தலைப்பு

திங்கள், 6 செப்டம்பர், 2021

கவியரசு கண்ணதாசனை பரவசப்படுத்தி‌ இலங்கையிலும் ஆட்சி செய்யும் ஸ்ரீ சத்ய சாயி கண்ணன்!


இலங்கை அமைச்சராக இருந்த இராஜதுரை அவர்களின் அனுபவங்களோடு கவியரசு கண்ணதாசனின் பரவச உணர்தலும் சுவாமியின் இலங்கை பக்தரான உதயநாயகம் இதயம் திறந்து மிக சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார் இதோ...

(கவியரசு கண்ணதாசனின் சுவாமி உணர்தல் முதன்முதலாக நமது சத்யசாயி யுகத்தில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பதும் சிறப்பம்சமாய் குறிப்பிடத்தக்கது)


எனது மாமா, இலங்கையின் முன்னாள் இந்து சமய, தமிழ் கலாச்சார அமைச்சர் திரு செ.இராஜதுரை அவர்களும், எனது தந்தை, முன்னாள் கொழும்பு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் தலைவர்  இலங்கை தமிழ் பத்திரிகைத்துறையில் ஜாம்பவான் திரு. எஸ்.டி.சிவநாயகம் அவர்களும், ஆரம்பகாலத்தில் பாபாவை பற்றி, மிகவும் கீழ்தரமாக விமர்சித்து வந்தவர்கள். இருவரும் அவரை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை. பித்தலாட்டக்காரன், ஏமாற்றுப் பேர்வழி என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

வீட்டில் நானும் எனது தாயாரும் பாபாவை வழிபட்டு வருவதை ஏளனம் செய்தார்கள். ஒரு நாள் எனக்கு நடந்த ஒரு அற்புத நிகழ்வு, என் தந்தையின் மனதை சற்று நெகிழவைத்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. அதே சமயத்தில் திரு இராஜதுரை அவர்களின் குடும்பத்தினரும் பாபாவை வழிபடத் தொடங்கிவிட்டார்கள். என் தந்தையும் மாமாவும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றி அறிந்த கொள்வதற்காக சென்னை புறப்பட்டார்கள். அவர்களது நண்பரான கவியரசு கண்ணதாஸனிடம் தங்கள் வருகையை தெரிவித்தார்கள். கவியரசு சிரித்துவிட்டு, கிண்டலாக பேசிவிட்டு, அவர்களைத்  தடுத்துவிட்டார். பிறகு எதோ ஒரு வழியாக அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு புட்டபர்த்திக்கு பயணித்தார்கள்.

புட்டபர்த்தியில் பாபா, அங்கிருந்த சாயி பக்தர்களுக்காக ஒரு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பின் வரிசையில் இருந்துகொண்டு, அதனைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள். எனது தந்தையார் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட, அவர் தனது கேமராவை எடுத்து, அங்குள்ள ஒரு சில காட்சிகளைப் படம் எடுத்துவிட்டு,   பாபாவை நோக்கி படம் எடுக்க, தனது கேமராவைக் கிளிக் செய்ய எத்தனித்தபோது, பாபா தனது கைகளைக்காட்டி நிறுத்தும்படி கூறினார். அதையும் மீறி அவர் கேமராவை கிளிக் செய்துவிட்டடார். அப்படி ஒரு சந்தோஷம். அடுத்த கிளிக் செய்தபோது அவ்வளவுதான் இயங்கிக்கொண்டிருந்த கேமரா இயங்க மறுத்துவிட்டது. எனது தந்தை மட்டுமல்ல மாமாவும் சற்று ஆடிப்போய் விட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் இருவரும் பாபாவைப் பற்றி மனதில் இருந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடையை, அந்தச் சொற்பொழிவில் விளக்கமாகக் கொடுத்திருந்தார். அதுதான் ஆச்சரியம்!! தங்களது மனங்களிலிருந்த எண்ணங்களை, பாபா எப்படி தெரிந்து கொண்டார். தாங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை எப்படி? உணர்ந்து கொண்டார் என்று அசந்துவிட்டார்கள். அதுமட்டுமா? எடுத்த படச்சுரூளைக் கழுவிப்பார்த்தபோது, எடுத்த அத்தனை படங்களும் பதிவாகியிருக்க, பாபாவை எடுத்த “அந்தப்படம்” மட்டும் வெள்ளை நிறத்தில் காணாது போயிருந்தது, சற்று ஆடித்தான் போய்விட்டார்கள்.   

கவியரசு கண்ணதாசன் 

பாபாவைப் பற்றி தாங்கள் வைத்திருந்த எண்ணங்களிலிருந்து சற்று விலகி, “அவரிடம் ஏதோ ஒரு சக்தி” இருக்கிறது என்று நம்பத்தொடங்கினார்கள். சென்னை திரும்பிய அவர்கள், தங்களது அனுபவங்களை, தங்களது நண்பர் கவியரசு கண்ணதாஸனிடம் எடுத்துக்கூறினார்கள். அப்போதுதான் பரவசமுடன் கவியரசும் அவர்களிடம், “பாபாவிடம் தெய்வீக சக்தியிருப்பதை, முன்னர் ஒரு சமயம் “இதயம் பேசுகிறது” மணியன் அவர்களும், எனது உதவியாளர் பஞ்சு அருணாசலமும், பாடகர் சௌந்தரராஜனும் எடுத்துகூறியதுண்டு, ஆனால் இவ்வளவு தூரம் கடல்கடந்து வந்து சந்தித்த உங்கள் இருவருடைய அனுபவங்கள், என்னை சற்று யோசிக்கவைத்துவிட்டது.” என்றாராம். பின்னாளில் ஆஸ்திகராகி அமர காவியமான “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதினார் கவியரசு கண்ணதாஸன்.      

திரு செ.இராஜதுரை சுவாமியுடன்.. 

அதன்பின் திரு இராஜதரை அவர்கள், பாபாவைத் தரிசனம் செய்வதற்காக, கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலைய பக்தர்கள் குழுவுடன் சென்றபோது, யாழ் விமானநிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அதிசயமும், தனது துணைவியாருடன் சென்றபோது பாபா நேர்காணல் மூலமாக, அவரிடம் கேட்ட  “ஒரு கேள்வியும்”, அவரை முழு சாயி பக்தனாக மாற்றியது. சில ஆண்டு கழித்து, இலங்கை அமைச்சராக பதவியேற்ற பின்னர், பாபாவை தரிசனம் செய்யவந்தபோது, பாபா, அவருக்கு பச்சைக்கல் மோதிரம் ஒன்றை, தனது சக்தியால் வரவழைத்து, அவரது விரலில் போட்டுவிட்டு, அதனை எப்போதும் வைத்திருக்கவேண்டும் என்று உத்தரவுமிட்டார். அந்த காலகட்டத்தில், அவரது அரசியல் வாழ்கையில் பல ஆபத்துக்களும், உயிர் அச்சுறுத்தல்களும் இருந்தது. பல தடவைகள், பாபாவின் மோதிரத்தின் சக்தியால், அவர்  காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

உதாரணத்துக்கு ஒரு பயங்கரமான சம்பவம். கொழும்பில் ஒரு மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். அந்தக் கூட்டத்தின்  மேடையில், முன்னால் அமைச்சர்; காமினி திஸநாயக்கா, மற்றும் பல அமைச்சர்களுடன் இவரும் இருக்கவேண்டும். வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். இடைவழியில் வந்தபோதுதான் பார்த்தார். அவரது விரலிலிருந்த “அந்த மோதிரம்” வீட்டில் கழட்டி வைத்த ஞாபகம். திரும்பி போய் எடுத்துவரும்படி அவரது உள் மனம் எடுத்துக் கூறியது, உடனே வந்த காரை வீட்டுக்குத் திருப்பும்படி, தனது வாகன சாரதியிடம் கூறுகிறார், அப்போதுதான் அந்த பயங்கரமான சம்பவம். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த, அந்த  மேடையில், ஒரு பயங்கரமான மனிதவெடிகுண்டு வெடிக்கப்படுகிறது. மேடை தூக்கியெறியப்படுகிறது. அங்கிருந்த அமைச்சர்கள் உட்பட பலர் உயிரற்று சடலமானார்கள். ஆனால் பாபா, இவருக்கு உயிர் பிச்சை கொடுத்தார். இன்றும் அந்த மோதிரத்துடன் 95வது வயதில் பாபாவின் ஆசியுடன் சென்னையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

திரு. எஸ்.டி சிவநாயகம் சுவாமியுடன்..  

எனது தந்தைக்கு பல அதிசயங்களும், அதிர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட, சத்ய சாயியிடம் சரணாகதியடைந்தார். அதன்பின் பாபா அவருக்கு, நேர்காணலும், தரிசனமும் கொடுத்து, அவருக்கும் மோதிரம் ஒன்றை, தனது பேரருள் சக்தியால் வரவழைத்து, அவரது விரலில் போட்டுவிட்டு, அந்த மோதிரத்திலிருப்பதைப் போன்று, கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையத்தை தலைமையேற்று நடத்தும்படி ஆசிர்வதித்தார். அந்த மோதிரத்தில் சத்ய சாயி பாபாவின் உருவம் மேலேயும், சீரடி சாயி பாபாவின் உருவம் கீழேயும் பதிவாகியிருந்தது. அது ஒரு தீர்க்கதரிசனத்தின் அடையாளம். 

அது போன்றே சுமார் 30 வருடங்கள் கழித்து, எனது தலைமையில், பாபாவின் பூர்ண ஆசியுடன், கொழும்பிலுள்ள சாயி நிலையக் கட்டிடம் உருவானது. அந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் சத்ய சாயியின் திருவுருவச்சிலையும், கீழ் மண்டபத்தில் சீரடி சாயி யின் திருவுருவச்சிலையும் பிரதீட்சை செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை அமரராகிய பின், அந்த மோதிரம் எனது கையில் கிடைத்தபோதுதான், பாபாவின், அன்றைய  தீர்க்கதரிசனம் பலராலும் உணரப்பட்டது. இப்போது இந்த சாயிநிலையத்தில் இரண்டு சாயி அவதாரங்களும் ஒன்றாக பல அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

பாபாவின் ஆசியின் அருளால், தீவிர சாயி பக்தர்களான எனது மாமா மூலமாக, அவரது அமைச்சின் ஊடாக “ஸ்ரீ சத்ய சாயி பாபா டிரஸ்ட் ஸ்ரீ லங்கா” என்ற அமைப்பும், எனது தந்தை மூலமாக கொழும்பு சமித்தியாக இருந்த ஸ்தாபனம் “கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையமாக” வும் உயர்வு பெற்றது. 

ஆக்கம்: எஸ்.என்.உதயநாயகம், தலைவர் கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையம். ஸ்ரீ லங்கா.


🌻கடல் கடந்த இலங்கையிலும்... கடல் கடந்த கவிதை அரசின் இதயத்திலும் சுவாமி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் எனில் சுவாமியின் பிரபஞ்சம் கடந்த பேரருளே காரணம். சுவாமியின் சிருஷ்டியே நாம் அனைவரும்.. அந்த சிருஷ்டியை காக்க சுவாமியின் சங்கல்ப சிருஷ்டியே உதவி செய்கிறது! சுவாமியே அனைத்துக்குமான காவலும்.. ஆன்மீக ஆவலும்... அவரின் பதம் நம்மையே ஒப்படைத்து பரமபதத்திற்கான பேறடைவோம்!! 🌻

1 கருத்து: