தலைப்பு

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தக்க சமயத்தில் தடுத்தாட் கொள்ளும் தனிப்பெரும் தெய்வம் ஸ்ரீ சத்யசாயி!



எல்லா தேசமும் சுவாமி தேசமே.. யார் தரும் நேசமும் சுவாமி தரும் நேசமே.. இதில் வெளி தேசம் வாழ்ந்தவருக்கும் நிகழ்ந்த சுவாமி மகிமைகளை அனுபவிக்கப் போகிறோம் இதோ... பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அம்மையாரின் சிஷ்யைக்கும், தோழியின் டிரைவருக்கும் சுவாமி நிகழ்த்திய மெய் சிலிர்க்கும் அனுபவமே இது...


இந்திரா தேவி அம்மையாரின் மாணவிகளில் ஒருவரான கமலா.. அமெரிக்காவிலிருந்து இந்திரா வந்திருக்கிறார். அவருக்கு விடுமுறை காலம் அது. சுவாமியை தரிசனம் செய்ய விரைகிறாள். தரிசன வரிசையில் அமர்ந்திருக்கிறாள். நீங்கா அதிர்வலைகள் நிரம்பி வழிகின்றன...சுவாமி மெதுமெதுவாய் நடந்து வருகிறார். இவரின் அருகில் வந்து மந்தஹாஸ புன்னகையுடன் சுவாமி அவரின் உச்சந்தலையை தொடுகிறார்.‌ எப்பேர்ப்பட்ட கொடுப்பினை அது! தலையில் தான் விதி எழுதப்பட்டிருக்கிறது என முன்னோர்கள் சொல்வார்கள் அல்லவா.. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்களே... அப்படிப்பட்ட பக்தையின் தலையை தொடுகிறார்.. இப்படி எத்தனை லட்சம் பேர்களின் தலையை சுவாமி தொட்டிருப்பார்...அந்த நொடியில் ஏற்படும் அனுபவம் ஜென்ம ஜென்மாய் தொடருமே.. அந்த ஆனந்த தெய்வீக அனுபவத்தை அந்த பக்தையும் அணு அணுவாய் அனுபவிக்கிறார். அப்படி சஹஸ்ரார சக்கரம் சுழலும் உச்சந்தலையை சுவாமி தொட்டு "பயப்படாதே! உன் பையன் தப்பிப் பிழைத்து விட்டான்...நான் அவனை காப்பாற்றிவிட்டேன்" என்று தனது திருக் கையால் அபய ஹஸ்தம் காட்டுகிறார். 


அந்த பக்தைக்கு எதுவும் புரியவில்லை..‌ தான் இங்கே வரும்வரை தன் மகனுக்கு ஒன்றும் இல்லையே என யோசிக்கிறார். செல்ஃபோன் இல்லாத காலகட்டம் அது. அமெரிக்காவுக்கு திரும்பிய பிறகு சுவாமி சொன்ன அந்த சத்திய ஆசி வாக்கு புரிகிறது.. சுவாமி அந்த பக்தைக்கு தன் திருவாய் மொழி வாசகம் மொழிந்த அதே தருணம் அமெரிக்காவில் அவருடைய‌ மகன் ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது தூக்கி எறியப்பட்ட குண்டு அவன் தலையில் விழுந்து தாக்கி இருக்க வேண்டும்... யாரோ அவன் மேல் அது விழாதவாறு அவனை தள்ளிவிட்டிருக்கிறார்கள்... ஆனால் அருகில் யாருமே இல்லை... யாராக இருக்கும் என அவனும் யோசிக்கிறான் அதிர்ச்சி கலந்த மூச்சை பிடித்து விட்டபடி.. இந்த நிகழ்வுகள் எல்லாம் அமெரிக்கா திரும்பிய தாயிடம் அவன் சொல்லிய போது தான் சுவாமி சொன்னவை யாவும் வரிக்கு வரிக்கு விளங்குகிறது.. தன் மகனை காப்பாற்றியது சுவாமியே என புரிய.. அவனும் அதை தெரிந்து மெய் சிலிர்க்கிறான்.. தனக்கு உயிர்ப்பிச்சை அளித்தது சுவாமியே என ஆழமாய் உணர்கிறான்... அவன் அறையில் சுவாமியின் புகைப்படம் அந்த தெய்வீக மீட்பை உறுதி செய்யும்படி அசைந்து கொண்டிருந்தது..


இப்படி சுவாமி உயிர்ப்பிச்சை அளித்தது ஒருவருக்கா.. இருவருக்கா..இப்படி நாம் உணர்ந்தோ உணராமலோ சுவாமி நம் வாழ்க்கையில் மகிமை புரிவது நம்முடைய நன்மைக்கே அன்றி அவருக்கான பலன் அதிலொன்றுமே இல்லை.. இத்தகைய கருணா மூர்த்தியான சுவாமிக்கு ஜென்ம ஜென்மமாய் நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

பம்பாயில் வசித்த இந்திராதேவி அம்மையாரின் தோழியான சகுந்தலா அமர்சே என்பவரிடம் ஒரு டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பெயர் சியாமா ராவ். ராவின் மகன் பாலு பிறவி ஊமை. ஒருமுறை சகுந்தலா சுவாமியின் தரிசனத்துக்கு சென்றிருந்த போது ராவும் உடன்  செல்கிறார். சுவாமி தரிசனத்தில் தன் மகனின் பிரச்சனையை சுவாமியிடம் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். சுவாமியும் சிருஷ்டி விபூதி தந்து ஆசி வழங்கி தேற்றி அனுப்புகிறார். அதன்பிறகு பாலு ஒருநாள் காணாமல் போகிறான். இல்லமே பதறுகிறது. யாராவது விசாரித்தால் வீட்டு முகவரி கூட சொல்ல இயலாது பாலுக்கு.. ராவோ தேடாத இடமே இல்லை. நாட்கள் முட்களாய் இதயத்தில் தைத்து கடக்கிறது.. எங்கோ அடிபட்டு இறந்திருப்பான் என உறவினர்களும் சேர்ந்து முடிவுக்கு வருகிறார்கள். தனது மகனின் தொலைந்த நிலை பற்றி இரண்டு கடிதங்கள் சுவாமிக்கு அனுப்பிய வண்ணம் பதிலுக்காக காத்திருக்கிறார்.. ஆனால் சுவாமியிடமிருந்து பதிலேதும் வரவில்லை.. இன்றாவது தந்தியோ தபாலோ வருமா? என வாசலை அவர் பார்க்காத நாளில்லை.. வெறும் காற்று ராவின் ஈர விழிகளில் அடித்துவிட்டு அவரது மகன் பாலுவை போலவே பேசாது திரும்பும்.. இந்த சமயத்தில் சுவாமி சகுந்தலா அவர்களின் இல்லத்திற்கு வருவதாக  இருந்தது.. சிக்கனமாக வருகைக்கான ஏற்பாடுகளை புரிகின்றனர். சுவாமிக்கு ஆடம்பர செலவு அறவே பிடிக்காது. சுவாமியின் அருள் நம் மீது பொழிய வேண்டுமானால் சிக்கனமாக வாழ வேண்டும்... அதே போல் சிக்கனமாய் சுவாமி விஜயம் ஏற்பாடாகும் நேரத்தில் மூன்றாவது கடிதம் எழுதி ராவ் பெட்டியிலேயே பெருமூச்சோடு புதைத்துவிடுகிறார். 


குறித்த நேரத்தில் கார் வருகிறது. வாசலில் இருந்த கூட்டத்தில் காய்ந்து போன மாவிலைத் தோரணமாய் வாடி இருந்தார் டிரைவர் ராவ். சுவாமி ராவை உற்று நோக்கி "உன் மூன்று கடிதங்களுமே கிடைத்தன" என்கிறார். நாம் இரண்டு தானே தபாலில் சேர்த்தோம் .. மூன்றாவது பெட்டிக்குள் தானே தூங்குகிறது என யோசிக்கும் நொடியே... சுவாமி சிரித்துக் கொண்டே பங்களாவின் வாசல் கேட்'டை தனது திரு விரல்களால் சுட்டிக் காட்டுகிறார். ஏதும் அறியாத ராவ் வாசலை பார்க்க .. அங்கே அவரின் மகன் பாலு நின்று கொண்டிருக்கிறான். சென்ற உயிர் திரும்பி வருகிறது ராவுக்கு... நிற்கும் மகன் அப்பா என தந்தையை கூப்பிடுகிறான்.. அந்த நொடி .. அதே நொடி திக்குமுக்காடிப் போகிறார் ராவ்.. அசைந்து அசைந்து ஓடிப் போய் மகனை ஆரத் தழுவுகிறார் ... காணாமல் போன தன் மகனை மூச்சோடு மட்டுமில்லை பேச்சோடும் மீட்ட சுவாமியை நினைத்து உள்ளே உருகுகிறார்.. சுவாமியோ ஏதும் நிகழாதது போல் உள்ளே சென்றுவிடுகிறார். சுவாமி தாங்கள் எப்பேர்ப்பட்ட காரியத்தை செய்துவிட்டீர்கள் என பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக சுவாமி காத்திருக்கவே இல்லை... நம்மை காத்திருக்கும் பரம்பொருள் சுவாமி தக்க சமயத்திற்காக காத்திருப்பாரே தவிர நம் நன்றி பாராட்டுதலுக்காக என்றுமே அவர் காத்திருப்பதே இல்லை...

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 159 / ஆசிரியர் : எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி நன்றி எதிர்பார்ப்பதில்லை தான்.. ஆனால் நாம் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும். அந்த உயிர் நன்றியையே நாம் அனைவரும் உயர் வாழ்வாக்க வேண்டும். தேசம் உனக்கென்ன செய்தது என கேட்காதே.. தேசத்திற்கு நீ என்ன செய்தாய் என உன்னை நீயே கேட்டுக் கொள் எனச் சொல்வார்கள். அது தேசத்திற்கு மட்டுமில்லை நம் தனிப்பெரும் தெய்வமான சுவாமிக்கும் அது சாலவே பொருந்தும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக