இருப்பிடம். சாயி அவதாரம் பற்றி எதுவும் அறியப்பட்டிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் 1972ல் ஒரு அற்புதமான ஆனந்த சிரிப்புடன் கூடிய அழகிய வடிவில் படமாக வீட்டிற்கு வந்துவிட்டார் அவதார சுவாமி. படத்தை கொண்டு வந்தவர் மனித வடிவில் இறைவன் அவதரிப்பார் என்பதில் நம்பிக்கையில்லாத எனது  மூத்த சகோதரன். (அண்ணன்)கல்வி கற்ற இடங்களில் சாயி பற்றி அறிந்தோம். பூர்வ புண்ணியம் பக்தி வளர்ந்தது. எல்லா தெய்வங்களும் சாயி என்றாயிற்று. 

எத்தனையோ துன்பங்கள். 13 வயது தம்பி ஒருவரின் திடீர் விபத்தால் மரணம்.. அது நிலையாமை பற்றிய பக்குவம் தந்து மேலும்  இறை தேடலை ஊக்குவித்ததுடன் சாயி இலக்கியங்களை தேடித்தேடிப் படித்தேன். பல்கலைக்கழக படிப்பு முடிந்து அரச சேவையிலும் பணிசெய்ய தொடங்கிவிட்டேன்." 

என தான் எவ்வாறு சுவாமி பக்தை ஆனேன் என்பதை பரவசத்தோடு கூறுகிறார்.. வாழ்க்கை ஒரே போல் நகர்ந்து கொண்டிருந்தால் அது வாழ்க்கையாக ஆவதில்லை..வெறும் நத்தை நகர்வே.. வெய்யிலில் தான் நிழலின் அருமை புரிவது போல்.. நெருக்கடியில் தான் சுவாமியின் பேரிருப்பை உணர முடிகிறது.. அதை அவரே பரபரப்பாய் பகிர்ந்து கொள்கிறார் இதோ... 

 "இந்த நிலையில் 1990களில் நாட்டின் போர்ச்சூழலில் மிகவும் கடினமான இடம்பெயர்வு வாழ்க்கையாகிப்போனது. ஏற்கனவே 2 சகோதரர்கள் லண்டனில் இருந்தபடியால் நான் அங்கு சென்றுவிட வேண்டும் என தாயார் கட்டாயப்படுத்திய வகையில் நானும் இணங்க வேண்டிய தாயிற்று. எனக்கு உதவியாக  ஆசிரியையாக இருந்த தங்கையையும் என்னுடன் அனுப்பினார்கள்.  அதற்கு முன்பாக முதன்முதலாக எனது கனவில் சுவாமி  ஒரு ஒளிவெள்ளத்தினுள் வருவது போல் வருகிறார். என்னிடம் நேரே வருகிறார். நான் வீழ்ந்து வணங்குகிறேன். சுவாமி ஆசீர்வாதமளிக்கிறார். பக்கத்தில் நின்ற பெண்ணுக்கு அவ்வாறு செய்யவில்லை.  அதே இரவில் மீண்டும் கனவில் வருகிறார்.நெருங்கிய உறவினர் போல் சாதாரணமாக உரையாடுகிறார். சில நாட்களின் பின்னர் லண்டன் போவதற்கான ஆயத்த வேலைகளுக்காக கொழும்பு புறப்படுகிறோம். போக்குவரத்துகள் முடங்கிப்போன போர்ச்சூழல்.நகரத்தில் ஜன நடமாட்டம் குறைவு. பழக்கமான ஒருவருடன் போய் எனது மாவட்ட அலுவலகத்தில் காத்திருக்கிறோம். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நேர்கிறது.

 

செல்வி பஞ்ச ரத்னம் அவர்களின் வீட்டு பூஜையறை 

அலுவலக சிற்றூழியன் எங்களைப்பற்றி மிகவும் தவறான தகவலை போலீஸாருக்கு அறிவிக்கிறான். ரயில் பயணத்திற்கு சிறிது நேரம் இருந்த நிலையில் என்னைத்தேடி பெண் போலீஸாருடன் இராணுவத்தினர் வந்தார்கள். என்னிடம் பெயரைச் சொல்லி நீயா என்று கேட்கிறார்கள். 

பயங்கரமான கையறு நிலையறிந்து சாயிராம் சாயிராம் எனக் கத்துகிறேன். என்னைவிட்டு தள்ளியிருந்த தங்கையிடம் சென்று அவளைப் பெண் போலீஸார் பிடித்துக்கொள்கிறார்கள். நான் ஓடிச்சென்று நானும் வருகிறேன் என்று கூறியும்  என்னைத் தவிர்த்துவிட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவதாக கொண்டு சென்றுவிட்டார்கள். இரண்டாம் முறை என்னைத் தேடி வந்தார்கள்.   அற்புதமான முறையில் மீண்டும் என்னை சுவாமி காப்பாற்றினார். தங்கைக்கு ஏதும் ஆபத்து என்று அறிந்தால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்ற தீர்மானத்தில் சக ஊழியர் உதவியுடன் வழக்கறிஞர் மூலம் தகவலறிந்தபடி இருந்தபோது தாயாரும் தேடி வந்துவிட்டார். சுவாமி கனவில் இன்னுமொரு பெண்ணிற்கு ஆசீர்வாதமளிக்கவில்லை என்பது தங்கைக்கு இப்படியாக வேண்டும் என்ற கர்மக்கணக்கா?ஆனால் அந்தக் கர்மாவினூடு சிறையில் குற்றமெதுவும் செய்யாத தங்கையை காப்பாற்றவும் செய்தார்.வெளியில் என்னையும் தற்கொலையளவிற்கு செல்லாமல் தங்கையைப் பற்றிய தகவல்களை அறியத் தந்து ஆறுதல்படுத்தினார்.

2000ஆம் ஆண்டு தனது தங்கையோடு கிண்டி ஷிர்டி சுவாமி திருக்கோவில் முகப்பில் செல்வி பஞ்சரத்னம்

 உணவுமில்லை உறக்கமில்லை. கொடிய மனவேதனையை அனுபவித்த போது சில வினாடிகள்தான் சுவாமியைக் கோபித்தேன். அடுத்தநொடி "சாயி நீங்கள் தான் எனது ஆத்மாவாக இருக்கிறீர்கள் உங்களை விட்டு எங்கு செல்வேன்?" என அழுது தவித்து சாயிராம் சாயிராம் என்ற நாம உச்சரிப்பே கதியாகக் கிடந்தேன்.சிறை சென்று பார்க்க முடியாத போக்குவரத்து முடக்கம். அப்படியும் எனது தெரிந்த நபர்களுடன் கொழும்பு வரை கண்ணீருடன் அலைந்தேன். கண்ணீரில் எங்களது கர்மாவைக் கரைத்தார் சாயி.கைவிடவில்லை எங்கள் கருணாமூர்த்தி. சுவாமிக்கு கடிதமெழுதினேன். கிடைத்ததோ இல்லையோ. கனவில் சாயிபக்தர்கள் டெலிபோனில் கதைப்பதாகக் காண்பேன். படாதபாடு பட்டோம். பணத்தையும் செலவழித்தோம். பல தடங்கல்கள் தாமதங்கள் துன்பங்கள் 10மாதங்கள் கடந்தது. 11ம் மாதம் சுவாமி அருளால் வேறு எந்த வித பாதிப்புமில்லாமல் கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. தாயாரும் உடன் நின்று தங்கையை லண்டன் அனுப்பி வைத்த பின்பே இடம் பெயர்ந்த தற்காலிக இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். தங்கை சிறையிலிருந்தபோது முதன்முதலாக கிடைத்த சுவாமி படத்தையே என்னுடன் வைத்து பிரார்த்தித்தபடியிருந்தேன். அப்போது ஒரு விடியற்காலையில் சுவாமி படத்தில் வலது தோள்பக்கம் வட்டமாக கறையான் அரித்தது போல் வந்துவிட்டது. தங்கை விடுதலையான பின்னர் கூறியதிலிருந்து பெரியதொரு துன்பத்தை சுவாமியே தாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிந்தது. நான் பிடிபட்டிருந்தால் பயங்கர முடிவாகத் தானிருந்திருக்கும். சுவாமி இருவரையும் இருவேறுவிதத்தில் காப்பாற்றிவிட்டார் என்று கூறுகின்றாள் சிறை வாசம் அனுபவித்த தங்கை. வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்ல வல்ல ... கொல்ல வல்ல பொல்லாப் பிணியறுக்க....."



 என தன் மனத்தேரை பின்னோக்கி செலுத்தி.. அதில் தான் அடைந்த சொல்லொண்ணா துயரத்தை சொற்களில் பாதி இதயத்தில் மீதி என பகிர்ந்திருக்கிறார் இந்த பக்தை. அந்தக் காலக்கட்டத்து போர்ச்சூழலில் சிறைச்சாலையில் இருந்து ஒருவர் சேதாரமின்றி வெளியே வரவே இயலாது. போர்ச்சூழல் மிகுந்த அந்தக் காலத்து இலங்கை ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றே யாராலும் கணிக்கக் கூட முடியாது.. அதிலும் ஒரு பெண் பாதுகாப்பாய் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் எனில் அது சுவாமியின் பரிபூரண கருணை எனப் புரிகிறது.. சந்தேகக் கழுகுகளிடம் இருந்து இரண்டு சிட்டுக் குருவிகள் மீண்டது சாதாரண செயலல்ல... சுவாமி அருளிய உயிர் யாசகம். பக்திக்கு பரமன் சாயி காட்டிய பெருங்கருணை... மேலும் சுவாமி கனவில் அழைத்து பெங்களூரில் சுவாமியை இவர் தரிசனம் செய்தது.. 2007 ல் சுவாமியின் காப்பாற்றுதல்... தம்பிக்காக சுவாமியிடம் வேண்ட அவர் வீட்டில் விபூதி குங்குமப் பொழிவு...

2017ல் இந்த பக்தையின் சகோதரியை சுவாமி மூளையில் ஏற்பட்ட கட்டியிலிருந்து காப்பாற்றியது...என இவர் வாழ்வின் வழித்தடங்களில் எல்லாம் சுவாமியின் பாதச் சுவடுகளே நிறைந்திருக்கின்றன...


அனுபவ எழுத்தாக்கம் : செல்வி. வி.பஞ்சரத்னம், இராஜேந்திர குளம் , வவுனியா, இலங்கை.

தொகுப்புரை : கவிஞர் வைரபாரதி


போர்க்கள பூமியை பூந்தோட்டமாக்கவே அதி பிரேமையாய் சுவாமி தன் அவதாரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார்! அகிம்சையையும் அன்பையும் வாழ்வாக்கவே சுவாமி அனைவர் அகத்திலும் தன் பேரன்பை அருளிய வண்ணம் இருக்கிறார். சுவாமியை திடமாக நம்பி அவர் பாதத்தில் தஞ்சம் அடைந்தால் ஆபத்து எவ்விதமாயினும் அரை நொடி கூட தாமதிக்காமல் நம்மை காப்பாற்றுகிறார். இந்தப் பக்தை விவரித்தது சிங்க குகை கூட இல்லை.. சிங்க(ள)த்தில் தலையை விட்டே எவ்வாறு அதிலிருந்து உயிர் பிழைத்து சுவாமியால் காப்பாற்றப்பட்டார் என்பதே! இவர் மட்டுமல்ல சுவாமியால் மட்டுமே இன்றைய கொடூர காலக்கட்டத்திலும் ஆரோக்கியமாய் நாம் அனைவரும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக