தலைப்பு

சனி, 28 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 5 | பாதங்கள் தருவாய் பர்த்தீசா! - உமேஷ் 🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் ஃபிஜியன் உமேஷ் அவர்களின் அனுபவங்கள்! 

மன்பதை காக்கும் சாயி மாணிக்கப் பாதம் தானே!
துன்பத்தைப் போக்கும் சாயி தூமணிக் கரங்கள் தானே!
அன்பதைப் பொழியும் அந்த ஆனந்த மூர்த்தம் தானே!
இன்பத்தைப் பொழியும் சாயி ஈடிலாக் கருணை தானே!

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பனில் உள்ள கரண்டேலில் அற்புதமானதொரு சாயி சக்தி செயல்படுகிறது. சென்ட்டர் என்றும் சமிதி என்றும் பதிவு செய்து கொள்ளாத ஒரு சாயி பக்தர் குழு அங்கே நிதானமாய் அமைதியாய் இயங்குகிறது. வியாழக்கிழமைகள் தோறும் நடக்கும் பஜனைகளில் சுவாமியின் படங்களிலிருந்து பூக்கள் 'பட்பட்'டென்ற சப்தத்துடன் கீழே விழுவது ஆனந்தமான சாயி லீலை. கராஜ் ஒர் அழகிய சத்யசாயி கோயிலாகியிருக்கிறது.

சுவாமி பாபாவின் வெண்பட்டு அங்கியணிந்த ஆளுயரப் படங்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன. சுவாமி சிரித்தபடி நிற்கிறார். ஒயிலோடு திரிபங்க பாவத்தோடு கடற்கரை இருட்டில் பளீரென்று நடந்து வருகிறார். மிகப் பெரிதாய் சுவாமி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கு சுவாமியின் மிக விசாலமான தெய்வத் திருவிழிகள்;  'when you look at me I look at you' என்ற வாசகம் அதன் கீழ் பளீரிடுகிறது. சுற்றிலும் சர்வ தெய்வங்களும் சர்வாலங்காரத்துடன்...

சுவாமியின் மார்பளவுச்சிலை விபூதியில் குளித்து மூழ்கி விபூதி பொழிந்தபடி இருக்கிறது. சுவாமி விபூதிக்கு அங்கே அப்படியொரு வாசம். சுவாமி ஆசீர்வதித்துத் தந்த பாதங்களில் விபூதி படிந்திருக்கிறது, துர்கா தேவியின் திருமேனியிலிருந்து மஞ்சள் அபிஷேகம் நடப்பதைப் போலப் பொழிந்து கொண்டிருக்கிறது. சுவாமி பாபாவின் அத்தனை ரூபங்களிலிருந்தும் அமிர்தத் தாரைகள் படிந்து வழிகின்றன.

 சாயி பக்தர் ஃபிஜியன் உமேஷ், சுவாமிக்கு ஆனந்தமாய்ப் பணிகள் செய்து வருகிறார். சுவாமி எனக்கு எத்தனையோ உள்முக மாறுதல்களைத் தந்திருக்கிறார் என்கிறார் உமேஷ். ஐந்து சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் நிறைந்த பெரிய குடும்பத்தில் பிறந்தேன். தெய்வ நம்பிக்கையுள்ள குடும்பம் என்னுடையது. இந்து மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட குடும்பம். எல்லாத் தெய்வங்களையும் வழிபடுவதுண்டு. சிவ வழிபாடு பிரதானமாயிருந்தது. ராம்பால்-பகவந்தி பெற்றோர். பக்தியில் கனிந்தவர்கள். எளிய இயல்பான பக்தியுள்ள பண்பாடும் ஒழுக்கமும் நிறைந்த வளர்ப்பு உமேஷின் மனதில் ஸ்திரமானதொரு கட்டுப்பாட்டை பக்குவத்தை வளர்த்து வந்திருக்கிறது.


🌷கனவில் வந்த பாதங்கள்:

உமேஷிடம் சத்யசாயி வழிபாடும் ஈடுபாடும் எப்போதிருந்து தொடங்கியது என்று கேட்டபோது சொன்னார். என்னுடைய 34 ஆவது வயதில்தான் சாயிபாபாவை அறிந்துகொண்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் காட்டிலாகா அதிகாரி, சாயிபக்தர் அவருடைய வீட்டு பஜனைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். அங்கிருக்கும் சுவாமி படங்களில் குங்குமம் அமிர்தம் விபூதி பொழியும் அதிசயம் பிரமிப்பாயிருந்தது, மகிழ்ச்சியாயிருந்தது. கனவுகள் மூலமே சுவாமி எனக்குள் நிறைய மாற்றங்களைப் புரிந்திருக்கிறார். சாயிபாபாவின் ரூபத்தை படத்தில் கூடப் பார்த்திராத சமயத்தில் ஒரு கனவு வந்தது. பலமாகக் காற்று வீசுகிறது. அந்தக் காற்றில் தெய்வப்பாதங்கள் வெகு அழகோடு வந்து காட்சியாகின்றன. பாதங்களைப் பிடிக்கப் போகும்போது நழுவுகின்றன. தீவிரத்தோடு அந்த பாதங்களைப் பிடித்துக் கொண்டேன். என் நண்பர் ஒருவர் மூலம் நான் கனவில் கண்ட அதே பாதங்களைப் படத்தில் கண்டபோது சத்ய சாயிபாபாவின் திருப்பாதங்களே அவை என்பதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது.முதலிலேயே சுவாமியின் பாதங்களைப் பிடித்துவிட்ட உமேஷுக்கு நேரில் சுவாமியிடம் எண்ணற்ற முறை பாதநமஸ்காரம் செய்து கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஓ அது எத்தனை முறை எத்தனை முறை சுவாமியின் பூப்போன்ற பாதங்களில் விழுந்து தொழும் அற்புத நல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லிசொல்லி மகிழ்கிறார்.🌷வழிகாட்டி:

 விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி உமேஷ்.விமான அதிகாரியும் இந்திராகாந்தி விருது வாங்கியவருமான சுரேந்திர மோகன் என்ற நண்பரோடுதான் முதன்முதலில் சுவாமியைப் பார்ப்பதற்குச் சென்றேன். டெல்லியிலிருந்து பயணப்பட்டோம். பெங்களூர் சென்று சேரும்போது இரவு பத்து மணியிருக்கும்.வொயிட்ஃபீல்டு ஆசிரமத்திற்கு சென்று அங்கு தங்குவதற்கு இடம் தேடத் தொடங்கினோம். அந்த நேரத்தில் எப்படி இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்போது எங்களை நோக்கி ஒரு முஸ்லீம் பெரியவர் வந்தார். சுமார் 60 வயதிருக்கும் அவருக்கு. உங்களுக்கு தங்குவதற்கு இடம் வேண்டுமா என்று கேட்டார். ஆமாம் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆசிரமத்திற்கு வெளியில் ஒர் இடம் இருக்கிறது வாருங்கள் அங்கு தங்கலாம் என்று அழைத்துச் சென்றார். மூன்று படுக்கைகள் கொண்ட அடிப்படை வசதிகளோடு கூடிய அறை அது. அங்கிருந்த குழந்தைகளை யெல்லாம் வேறிடத்திற்குப் போகச் சொல்லிவிட்டு எங்களை அங்கே தங்கச் சொன்னார். என்ன ஏது இது யார் இருப்பிடம் எப்படி இந்தப் பெரியவர் திடீரென்று வந்தார். இடம் தந்தார் ஒன்றும் புரியவில்லை. இடம் உணவு என்று எல்லா ஏற்பாடுகளோடும் அங்கே தங்கினோம். காலையில் எழுந்து தரிசனத்திற்குப் போகுமுன் அந்தப் பெரியவரைப் பார்க்க முடியுமா என்று தேடினோம். எங்களுக்கு இடம் தருவதற்காகவே வந்தவர் என்பது போல் அதன்பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. பின்னாளில் தான் அது புரிந்தது.  ஷீரடி பாபாவாய் வந்த சத்ய சாயிபாபா! ஷீரடி சாயியிலிருந்து சுவாமி வழிகாட்டுவதும் இடம் காட்டுவதும் சாயிபாபாவிடம் ஆற்றுப்படுத்துவதும் சாயி பக்தர் பலரின் ஆரம்பகால அனுபவங்களாக இருப்பது ஆச்சரியமான ஒற்றுமையாய் இருக்கிறது


🌷முதல் தரிசனம்:

 காலையில் 6 மணிக்கு சுவாமி தரிசனத்திற்குப் போனோம். வரிசை வட்டவடிவமாக அமைந்திருந்தது. பெண்களும் ஆண்களும் இடப்புறமும் வலப்புறமுமாக அமர்ந்திருந்தனர். சுவாமியிடம் கடிதம் எழுதித் தரச் சொல்லி, பக்கத்திலிருந்த ஒரு பக்தர் என்னிடம் சொல்லியபடியிருந்தார். என்ன எழுதுவது என்று புரியவில்லை. எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற வாசகத்தை பிரார்த்தனை செய்தபடி கடிதத்தில் எழுதி வைத்துக்கொண்டேன். பாபா வந்தார். தரிசனத்திற்கு பாபா வரும் போதே தெய்விக அதிர்வுகளை முழுமையாக உணர்ந்தோம்.


திடீரென்று பாபா அங்கு வீல்சேரிலிருந்த ஹங்கேரி பக்தரிடம் வந்தார். 'எழுந்திரு'ஸ்டாண்ட் அப்' எழுந்து நட என்று ஆணையிடும் குரலில் சொன்னார். அந்த பக்தர் ஆச்சரியமும் பயமும் சேர சுவாமியின் உத்தரவை நிறைவேற்ற பிரயாசையுடன் எழுந்தார். இப்படியும் அப்படியுமாக நடந்தார். நடந்த அதிசயத்தைத் தாங்க முடியாமல் அழுகை தாளாமல் அப்படியே சுவாமியின் பாதங்களில் விழுந்தார். சுவாமி அவரிடம் புன்னகையோடு சொன்னார். இனி உனக்கு சக்கர நாற்காலி தேவையில்லை என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டு புன்னகையோடு தரிசனத்தைத் தொடர்ந்தார். அங்கிருந்த பக்தர்கள் 'சாயிராம் சாயிராம்' என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு குரல் எழுப்பினர். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் பக்கத்திலிருந்த பக்தர் நடந்த அதிசயத்தை சுவாமி மகிமையை எனக்கு எடுத்துச் சொன்னார். வியப்போடும் பக்தியோடும் சுவாமியின் மேல் பொங்கிவரும் அன்போடும் சுவாமிக்காகக் காத்தபடி இருந்தேன்.சுவாமி என்னைத் தாண்டி பெண்கள் பக்கம் சென்று கடிதம் வாங்கிக் கொண்டிருந்தார். மறுபடியும் சுவாமி திரும்பி எங்கள் பக்கம் வந்தார். என் முன் வந்து நின்று நீட்டிய கடிதத்தை அன்போடு வாங்கிக் கொண்டார். ஆசீர்வதித்தார். சுவாமியின் சின்னஞ்சிறு பாதங்களைப் பற்றிக்கொண்டேன். ஆனந்தமாக வணங்கி வழிபட்டேன். கனவில் பிடித்த பாதங்களை நிஜத்தில் பிடித்துக் கொண்டு விட்டோம் என்ற உணர்வில் நெகிழ்ந்து போனேன். அதன் பிறகு சுவாமி அங்கிருந்து நகர்ந்து வேறு பக்கம் சென்று விட்டார். சுவாமியிடம் கடிதம் எழுதிக் கொடு என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த பக்தர் அழத்தொடங்கினார். என்னிடம் கடிதம் வாங்கி ஆசீர்வதித்துப் பாத நமஸ்காரம் தந்த சுவாமி அவரைப் பார்க்கக்கூட இல்லை. எனக்கு அகங்காரம் இருந்ததால்தான் பாபா என்னிடம் வரவில்லை பார்க்கவில்லை என்று நெடுநேரம் புலம்பிக் கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டசாலி நீ என்று என்னைச் சொல்லிக்கொண்டிருந்தார். சுவாமி அடிக்கடி சொல்லும் வாக்கு இது 'When you have ego I go'.


வொயிட்ஃபீல்டில் சுவாமியை தரிசித்தபிறகு ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிவிட்டேன். சுவாமி தரிசனத்திற்கும் ஸ்பரிசத்திற்கும் பிறகு இனம்புரியாத சக்தியொன்று எனக்குள் பரவத் தொடங்கியது. இங்கு நானும் என் மனைவியும் சாயி பஜன் நாராயண சேவையைத் தொடங்கினோம். முதியோர் இல்லங்கள் மருத்துவமனைகளில் சர்வீஸ் செய்யத் தொடங்கினோம். அன்பும் சேவையும் சுவாமியின் திவ்யப் பிரசாதங்களாய் வளர்ந்தன. சுவாமியை தரிசிக்க புட்டபர்த்திக்கும் வொயிட்ஃபீல்டிற்கும் அடிக்கடி வரத் தொடங்கினேன்.

இங்கு ஃபிஜியிலிருந்து வந்து வாழும் ஒரு முதிய பக்தையின் வீட்டில் சாயி வழிபாடு தீவிரமாக நடப்பதுண்டு. அங்கு எல்லாத் தெய்வங்களும் நிறைந்திருக்கும். அந்த வீடு பூரணமான கோயிலாகவே இருக்கும். சுவாமியின் ரூபத்தில் மட்டுமல்லாமல் எல்லாத் தெய்வ ரூபங்களுக்குள்ளிருந்தும் குங்குமம் விபூதி அமிர்தம் வந்து கொண்டேயிருக்கும். இங்கு கிண்ணத்தில் நைவேத்யமாக வைக்கப்படும் பாலை நிலத்தைப் பிளந்து கொண்டு மூன்று நாகங்கள் வந்து குடித்துவிட்டுப் போகும்! நாகசாயியின் தரிசனமாக அது, கண்டவரை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கு அடிக்கடி செல்வோம். வழிபட்டு வருவோம். ஒருமுறை தன் மகளோடு அங்கு வந்த  நண்பர் அந்தக் கோயில் மூடியிருக்கவே என் வீட்டிற்கு வந்தார். எங்கள் வீட்டில் சுவாமியின் நின்ற கோலத் திருவுருவங்களில்  ஒரு ரூபத்திலிருந்து அமிர்தம் கொட்டத் தொடங்கியது. என் நண்பரின் மகள் வழியும் அமிர்தத்தைப் பிடித்தபடி அந்த ஆச்சரியத்தைக் காட்டி எங்களுக்கு குரல் கொடுத்தாள். அதுதான் பாபா இந்த வீட்டில் செய்யத் தொடங்கிய முதல் லீலை. மனம் இன்னும் இன்னும் சுவாமிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.


🌷வழிபாடு தொடங்கியது:

 22 வருடங்களுக்கு முன்பு மைக்ரேட் ஆகி ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்தேன். சுவாமியின் அழகிய படங்களையும் விக்ரகங்களையும் சர்வ தெய்வங்களோடும் வைத்து வழிபடத் தொடங்கினோம். சத்சங்கத்தோடு வியாழன்தோறும் இனிய பஜனைகள் நடக்கத் தொடங்கினோம். சுவாமியின் விக்ரகத்திலிருந்து விபூதி பொழியத் தொடங்கியது. சுவாமியின் கேசமெல்லாம் விபூதியில் குளித்து விபூதிக் குவியலை வளர்க்கத்தொடங்கியது. துர்க்கையின் விக்கிரகத்திலிருந்து மஞ்சள் பொழியத் தொடங்கியது. சுவாமிக்கு இது ஒரு அழகிய கோயிலாக உருவெடுத்தது. நிறைய பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்ள அங்கு வரத் தொடங்கினார்கள்.


🌷கனவுகள்:

 உமேஷுக்கு சுவாமி கனவில் வந்து புரியும் ஆசீர்வாதங்கள் அனேகம். சுவாமி கனவில் உமேஷுக்கு மோதிரத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். சுவாமி எங்களை மந்திருக்குள் அழைத்துச் செல்வதாகவும் பேட்டி தருவதாகவும் கனவு வருகிறது. பேட்டியின் போது உமேஷின் தலை முழுவதும் ஷவரின் நீர்ப் பொழிவாய் விபூதி பொழிகிறது. அதை் பார்த்துவிட்டு சுவாமி சிரிக்கிறார். சாக்லேட் தருகிறார். பொற்சங்கிலி தருகிறார்.கனவில் சுவாமியின் அருட்பொழிவு உமேஷுக்கு அதிகம். வருடத்திற்கு மூன்று முறை யாவது சுவாமி தரிசனத்திற்கு புட்டபர்த்திக்குப் போய்விடுவேன் என்கிறார் உமேஷ்.


ஒரு கனவில் முழுமையாக சிவனின் தோற்றத்தில் சூலாயுதத்தோடும், புலித்தோலாடையோடும் சுவாமி வந்தார். குல்வந்த் ஹாலில் சிவனாகவே எனக்குக் காட்சியளித்தார். பிறகு மந்திருக்குள் அழைத்துச் சென்றார். இன்னொரு முறை ஒரு கனவு தீயசக்தி ஒன்று பெண் வடிவில் வந்து என்னை பலமாக நெருக்கி மூச்சுமுட்ட அழுத்துகிறது. திணறுகிறேன். சுவாமி வெண்ணிற அங்கியில் வீட்டின் மேல் மாடியிலிருந்து வேகமாய் விபூதி பொழிந்தபடியே கீழே வந்து நின்றார். தீய சக்தி விட்டுவிட்டு ஓடிவிட்டது. திரும்பவும் சுவாமி மெல்ல நடந்து பூஜையறைக்கு வந்தார். மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார்.

புட்டபர்த்திக்குப் போகும் போது ஒவ்வொரு முறையும் முதல் வரிசையிலேயே அமரும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. ஒருமுறை நாங்கள் தங்கிய ஏழு நாட்களும் முதல் வரிசையிலேயே அதே இடத்தில் அமர்ந்து தரிசனம் செய்யும் பாக்கியத்தை சுவாமி தந்தார். எண்ணற்ற முறை பாபாவிடம் பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்ட அதிர்ஷ்டசாலி நான் என்று சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் இந்த சாயி பக்தர்.


🌷சாயி லீலா:

பழம் பக்தை சாயி லீலா அம்மாவோடு சென்றபோதெல்லாம் சுவாமி தரிசனம் ஆனந்தமாகக் கிடைத்திருக்கிறது என்ற உமேஷ் அந்த பக்தையைப்பற்றிய பழைய புதிய பின்னணியை விவரித்தார்.

ஈஸ்வரம்மாவின் தோழியும் அவருக்கு சேவை செய்தவரும்  ஈஸ்வரம்மாவின் சகோதரியோடு நட்பு கொண்டவருமான சாயி லீலா சீரடிசாயி சத்யசாயி என்ற இரண்டு அவதாரங்களிலும் பக்தி கொண்டவர். தொடர்பு கொண்டவர். சுவாமியின் மகிமையை தன்னாலான வரை பலருக்கும் புரிய வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு வந்து அவர் தங்கியிருந்த ஓராண்டில் கரண்டேலில் நடக்கும் பஜனைகளில் தவறாது கலந்து கொள்வார். சத்யசாயி பாபாவின் அன்பை வெகுவாக அடைந்த நல்லாத்மா அவர். சீரடி பாபாவோடு தொடர்பு கொண்ட பக்தை. ஷீரடிபாபா அவதாரத்தில் அவருடைய பக்தையாயிருந்த 14 வயது சிறுமி தினமும் நதிக்கரையோரம் நடனமாடியபடியே ஷீரடி சாயியின் தரிசனத்திற்குச் செல்வாராம். அப்படிச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாள் நதியின் அலைகளில் நடனமாடியபடியே,பாபா தரிசனத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோது நதியில் விழுந்து மூழ்கலானார். இரு கைகளையும் தூக்கி பாபா என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டபோது  'இல்லை இப்போது இல்லை.. இப்பிறவியில் உன் ஆயுள் முடிந்துவிட்டது. அடுத்த உன் பிறவியில் உன்னைக் காப்பாற்றுவேன் அருள் புரிவேன் என்று சீரடி பாபா சொல்லியிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமி மறைந்தாள்.


அவளது அடுத்தப் பிறவியில் சத்ய சாயிபாபாவிடம் வந்து சேர்ந்தாள். அவர் மீது பக்தி கொண்டவளாயிருந்தாள். அப்போது அவளுக்கு 14 வயதிருக்கும் ஆசிரமத்தின் தோட்டத்தில் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது தோட்டத்தின் வாயிற் கதவின் வெளியே ஒரு கிழவர் வந்து நின்றார். அங்கிருந்த ஒருவரிடம் ஒரு பென்டன்ட் தந்து அதை அந்தச் சிறுமியிடம் தந்து விடும்படி சொல்லிவிட்டு வேகமாய்ச் சென்று மறைந்து விட்டார். அவர் சீரடிபாபாவே. சீரடி பாபாவின் உருவம் பதித்த பென்டன்ட் சிறுமிக்கு சீரடி பாபாவின் அருளாசியால் வந்து சேர்ந்தது. அந்த பென்டன்ட் எந்த விதமான சிக்கல்களுக்கும் பதில் சொல்லும் தெய்வவாக்கு அருளும் அதிசயப் பொருளாயிருந்தது.சாயி லீலா தன்னிடம் இருந்த பென்டன்ட் மூலம் எத்தனையோ பேரின் கடந்தகால நிகழ்கால எதிர்கால நிகழ்வுகளைக் கூறியிருக்கிறார்.இது சுவாமி அந்தம்மையின் முன் பிறவியின் பக்திக்கு அடுத்த பிறவியில் தந்த அனுக்ரஹம். வொயிட் ஃபீல்டிலோ புட்டபர்த்தியிலோ சுவாமி தரிசனத்திற்குப் போகும்போது சாயி லீலாவிற்கு எப்போதும் முதல் வரிசை தனியிடம். சுவாமி ஆனந்தமாகப் பாதநமஸ்காரம் தருவார். சத்யசாயி பாபாவின் விசேஷ அருளாசியும் அனுக்ரஹமும் சாயி லீலாவிற்கு கிடைத்திருந்தது. 

மோயாவின் Touch of the Lord என்ற புத்தகத்திலும் சுசீலா நளாயினி போன்ற பக்தைகளின் அனுபவங்களிலும் சாயிலீலா என்ற இந்த முதிய பக்தையை அதிகம் காணலாம்.   Pink sisters ஆன மோயா டோரதி இருவரும் சீரடி பாபாவோடு  இருந்து அவர்க்குப் பணிவிடை செய்தவர்கள் என்பதை புட்டபர்த்தியில் இந்த அம்மையே சொல்லியிருக்கிறார். சுவாமியிடம் மிகுந்த பிரீதி கொண்ட இந்த பக்தை வந்து கரண்டேல் பஜனையில் பாடும்போதெல்லாம் சுவாமியின் படங்களிலிருந்து பூக்கள் தொடர்ந்து விழுந்தபடியே இருக்குமாம். உமேஷ் வீட்டு பஜனைக்கு சாயி லீலா அடிக்கடி போவதுண்டு. இந்தியா வரும்போதெல்லாம் வொயிட்ஃபீல்டிலிருக்கும் சாயிலீலா வீட்டிற்கு உமேஷ் செல்வதுண்டு. இந்த பக்தைக்கு சுவாமி தந்த லிங்கத்தை சுவாமியின் ஆசிக்காக உமேஷ் தர்ஷன் ஹாலுக்குக் கொண்டு போக நினைத்தார். மறந்து வீட்டிலேயே வைத்து விட்டார். அது மூன்று லோகங்களின் சக்தியை உள்ளடக்கிய லிங்கம். சுவாமியின் ஆசீர்வாதத்தோடு கிடைக்கும் ஒவ்வொன்றும் பூரணமே மறு ஆசீர்வாதம் அதற்குத் தேவையில்லை என்று அறிவுறுத்தினார். சாயி லீலா வொயிட் ஃபீல்டில் இறந்தபோது சுவாமி அங்கு வருவேன் என்று சொன்னாராம். அதன்படியே சுவாமி வொயிட் ஃபீல்டு போயிருக்கிறார்.உமேஷுக்கு சாயி லீலாவின் அன்பும் அனுபவங்களும் நல்ல மாறுதல்களைத் தந்திருக்கின்றன.


🌷பாதுகையும் பாதுகாவலரும்:

உமேஷ் சுவாமியின் அளவற்ற கருணையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவிலிருக்கக்கூடிய பக்தர்களின் வழிபாட்டிற்காக சுவாமியின் பாதுகைகளைப் பெற்று சுவாமியின் ஆசீர்வாதங்களோடு இங்கு கொண்டு தரவேண்டும் என்று நினைத்தேன். சுவாமியிடம் பிரார்த்தித்தபடியிருந்தேன். கிடைக்குமா கிடைக்காதா பிறகு சுவாமி தரிசனம் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஊசலாட்டத்திற்குப் பிறகு Sai Towers  மூலம் சுவாமியின் பாதுகைகள் கிடைத்துவிட்டது. சாயி லீலா அம்மாவோடு இன்னொரு நண்பரோடு  சுவாமியின் பாதுகைகளை எடுத்துக்கொண்டு சுவாமி தரிசனத்திற்குச் சென்றேன். அது காலை தரிசனம் முதலில் நான்காவது வரிசை கிடைத்தது. கண்களை மூடி சுவாமியிடம் தீவிரமாய் மனமுருகப் பிரார்த்தித்தேன். சுவாமி ஆஸ்திரேலிய பக்தர்கள் எத்தனையோ பேர் உன் தரிசனத்திற்கு தவித்தபடி இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவராலும் இங்கு வரமுடியாது. சுவாமியை தரிசிக்க முடியாது. அவர்களுடைய வழிபாட்டிற்காகவே சுவாமியின் ஆசீர்வாதங்களோடு பாதுகைகளைக் கொண்டு செல்ல நினைக்கிறேன்.நான் சுவாமியிடம் திணறத் திணற எத்தனையோ முறை பாதநமஸ்காரங்களை அடைந்திருக்கிறேன். அங்கிருக்கும் பக்தர்களுக்கு சுவாமியின் பாதுகைகள் இந்த ஆனந்தத்தையும் பலனையும் தரவேண்டும் என்றே கொண்டு வந்திருக்கிறேன். எத்தனையோ பக்தர்களுக்கு ஆசியையும் பலனையும் தருவதற்காக சுவாமி இங்கு வந்து இந்தப் பாதுகைகளின் மேல் ஏறிநின்று ஆசீர்வதிக்க வேண்டும் சுவாமி என்று மனதின் அடியாழத்திலிருந்து பிரார்த்தித்தேன். என்னைப் போலவே சுவாமியின் ஆசீர்வாதத்திற்காக பக்தர் பலரும் கொண்டுவந்த எண்ணற்ற பாதுகைகள் அங்கே காத்திருந்தன. சுவாமி தரிசனத்திற்கு வரத் தொடங்கினார். நான்காவது வரிசையிலிருந்த என்னை மூன்றாவது வரிசைக்கு தள்ளினார்கள்.பிறகு இரண்டாவது வரிசை. பிறகு முதல் வரிசை. மிகச் சரியான இடத்தில் பாதுகைகளோடு ஏக்கத்தோடு காத்திருந்தேன்.சுவாமி ஆரம்பத்திலிருந்த ஒரு பாதுகையின் மேல் ஏறி நின்று ஆசீர்வதித்து இறங்கினார்.ஒரு பாதுகையின் மீதுதான் சுவாமி ஏறி ஆசீர்வதிப்பாராம். அடுத்தடுத்து வரும் பாதுகைகளைத் தொட்டு ஆசீர்வதிப்பாராம். மறுபடியும் பிரார்த்தனையைத் தொடங்கினேன். சுவாமி அங்கே ஏறி ஆசீர்வதித்தது சந்தோஷம். அதேபோல இந்தப் பாதுகைகளிலும் ஏறிநின்று சுவாமி ஆசீர்வதிக்க வேண்டும்.சுவாமி எனக்கு தெரியாது. இது எனக்காக இல்லை. எத்தனையோ பக்தர்களுக்காக தயவுசெய்து பாபா Don't forget Do that Please Swamy Baba  என்று பிரார்த்தித்தபடியிருந்தேன். எண்ணங்களைப் படித்து விடுபவரல்லவா சுவாமி. நேராக என் முன் வந்து புன்னகையோடு நின்றார். பாதுகைகளை இழுத்து ஏறி நின்று ஆசீர்வதித்தார். நன்றாக ஆசீர்வதித்தார். என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். மெய்மறந்தேன்.அழுதேன். அந்த க்ஷணத்தில் மனம் இனம்புரியாத மாற்றத்தில் அமிழ்ந்து போனது. 

அங்கிருந்த சேவாதளத் தொண்டர் சொன்னார். என்ன அதிசயம் இது. சுவாமி முதலில் ஒரு பாதுகையின் மேல் ஏறி நின்று விட்டால் பிறகு எல்லாவற்றையும் தொட்டு ஆசிர்வாதம் செய்து விட்டுப் போவார். இரண்டாவது முறையாகவும் நீங்கள் வைத்திருந்த பாதுகைகளின் மேல் ஏறிநின்று ஆசீர்வதித்து உங்களையும் ஆசீர்வதித்திருக்கிறார். நீங்கள் மகா அதிர்ஷ்டசாலி என்று ஆச்சரியப்பட்டார். அந்த தெய்வநிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் உமேஷின் சாயி வழிபாட்டுத் தலத்தில் சுவாமியின் அருளாசி அடையாளமாகப் பொலிகிறது! 


ஒவ்வொரு முறையும் சுவாமியின் ஆசீர்வாதத்திற்காக சாக்லேட்டுகள் பென்டன்டுகள் கொண்ட தட்டினை நீட்டி சுவாமியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதுண்டு. சுவாமி அள்ளி வீசிய சாக்லேட்டுகள் டாலர்கள் போக எஞ்சியவற்றை சாயிபிரசாதமாகக் கொண்டு வந்து இங்கிருக்கக்கூடிய பக்தர்களுக்கு கொடுத்து மகிழ்வதுண்டு. இன்னொரு முறையும் சுவாமியின் பாதுகைகளை வாங்கி சுவாமியின் ஆசீர்வாதத்தோடு கொண்டு வந்தேன் பாதுகா பூஜை மிகப்பெரியஅளவில் கோலாகலமாக நடந்தது. அன்று பாதுகா ட்ரஸ்ட் சுப்பிரமணியச் செட்டியாரும் அங்கு இருந்தார்.உடல்நலங்குன்றியிருந்த அவரால் அங்கு அமர முடியவில்லை. அங்கு பூஜை முடியும் வரை இருந்து சுவாமியின் ஆசீர்வாதம் பெற்று ஊர் திரும்பியதும் காலமானார். சுவாமிக்குள் கலந்து போனார்.

பூஜை நிறையும் வரை சுவாமி அந்த அத்யந்த பக்தரின் உயிரைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்.

எத்தனையோ உள்முக மாற்றங்களை சுவாமி ஏற்படுத்தியிருக்கிறார். எனக்கு சுவாமி பேட்டி தர வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. நான் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே பாபா எனக்கு தந்து கொண்டிருக்கிறார். தருகிறார் என்று சொல்லி நெகிழ்ந்தார் உமேஷ். இங்கிருக்கும் பக்தர்களிடம் நான் கண்டுகொண்டாடிக் கும்பிட்ட விஷயம் இது. சுவாமி என்ற தெய்வீகத்தை இவர்கள் மிகமிகப் பேரானந்தத்தோடு அனுபவிக்கிறார்கள். ஆனந்திக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். சுவாமியின் கடைக்கண் பார்வை மணலில் பதிந்த பாதச் சுவடுகள் அவர் புன்னகை தலையசைப்பு ஆசீர்வாதம் எல்லாம் அவர்களுக்கு உன்னதமான ஆசீர்வாதங்களாய் சாயியின் அனுக்ரஹமாய் அவர்களைப் பேரானந்தப் படுத்திவிடுகிறது. சுவாமியின் துளிக் கருணையிலும் அவர்கள் அப்படிப் பூரித்துப் போகிறார்கள். திருப்தி யடைகிறார்கள். சுவாமிக்கு நன்றி சொல்கின்றனர். சுவாமியின் இந்தக் கருணைக்குப் பிரதிபலனாய் நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து அன்போடு சாயி பணிகளில் ஈடுபடுகிறார்கள். சாயி பாதங்களில் முழுமையாக சரணாகதி அடைகிறார்கள். எளிதில் சுவாமியை உணர்ந்து ஆனந்தித்து தங்களை முழுமையாய் சாயியின் பாதங்களில் ஒப்படைத்துவிடும் பக்தர்களும் உண்டு. இப்படிப்பட்ட பக்தர்களையே இங்கு நான் அதிகம் சந்தித்து ஆச்சரியத்தில் மூழ்கினேன். இப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் தான் உமேஷ். அவர் சொல்கிறார். 

சுவாமி தங்கரதத்தில் வந்த திருநாளில் அந்த தெய்வீகத் திருக் காட்சியைக் கண்டு களிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அன்றும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நிறையப்பேர் அன்று சீட்டுக்களை நீட்டினார்கள். சுவாமி ஒருவருடைய பிசினஸ் கார்டு எடுத்தார். இன்று அவர் மல்டிமில்லியனர்.


🌷பக்தர் குழு:

கரண்டேலில் சுவாமிக்கு சென்ட்டராகச் செய்து ரெஜிஸ்டர் பண்ணலாம் பக்தர் குழுவாகவே (Devotional Group) இருந்து விடலாமா! உண்மையில் பக்தர் குழு என்பதே நன்றாகவும் இருக்கும் சிக்கல் வராமலும் இருக்கும் என்று பேசிக்கொண்டு தர்ஷன் ஹாலில் சுவாமிக்காகக் காத்திருந்தோம்.சுவாமி எங்களை நோக்கி வந்தார். எங்களைப் பார்த்து 'டிவோஷனல் குரூப்' என்று சொல்லியபடி ஆசிர்வதித்தார். எங்கள் எண்ணப்படி சுவாமியின் ஆசீர்வாதம் இருந்தது. அன்று சொற்பொழிவில் பேசும்போது எந்த பேதங்களோடும் அரசியல் உணர்ச்சியோடும் உள்ளே வராதீர்கள் என்று சொன்னார். ஒருமுறை மோதிரம் உருவாக்கித் தந்தார். சுவாமி தரிசனத்திற்காக அமர்ந்திருக்கும்போது இந்தக் கேள்விகள் கேட்க வேண்டும் அந்தக் கேள்விகள் கேட்க வேண்டும் என்று பக்கத்திலிருந்த நண்பரிடம் சொல்லியபடி இருந்தேன்.பாபா வந்தார். என் முன் வந்து நின்றார். மௌனமாகி விட்டேன். கேள்வியாவது பேச்சாவது ஒன்றும் முடியவில்லை. மௌனமானேன். சுவாமி என் தலையில் அடித்தார். சிரித்தார். ஒரு கேள்வியும் கேட்காமல் அமைதியானேன். என் தலையில் தட்டினார். பாத நமஸ்காரம் கொடுத்தார். சுவாமி சென்றதும் அங்கிருந்த சேவாதளத் தொண்டர் சொன்னார். சுவாமி தலையில் தட்டியதுமே உங்கள் பாவங்கள் போய்விட்டன. இன்று புதிதாய்ப் பிறந்திருக்கிறீர்கள் விடுதலை பெற்ற ஆத்மாவாகி விட்டீர்கள். (Liberated Soul)

உமேஷின் சாயி கோவிலில் சுவாமி தொட்டு ஆசீர்வதித்துத் தந்த படங்களையே வைத்து வழிபடுகிறார்கள். சுவாமி படங்களிலிருந்து வழியும் அமிர்தம் விபூதியோடு கலந்த தீர்த்தம் மனதையும் இனிப்பாக்கிவிடுகிறது.ஃபிஜி குழுவின் சிறப்பான பாடல்களும் பாடப்படுகின்றன.தபலா மிருதங்கம் தாளம் முதலான இசைக்கருவிகளின் அளவான ஒத்திசையோடு பக்தர்கள் சுவாமிக்கு அன்போடும் ஆனந்தத்தோடும் பஜனைப் பாடல்களைப் பாடுவது ஒரு தெய்வீக அழகாயிருக்கிறது. உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்தது போல் கீழே நகரத்தின் அழகிய காட்சிகளைப் பார்க்கும்படியானதொரு உயரத்தில் நல்ல மையத்தில் அமைந்திருக்கிறது சாயி கோயில்.

ஒருமுறை காரில் செல்லும்போது விபத்து ஏற்படும்படியான விபரீதத்தில் சூட்சுமத்தில் சுவாமி வந்து உமேஷின் காரைத் தள்ளிக் காப்பாற்றியிருக்கிறார். முதியோர் இல்லங்கள் மருத்துவமனைகளில் சர்வீஸ் அகதிகளுக்கு ஆங்கிலம் கம்ப்யூட்டர் போன்றன கற்றுத்தரல் நாராயண சேவை எல்லாம் அங்கு தொடர்கிறது.
 சுவாமியின் பிறந்த நாளுக்காக நவம்பர் 11ல் ஏறக்குறைய எல்லா சாயிசென்ட்டர்களிலும் போலவே இங்கும் அகண்ட பஜன் பிரமாதமாக நடக்கிறது.🌷உள்முக மாற்றம்:


 என்னவிதமான மனமாற்றத்தை சுவாமி உங்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார் என்று உமேஷிடம் கேட்டபோது, ஒரு கணம் கண்களை மூடித் திறந்து அமைதியாகச் சொன்னார். மது அருந்துதல் பார்ட்டி மாமிசம் உண்ணுதல் என்று தீவிரமாக இருந்து வந்தேன். சாயிபாபாவிடம் வந்து சேர்ந்த பிறகு இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டேன்.நத்திங் இப்போது எந்த பழக்கமும் இல்லை. மனைவி இரண்டு பிள்ளைகள் வளமான குடும்பம் போதுமான வசதி.. எந்த ஆசையும் பற்றும் எனக்கில்லை. ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுவாமி வரச் சொன்னால் இப்போதே கிளம்பிவிடுவேன். சுவாமியை அடைந்துவிடுவதும் சுவாமியுடன் கலந்து விடுவதும்தான் என் தவம். எங்கிருந்து வந்தேனோ அங்கே செல்வது தானே உண்மையான சந்தோஷம். ஆன்ம விடுதலைக்கான தவிப்பே எனக்குள் நிறைந்திருக்கிறது. என்னிடம் ஆன்ம விடுதலையைக் கேட்பதும் பிரசாந்தியைக் கேட்பதும் ஒவ்வொருவரின் உரிமை என்று சுவாமி சொல்வார். அந்த உரிமையை ஆனந்தமாகக் கேட்டு அடைந்து கொண்டிருக்கிறார் இந்த விமான நிலைய அதிகாரி. சாயியின் அருமந்த பக்தராய் மனதளவில் துறவியாய் சுவாமி போட்டிருக்கும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறார். 

(முற்றும்)

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 
(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக