1918ம் ஆண்டு மஹாசமாதி அடைந்த ஷீரடி பாபா, தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு , மீண்டும் தோன்றப் போவதாக கூறினார். அவ்வண்ணமே 1926ம் ஆண்டு சத்யசாயி பாபாவின் திரு அவதாரம் நிகழ்ந்தது. அவரே இவர் என்பதை விளக்கும் இன்னுமொரு சம்பவத்தைக் காண்போம்...
ஆல்ப் (Alf Tidemand-Johannessen) என்பவர் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவில் ஒரு கப்பல் முகவர் நிறுவனத்தை நிறுவி, மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்திவந்தார்.
பிப்ரவரி 25ம் நாள், 1965ம் ஆண்டு ஆல்ப் அவர்கள் ஷீரடி பாபாவின் சமாதி மந்திரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி, சற்றே உயரக் குறைவாகவும் நீல நிற மேல் சட்டையும் அணிந்திருந்த ஒருநபர் வந்தார். ஆல்ப் அவர்களுக்கு அவர் அறிமுகமாகாத புதியவர். சகஜமாக ஆல்ப்பிடம் உரையாடிய அவர், "நீங்கள் சத்யசாயி பாபாவை சந்தித்ததுண்டா? அவர் இப்புவியில் அவதரித்துள்ள இறைவனாகும். அவர் மார்ச் 14 ம் தேதி பம்பாய் வருகிறார். அவரை நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டும். இது அவரது கரத்தில் உற்பவித்த விபூதி, இது அவருடைய புகைப்படம்" இவ்வாறு கூறிய அவர் ஒரு வெள்ளி டப்பியிலிருந்து கொஞ்சம் விபூதியை எடுத்துக் கொடுத்து, பிறகு நீல நிற சட்டையணிந்த பாபா படம் கொண்ட ஒரு லாக்கெட்டையும் கொடுத்தார்.
ஆல்ப் அவர்கள் திகைப்போடு அந்த புதியவர் கொடுத்தவற்றை பெற்றுக் கொண்டு, பாபாவின் பம்பாய் விஜயம் பற்றி பலரிடம் விசாரித்தும், யாருக்கும் அதுபற்றி தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து, ஒருவார காலம் ஆனபின்தான், பாபாவின் பம்பாய் விஜயம் உறுதிப் படுத்தப்பட்டது.
ஆம். மார்ச் 14 ந்தேதி பகவான் பாபா பம்பாய் எழுந்தருளினார். குழுமி இருந்த பக்தர்களுக்கிடையே நடந்து வந்து தரிசனம் கொடுத்த பாபா , அங்கு அமர்ந்திருந்த ஆல்ப் அவர்களைப் பார்த்து ஒரு அறிமுகப் புன்னகையை சிந்தினார். பிறகு ஆல்ப் , பாபாவின் நேர் முகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரைப் பார்த்த பாபா "நினைவிருக்கிறதா அந்த சந்திப்பு. ? இனி உனக்கு நான் எப்போதும் வழிகாட்டியாக இருப்பேன்" என்று கருணையுடன் உறுதி அளித்தார்.
இந்த சம்பவத்தை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவின்போது ஆல்ப் அவர்கள் மனநெகிழ்ச்சியுடன் விவரித்தார். மேலும் அவர் கூறியதாவது "நான் பாபாவைச் சந்திக்கும் முன்னரே அவர் என்னை அறிவார்." மேலும் தன்னை பாபா எவ்வாறு ஷீரடியில் இருந்து பாம்பேவிற்கு வழி நடத்தினார் என்றும் விவரமாக பகிர்ந்தார்.
ஆதாரம்: Shirdi Sai and Sathya Sai are One and the Same By Arjan D. Bharwani
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
🌻சாயி பக்தர்களாகிய நம்மை, தமது அனைத்து அவதாரங்களிலும் உடன் அழைத்து வருபவர், நமது இதய தெய்வம் கருணாமூர்த்தியான பாபா அல்லவா. நாம் அவரை அறியும் முன்னே அவர் நம் ஏழ் பிறப்பையும் அறிந்தவராவார். இப்பிறவியில் நாம் அவரது தரிசனம் பெற்றது நமது தவப் பயனே அன்றோ. 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக