தலைப்பு

சனி, 18 செப்டம்பர், 2021

கணவரின் ஆயுளை சுவாமியின் கருணையால் மீட்டு வந்த மீண்டும் ஒரு சாவித்திரி!

சுவாமி மேல் துளி கூட நம்பிக்கையே இல்லாத ஒரு கிறிஸ்துவர் தனது உயிருக்கு போராடிய நிலையில் சுவாமி அவரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதையும் அதற்கு அவரது மனைவியின் விடாப்பிடியான பக்தி எவ்வாறு உதவி புரிந்தது என்பதையும் பரவசமாய் வாசிக்கப் போகிறோம் இதோ...

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அம்மையார் சுவாமி பக்தை என்பது அனைத்து சாயி பக்தர்களும் அறிந்ததே... ஆனால் அவரது கணவரை பற்றி ஏதேனும் தெரியுமா? இவரது பக்தி கடல் போன்றது என்றால்.. அவரது மனம் கரை கூட இல்லை.. கரையாக இருந்தாலாவது கடலலை அவ்வப்போது தழுவும்.. ஆனால் அவர் சுவாமி மேல் துளியும் பக்தி இல்லாதவராய் இருந்தார்.. தனது மனைவியின் சுவாமி பக்தி மேலும் பெரியதொரு அபிப்ராயம் இல்லாதவராய் இருந்தார். அவர் ஒரு தீவிரமான கிறிஸ்துவர்‌. மற்ற எந்த தெய்வ உருவங்களையும் அவர் வழிபடாதவர். அந்த பரமபிதாவே ஸ்ரீ சத்ய சாயி உருவத்தில் அவதரித்திருப்பதை அறியாமல் இருந்தார்.. சுவாமியின் நிறை அவதாரமான ஸ்ரீ பிரேம சாயியும் இயேசு கிறிஸ்துவின் வடிவில் இருக்கும் புகைப்படத்தை சுவாமியே சிருஷ்டி செய்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!


அறியாமையால் நம்பிக்கை அற்றவராய் இருந்த இந்திராதேவியார் கணவருக்கு  கடுமையான நோய் கண்டது. படுத்த படுக்கையானார். அமெரிக்காவில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் வைத்தியம் செய்து வந்த போதும் அவர் குணமடையவில்லை...  "என்னோடு இந்தியாவுக்கு வாருங்கள்..‌சுவாமியின் அருளும் ஆசிகளும் உங்களுக்கு கிடைத்து நீங்கள் குணமடைவீர்கள்!" என்கிறார். ஆனால் அவருக்கோ நம்பிக்கையே இல்லை... 


மனைவி பக்தையாகவும்.. கணவர் நம்பிக்கையற்றும் ... இதில் மாறியும் அமைவது கர்மாவின் கோலமே... விதியின் விளையாட்டே.. சிலர் சத்தியம் உணர்ந்து பக்திக் கரையேறிவிடுவார்கள்.." பலர் கறையோடே வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். இதில் போதா குறைக்கு "உங்கள் கணவர் அவ்வளவு தூரம் பிரயாணித்தால்.. செல்லும் வழியிலேயே இறந்து விடுவார்" என குண்டை தூக்கி தலையில் போடுகிறார்கள். நாம் என்றால் அய்யோ என பிரயாண முடிவையே நிறுத்தி இருப்போம்.. பலருக்கு சுவாமியின் மேல் நம்பிக்கையை விட மருத்துவர்களின் மேல் நம்பிக்கை அதிகம். இது தான் கலி மாயை. ஆனால் மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவலை செவி மடுத்தது யார்? சாட்சாத் யோகத்தின் தாய் இந்திரா தேவி... கல் எறிந்தால் குளம் தான் கலங்கும் .... ஆகாயம் எப்படி அசையும்!? எவர் ஒருவருக்கு பக்தி இருக்கிறதோ அவர்களுக்கு பயம் என்பதே இருப்பதில்லை.. பயம் இருந்தால் அங்கு பக்தியே இல்லை... எதற்கும் சட்டை செய்யாமல் தன் பக்தியில் திடமாக இருந்து கணவரை அழைத்து விமானத்தில் ஏற்றி சுவாமி இருக்குமிடத்திற்கு கொண்டு வந்து விடுகிறார். அது தான் சரணாகத பக்தி. அது தான் வைராக்கிய பக்தி. அப்பேர்ப்பட்ட பக்திக்குத் தான் சுவாமி இறங்குவார். யானையே மிதிக்க வந்தாலும் அசராத பிரகலாத பக்தி இந்திரா தேவியாருக்கு இருந்தது. 


படுக்கையில் இருந்த அவரின் கணவரின் உடலை முழுவதும் சுவாமி தனது ஔஷத கைகளால் தொடுகிறார். 33 மாத்திரைகளை சிருஷ்டி செய்து தருகிறார். மேலும் சுவாமியின் உள்ளங்கையில் இருந்து ஒருவித தைலம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது... சுவாமி அதை அவரின் உடம்பின் ஒவ்வொரு பகுதிகளிலும் தேய்க்க தேய்க்க இதமாக இருக்கிறது அவருக்கு! வெறும் இதமாக மட்டுமா இருந்திருக்கும்... இறைவனே தன் திருவிரலால் தீண்டுகிறார் என்றால் அதுதான் பரம பதம். தேய்த்தலின் அந்த தெய்வீக ஸ்பரிசத்தில் அடுத்த நொடியே எழுந்து அமர்ந்துவிடுகிறார். சிருஷ்டி மாத்திரைகளை சாப்பிட்ட சில நாட்களில் உடல் முழுவதும் குணமாகி விடுகிறது. மீண்டும் அவர் அமெரிக்காவுக்கு ஜெர்மனி வழியாக புறப்பட்டு விடுகிறார். இந்திரா தேவியார் பிரம்மித்துப் போகிறார்.. திரும்பிச் செல்கையில் இறைவன் சாட்சாத் ஸ்ரீ சத்ய சாயியே என்ற தெளிவோடும் விமானத்தில் பறக்கிறார் இந்திரா தேவியார் கணவர். இன்னும் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டுப் போகலாம் என இந்திராதேவியார் இரண்டு வாரத்திற்கு இந்தியா தேவியார் ஆகிறார்.


அப்போது சிவராத்திரி உத்ஸவம். சுவாமியின் சிருஷ்டி லிங்கங்களை தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறார் அம்மையார். அதில் ஸ்படிக லிங்கம் ஒன்றை கர்ப்ப சிருஷ்டி செய்கிறார் சுவாமி. அந்த புனித லிங்கத்தை பூக்களால் அர்ச்சித்து பூக்களுக்கு மத்தியில் அதை தாம்பாளத்தில் வைத்திருக்கிறார்கள். மறுநாள் அதை சுவாமி பார்த்த பிறகு கோவிலில் சேர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த அர்ச்சகருக்கு இதை தானே வைத்துக் கொள்ள வேண்டுமென விபரீதமாய் ஆசைப்படுகிறார். அதே பேராசையோடு தனது விரலால் அந்த சிருஷ்டி லிங்கத்தை தொடரப் போகையில் அது அவரின் கண்முன்னே மாயமாக மறைந்து போகிறது. பதைபதைத்துப் போகிறார். உடல் நடுங்குகிறது. தான் செய்தது தவறு என அவருக்குப் புரிகிறது. சிலையாக நிற்கிறார் அர்ச்சகர். சுவாமியிடமிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அவரின் பயம் இன்னும் அதிகமாகிறது. இதயத் துடிப்பு உடுக்கை ஒலியாக சப்தமிடுகிறது. 

சுவாமியிடம் வருகிறார்.. சுவாமியின் காலடியில் அந்த லிங்கம் அமர்ந்திருக்க.. அவரை நோக்கியபடி சுவாமி "இந்த மகாலிங்கம் இங்கே வரவேண்டிய காரணம் என்ன?" என்று கேட்டதுதான் தாமதம்... ஓ வென வெடித்து அழுகிறார் அந்த அர்ச்சகர்... இதுவரை கலர் பூக்களால் சுவாமியை அர்ச்சித்தவர் அந்த நொடியே கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சனை செய்கிறார். மனித குலத்தையே மீண்டும் மீண்டும் மன்னிப்பதால் தான் மீண்டும் மீண்டும் அவதரிக்கும் சுவாமி அந்த அர்ச்சகரை மன்னிக்க மாட்டாரா என்ன!!


சுவாமி சாண்டூர் சமஸ்தானத்துக்கு விஜயம் தந்து அங்குள்ள அரச குடும்பத்திற்கு அருள் பாலிக்கிறார். அந்த தரிசன வைபவத்தை எல்லாம் கண் குளிர இதயம் மிளிர தரிசிக்கிறார் இந்திராதேவியார். ஆனால் அந்த சமயத்தில் ... மேலும் சில நாட்கள் புட்டபர்த்தியில் தங்க அனுமதி கேட்டபோது சுவாமி அனுமதிக்கவில்லை... சுவாமி அம்மையாரை பார்க்க மறுத்து அவரை மறுத்தும் வந்தார். சுவாமியின் விநோத செய்கை புரியவில்லை. சரி என அமெரிக்காவுக்கே திரும்பிய அந்த நாள் இந்திராதேவியாரின் தாய் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகி... அடுத்த நாளே உயிரும் பிரிகிறது. அவரது தாயோடு அவரை இருக்க வைத்து .. உயிர் பிரியும் இறுதி நொடிகளில் அருகே அமர வைக்கவே சுவாமி அவ்வாறு நடந்து கொண்டார் என தெள்ளத் தெளிவாகப் புரிந்த போது வழிந்த வலது கண் நீர்த்துளி சுவாமிக்காகவும்... இடது கண் நீர்த்துளி தனது தாய்க்காகவும் வழிந்த வண்ணம் இருந்தது..

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் :171 / ஆசிரியர் : எஸ் லட்சுமி சுப்ரமண்யம்) 


சுவாமி தரும் அனுபவங்கள் மட்டுமே நம்மோடு ஜென்ம ஜென்மமாய் தொடரக் கூடியவை! மற்ற சம்பவங்கள் அனைத்தும் அலையில்  குமிழிகள் எழுதும் அர்த்தமற்ற கோடுகளே! சுவாமி ஒருவரே உறுதியாய் இறுதியாய் நம்மோடு உடன்வரக் கூடியவர்... மற்ற அனைத்தும் மாயத் தோற்றங்களே... இந்த சத்தியம் புரியப் புரிய மனம் சிலையாகிவிடுகிறது.. நமது வாழ்க்கையோ சுவாமியின் காலடியில் கலையாகிவிடுகிறது! 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக