தலைப்பு

திங்கள், 20 செப்டம்பர், 2021

சாதாரண கிரகத்தில் உதாரண வாழ்க்கை அருள அசாதாரணமாய் வந்த இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் சுவாமியை குறித்து பலரோடும் பேசி அவர்களின் அனுபவங்களை பெற்று சிலிர்த்திருக்கிறார்.. அவர்களின் கலந்துரையாடல் அனுபவமும்.. சுவாமி நமக்கு வழங்கிடும் அத்வைத ஞானமும்.. சுவாமியின் எங்கும் நிறைந்த தன்மையும் சுவாரஸ்ய சிறு தொகுப்பாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...!


பெங்களூரில் இந்திராதேவி அம்மையார் பிரபல பிரிட்டீஷ் நூலாசிரியரான ஆர்தர் ஆஸ்போர்னை சந்திக்கிறார். அவரோடு அவரின் போலான்ட் நாட்டு மனைவி வாண்டா அவர்களும் உடனிருக்கிறார். அந்த எழுத்தாளர் ஷிர்டி சுவாமியை பற்றியும்... ரமண பகவானை பற்றியும் புத்தகம் எழுதியவர். ஷிர்டி சுவாமி பக்தராகவே முதலில் இருந்தவர் எவ்வாறு சுவாமி பக்தராக மாறினார் என்பதை ஆவல் மிக விசாரிக்கிறார். 

 சுவாமியிடம் எப்படி உங்களுக்கு ஈடுபாடு வந்ததென கேட்டதற்கு "எனக்கு ஷிர்டி சாயிபாபாவிடம் ஈடுபாடு இருந்ததால்... ஸ்ரீ சத்ய சாயியிடம் மறுப்பு இருந்தது... ஆனால் அவரின் அன்பு என்னை காந்தம் போல் ஈர்த்தது... மெல்ல மெல்ல அது என்னை பக்தி வசப்படுத்தி விட்டது. அவரின் ஞானம் என்னுடைய இதயத்தில் புதிய ஒளியை பரப்பியது. ஷிர்டி சாயியே ஸ்ரீ சத்யசாயி என்பதை அணு அணுவாய் உணர்ந்தேன்! " என்கிறார் அந்த பிரிட்டிஷ் நூலாசிரியர். ஸ்ரீ ராமரே ஸ்ரீ கிருஷ்ணர் .. அதே போல் அந்த ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ ஷிர்டி சாயி .. அந்த ஷிர்டி சாயியே ஸ்ரீ சத்ய சாயி! இது இதயத்தினால் உணர்கின்ற நிதர்சன அனுபவம் என்பதை அவரும் உணர்ந்து கொள்கிறார்! 

ஆக சுவாமி தன் பேரன்பால் ஒவ்வொருவரையும் ஈர்த்து தனது பக்தராக்குகிறார்... அப்பால் இருக்கிற உயிர்களை இப்பால் தன் பேரன்பால் அழைத்து பக்தி அமுதூட்டி பிறவா பெருவாழ்வருள்கிறார் சுவாமி!


"இறைவனின் பெயரை சதா உச்சரித்துக் கொண்டே இருப்பது ஒன்றே உங்கள் கஷ்டங்களுக்கான விமோச்சனம். நீங்கள் ராமா.. கிருஷ்ணா.. அல்லா என எந்தப் பெயராலும் இறைவனை அழைக்கலாம்.. அப்படி அழைக்கும் நேரம் உங்களுடன் இறைவன் இருப்பான். என்னிடம் பக்தி கொள்ள நீங்கள் அனைவரிடமும் அன்பு காட்டினால் போதும்!! அதுவே நீங்கள் எனக்கு செய்யும் பூஜை. என்னை புரிந்து கொள்ள முயலாதீர்கள். இறைவன் மானிட வடிவத்தில் ஸ்ரீராமனாக ஸ்ரீ கிருஷ்ணனாக வந்தபோது மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. நான் உங்களுடன் பேசுகிறேன்... உங்களோடு சேர்ந்து பாடுகிறேன்... உங்களுக்கு வழிகாட்டுகிறேன்... அப்படி மனித வடிவத்தில் இறையருள் கிடைப்பதற்கு நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்"

என பம்பாய் உலக மாநாட்டில்.. தர்ம ஷேத்ரா எனும் புனித தளத்தில் மே மாதம் 12 ஆம் தேதி சுவாமி மேற்சொன்ன சத்தியத்தை பகிர்ந்து கொள்கிறார்...

அந்த சமயத்தில் திடீரென மின்விளக்குகள் அணைந்து போகின்றன... அப்போதும் ஒரே நிசப்தம் .. எந்த சலசலப்பும் இல்லை... சுவாமியின் தெய்வீக குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி எல்லாம் எந்த தேசத்திலும் பார்த்ததில்லையே என இந்திராதேவி அம்மையார் ஆச்சர்யப்படுகிறார். சுவாமியின் சத்தியத்தை இதயத்தில் இறுத்தி மெய் சிலிர்க்கிறார். 



சுவாமி உலக மாநாடு முடிந்து பம்பாயிலிருந்து கிளம்புகிற போது அவரை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் நெடுஞ்சாண்கிடையாய் சுவாமியின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர். இதைப் போன்ற ஒரு அபூர்வ காட்சியை அமெரிக்காவில் தான் எங்கேயும் கண்டதில்லை என பேராச்சர்யப்படுகிறார் அம்மையார்.இந்த காட்சியை பதிவு செய்ய தன்னிடம் கேமரா இல்லையே என சிந்திக்கிறார். இப்படி எத்தனை சுவாமி அபூர்வங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்குமோ!! 

 இந்திராதேவி அம்மையாரை தேடி பலரும் யோகக்கலை கற்க வருவர். மந்திர தீட்சை பெறவும் அவர்களில் சிலர் வருவதுண்டு. அவரவர்களுக்கு தகுந்தாற் போல் மந்திரம் தருவார் இந்திராதேவி அம்மையார். 


நாத்திகராக இருந்த டாக்டர் ஸாம் ஸாண்ட் சுவாமியிடம் பக்தி ஏற்பட்டு ஆத்திகராக மாறிவிடுகிறார். அவர் சுவாமியிடம் "எனக்கென தனியாக ஒரு மந்திரத்தை இந்திராதேவி சொல்லிக் கொடுத்திருக்கிறார்" என தெரிவிக்க... 

"நான் தான் அவர் மூலமாக அந்த மந்திரத்தை உங்களுக்கு உபதேசித்தேன்... " என்று கூறி மெதுவாக அதே மந்திரத்தை மீண்டும் அவரின் காதுகளில் அமுதம் பாய்ச்சுவதாய் பாய்ச்சுகிறார் பேரருள் பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயி இறைவன். 

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 156/ ஆசிரியர் : எஸ்‌. லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி எங்கும் இருக்கிறார் என்பது மட்டுமல்ல.. எல்லாவற்றையும் சுவாமியே இயக்குகிறார் என்பதையும் உணர முடிகிறது. மனிதர் நாம் எதையும் சுயமாய் செய்வதில்லை எனப் புரிகிறது! வெறும் கருவியாகவே வாழ்கிறோம்.. இந்தப் பேருண்மையை உணர உணர துக்கம் சந்தோஷம் எல்லாம் வெறும் மன பிரமையே என தெள்ளத்தெளிவாகி பக்தி பரிசுத்தமாகி சரணாகதி சாத்தியப்படுகிறது!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக