தலைப்பு

வியாழன், 23 செப்டம்பர், 2021

தாத்தாச்சாரியாரின் கேன்சரை கேன்சல் செய்த கடவுள் சாயி!


டாக்டர்கள் வைத்தியம் செய்வர். அந்த டாக்டர்களுக்கே வைத்தியம் செய்வது டாக்டர்களின் டாக்டரான கடவுள் சுவாமியே! புற்றுநோயால் அவதிப்பட்ட ஒரு டாக்டரை எவ்வாறு சுவாமி குணமாக்கினார் என்பது இன்னொரு டாக்டர் பகிர்வதால் இது விசேஷமான அனுபவப் பதிவே!!

அன்றைய காலத்து பிரசாந்தி ஆசிரமத்தில் மிக முக்கியமான மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி அம்மையார். அவர் இங்கிலாந்தில் படித்து எம்.டி பட்டமும் பெற்றவர். மருத்துவர்களுக்கு மனிதனின் உடற்கூறுகளும்.. அதன் இயக்கமும் நன்கு தெரியும். எல்லா அறிவியல் சான்றோர்களுமே எப்படி மற்றும் எவ்வாறு  உடல் இயங்குகிறது என்பதை அறிந்திருக்கின்றனர்... ஆனால் எதனால் மற்றும் ஏன் இயங்குகிறது என்பதற்கான கேள்விக்கு விடை அவர்களிடம் இல்லை.. இயற்கை என்று சொல்லி ஆன்ம விசாரம் புரியாமல் ஓரம் கட்டிவிடுவார்கள். அந்த இயற்கையை இயக்கும் சக்தி எது? எதையும் சாதிக்கும் அந்த மாபெரும் சக்தியால் மனித அவதாரம் எடுத்து வரவும் முடியும்...அப்படி எடுத்து வந்த அவதாரமே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி! இதனை நன்கு உணர்ந்தவர் டாக்டர் விஜயலட்சுமி அம்மையார்.



இவரிடம் ஒருமுறை சுவாமி அனுபவம் மிச்சல் எனும் வெளிநாட்டு பெண்மணியால் கேட்கப்படுகிறது. உடனே இவர் பரவசப்பட்டு இதயம் திறந்து பயபக்தியோடு பேசுகிறார். டாக்டர்கள் நாங்கள் எத்தனையோ விதமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்ககறோம்.. மிகவும் சிக்கலான ஆப்பரேஷன்களை மிக சிறப்பாய் வெற்றிகரமாகவும் செய்திருக்கிறோம்! ஆனால்.. நினைத்தே பார்க்க முடியாதவாறு.. மெய் சிலிர்க்கும்படியான... பிரம்மிப்பின் உச்சத்திற்கு தள்ளக்கூடிய வகையில் சுவாமி புரிந்து வருகின்ற மகிமா சிகிச்சைகள் லட்சக்கணக்கானவை... டாக்டர்களாகிய எங்களுக்கோ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தேவை.. ஆனால் சுவாமிக்கு அவை எதுவும் தேவையில்லை.. ஏன் ? அவருக்கு தன் விரல்கள் கூட தேவையில்லை.. விழிகளே அத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைக்கு போதுமானதாக இருக்கிறது. மனிதனின் மூன்று நிலைகளான விழிப்பு நிலை / தூக்க நிலை / கனவு நிலை இந்த மூன்று நிலைகளிலும் சுவாமியால் மட்டுமே அத்தகைய சிகிச்சைகளை புரிய முடிகிறது. இது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெய்ஞானம். சுவாமி இறைவன் என்பதற்கு முதல் உதாரணம் நிபந்தனையற்ற அவரின் பேரன்பே!! அதுவே இத்தகைய விசித்திர வினைகள் புரிகிறது என்கிறார். கேள்விக் கேட்டவர்க்கு ஆர்வம் தாங்கவில்லை.. அதற்கு ஏதாவதொரு நிகழ்வியல் உதாரணம் உரையுங்கள் என்கிற கேள்வி எழுகிறது...



அதற்கு டாக்டர் விஜயலட்சுமி இன்னொரு மருத்துவருக்கு சுவாமி புரிந்த மகிமா சிகிச்சையை பகிர்ந்து கொள்கிறார். 
அமெரிக்காவில் எத்தனையோ ஆசிய டாக்டர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர் தாத்தாச்சாரி. ஸ்டான்போர்டு பல்கலைக் கழக மருத்துப் பள்ளியில் அவர் சர்ம நோய் மருத்துவத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சார்ஸினோமா என்ற குணப்படுத்த இயலாத புற்றுநோய் அவரை தொற்றிக் கொள்கிறது... புகழ்பெற்ற மருத்துவருக்கே இப்படி நோய் வந்துவிட்டதே என பிற மருத்துவர்கள் துயரப்படுகின்றனர். டாக்டர் தாத்தாச்சாரியும் தனது இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார். ஒவ்வொரு நொடியுமே மரணம் மனிதனை தன் அருகே அழைத்துக் கொண்டு வருகிறது.. இதை இம்மி அளவிலும் உணராமல் மனிதனின் உச்சக்கட்ட ஆணவமும் , பேராசையும் அறியாமையோடு மிஞ்சிய நாட்களை பாழ்படுத்துகிறது. ஆனால் அந்த டாக்டர் தாத்தாச்சாரியோ மிகவும் பக்குவப்பட்டுக் கொண்டிருந்தார். 

திடீரென ஓர் எதிர்பாரா திருப்பம்.. வாழ்க்கை பலவித திருப்பங்கள் நிறைந்ததே! எப்போது ஒருவருக்கு என்ன நேருமென்று சுவாமியை தவிர ஒருவராலும் துல்லியமாக அனுமானிக்க முடியாது. டாக்டர் தாத்தாச்சாரி இந்தியாவுக்கு போகிறார். திரும்பி அமெரிக்கா வந்து தனது நண்பர்களிடம் "நீங்கள் எத்தனையோ மருத்துவ சோதனையை என் மீது நடத்தி இருக்கலாம்... இப்போது மீண்டும் நடத்திப் பாருங்கள் ... எனக்கு புற்று நோய் அடையாளம் கொஞ்சம் கூட இல்லை" என மிக மிக கூலாக சொல்கிறார். இவரது சக மருத்துவ நண்பர்களால் இதனை நம்பவே முடியவில்லை. ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறார்.. பக்குவம் முற்றிவிட்டதோ என்றெல்லாம் நினைக்கின்றனர். பிறகு அவர் சொன்னபடியே சோதனை செய்ததில் புற்றுநோயின் ஒரு புள்ளி கூட இல்லை. அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைகின்றனர்.. விசாரிக்கின்றனர். 

ஒவ்வொரு இரவும் என்னுடைய உடம்பில் பகவான் பாபாவின் விரல்கள் பட்டு , நான் தடவிக் கொடுக்கப்படுவதைப் போல உணர்ந்தேன்... படிப்படியாக என் உடல் தேறி விடுகிறது! என்னுடைய இத்தகைய உணர்ச்சி வெறும் கற்பனையா இல்லை வெறும் பிரமையா இல்லை குருட்டு நம்பிக்கையா என ஒரு சந்தேகம். சோதித்துப் பார்த்துக் கொண்டேன்... என் உடலில் ஒரு குறையுமில்லை என்பது புரிந்தது எனும் அவரின் அனுபவத்தை டாக்டர் விஜயலட்சுமி சொல்கையில் மிச்சல் எனும் பெண்மணி அதைக் கேட்டு புல்லரித்து கண்கள் மூடி துளிகளை சிந்தி தீபாராதனை அதாவது நீராராதனை காட்டுகிறார். அரங்கில் சுவாமி விபூதி மழை பொழிகிறார் ஷிர்டி சுவாமி வெள்ளி விக்ரகத்திற்கு.. கையை சுழட்டுகிறார் ரத்தினக் கல் தோன்றுகிறது... அதை விக்கிரகத்தின் நெற்றியில் பொட்டாய் இடுகிறார்... மிச்சலின் கண்ணீர்த் துளியும் .. அந்த ரத்தினமும் பள பள என இறை உணர்வில் மின்னிக் கொண்டிருந்தன...

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 124 / ஆசிரியர் : எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)

சுவாமியின் திருலீலைகள் எதையும் சாதிக்கும்... சிங்கப்பாலை தங்கப்பாத்திரத்தில் ஊற்றி வைப்பது போல் அத்தகைய திருலீலைகளை சுவாமி நம் வாழ்வில் நிகழ்த்த நம் இதயத்தை பரிபக்குவ பக்தியால் தோய்ந்த சரணாகதியை நிச்சயம் நாம் கடைபிடித்தே ஆக வேண்டும்!!

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக