தலைப்பு

வியாழன், 30 செப்டம்பர், 2021

சுவாமி சாட்சாத் ஸ்ரீ கல்கி அவதாரமே என மனப்பூர்வமாய் உணர்ந்த அமெரிக்க யோகினி ஹில்டா!

அமெரிக்க ஆன்மீக ஆசிரியர் ஹில்டா சார்ல்டன் ஆன்மீக தேடலில் இந்தியாவின் எல்லை வரை சென்று ஒவ்வொரு மகான்களையும் தரிசித்து தனது ஆன்மீகத்தை மெருகேற்றியவர்.. ஒரு நர்த்தகியாக 1947ல் பாரதம் சுற்றி கிழக்கிந்திய தியானத்தை கற்றவர்... அவ்வாறு இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை தரிசனம் செய்கையில் அடைந்த அனுபவம் அலாதியானது... சுவாமி யார் ? என்பதற்கான பரம ரகசியமும் ஹில்டா அனுபவத்தில் வெட்ட வெளிச்சமாய் வெளிப்படுகிறது இதோ...

 

இந்தியாவில் 18 ஆண்டுகாலம் வசித்த அமெரிக்க யோகினி ஹில்டா சார்ல்டன் பல பாரத யோகிகளையும் சந்தியாசிகளையும் தரிசித்து வேதாந்த நுட்பங்களை கற்க முனைகிறார். இறுதியாக சுவாமியிடம் வருகிறார். அது அவர் வாழ்வையே புரட்டிப் போடுகிறது. சுவாமியின் ஆசிகளை பெற்று அமெரிக்கா சென்று ஆன்மீக ஆசிரமம் துவங்கி பல ஆயிரம் அமெரிக்க இளைஞர்களை ஆன்மீகத்தில் வழி காட்டுகிறார். எல்லா மதங்களின் சாராம்சத்தையும் அவர்களுக்கு போதிக்கிறார். சுவாமி ஒளி காட்டியதால் ஹில்டா அவர்களுக்கு வழி காட்டுகிறார். அதுபோல் ஹில்டா சீடர்கள் வருடாவருடம் சுவாமியை தரிசிக்க வருகிறார்கள். 

ஒரு முறை யோகினி ஹில்டா பிரௌன் புட்டபர்த்தியில் தங்கி இருந்த போது ஓர் அதிசயம் நிகழ்கிறது... வழக்கம் போல் பிரசாந்தி மந்திரத்தில் பஜனை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. சற்று தள்ளி அமர்ந்து கொண்டு ஹில்டா சுவாமியையே தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்... புன்னகை புரிந்தபடி தனது திவ்ய சிரசை பஜனையின் தாளத்திற்கு ஏற்றவாறு சுவாமி அசைத்துக் கொண்டிருக்க... சுவாமியின் சிரசுக்கு  மேலே ஓர் அழிகிய ஒளிவட்டம் புறப்படுகிறது...அந்த ஒளிக்கு நடுவே வெண்ணிற குதிரை ஒன்று தெரிகிறது...அந்த குதிரை மீது சர்வ லட்சணம் பொருந்தியுள்ள ஒரு புருஷன் ஏறிச் செல்லும் காட்சியும் புலப்படுகிறது.. மெய் மறக்கிறார் ஹில்டா... பூரித்துப் போகிறார்...அற்புதமான காட்சியாக இருந்தாலும் அதன் முழு அர்த்தம் தெரியாமல் இருந்த ஹில்டாவிற்கு பிறகு அதன் சாராம்சம் முழுதாய் புரிகிறது...

கலி முற்றும் போது நியாய தர்மம் தவறிப் போகிறது... ஒழுக்க சீலங்கள் குறைந்துவிடுகிறது... பொய் சொல்வது பெருமையாகிவிடுகிறது...  மதுவகைகள்,போதைப் பொருட்கள் தாராளமாய் புழங்குகிறது... கடவுள் நம்பிக்கை குறைகிறது... ஜாதிச் சண்டைகள்/ வேலையில்லா திண்டாட்டங்கள் / ஆண் -- பெண் ஒழுக்க குறைவுகள்... லஞ்சம் / ஊழல் பெருகுதல் என அனைத்து அதர்மங்களும் நிகழ்கின்றன... இது கலி முற்றிய காலம் என்பதை மேற்சொன்ன அவலட்சணக்களை வாசிக்கும் போதே நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இவை மகாபாரதத்திலும்... விஷ்ணு புராணத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.. சம்பவாமி யுகே யுகே எனும் சுவாமியின் கூற்று சத்திய கூற்று... எதற்காக சுவாமி துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தாரோ அதற்காகவே கலியுகத்தில் சுவாமி தனது கல்கி அவதாரத்தை மூன்று ரூபங்களாக தன்னையே பிரித்து அவதரித்திருக்கிறார். ஒவ்வொரு யுகமும் ஒவ்வொரு சுபாவம் மிகுந்தவை... அப்படி கலியின் கோர தாண்டவத்திற்கு ஒரு முறை அவதரித்தால் போதாது என மூன்று முறை அவதரித்திருக்கிறார். கலி முழுக்க முழுக்க மாயை நிறைந்த யுகம்... தனது பக்தர்களை காப்பாற்றவும்.. மாயையை அழிக்கவுமே சுவாமி மூன்று முறை அவதரிப்பதற்கு காரணம்.. முதல் மாயை பக்தர்களின் மனதிலிருக்கும் மாயை .. இரண்டாவது பூமியின் வெளியே உலவும் மாயை.. இரண்டையும் அழித்தாக வேண்டிய பெரும்பணி சுவாமிக்கு இருக்கிறது...

              சின்ன சிராய்ப்புக்கு மருத்துவர் தேவையில்லை... எலும்பு முறிவு என்றால் ஒரு மருத்துவர் தேவை... உடம்பில் ஒவ்வொரு பாகமும் சேதாரம் என்றால் ஆதாரமாக அந்தந்த மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள் ஐ.சி.யூவில்.

இது கலியின் கடைசி காலம். தர்மம் குத்துயிரும் கொலை உயிருமாய் ஐ.சியூவில்... இதை உயிர்ப்பிக்க இறைவன் ஒருமுறை அவதரித்தால் போதாது...

  எண்ணத்தில் புகுந்து  உள் மாயையும்...உள் மாயையால் ஏற்பட்ட வெளி அதர்மங்களையும்... அதனால் முதுகு வலி கண்ட  பூமி பாரத்தையும் நீக்கியாக வேண்டும் ... ஆகவே சுவாமி ஸ்ரீ ஷிர்டி சாயி, ஸ்ரீ சத்ய சாயி , ஸ்ரீ பிரேம சாயியாக  மூன்று முறை பூமிக்கு விஜயம் செய்ய வேண்டி இருக்கிறது... இதில் நல்லன தங்குகிறது.. தீயன நீங்குகிறது...

கல்கி அவதாரத்தில் வெள்ளைக் குதிரை மேல் ஏறி ஸ்ரீ கிருஷ்ண சுவாமி வருவார் என்பதற்கான அடையாளக் குறியீடையே ஹில்டா காண்கிறார்.. அந்த சத்தியம் உணரவே சுவாமி கல்கி அவதாரம் என்பதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்கிறார். 


கல்கி அவதாரத்தில் சுவாமி கையில் வாள் வைத்திருப்பதாக உலகப்புகழ் ரவிவர்மாவும் வரைந்திருக்கிறார்... அந்த கை வாள் என்பது அழிப்பதற்கான குறியீடே!! எப்படிப்பட்ட அழிவு என்பதனை நாம் நிதர்சனமாக அனுபவிக்கிறோம்... அந்த அழிவின் மூலமாக பரிபக்குவம் எனும் அக மாற்றத்தையும் நாம் சிறுகச் சிறுக அடைந்து வருகிறோம்!

உயிரினங்கள் அனைத்தும் சுவாமியிடமிருந்தே உதித்தன... மீண்டும் சுவாமியிடமே கலந்து போகின்றன... ஆக உணர்ச்சிவசப்படாமல் சமநிலையில் மனதை வைத்திருப்பதே சரணாகதி என்பது..!!! "சம நிலையில் இருப்பதே சமாதி நிலையில் இருப்பது"


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக