தலைப்பு

வியாழன், 9 செப்டம்பர், 2021

அட்சயப் பாத்திரமாய் நடமாடிக் கொண்டிருக்கும் அகில உலக ஆதவன் ஸ்ரீ சத்ய சாயி!

ஒவ்வொரு பக்தரின் வாழ்விலும்.. அவரவர் வாழ்வின் நிகழ்விலும் சுவாமி எவ்வாறு மகிமைகள் புரிகிறார் என்பதை கண்ணால் கண்ட பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியின் உன்னத பகிர்வு சுவாரஸ்ய பதிவாய் இதோ...


சுவாமி மும்பை வருகிறபோதெல்லாம் அந்த ஒரு வாரமும் ஒரே திருவிழா தான்.. அரபிக்கடல் அலையாய் பக்தர்கள் சூழ்வர்... சுவாமி வருகிற அனைவருக்கும் திருப்தியையும் பரமானந்தத்தையும் வழங்குவார்! அப்படி ஒரு சமயம் மும்பை விஜயத்தில் பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியும் கலந்து கொள்கிறார்... பம்பாய் சமிதியின் (அப்போது மும்பை எனப் பெயர் மாற்றப்படவில்லை) உறுப்பினர் ஜாவா அவர்களுக்கு லேமினேட் பதித்த ஒரு சிருஷ்டி மோதிரத்தை தருகிறார்... அது ஜாவா கைவிரலில் சரியாக இல்லை.. அதை அணிய சிரமப்படுவதை பார்த்து .. அருகில் உள்ள சேவாதள தொண்டரிடம் துடைக்க கொடுக்கிறார்... அவர் அதை இந்திரா தேவி அம்மையாருக்கு தருகிறார்.. ஆச்சர்யமாக பார்க்கிறார்... அதி அற்புதமான சிருஷ்டி மோதிரம் அது... நவரத்தினங்கள் பதிந்தவை... வியந்து பார்த்துவிட்டு சுவாமியிடமே மீண்டும் தருகிறார்.. சுவாமி அதை ஊதுகிறார்.. சுவாமியின் தெய்வீக சுவாசம் பட்டு புல்லரிக்கின்ற மோதிரம் ஜாவா வின் கைவிரலுக்கு பொருந்திவிடுகிறது!


சுவாமியின் பஜனையில் கலந்து கொள்ள நாற்பது குழந்தைகள் வந்திருந்தனர்.. அவர்களோடு சமமாய் அமர்ந்து குழந்தைகளோடு குழந்தையாக சுவாமி பஜனையில் கலந்து கொள்கிறார்... சுவாமி சத்யாவாய் இருந்த போதே பண்டரி பஜன் நடத்தி குழந்தைகளை ஊக்குவித்தவர் அல்லவா!! பாண்டுரங்கனே பர்த்தி ரங்கனாய் அவதரித்து பண்டரி பஜனை நடத்தியது கலியுகத்தில் முதல் தடவை அது!! பஜனையின் முடிவில் அந்த 40 குழந்தைகளுக்கும் வழங்க வேண்டி கேக் வரவழைக்கப்பட்டது.. அது 40 குழந்தைகளுக்கும் போதாதே என அருகே கவனித்துக் கொண்டிருந்த இந்திராதேவியார் மனதிற்குள் வருந்துகிறார்.. சுவாமி அந்த கேக்கின் ஒரு புள்ளலை எடுத்து அம்மையாருக்கு தருகிறார்... குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..பற்றாகுறை வரும்.. வரும் போது இதனையும் கொடுத்துவிடலாம் என சாப்பிடாமலேயே கைகளில் வைத்திருக்கிறார்..தட்டில் பரிமாறுகின்ற ஜாவாவோ "நீங்கள் சாப்பிடுங்கள்..அனைவருக்கும் சரியாக இருக்கும்" என சுவாமி மேலுள்ள நம்பிக்கையில் பக்திப் பூர்வமாய் பேசுகிறார்.. இருப்பினும் அம்மையாருக்கு சிறு சந்தேகம்.. அவர் சாப்பிடவே இல்லை... ஆனால் அது அனைவருக்கும் கொடுக்கப்பட்டு.. மீதமும் இருந்தது.. கேக் இப்படி வளர்கிறதே என மிகுந்த ஆச்சர்யம்! காலத்தையே வளர்க்கும் சுவாமிக்கு கேக் வளர்ப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை!!


மறுநாள் காலை சுவாமி இந்திராதேவி அம்மையாரின் அறைக்கு வந்து.. "உங்களுக்கு நான் கொடுப்பதாக இருந்த நேர்காணலை தரமுடியவில்லை.. நேரமில்லை.. விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்" என சுவாமி அபய ஹஸ்தம் காட்டுகிறது.. அம்மையாரின் கைகளில் சிறு வெள்ளிப் பெட்டி ஒன்று விழுகிறது.. பரவசப்படுகிறார்...அருகே இருந்த ஜாவா " இது சாதாரண பெட்டி அல்ல.. அட்சயப் பாத்திரம்.. ஒருமுறை இங்கிலாந்து பக்தருக்கு சுவாமி வழங்கும் போது.. இவ்வளவு சிறியதாக இருக்கிறதே.. அனைவருக்கும் போதாதே என அவர் யோசிக்கும் போதே சுவாமி அவரிடம் "பயப்படாதே!! நீ இங்கு மீண்டும் வரும் வரை விபூதி குறையவே குறையாது" என்றிருக்கிறார்" என சொல்கிறார்.. ஆக சுவாமி ஒன்றல்ல இரண்டல்ல துவாபர யுகம் தொடங்கி பலருக்கு அட்சய பாத்திரங்கள் வழங்கி இருப்பது புரிகிறது! எவர் எவருக்கு எவ்வகையில் எது எது தேவையோ அதை மிகச் சரியான நேரத்தில் வழங்குவது தான் சுவாமியின் இறைமை தனித்துவம்... 

          அந்த மண்டபத்தில் அருகிருந்த அனைவருமே அம்மையாரிடம் விபூதி வாங்குகிறார்கள்...வாங்க வாங்க அது வளர்ந்து கொண்டே இருக்கிறது! "அட்சய அபூர்வம் ஆனந்த பிரபாவம்.. தீட்சாத் நேத்ர அதிசய சுபாவம்... சாட்சாத்கார ஸ்ரீ ஸ்படிக மணி ரூபம்.. ஸ்ரீ சத்ய சாயி விபூதிம்" எனும் சுவாமிக்கான பழமை வாய்ந்த விபூதி மந்திரம் நினைவுக்கு வருகின்றது!!


பள்ளி குழந்தைகளுக்கு தொண்டு செய்வதற்காக வகுத்த ஒரு திட்டத்தை சுவாமியிடம் பகிர்ந்து கொள்கிறார் இந்திராதேவி அம்மையார்.. அத்திட்டத்தை ஆசீர்வதிக்கும் விதமாக "அபய ஹஸ்தம் காட்டுகிறார் சுவாமி.. அம்மையாரின் கைகளில் சுவாமி உருவம் பொதித்த பதக்கம் விழுகிறது.. தான் நகைகள் அணிவதில்லை என்பதனை தெரிவிக்க.. சுவாமியோ கைப்பையில் வைத்துக் கொள்!! உன் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் என்கிறார்! சுவாமியின் உருவத்தை நாம் மோதிரமாகவோ.. டாலராகவோ... பாக்கெட் சைஸ் ஃபோட்டோவாகவோ... ஸ்டிக்கராகவோ நாம் வைத்துக் கொண்டிருந்தால்.. சுவாமி உடனேயே பயணிக்கிறோம் என்று பொருள்! அபயமும்... அனுகிரகமும் நம் கூடவே வருகிறது என்பதை உணர வேண்டும்!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 142 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமணியம்)


சுவாமி சதா இயங்கிக் கொண்டே இருக்கும் ஈடில்லா இறைவன்!! சுவாமியின் அனுகிரகம் இருப்பது என்பது நம்மிடம் அட்சயப் பாத்திரம் இருப்பது என்பதை உணர வேண்டும்! *சுவாமியின் சொல்படி வாழ்ந்தால் மட்டுமே சுவாமி அனுகிரகம் பொழியும்!* ஜன்னலை அடைத்து விட்டு சூரிய ஒளி இல்லையே என வருத்தப்படுவது போல் சுவாமி சொல்படி நடக்காமல் சுவாமி அனுகிரகம் இல்லையே என வருத்தப்படுவது!! *நவவித கோட்பாடுகளோடு கூடிய சுவாமி வழியே நம்மை சரணாதிக்கு அழைத்துப் போகிற கட்டணமில்லா விரைவு விமானம்!!*


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக