தலைப்பு

வியாழன், 30 செப்டம்பர், 2021

சுவாமியை நடக்க இயலாமல் செய்த விஷம் கலந்த பிரசாதத்தால் பதறிப்போன பக்தர்கள்!


திடீரென சுவாமியின் கால்கள் இரண்டும் செயலற்று போகிற பரபரப்பு சூழலில்.. யாரால்? எதனால் ? இது நிகழ்ந்தது.. அந்த அசம்பாவித சூழ்நிலையை சுவாமி எவ்வாறு அணுகினார்... பக்தர்களின் பதைபதைப்பை எவ்வாறு நீக்கினார்... உண்மையில் சுவாமிக்கு விஷம் ஒரு பொருட்டா? என்பதையும் சுவாரஸ்யமாக வாசிக்கப் போகிறோம் இதோ‌...! 


அது 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலை சுவாமி தரிசனத்திற்கு வரும் போது தனது வலது காலை இழுத்து நடப்பதை சில சேவாதள தொண்டர்கள் கவனித்தனர். ஆசிரமத்தில் தங்கி இருந்த சுந்தர் ராவை அழைத்து வந்தனர்... ஏதாவது உணர்ச்சி இருக்கிறதா ? என டாக்டர் ராவ் சுவாமியின் வலது பாதத்தை சிறு ஊசியால் குத்திப் பார்க்கிறார்... எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை... சில மணி நேரத்தில் இடது காலிலும் உணர்ச்சி மறைந்து விடுகிறது. சுவாமியால் நிற்க முடியவில்லை.. உடலை இழுக்க வேண்டிய நிலையில்தான் உடல் சூழ்நிலை இருந்தது... பெங்களூரிலிருந்து ஒரு மூளை வைத்திய நிபுணரை அழைத்து வருகிறேன் என டாக்டர் ராவ் சொன்ன போதும் சுவாமி மறுத்து விடுகிறார்... சுவாமி தனக்காக எதையுமே செய்து கொள்வதில்லை... மாட மாளிகை , கூட கோபுரம் எதை கட்டிய போதும் அதை பக்தர்கள் தங்குவதற்காகவே செய்தாரே அன்றி தனக்காக எதையுமே செய்து கொள்ளாத எளிமையான கடவுள் நம் சுவாமி.. அந்த கடவுள் தான் நாம் எப்பேர்ப்பட்ட தியாகியாக இருக்க வேண்டும் என வாழ்ந்து காண்பிக்கிறார். சுவாமிக்கு விஷம் புதிதில்லை... சிவனாக அதை  தன் தொண்டையில் தேக்கியவர்... பால சத்தியாவாக விஷ வடையை உண்டவர்.. இப்படி இன்னல்களுக்கு நடுவில் தான் இறைவன் பக்தர்களின் இடர் களைகிறார். மனநோயாளிகள் முகாமிற்கு சென்றால் யார் சட்டை கிழியாமல் வெளிவர முடியும்?!

"எப்போது... என்னை குணப்படுத்திக் கொள்வது என்பது எனக்கு தெரியும்... அதுவரை என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்கிறார் சுவாமி. கொஞ்ச நேரத்திற்குள் செயல்பாடின்மை மிக மோசமாகிறது... பட்டிலும் மெல்லிய சுவாமி பாதம் செயல்பட மறுக்கிறது.. லட்சக்கணக்கான பாத நமஸ்காரம் கொடுத்த அந்த கடவுள் பாதம் கற்சிலையாய் கிடக்கிறது. ஏதாவது செய்யுங்களேன் என சேவாதள தொண்டர்கள் டாக்டரிடம் கதறுகிறார்கள்...மருத்துவர்களுக்கு எல்லாம் மகா மருத்துவரான சுவாமியே உத்தரவிட்டதால் ஏதும் செய்ய இயலாமல் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறார் டாக்டர் ராவ். 

வெளியே தோட்டத்தில் பக்தர்கள் குவிய ஆரம்பிக்கின்றனர். பஜனை நிகழ வேண்டும்... தரிசனம் தர வேண்டும்.. ஆனால் சுவாமியின் நிலையோ ? என உள்ளே நினைத்து வெதும்பிப் போகிறார்கள் சேவாதளர்கள். அதில் ஒருவர் "பெங்களூரில் இருந்த வந்த ஒருவர் சுவாமியிடம் பிரசாதம் ஒன்றை கொடுத்தார்... அதை சுவாமி அவரின் எதிரிலேயே சாப்பிட்டார்.. அதற்கு பிறகுதான் சுவாமிக்கு உடல் நிலை சரியில்லை" என்கிறார். 

        யார் வந்தது? எதை தந்தது? அப்படி அது என்ன உணவு? சுவாமிக்கு அது என்னவென்று தெரியாதா? ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இந்த உபாதையை ஏன் சுவாமி அனுபவிக்க வேண்டும்? சரி.. மருத்துவமாவது செய்து கொள்ளலாமே... அதை ஏன் பிடிவாதமாய் மறுக்கிறார்? என சுற்றி ஆயிரம் கேள்விகள் வேள்விகளாய் அனைவர் இதயத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறது.. சுவாமி ஒன்று செய்கிறார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்கிறது.. அது சராசரிகளான நமக்கு புரிவதில்லை.. புரிய வேண்டிய அவசியமும் இல்லை... பார்வையாளருக்கு முழு கதையையும் சொல்லிவிட்டு ஒரு இயக்குநர் திரைப்படத்தை இயக்குவதில்லை... நாம் வெறும் பார்வையாளர்களே!! இந்த பிரபஞ்ச செயல்பாட்டை சுவாமியே இயக்குகிறார்!

டாக்டர் சுந்தர்ராவ் சுவாமியின் இரு பாதங்களையும் தொட்டு வணங்கி "சுவாமி! நாளை மாலை ஆறு மணிக்குள்ளாக உங்கள் கால்களை நீங்கள் சரியாக்கிக் கொள்ளவில்லை என்றால்... நான் ஸ்பெஷலிஸ்டுகளை கொண்டு வந்து உங்களை சரி செய்ய வேண்டி இருக்கும்.. தயவு செய்து அனுமதி கொடுங்கள்" என கதறி அழுகிறார். சுவாமி அவரை மெல்ல தட்டிக் கொடுத்து புன்னகை செய்கிறார்... செயலற்று இருக்கிறதே கால்கள் என்ற கவலையே கிஞ்சித்தும் சுவாமிக்கு இல்லை.. காரணம் சுவாமி உடல் கடந்தவர்... உடல் வெறும் மாயப் போர்வையே.. இதைத் தான் சுவாமி நமக்கு தினந்தோறும் உபதேசிக்கிறார். 

அன்று இரவு டாக்டர் ராவின் கனவில் சுவாமி தோன்றுகிறார்.. அதில் டாக்டர் சுவாமியின் இடது காலில் சிறிது நீரை தெளிக்கிறார்.. எழுந்து நிற்கும்படி சுவாமியின் கால்கள் குணமாகி விடுகிறது. கனவு கலைகிறது. உடல் வேர்த்துப் போயிருக்கிறது டாக்டருக்கு... இதைப் போல் சுவாமி நீர் தெளித்து  ஒருமுறை செய்திருக்கிறாரே என்பது டாக்டருக்கு நினைவு வருகிறது. ஆம் அப்படி ஒருமுறை செய்கிற போது தான் சுவாமி தன்னை சிவசக்தி அம்சம் என பிரகடனப்படுத்தியது. 

மறுநாள் டாக்டர் காலை தனது நோயாளிகளை கவனித்துவிட்டு சுவாமியை தரிசிக்க வருகிறார். நிலைமை முந்தைய நாளை விட மிக மோசமாக இருக்கிறது. சோதனை செய்து பார்த்ததில் தொடை வரை உணர்ச்சியும் இல்லை செயல்பாடும் இல்லை.. விக்கித்துப் போகிறார் டாக்டர் ராவ். ஆனால் அவர் அங்கிருந்து அசையவே இல்லை.. மாலை ஆறு மணி ஆகிறது.. கடிகாரம் தனது இரண்டு முள் கால்களை அசைக்கிறது... இவ்வளவு நடக்கிற போதும் சுவாமி அமைதியாக புன்னகையோடு அசையா சிலையாக இருக்கிறார். எந்த இடர் வந்தாலும் அதற்கு உணர்ச்சி வசப்படாத நிலைக்கு மனிதனும் வர முடியும்... காரணம் மனிதனும் சுவாமியின் சிறு கீற்றே!


நேரம் நெருங்குகிறது. பக்தர்கள் தரிசனத்துக்காக காத்தபடியே இருக்கிறார்கள். காத்து ரட்சிக்கும் சுவாமிக்காக காத்திருக்கிறார்கள். சுவாமி தரையில் மெல்ல நகர்ந்து குளியலறைக்கு செல்கிறார்... திரும்பி வருகிறார்.. சேவாதளர் சுவாமியை தூக்கி நாற்காலியில் அமர வைக்கிறார்கள்... முரளி என்ற சிறுவனிடம் ஒரு டம்ப்ளர் தண்ணீர் கேட்கிறார்.. "இது போதும்.. இனி இந்த சோதனை முடிய வேண்டியது தான்" என்று சொல்லியபடி அந்த டம்ப்ளர் நீரை எடுத்து தனது வலது காலில் தெளித்துக் கொள்கிறார்.. காலை மடக்கி நீட்டுகிறார்... அது அசைகிறது... அருகில் கை கட்டி நின்ற டாக்டர் ராவை அருகே அழைத்து "நீ என் இடது காலை குணப்படுத்தலாம்... நான் உன் கனவில் வந்த போது செய்தாய் அல்லவா... அப்படி" என்று புன்னகைக்கிறார்...  டாக்டர் ராவ் மெய் சிலிர்க்கிறார். கனவில் செய்தது போலவே சுவாமியின் இடது காலில் சிறு நீரை தெளிக்கிறார்...அதுவும் குணமாகி விடுகிறது... எழுந்து வந்து சுவாமி வழக்கம் போல நடக்க துவங்குகிறார்...

"சுவாமி இது என்ன லீலை... எனக்கெதுவுமே புரியவில்லையே" என கண்ணில் நீர் பெருக கேட்கிறார் டாக்டர் ராவ்.

"பெங்களூரிலிந்து வந்த அந்த மனிதன் சித்து வேலைகளை கற்றவன்... என் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை... விஷம் கலந்த பிரசாதத்தை எனக்கு கொடுத்தான்... அவனுக்கு முன்பே அதை வாங்கி நான் சாப்பிட்டேன்... நான் இந்த விஷத்தை அப்போதே ஜீரணித்திருப்பேன்.. இந்த சிரமத்தை அடைந்திருக்க வேண்டியதில்லை... ஆனால் அவனுடைய தவறு உங்கள் அனைவருக்கும் தெரியாமல் போயிருக்கும்... இப்போது எல்லாம் சரியாகிவிட்டது... அவனும் தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டான்... மனம் திருந்தி என் பக்தனாகிவிட்டான்" என்கிறார் ஆலகால விஷத்தையே உண்ட ஸ்ரீ சத்ய சாயீஷ்வரர். 

      அருகிலிருந்த சேவாதளர் அனைவரும் " சுவாமி தங்களுக்கு தெரியாதது இல்லை.. யார் அவன்? சொல்லுங்கள் ... அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்துகிறோம்!" என்கிறார்கள் ஆவேசத்துடன்...

      சுவாமியோ மிகுந்த கருணையோடு "அவசியம் இல்லை! அவனை நான் திருத்தி விட்டேன் .. அது போதும்! அவன் இனி யாருக்குமே எந்தவித தீங்கும் செய்யமாட்டான்..." என்கிறார் புன்னகையோடு...

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 187 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)

எப்பேர்ப்பட்ட தீங்கு செய்த அவனை சுவாமி எங்கேயும் விட்டுக் கொடுக்கவில்லை.. சபிக்கவில்லை... அவனை காட்டிக் கொடுக்கவுமில்லை... "தீய செயலையே ஒதுக்க வேண்டுமே அன்றி செய்தவனை அல்ல" என்கிறார் சுவாமி. அவன் பாவம் அறியாமையில் செய்து விட்டான் என்று தான் சுவாமி சொல்வார் எப்போதும்...இது தான் இறை குணம். சுவாமி இறைவன் என்பதற்கு அவர் இறை குணமே.. நிபந்தனையற்ற மன்னிக்கும் அவர் பேரன்பே முழுமுதற் காரணம்.. அதை நாமும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.. சுவாமி எனும் பிரபஞ்ச ஜ்வாலையின் சிறு தீப்பொறி தான் நாம் அனைவரும் எனும் போது அந்த இறை குணம் நம்மிடமும் இருக்கிறது. வெளிப்படாமல் இருக்கிறது. ஆத்ம சாதனையால் அதை வெளிப்படுத்த முடியும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக