தலைப்பு

வியாழன், 26 டிசம்பர், 2019

பாகம் 2 | ஸ்ரீமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


இன்னிசை அரசி M.S. அவர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதம்:

மன அமைதி குன்றி சற்றே கண் மூடி அமர்ந்திடும் போது காற்றினிலே ஒரு கீதம் அது கண்ணனின் மோகன கீதமாக சற்றே வந்து காதில் விழுகிறது. குறை ஒன்றும் இல்லாத மறை மூர்த்தி கண்ணன் கோவிந்தனின் நாமமும் காதில் கேட்க நமது உள்ளம் பரவசத்துடன் அமைதி அடைகிறது.

ஆம் இசைக்குயில் பாரத ரத்னா M.S.சுப்புலட்சுமி அம்மாவின் இசைக்கு மயங்காதார் யார். இசையின் மூலம் கிட்டிய செல்வங்கள் அத்தனையும் நற் பணிகளுக்கு வாரி வழங்கி, தன் வாழ்வில் எளிமையைக் கடைபிடித்த உன்னத ஜீவன் அல்லவா M.S அம்மா.

காஞ்சி மாமுனிவர் கட்டளையை ஏற்று கலியுக அவதாரமாம் சத்ய சாயி பாபாவை காண வந்த M.S. அம்மா, பிறகு அண்ணலின் பொன்னடியில் சரண் அடைந்தார். பலமுறை பர்த்தி சென்று பகவானைத் தரிசித்ததுடன் தன் இசை வழிபாட்டால் ஐயனை மகிழ்வித்தார்.

பதிவிடும் இந்த நிகழ்ச்சியின் போது அவர் பர்த்தி சென்றது அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்திலிருந்து மீள பாபாவின் கருணையை வேண்டி.

அழும் குழந்தையை மேலும் அழவிட்டு பின் அது கேட்ட இனிப்பை கொடுத்து சிரிக்க வைப்பது தாயின் விளையாட்டல்லவா. ஆயிரம் தாய்க்கு சமமான அன்னை பாபாவும் அது போன்ற ஒரு ஆனந்த திருவிளையாடலைச் செய்தார். வாருங்கள் நாமும் அதை அனுபவித்து ரசிக்கலாம்.

நமது அன்பிற்குரிய ஸ்ரீமதி எம்.எஸ்.அம்மா அவர்களின் அழகிய வாழ்க்கையில் நடந்த கீழ்காணும் நிகழ்வினைப் பற்றி திரு. ரா. கணபதி கூறியது. (ரா. கணபதி அவர்கள் பக்தி இலக்கியத்தில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளான ‘தெய்வத்தின் குரல்’ – காஞ்சி பரமாச்சார்யா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றியதும் மற்றும் ‘அன்னை’ – சாரதாதேவியாரைப் பற்றியதும் ஆகும்.) 

ஒருமுறை திருமதி. ராதா விஸ்வநாதன் (சதாசிவம் மற்றும் அவரது முதல் மனைவியான அபிதகுசாம்பாளின் மூத்த மகளாவார். சதாசிவம் அவர்கள், அபிதகுசாம்பாள் மறைவிற்குப் பின்னர் எம்.எஸ் சுப்புலட்சுமியை மணந்து கொண்டார். அதனால் இவரை எம். எஸ். சுப்புலட்சுமி அம்மா தன் மகளாக வளர்த்து ஆளாக்கினார். இவர் எம்.எஸ்ஸுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் பாடுபவர்) கடும் நோயினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்தார்; மருத்துவர்களாலும் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். உடனே சதாசிவம் குடும்பத்தினர், தங்களது ஒரே புகலிடமான புட்டபர்த்திக்கு கோமாவில் இருந்த ராதாவுடன் விரைந்தனர்.

மகள் ராதாவுடன் எம்எஸ் சுப்புலட்சுமி அம்மா 

பகவான் பாபா வழக்கம்போல் அனைவருக்கும் தரிசனத்தை அளித்தபின், சதாசிவம் குடும்பத்தினரை நேர்காணலுக்கு அழைத்தார். எம்.எஸ். அவர்கள் ராதாவைக் காப்பாற்றும்படி மிகத்தீவீரமாக பகவானின் கருணைக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். நேர்காணல் அறையில் நம் ஸ்வாமி வழக்கம்போல் அவரது ஆனந்த ஸ்வரூபமாகவே  இருந்தார். எம்.எஸ்ஸும், சதாசிவமும் தங்களது துயரங்களையெல்லாம் பகவானிடம் கொட்டித் தீர்த்து அவரது தயவைப் பெற முயன்றனர். ஆனால் நம் ஸ்வாமியோ அவர்களுக்கு அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கவே இல்லை. அவர் ராதாவின் ஆபத்தான நிலையைப் பற்றி மறந்துவிட்டது போன்றே தோன்றிற்று. அதோடில்லாமல் பகவான் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த ராதாவைச் சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை; அதற்கு பதிலாக எம்.எஸ். அம்மாவிடம் வரவிருக்கும் ஆல்பம் பற்றியும், மற்ற வேறு விசயங்களைப் பற்றியும் குறித்துப் பேசிக்கொண்டே இருந்ததால் அவர்களின் கவலை இன்னும் அதிகமாயிற்று.

எம்எஸ் சுப்புலட்சுமி அம்மாவுடன் திருமதி ராதா விஸ்வநாதன்

ஏற்கனவே மிகுந்த சோர்வுற்ற நிலையில், நரம்பெல்லாம் தளர்வுற்றதைப் போன்று இருக்கையில் ஒரு கடைசி அடிபோல, பாபா எம்.எஸ். அம்மாவை அவருக்குப் புகழைத்தந்தும், தனக்கு மிகவும் பிடித்ததுமான ‘குறை ஒன்றுமில்லை’ என்ற பாடலைப் பாடும்படி கேட்டார். எம்.எஸ். அம்மாவுக்கு மிகக் கடினமான நேரமாக இருந்தாலும், தன் மனதை அமைதிப் படுத்திக்கொண்டு, பாபாவின் விருப்பத்திற்கு செவிசாய்த்தார்.  பகவான் தன்னை சோதிக்கிறார் என்பதனை எம்.எஸ். நொடிப்பொழுதில் அறிந்துகொண்டார். கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டும், தன்னை முழுமையாக பகவானின் தெய்வீக விளையாட்டில் சரணாகதி படுத்திக்கொண்டும், கண்களில் கண்ணீர் கசிந்துருக பக்திப் பரவசமாய் பாடினார். பாபா தனக்கே உரிய மந்தகாசத்துடன் தலையை அசைத்து அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தார்.


அப்பாடல் முடிந்தவுடன், தன் இருக்கையினின்று எழுந்த பாபா, சுயநினைவின்றிக் கிடத்தப்பட்டிருந்த ராதாவின் படுக்கை அருகில் சென்றார். ஒரு வானம்பாடி போல எம். எஸ். பாடிக்கொண்டிருந்த பொழுதில், ராதாவின் கன்னத்தில் மெதுவாகத் தட்டி, தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை எழுப்புவதைப் போல மென்மையான, அன்பான குரலில் அவளைத் தூங்குவதற்காக கண்டித்துக்கொண்டே எழுப்பினார். அனைவரின் முன்பும் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! ராதா ஆழ்ந்த உறக்கத்தினின்று எழுந்ததைப் போல திடீரென எழுந்தார்.

சாயி பகவானுடன் எம்எஸ் சுப்புலட்சுமி அம்மா, அருகில் திருமதி ராதா விஸ்வநாதன்

அத்தகைய தெய்வீகத் தன்மையுடையது எம்.எஸ். அவர்களின் நாதோபாசனை. நாதோபாசனை என்பது ஒரு உயர்ந்த ஆன்மீக சாதனை என்றும் கடவுளையே அசைக்கக் கூடியது என்றும் கருதப்படுகிறது.

சத்ய சாயி பகவான் அன்புக்கு கட்டுப்பட்டவர். அன்பர்கள் துயர் தீர்ப்பவர். அவரை துதித்து வணங்குவோம். 

அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே
அன்பெனும் வானில் ஒளிவிடும் நிலவே
அன்பெனும் கடலில் கலங்கரை விளக்கே
அன்பினுக்கு அன்பே ஐயனே சரணம் ! 

(தொடரும்..)

முதல் பாகத்தை படிக்க... 

பாகம் 3 (நிறைவுப் பகுதி) | M.S அம்மா பாடிய சில அரிய சாயி பஜனை பாடல்களின் வீடியோக்களுக்கு

தமிழாக்கம்: பானுமதி. கே /பாலவிகாஷ் குரு, மடிப்பாக்கம் சமிதி.
உதவி: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக