சுவாமியின் சிருஷ்டி தான் இந்தப் பிரபஞ்சமும் நம் வாழ்க்கை சம்பவங்களும் எனும் போது.. கூடுதலாக பேரன்பின் காரணமாக சுவாமி அளித்தும்வரும் அற்புத சிருஷ்டியின் மகிமையை கண்ணுக்கு கண் ... இதயத்துக்கு இதயம் பலமுறை உணர்ந்த பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திரா தேவி அம்மையார் பெற்றுக் கொண்ட சிறப்பு சிருஷ்டி வைரம் பற்றிய சுவாரஸ்ய பதிவு இதோ...
அமெரிக்கா திரும்பிவிடுகிறார் இந்திராதேவி அம்மையார். சில நாட்களில் சுவாமி பேரன்போடு வரவழைத்துக் கொடுத்த சிருஷ்டி பதக்கம் காணாமல் போய்விடுகிறது. பதை பதைத்துப் போய்விடுகிறார் அம்மையார். தேடாத இடமே இல்லை.. எங்குமே கிடைக்கவில்லை.. இந்த உலகத்திலேயே சுவாமி மட்டுமே சிருஷ்டிப் பொருட்களை வழங்குகிறார். இதில் எந்த வித வியப்பும் இல்லை.. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.. காரணம்.. சுவாமியே அனைத்துக்குமான சிருஷ்டி கர்த்தா... இந்த உலகத்திற்கு மட்டுமல்ல எந்த உலகத்திற்கும் சுவாமியே பரப்பிரம்மம் என்பதால் தான் சுவாமி கை அசைத்து வரவழைக்கின்ற பல சிருஷ்டி லீலைகள் இந்த உலகத்திற்கானதாகவே தோன்றுவதில்லை... அந்த தெய்வீக சிருஷ்டிப் பொருட்களில் பூலோக சாயலே இருந்ததில்லை... பூலோக சிற்பி செதுக்கும் பொருட்களுக்கும்.. சுவாமியின் சிருஷ்டிப் பொருட்களுக்கும் வித்தியாசம் இருக்கும்.. நம்மால் அதை உற்று பார்க்கும் போதே உணர முடியும்! சுவாமி ஒரு சிலா ரூபத்தை சிருஷ்டிக்கிறார் என்றால் அவைகளில் பல யுகங்கள் கடந்தவை.. சில கிரகங்கள் கடந்தவை... இதனை முழுதாய் உணர்வதற்கு நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.. நாம் மனதை கடந்து செல்லும் போது தான் பிரபஞ்சம் கடந்து செல்லும் ஸ்ரீ சத்ய சாயி பரப்பிரம்மத்தை ஓரளவுக்காவது உணர முடியும்..! அப்பேர்ப்பட்ட ஒரு சிருஷ்டி பதக்கம் தொலைந்து விட்டதென அம்மையார் தடுமாறுகிறார்.
அம்மையாரின் கணவரோ நீ புட்டபர்த்தி செல்.. இந்த நிகழ்வே சுவாமியின் அழைப்பாக இருக்கலாம் என்கிறார். கணவரின் பேச்சை தட்டாத அந்தக் காலத்து மனைவி அமெரிக்க விட்டு பர்த்தி விரைகிறார். அங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வைபவத்தில் கலந்து கொள்கிறார்.. ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணருடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார் கொடுத்து வைத்த அம்மையார். அப்போது குழந்தைகளுக்கு தான் யோகா சொல்லித் தருகிறேனே என சுவாமியிடம் அனுமதி கோருகிறார். சுவாமி சரி என அனுமதி அளிக்க... தினந்தோறும் அம்மையார் கற்றுத்தரும் யோக கலையை மேற்பார்வையும் செய்து சுவாமி மாணவச் செல்வங்களின் மனதையும்.. அம்மையாரின் அகத்தையும் குளிர்விக்கிறார்!
அம்மையாரின் யோக சேவையை பாராட்டி சிருஷ்டி மோதிரம் அளிக்கிறார். அதில் நீலக்கல்லை சுற்றி சிறு வைரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன... அதை எண்ணிப் பார்க்கையில் ஏழு சிறு வைரங்கள்... உடம்பில் உள்ள சக்கரம் ஏழு... இந்த ஏழும் அந்த ஏழை ஒளிரச் செய்வதற்காக சுவாமி தந்த சிருஸ்டி மோதிரம். யாராருக்கு என்னென்ன எப்போது தரவேண்டும் என சுவாமிக்கு நன்கு தெரிகிறது! நாம் ஒன்றை கேட்டுப் பெறுவதை விட சுவாமியே ஒன்றை நமக்கு வழங்கி அதை நாம் பெறுவதிலேயே மேன்மையும் நன்மையும் அடங்கி இருக்கிறது! ஏழு நற்பண்புகளின் அடையாளமாக இது ஒளிவீசும்!" என சுவாமி ஆசீர்வதிக்கிறார்!
1939 ஆம் ஆண்டு சீனாவுக்கு போயிருந்த போது அங்கு நிகழ்ந்த யோகாப்யாச வகுப்பில் அம்மையார் ஏற்ற விரதம் நகையே அணிவதில்லை என்பதே.. அதிலும் கல் வைத்த மோதிரமாக இருக்கிறதே... சுவாமி உருவம் பதிந்திருந்தால் நன்றாக இருக்குமே என சிருஷ்டி மோதிரத்தை கையில் வைத்து யோசிக்கிறார்...
மறுநாள் காலை தரிசனத்தில் நெருங்கி வரும் சுவாமி அந்த சிருஷ்டி மோதிரத்தை கேட்டு வாங்கி "அது உனக்கு ஏற்றதாக இல்லை" என கூறுகிறார்.. குழம்பிய படி மோதிரத்தை கொடுத்த அம்மையார் சுவாமியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்... சுவாமி கோபத்தில் இருக்கிறாரா.. ? ஏன் இவ்வாறு மறுபடியும் கேட்டு வாங்கிக் கொண்டார்? என் மேல் ஏதும் தவறா? என யோசனைகளையும் கடந்து மனம் நிசப்தமாய் அடுத்து நிகழப்போகும் நொடிகளுக்காக பரபரப்புடன் காத்திருக்கிறது.. சுவாமி வெகு கருணையோடு அதை வாங்கி.. தனது திரு உதட்டால் ஊதுகிறார்... கரம் என்னும் கர்பப்பையால் சுவாமிக்கு பிறந்த அந்த சிருஷ்டி மோதிரம் இப்போது அவரின் மூச்சுக் காற்றையும் பெறுகிறது... பெற்ற உடன் நீலக்கல்லும் .. சுற்றி ஏழு வைரக்கற்களும் மறைந்து போக ஒரே ஒரு வைரக்கல் மட்டுமே இருக்கிறது..
"நகை அணிவதே இல்லையே எப்படி இதை அணிவது... மேலும் என் உருவம் பதிந்திருக்கவில்லையே என நினைத்தாய் அல்லவா... இந்த வைர மோதிரத்தை அணிந்து கொள்.. இதிலும் நான் இருக்கிறேன்...என்னை தரிசனம் செய்து கொள்ளலாம்" என்று தருகிறார்..
அதை அணிந்து கொண்டு அம்மையார் அந்த வைர மோதிரத்தை உற்றுப் பார்க்க அதில் சுவாமி உருவம் பிரகாசமாக காட்சி தருகிறது.. கை நடுங்குகிறது... பரவசப்படுகிறார்.. சுவாமி இதை வெறும் வைரக்கல் மோதிரம் என்று மட்டும் தானே நினைத்திருந்தேன் என நெகிழ்ந்து விடுகிறார்... "ஆமாம் .. மற்றவர்களுக்கு இது வெறும் வைரம் தான்... உனக்கு எப்போதெல்லாம் என்னை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறதோ.. இதனை உற்றுப் பார்.. நான் தெரிவேன்!! நீ முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்லும் போது.. இதனை அணிந்து கொள்.. ஒரு ஆபத்தும் வராது" என அருள் உத்தரவு அளிக்கிறார்!
"சுவாமி... உங்கள் உருவம் பதித்த பதக்கம் தொலைந்துவிட்டதென தவித்திருந்தேன்.. எனக்கு இப்படி ஒரு பரிசை வழங்கி இருக்கிறீர்கள்.. எப்படி நன்றி சொல்வது?!" என ஆழ்ந்த உணர்வில் பேசுகிற போது..
"அப்படி நிகழ்த்தியதால் தான் நீ இங்கு வந்து மாணவர்களுக்கு யோகக் கலை கற்று கொடுத்தாய்... அது எங்கும் தொலையவில்லை" என சுவாமி கையை உயர்த்தினார் .. அமெரிக்காவில் தொலைந்துபோன அந்தப் பதக்கம் இந்திரா தேவி அம்மையார் மடியினில் விழுந்தது. அம்மையார் மிகப் பரவசத்தோடு... "ஓ.. இதற்கு எல்லாம் சுவாமி தான் காரணமா?" என பிரபஞ்ச சம்பவத்தின் காரண கர்த்தா சுவாமியே என்பதை அணு அணுவாய் உணர்ந்து கரைந்து அனுபவிக்கிறார்!!
(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 149 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)
சமஸ்த லோகத்தின் அன்றாட சம்பவங்களை நடத்துவது சுவாமி தான்.. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது வெறும் முதுமொழி மட்டுமல்ல அனுபவ மொழி! வாழ்க்கை சம்பவங்களை நடத்துவது மனிதன் அல்லாத போது அவன் ஏன் ஒவ்வொன்றுக்கும் வருத்தப்படவோ.. பயப்படவோ வேண்டும்? இந்தப் பேருண்மை புரிந்துவிட்டால் சுவாமி மேலான சரணாகதி சகஜமாகிவிடுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக