தலைப்பு

திங்கள், 16 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 4 | ஆண்டவன் தோட்டத்து அன்பு மலர்கள்!

🇦🇺 ஆஸ்திரேலியா பெண்மணி மோயா(MOYIA) அவர்களின் அனுபவங்கள்! 

சேவையின் மகத்துவங்கள் ஜெகமெலாம் புரியவைப்பாய்
சேவைகள் பக்தர் புரியப் பாரெலாம் அனுப்பி வைப்பாய்
சேவையே உனக்கு கந்த சிறந்த வழிபாடென்பாய் நீ
சேவையை வாழ்க்கை யாக்கும் அன்பரை அரவணைப்பாய்!









🌹ஆஸ்திரேலிய ரோஜாக்கள்:

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் வாழும் 'பிங்க் சிஸ்டர்ஸ்' சுவாமியின் பிரத்யேகமான அன்பையும் அருளையும் அடைந்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.
'அனைவரிடமும் அன்போடிருங்கள் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்' (love all serve all) என்று பாபா சொல்வதை, தங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்து வருபவர்கள். இடையறாத அன்பு நிறைந்த இவர்களுடைய தொடர்ந்த மனித சேவையே மகேசன் சேவையாய் சுவாமியை ஈர்த்திருக்கிறது. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு இவர்கள் நடத்தும் 'ஸ்வாரா' புது வாழ்வைத் தந்து அவர்கள் பிறவியை அர்த்தப்படுத்தி வருகிறது, ஆரோக்கியப் படுத்தி வருகிறது. (Disabled people) மூளை வளர்ச்சி குன்றிய... மன நிலையோ மூளையோ பாதிக்கப்பட்ட... விபத்தில் தலையில் அடிபட்டு செயல்நலங் குன்றியவர்களை, 'ஸ்வாரா' பல்லாண்டுகளாய் அரவணைத்து அன்பூட்டி ஆரோக்கியமான பிரஜைகளாக அன்பினாலும் சேவையினாலும் உருமாற்றி வருகிறது. இரட்டைச் சகோதரிகளான டோரதி,மோயா இருவரும் இணைந்து பணியாற்றும், 'sunshine Welfare and Remedial Association' ஆஸ்திரேலிய அரசையும் மக்களையும் ஆச்சரியத்திலாழ்த்தி வரும் ஒரு அற்புத சேவா நிறுவனமாக இருந்து வருகிறது. இப்போது டோரதி இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் புட்டபர்த்தியில் சுவாமியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும்போது பர்த்தி மருத்துவமனையில் உயிர் நீத்து சுவாமிக்குள் கலந்து போனார்.

84 வயதான மோயா ஆஸ்திரேலியா நியூஃபார்மல்(New form) இருக்கும் 70 ஆம் எண்ணுள்ள அழகிய தோட்டம் சூழ்ந்த வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீடு சுவாமியின் அனுக்ரஹம் நிறைந்த ஆனந்த பிருந்தாவனமாயிருக்கிறது. ஒருமுறை சுவாமி இவர்களைப்பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்தவர்களிடம் விசாரித்தபோது, 'பிங்க் சிஸ்டர்ஸ்' எப்படியிருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார். இவர்கள் நேரில் போகும்போதும், 'பிங்க் பிங்க் பிங்க் சிஸ்டர்ஸ்' என்று அன்போடு அழைத்திருக்கிறார். சுவாமி நம்மை பிங்க் வண்ணத்தில் பார்க்கிறார் பிங்க் சிஸ்டர்ஸ் என்று அழைக்கிறார். இனி எப்போதும் பிங்க் வண்ணத்திலேயே இருப்போம் என்று சொல்லிக்கொண்டார்கள். எங்கு 

எங்கு சென்றாலும் டோரதி மோயா இருவருக்கும் உடை_ கையுறை காலுறை கழுத்தணி பை என்று எல்லாம் ரோஜாமயமானது. ஆஸ்திரேலியாவின் பிரியத்திற்கேற்ற வண்ணமே இந்த ரோஜா வண்ணம்தான். சுவாமியின் ஆசிகள் நிறைந்து பொங்கும் அந்த எழுபதாம் எண் வீட்டை வெளியிலிருந்து பார்த்தபடி சென்றேன். இருபுறமும் இருந்த மரகேட்.. உள்ளே நிற்கும் கார்.. வீட்டின் சுவர்கள்.. தோட்டம் முழுதும் நிறைந்திருந்த பூக்கள் எல்லாம் 'பிங்க் பிங்க்'. பழங்காலத்து மணி உருளைகள் காலிங்பெல்லாயிருக்க அதை உருட்டி ஓசை செய்ய உள்ளிருந்து மோயா அன்பே உருவாய் வந்து கதவைத் திறந்தார். அழகிய முதிர்ந்த ரோஜாவாக.. மீண்டும் தரை அறை சோபா அலங்காரப் பொருட்கள் எல்லாம் எல்லாம் 'பிங்க் பிங்க்'. சுவாமி ஆளுயர ரூபத்தில் 'பிங்க்' வண்ண ரோஜாவாய் சிரித்தபடி இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். அழகியதொரு தோட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த சகோதரிகள் சுவாமியோடு நிற்கும் அமர்ந்திருக்கும் நடந்து வரும் அரிய புகைப்படங்கள், சுவாமி டோரதி, மோயா இவர்கள் தோள்மீது இருகைகளையும் போட்டபடி சிரிக்கிறார், ஆசீர்வதிக்கிறார். திரும்பிய இடமெல்லாம் பெரிது பெரிதாய் சுவாமியின் அழகிய தோற்றங்கள். அத்தனை அறைகளிலும் சுவாமி. மனதில் நிறைந்திருக்கும் சாயியையே எங்கும் காண விரும்பும் அந்தச் சகோதரிகளின் அன்பே அந்த வீடாயிருந்தது.


🌹கடவுளைக் காட்டிய தாய்:

சுவாமியைப் பற்றி அற்புத மனிதர் சாயிபாபா என்று எழுதி உலகத்தின் கவனத்திற்கு கடவுள் சாயியை உணர்த்திய ஆஸ்திரேலிய கிறிஸ்தவப் பாதிரியும் எழுத்தாளருமான, 'ஹோவர்ட் மர்பட்' இவர்களுடைய நெருங்கிய நண்பர். சுவாமி பற்றிய அவர் புத்தகத்தை இவர்களுடைய தாய் படித்துவிட்டு சுவாமியின் பக்தையாயிருக்கிறார், இவர்களையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். ஆண்டவனைப் பற்றிய அற்புதமே அந்தப் புத்தகம்.. அவசியம் நாம் சாயிபாபாவைப் பார்க்க வேண்டுமென்று தன் பெண்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். இவர்களுடைய தாய் ஒர் அற்புதமான பெண்மணி. திருமணமாகிய ஐந்து வருடங்களில் ஆஸ்திரேலியப் போரில் கணவரைப் பறிகொடுத்தார். 'நெல்' என்ற மகளும்  மோயா டோரதி என்ற இரட்டைப் பெண்களோடு கூடியதுமான குடும்பத்தைத் திறம்பட நிர்வாகம் செய்து வந்தார். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும் பாரம்பரியப் பண்பாட்டில் வாழும் நிறைவும் நாகரீக மேம்பாடும் கொண்ட இவர், கல்வியும் கலையுணர்வும் கனிந்த பண்புகளும் தெய்வநம்பிக்கையும் கொண்டவர்களாக் தன் பெண்களை நெறியாக வளர்த்திருக்கிறார். தாயைப் பற்றிப் பேசும்போது, எப்பேர்ப்பட்ட தாய் அவர் எங்களின் தாய், எங்களின் தெய்வம் அவரே_ தெய்வத்தை எங்களுக்கு அடையாளங் காட்டினார் என்று பெருமிதப்படுகிறார் மோயா.

மூன்று வயதில் ஆஸ்திரேலியப் படை வீரராயிருந்த தங்கள் தந்தையைப் போரில் பறிகொடுத்தனர். 'Tony O Brien' முதல் உலகப் போரில் உயிரிழந்த ஆஸ்திரேலியப் படைவீரர். இவர்களுடைய தாய் ஒரு புனிதப் போராளி. ஆன்மீக வீராங்கனை தெய்வ நம்பிக்கையும் திண்மையும் செயலாற்றலும் கொண்டவர்களாய் வளர்ந்த இந்தச் சகோதரிகள் கல்விக்குப் பிறகு தொழிலைத் தேர்ந்தெடுக்க முனைந்தபோது 'occupational Therapy' இயல்பாக அமைந்தது. தூஊம்பா, க்வின்ஸ்லாந்து, சிட்னி(Toowoomba, Queensland, Sydney) போன்ற இடங்களில் பயிற்சி பெற்றனர். தங்கள் அன்புத் தாயோடு பல இடங்களிலும் தங்கிப் பயிற்சி பெற்றது அவர்களுக்கு நல்லனுபவங்களைத் தந்தது. அது மிகுந்த மகிழ்ச்சியினையும் பரந்த மனோபாவத்தையும் பல்வேறு மக்களைப் பற்றிய அனுபவங்களையும் தந்தன. சேவை புரிவதே இவர்கள் இலட்சியமாயிருந்ததால் திருமண வேட்கை இவர்களுக்கு இல்லாமல் போனது.

சாயிபாபாவின் சந்நிதிக்கு இவர்களை அழைத்து வந்ததிலும் இவர்களுடைய தாய்க்கே பெரும்பங்கு இருக்கிறது. ஆண்டவன் பாபாவை நாம் பார்க்கவேண்டும் என்று பலமுறை பெண்களை வற்புறுத்தியிருக்கிறார். அப்போது அவர்கள் அதைப் பெரிதாய் ஏற்கவில்லை. பிறகு ஒரு தோழியின் மூலம் ஆர்தர் எடுத்த சுவாமியின் இரண்டு படங்களைப் பார்த்துவிட்டு, சுவாமியின் அன்பு வட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பிரசாந்தி மந்திரின் பால்கனியில் வந்து  சுவாமி ஆசீர்வதிக்கும் காட்சி இருவரையும் ஆனந்தத்தில் அழ வைத்திருக்கிறது. சதா ஆனந்தம் பொழியும் இந்த இறைவனுக்காகவே நாங்கள் காத்திருந்தோம் என்கிறார் மோயா. அதன்பிறகு இவர்கள் தாயுடன் இந்தியா சென்று புட்டபர்த்தியில் சுவாமியை தரிசித்த போது ஆனந்தத்தில் மெய்ம்மறந்திருக்கிறார்கள். சுவாமி இவர்கள் அருகில் வந்து புருவத்தைத் தூக்கி ஆசீர்வதித்து, 'ஓ மதர் டாட்டர்ஸ் த்ரீ இன் சேரி( saree) வெரிகுட்' என்று சிரித்தபடி சொல்லியிருக்கிறார்.சுவாமி முதல் முறையாக இவர்கள் மூவருக்கும் பேட்டியளித்தபோது இவர்களுடைய தாயை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். மிக நல்ல பெண்மணி என்று பாராட்டியிருக்கிறார். ஒரு ஜெபமாலையை உருவாக்கித் தந்திருக்கிறார். டோரதிக்கு பச்சைக்கல் மோதிரத்தை உருவாக்கி அணிவித்திருக்கிறார்.டோரதி மறைந்ததும் அந்த மோதிரத்தை இப்போது மோயா அணிந்திருக்கிறார். அதை அவர் என்னிடம் காட்டியபோது அதில் சுவாமியின் பம்பை முடியோடு கூடிய மார்பளவு ரூபம் வெள்ளை அங்கியோடு காட்சியானது. அதைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.


🌹அன்பும் சேவையும்:

அந்த முதல் பேட்டியில் சுவாமி இரட்டைச் சகோதரிகளின் சேவையை வெகுவாகப் புகழ்ந்து சிலாகித்திருக்கிறார். இது ஒர் எளிய வாழ்க்கை உங்களுடையது. யாகமோ யக்ஞமோ இதுவோ அதுவோ எதுவும் தேவையில்லை. இந்த வாழ்க்கையில் உங்களுடையது அன்பு அன்பு அன்பு ஸ்பரிசம் ஸ்பரிசம் ஸ்பரிசம்...( This is a simple life for you; no yoga, no yagna, no this, no that; in this life you just love love love and touch touch touch')
நீங்கள் யாருக்கு சேவை செய்கிறீர்களோ அவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் உங்கள் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்ள இயலும். You cannot change people. But if you put enough love into any situation, it will workout right in the end என்றார் சுவாமி.


சுவாமியினுடைய அன்பையும் வழிகாட்டுதலையும் ஒவ்வொரு க்ஷணத்திலும் உணர்வதாகக் கூறுகிறார் மோயா. அப்போது சுவாமி தெலுங்கில் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மோயா கண்களை மூடி 'ஓ ஹவ் ஸ்வீட் பாபா இஸ் சிங்கிங்' என்று ரசித்தார். மோயா தெலுங்கு புரியுமா என்று கேட்டபோது இல்லை என்று தலையசைத்தார். கண்களை மூடி மீண்டும் ரசிக்கத் தொடங்குகிறார். தெய்வ கானம் புரிவதற்கு மொழி புரியும் அவசியமில்லை.

இவர்களுடைய 'Mind service' 'pink light' மூலம் தங்கள் அன்பைத் தேவையானவர்களுக்கு அனுப்புதல்... இவர்களுடைய முகங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டு பாபாவிடம் பிரார்த்தனை செய்தபடி தங்கள் அன்பை ரோஜா ஒளியாக அனுப்புதல் இரட்டைச் சகோதரிகளின் பிரேம சேவையாயிருக்கிறது. இவர்கள் பிரார்த்தனையால் குணமானவர்கள் இவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சுவாமி 'ஸ்வாரா'வின் சேவையை விடவும் சுவாமிக்கு இவர்கள் போட்ட புத்தகங்களை விடவும், இவர்களுடைய (mind service) 'மனசேவை'யை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்.அன்பு அன்பு அன்பு நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறீர்கள், எப்போதும் ஆண்டவனோடு இருக்கிறீர்கள், கடவுளோடு ஒன்றியிருப்பதொன்றே உண்மையான ஆனந்த வாழ்க்கை என்று சொல்லியிருக்கிறார். இடையில் கேட்டேன் சுவாமி 'Love all Serve all' என்று சொல்கிறார். சேவை எல்லாருக்கும் செய்து விடலாம். ஆனால் எல்லாரிடமும் அன்புகாட்ட முடியவில்லை. முரண்பட்டவர்களிடம் தீய சிந்தனை கொண்டவர்களிடம் எப்படி அன்பு செலுத்துவது என்று கேட்டேன்.

நிர்ப்பந்தமற்ற அன்பைப்( unconditional love) பொழிய வேண்டும். இரக்கம் கருணை அன்பு நிறைந்த மனதோடு மனதை அணுக வேண்டும். தீய சக்திகளை, மாற்றும்படியான பிரார்த்தனையோடும் பின்னும் அதிகமான இரக்கத்தோடும் அன்பைச் செலுத்த வேண்டும் என்று மோயா, 'அன்பு அன்பு அன்பு  சுவாமியே அன்பு அன்பு அன்பு என்று மனங்கனிந்து சொல்லிக்கொண்டிருந்தபோது சுவாமி love is my form என்று அதிமதுரமாகப் பாடத் தொடங்கினார்! அடடா அந்த அங்கீகாரம் சுவாமியின் பிரசன்னம், அதி அற்புதமானதாக இருந்தது. சுவாமி எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பேசுவதும் கேட்பதுமாக இருந்து அந்தப் பேச்சின் சாரத்தை அன்போடு அங்கீகரிக்கிறார்.மோயா அந்தப் பாட்டில் லயித்து விட்டார். எங்கள் மனம் கனிந்துருகியது. சுவாமியின் அருகாமையை அன்பை அனைவரும் உணர்ந்தோம். 40 முறைகளுக்கு மேல் சுவாமியிடம் பேட்டிகள்! எப்போதெல்லாம் சுவாமியிடம் போகிறார்களோ அப்போதெல்லாம் பாத நமஸ்காரம், பேட்டிகள், வழிகாட்டுதல்கள், என்று கொள்ளை கொள்ளையாய் சுவாமியின் அன்பை அடைந்திருக்கிறார்கள். அதை வியந்தபடி கேட்டேன். ஆமாம் இப்படிப்பட்ட சுவாமியின் அன்பிற்காகவும் கருணைக்காகவும் என்ன கைம்மாறு செய்ய முடியும்? சுவாமியின் அன்பை உபதேசங்களை அனைவரிடமும் கொண்டு செல்லுதல் சுவாமியின் கோட்பாடுகளை உணர்ந்து வாழ்தல், உணர்த்துதல், செய்யும் சேவையை என்றும் தொடர்தல்  சுவாமியின் அன்பையே வாழ்க்கையாக்குதல்.. இதெல்லாம் தான் எங்கள் கடவுளுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக்கடன் என்று மிகவும் உணர்ந்து சொன்னார் மோயா.


🌹நடக்க வைத்த நடராஜன்:

இருவருக்கும் நடக்க முடியாமல் போன ஒரு சம்பவத்தில் சுவாமி குணப்படுத்தியதை நினைவு கூர்கிறார். டோரதியின் கால்கள் முற்றும் செயலிழந்துபோய் நடக்கவே முடியவில்லை.டோரதியின் முழங்கால்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்தன.டோரதியின் முழங்கால்களைப் பரிசோதித்துவிட்டு டாக்டர் சொன்னார். முழங்கால் சிகிச்சையில் பிரத்யேக அனுபவம் கொண்டவன் நான். இப்படி ஒரு மோசமான நிலையிலிருக்கும் முழங்கால்களைப் பார்த்ததேயில்லை. இரண்டு முழங்கால்களிலும் அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் என்று சொல்லி மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆபரேஷன் செய்வதற்கான தேதியைக் குறித்தார். டோரதியைப் பற்றிய கவலை எங்களுக்கு அதிகமானது. வேறு வழி இருக்கிறதா ஆபரேஷனைத் தவிர வேறு ஏதேனும் எங்களால் செய்ய முடியுமா என்று டாக்டரிடம் கேட்டோம். 'ஆம் தெய்வத்தின் கருணையிருந்தால் சரியாகும், சரியாகலாம்' என்றார். எங்களுக்குள் நம்பிக்கை அதிகரித்தது.

இதற்கிடையில் சாயிபாபாவை தரிசிக்கச் சென்ற ஒரு சாயி சகோதரி சுவாமியிடம், 'டோரதியின் பிரச்சனையைப் பற்றி சொல்லி டோரதியால் நடக்க முடியவில்லை வலியைத் தாங்க முடியவில்லை. ஆபரேஷனுக்குத் தேதியைக் குறித்திருக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் சுவாமி என்று கேட்டார். 'இல்லை ஆபரேஷன் வேண்டாம். நான் அவளுக்கு உதவுகிறேன் என்றார். இந்தச் செய்தி அவர்களுடைய பிறந்த நாளின்போது சகோதரிகளுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் மகிழ்ந்து போனார்கள்.


டோரதி ஆஸ்திரேலியாவிலிருக்கும் தங்கள் வீட்டில் அடிக்கடி தியானத்தில் மூழ்கினார். தியானத்தில் why fear I am here என்று சுவாமி சொன்னதை உணர்ந்தார். ஆனால் ஒர் அதிசயமாக வழக்கமாய் வலதுகை அபயஹஸ்தத்திற்குப் பதில் இடது கை அபயஹஸ்தமாகத் தெரிந்தது. தியானத்தில் இப்படித் தெரிய என்ன காரணம் என்று கேட்டபோது மோயா சொன்னார், 'இடது கை எடுத்துக்கொள்ளும் கை. வலதுகை கொடுக்கும் கை. சுவாமி உன் வேதனையைப் போக்க உன்னை அழைக்கிறார்' சுவாமியின் அழைப்பு புரிந்துவிட்டது டோரதிக்கு.ஸ்வாராவையும் எங்கள் தாயையும் எங்களுக்கு முன் பிறந்த சகோதரி 'நெல்' வசம் ஒப்படைத்துவிட்டு செப்டம்பர் 1990ல் பாபாவிடம் சென்றோம் என்றவர் தொடர்ந்தார்.

பிரசாந்தி நிலையத்தை நாங்கள் சென்றடைந்தது மதிய தரிசனத்தின்போது.. மூன்று நாட்களுக்குப் பிறகு பாபா எங்களை அழைத்ததும் நாங்கள் போனோம். இரட்டைச் சகோதரிகள் இருக்கிறார்களா என்று கேட்டார். எங்களை அழைத்து வந்த சாயித் தோழி, 'ஆமாம்' என்று சுட்டிக்காட்ட உள்ளே போகச் சொன்னார். அங்கே சிலர் அமர்ந்திருந்தனர். டோரதி வீல்சேரிலும் மோயா ஊன்றுகோல்களோடும் வர அந்த சாயி சகோதரி அவர்களை அழைத்துக் கொண்டு போனார். சாயி சகோதரி வீல்சேரை பாபாவிற்கு முன் கொண்டு வந்து நிறுத்தியதும் டோரதியைப் பார்த்து பாபா கேட்டார். 'சரி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' டோரதி சொன்னார், 'பாபா தயவுசெய்து  என் முழங்கால்களைக் குணப்படுத்துவீர்களா' 'ஆம் ஆம் குணப் படுத்துகிறேன்' என்றார். மோயாவும் இதுபோல் சொல்ல 'சரி ஆனால் டோரதியின் நிலையும் வலியும் மிகவும் மோசமானது. நீ உன் தாயையும் சகோதரிகளையும்( disabled) செயலிழந்தவர்களையும் பார்த்துக் கொள்வதால் உன்னையும் குணப்படுத்துவேன். திரும்பி சாயி சகோதரியைப் பார்த்து, இவர்களை உள்ளறைக்கு அழைத்துச் செல் என்றார். டோரதி வீல்சேரிலும் மோயா ஊன்றுகோல்களோடும் பாபா முன் இருந்தனர். டோரதியின் முன் சுவாமி வந்து நின்று அவருடைய அழகிய கரங்களை டோரதியின் இரண்டு முழங்கால்களின் மேலும் வட்டமாகச் சுழற்றினார். இறுக்கமான வட்டங்களாகச் சுழற்றினார். பிறகு கைகளை முழங்கால்களின் மேல் வைத்தபடி மறுபடியும் மறுபடியுமாக வட்டங்களைச் சுழற்றினார். மோயாவின் முழங்கால்களின் மேலும் அவ்வண்ணமே தொட்டார். சடாரென்று திரும்பி டோரதியைப் பார்த்துக் கேட்டார். 'உன்னால் எழுந்திருக்க முடியுமா? Can you get up ? டோரதி வியப்போடு சொன்னார். 'ஓ பாபா உங்கள் உதவியால் என்னால் எழுந்திருக்க முடியும் என்றார். வீல் சேரிலிருந்து அவர் எழுந்து நிற்பதற்கு வசதியாக சுவாமி வீல்சேரைத் தள்ளினார்.பாபா கேட்டார், 'உன்னால் நடக்க முடியுமா? ஓ பாபா உங்கள் உதவியால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று ஆச்சரியத்துடன் சொன்னார். மெல்ல நடந்தார். அவர் டோரதியின் கையை ஒரு தோளிலும் மோயாவின் கையை ஒரு தோளிலுமாகப் போட்டபடி நடந்து வந்தார். சாயி சகோதரியிடம் நீ அந்த வீல்சேரையும் ஊன்றுகோல்களையும் கொண்டு வா என்று சொல்லிவிட்டு சகோதரிகளுடன் வெளியே வந்தார் பாபா.

வராந்தாவில் உட்கார்ந்திருந்த பக்தர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு நம்ப முடியாத ஆச்சரியம் தாங்காமல் 'சாயிராம் சாயிராம்' என்று கூவினர். ஆனந்தத்தில் கைதட்டத் தொடங்கினர். புகைப்படம் எடுத்தனர். பாபா இருவரையும் நடந்து போகச் சொல்ல இருவரும் குழந்தையைப்போல் நடந்தனர். மோயா தன்னிச்சையாக நடந்தார்.டோரதிக்கு உதவும் போக்கில் சற்றே கைப்பிடித்தபடி நடந்தார். தரிசன வரிசைகளுக்கு நாங்கள் நடந்து வந்ததைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். பஜனை முழுவதுமாக அமர்ந்திருந்தோம். பிறகு நாங்கள் தங்கியிருந்த ஆசிரம வீட்டை( round house) நோக்கி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடக்கத் தொடங்கினோம். வழியிலிருந்தவர்கள் சந்தோஷத்தோடு எங்களைத் தொடர்ந்து வந்தனர். ஒருவர் வீடியோவில் புகைப்படம் எடுத்தார். பாபாவிற்கு நன்றி சொல்லியபடி, மீண்டும் நாங்கள் புதிய சக்தியோடு நடக்கத் தொடங்கினோம் என்று சொல்லி மகிழ்ந்தார் மோயா. சுவாமியின் கருணை எல்லையற்றதல்லவா?!

ஓராண்டிற்குப் பிறகு பிருந்தாவனத்தில் பாபாவிடம் பேட்டிக்குச் சென்றபோது,டோரதி யாரையும் பிடிக்காமல் சுவாமிக்கு முன் தானாக நடந்து வந்தார்.பாபா பாருங்கள் யாரையும் பிடிக்காமல் நானாக நடந்து வருகிறேன் என்று சற்றே டோரதி ஆடியபடி நடந்ததைப் பார்த்து, பாபா சிரித்தபடி சொன்னார் நடனமாடாதே நடந்து வா என்று சொல்லிச் சிரித்தார். உன் கையைக் கொடு என்று பற்றி ஒரு நாற்காலியில் அமர வைத்தார். 1995ல் ஒரு பேட்டியின்போது பக்கத்திலிருந்தவர்களிடம் பாபா எங்களைப் பார்த்தபடி சொன்னார். இவர்களைப் பாருங்கள் ஐந்தாண்டுகளுக்கு முன் இவர்கள் வந்தபோது நடக்க முடியாமல் மிக மோசமான நிலையில் இருந்தார்கள். இவர் வீல்சேரிலும் அவர் ஊன்றுகோல்களோடும் வந்தனர். ஆனால் நான் அவர்களை எழுந்து நடக்க வைத்துவிட்டேன். இப்பொழுது எப்படியிருக்கிறார்கள் பாருங்கள் என்று மிகுந்த சந்தோஷத்தோடு சொன்னார். பாபாவின்  அருளும்,தான் அருளைப் பொழிந்த பக்தரைப் பார்த்துப் பார்த்து பாபா அதைச் சொல்லி மகிழ்வதும் பேரானந்தமான அனுபவம்!









🌹ஸ்வாராவில் சேவை:

இவர்களின் அயராத பரந்த பொதுவான சேவையே சுவாமியைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.'ஸ்வாரா' மூலம் இவர்கள் செய்யும் சேவை அற்புதமானது. ஊனமுற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் மூளை பாதிக்கப்பட்டவர்கள் பலர்க்கும் தாய் நிலையமாக இருந்து அவரவர்க்கேற்ற சிகிச்சையை அளித்து அவரவரால் முடிந்த.. அவரவர் ஆற்றலுக்கேற்றபடியான பயிற்சிகளைத் தந்து அலங்காரம், தோட்ட வேலை, சமையல் துப்பரவு,பொம்மை செய்தல், தொழில் நுட்ப சீர்திருத்தங்கள் முதலியன தந்து, உணவு பழங்கள் தந்து, அன்பு அன்பு அன்பால் அவர்களை நலமாக்கி வரும் மிகப்பெரிய சேவையை இவர்களுடைய ( swara) ஸ்வாரா செய்து வருகிறது. வியாழன்தோறும் சாயி பஜன் ஆனந்தமாக நடக்கிறது. இந்த 'பிங்க்' சிஸ்டர்ஸின் பணிகளை அங்கீகரித்துப் பாராட்டி, பல சமூக நிறுவனங்கள் பல விருதுகளை இவர்களுக்கு வழங்கியிருக்கின்றன. சாயி பக்தர்கள் ஸ்வாராவின் வளர்ச்சியில் எப்போதும் பங்கு கொண்டு தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.


'The Paul Harris Medal' என்ற மிக உயர்ந்த ரோட்டரி விருது எங்களுக்குக் கிடைத்தபோது ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தோம். ஏனென்றால் அதற்கு முன் உன்னதமான சேவை புரிந்த மதர்தெரசாவிற்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி மகிழ்ந்தார் மோயா. எத்தனை பெரிய அங்கீகாரம் அது! எல்லாவற்றையும் தாண்டிய உச்சகட்ட அங்கீகாரம் சுவாமியின் அங்கீகாரமும் அருளாசியும் அவர்களுக்குக் கிடைத்தது தான். 'ஸ்வாராவைப் பற்றி சாயிபாபா எங்களிடம் ஒரு முறை சொல்லும்போது இது வெகு நல்ல இடம். அர்த்தமுள்ள சேவையை அங்கு நீங்கள் மக்களுக்குப் புரிந்து வருவதால் மிக நல்லதோர் இடமாக அது இருக்கிறது. எப்போதும் என் அருள் உதவி உங்களுக்கு உண்டு என்ற சுவாமி தன் வலது கரத்தை உயர்த்திச் சொன்னார். 'உங்களுக்கு உதவிக்கரம் கொடுப்பேன் சுவாமியின் கருணையும் அன்பும் வழிகாட்டுதலும் தான் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எங்களை வழிநடத்தி வருகிறது என்கிறார் மோயா.


🌹சனாதன சாரதியின் அங்கீகாரம்:

ஒருமுறை சுவாமியின் அத்யந்த பக்தரான கஸ்தூரி 'சனாதன சாரதிக்காக எங்களிடம் புகைப்படத்துடன் கூடிய பேட்டியை எழுதித் தரச் சொன்னார். ஆனால் அதற்குள் அந்த மாதத்து இதழ் முடிந்து விட்டதால் அடுத்த இதழில் சேர்க்கலாம் என்றார். சுவாமி பார்த்துவிட்டு இந்த இதழிலேயே சேர்க்க வேண்டும் என்று சொல்ல மீண்டும் முழு இதழும் மாற்றப்பட்டு ஸ்வாராவின் செய்தியும் படமும் சேர்க்கப்பட்டு வெளிவந்தது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! மிகவும் கௌரவப்படுத்தப்பட்டோம். The Beacon Burns Brightly in Brisbane பிரிஸ்பனில் ஒளிரும் கலங்கரை விளக்கு என்பது அந்தச் செய்தியின் தலைப்பாக இருந்தது. ஒருமுறை சுவாமி எங்களிடம் சொன்னார் நீங்கள் வேலை செய்தது போதும் இனி வேண்டாம் மற்றவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். வேலைகளை மற்றவர்கள் செய்யட்டும். நீங்கள் பேசுவதும் அறிவுரை சொல்வதுமாக இருந்தாலே போதும் என்றார். ஆனாலும் சுவாமியின் ஆசியோடு தொடர்ந்து பணி புரிந்தபடிதான் இருக்கிறோம். சிறுவயதிலிருந்து எங்கள் எதிர்பார்ப்பிலும் கனவிலும் நிறைந்திருந்த கடவுளாக சாயிபாபாவைக் கண்டு கொண்டோம். அழகும் இனிமையும் நிறைந்த கடவுளாக எங்கள் கடவுள் சாயிபாபா இருக்கிறார். இனிய வழிகாட்டியாகவும் தோழராகவும் இருக்கிறார் என்கிறார் மோயா. பரபரப்பான கடுமையான உழைப்பு நிறைந்த அவர்கள் வாழ்வில் சுவாமியின் அன்பும் கருணையும் உள்ளார்ந்த சக்தியை வளர்த்து அபரிமிதமான ஊக்கந் தந்திருக்கிறது.சுவாமி ஒருமுறை சொன்னார்' என்னை அன்பென்ற நிலையில் பேசுங்கள் என்னைப்பற்றி பேசுவதைவிட என் செய்திகளையும் நோக்கங்களையும் பேசுங்கள். எப்போதும் அன்பும் அழகும் நிறைந்த கடவுளாகவே எங்கள் சாயிபாபா இருக்கிறார்' என்றார் மோயா. ஒரு கிறிஸ்துமஸுக்கு மோயா சுவாமியிடம் போகத் தயாராகியும் ஏதோ ஒர் எண்ணம் உடல்நலம் சரியில்லாத அம்மாவையும் டோரதியையும் விட்டுவிட்டுப் போவது கூடாது என்று தோன்றியது. சுவாமியிடம் தியானத்தில் உத்தரவு கேட்டேன். 'Dharma' என்ற எழுத்து TV Screen போலத் தோன்றியது. உன் கடமையைச் செய் என்பதே இதன் பொருளாக இருந்ததால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு தாயோடும் டோரதியோடும் தங்கி இங்கேயே கிறிஸ்மஸ் கொண்டாடினேன்.


🌹அன்பான பேட்டிகள்:

சுவாமி அடுத்தநாள் பேட்டி தருகிறார் என்ற நினைப்போடு இருக்கும் முதல் நாள் ஒரு பக்தரின் வாழ்வில் உன்னதமானது. ஒருமுறை பேட்டியில் வெகு பிரியத்தோடும் அன்போடும் எங்களிடம் பேசினார். உங்களால் மக்களை மாற்ற முடியாது போதுமான அன்பைப் பொழிந்து கொண்டே இருந்தால் இறுதியில் அது மிகச் சரியாக வேலை செய்யும். சுவாமி எங்களுக்கு முன் நின்று எங்களை கைகளைப் பிடித்தபடி பேசினார். பேசும்போது அவர் விழிகளில் எல்லையற்ற அன்பும் கருணையும் ஒளியும் நிறைந்து சுடர்விட்டதை என்னால் மறக்க முடியாது. எப்போதும் இப்படிக் கண்டதில்லை. எத்தனையோ பேட்டிகள் அந்த அறையில் நாங்கள் அடைந்திருக்கிறோம்.சுவாமியின் அந்த அற்புதமான உணர்ச்சி நிறைந்த கண்களை அதற்கு முன்போ பின்போ பார்க்கவில்லை. புட்டபர்த்திக்கோ ஒயிட்ஃபீல்டுக்கோ சுவாமியின் தரிசனத்திற்குச் செல்லும்போது சுவாமி நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வருவதும் விபூதி தருவதும் எங்களை ஆசீர்வதிப்பதும் அன்போடு பேசுவதும் அடிக்கடி நிகழ்பவை. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பிரத்யட்ச தெய்வமான சுவாமியின் தொடர்பில் அவர் அன்பில் தோய்ந்து ஆத்ம திருப்தியோடு வாழும் ஆனந்தத்தில் எப்போதும் நாங்கள் மூழ்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாள் இரவு உறங்கப்போகும் போதும் எந்த ஒரு செயல் குறித்தும் சரியாக முடிவெடுக்கும் தெளிவைத் தரச்சொல்லி பாபாவைப் பிரார்த்திக்கிறோம். தன் ஆரஞ்சு அங்கியை சுவாமி எங்களுக்கு தந்திருக்கிறார். ஒரே மாதிரியான சேலைகளை இருவருக்கும் தந்து நாங்கள் அதை உடுத்திக் கொண்டு தரிசனத்திற்குப் போய் அவரை மகிழ்விப்பதுண்டு. சுவாமிக்கான பல புத்தகங்களை சுவாமியின் வாசகங்கள், அழகிய வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகளோடு கூடிய புத்தகங்களை வெளியிட்டோம். Moments of Beauty, Love All Serve All போன்ற அற்புதமான புத்தகங்களைத் தயார் செய்யும்போது சுவாமி 'தான்' அருகிலிருந்ததாகக் கூறி படித்துப் பார்த்து வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
பாபாவின் 60வது பிறந்த நாளில் மோயா,  Australian float for a Parade for Baba என்ற ஓவியத்தை காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து வரைந்திருக்கிறார்.மோயா முதலில் சமஸ்கிருதத்தில் பஜன்களை சிரமப்பட்டுப் பாடிக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலேயே பாடு அவரவர் மொழியிலேயே தெய்வப் பாடல்களைப் பாடுதல் நல்லது என்று சுவாமி சொன்னதோடு  மோயாவின் தொண்டையைத் தொட்டு ஆசீர்வதித்ததிலிருந்து அற்புதமாகப் பாடத் தொடங்கிவிட்டார்.

ஒரு முறை சுவாமி தரிசனம் ஆனதும் பயணப்பட நினைத்தோம். சுவாமி எங்களைப் பார்த்து நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொல்லவும் திகைத்தோம். ஏனென்றால் சுவாமி உத்தரவு தராமல் எங்கும் கிளம்ப முடியாது! 'ஸ்வாராவில்' போய்ச் செய்ய வேண்டிய கடமையும் சேவையும் காத்திருக்கும் போது எப்படிப் போகாமலிருப்பது? அன்று எல்லோரும் பஜனை பாடிக் கொண்டிருந்தபோது நாங்கள் Clarification Baba Clarification Baba என்று பாடிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் சுவாமி பேட்டிக்கு அழைத்தார். 'பாபா இந்த வியாழக்கிழமை நாங்கள் கிளம்பலாமா மீண்டும் உடனே வருவோம் பாபா' என்று கேட்டோம். அவர் உடனே சொன்னார். என்னது வருவது போவது வருவது போவது வருவது போவது எப்போதும் வருவதும் போவதும் இல்லை இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு மற்றவர்களிடம் பேசப் போய்விட்டார். மறுபடியும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நாங்கள் சொன்னோம். அங்கு ஸ்வாராவில் ஊனமுற்றவர்களுக்குச் செய்யும் சேவை உங்களுடையதே அல்லவா? எங்களோடு வந்து சாயிசகோதரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார். பதினைந்தாம் தேதி விமான பயணச் சீட்டுகளைப் பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் போகலாமா என்று கேட்க, சற்றே எங்களை உற்றுப் பார்த்துவிட்டு, 'ஓ நீங்கள் போகலாம் நவம்பரில் வாருங்கள்' என்று உத்தரவு தந்தார். மிகுந்த சந்தோஷம் என்று சொல்லியனுப்பினார். அதன்பிறகு 6 வாரங்களுக்குப் பிறகு நவம்பரில் சுவாமியிடம் வந்துவிட்டோம்.
டோரதிக்கு பச்சைக்கல் மோதிரம் தந்து  Put disabled ones hands and feet இது அவர்களைக் குணப்படுத்தும் என்றார். மோயாவிற்கு ஓம் என குறியிட்ட Soham  வார்த்தைகளோடு அற்புதமான மோதிரம் தந்தார்.


ஒருமுறை ஆஸ்திரேலிய டாக்டர் ஒருவருக்கு தங்கச் சிலுவையை பாபாவிடம் ஆசீர்வாதம் பெற்று வந்து தர முடியுமா என்று ஒரு பக்தர் கேட்டார். அது அவர் நோயாளிகளைக் குணப்படுத்த உதவியாயிருக்கும் என்று கேட்க, அவ்வண்ணமே ஒரு கிறிஸ்துமஸ் தினத்தின் போது மோயா சுவாமியிடம் அந்தச் சிலுவையை தந்து ஆசீர்வதிக்கும்படி கேட்க பாபா மோயாவின் முன் சென்று அந்தச் சிலுவையை எடுத்துத் தட்டி ஆசீர்வதித்துத் தந்து மோயாவின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். அன்று மோயா மட்டுமே சுவாமியைப் பார்த்து பேச முடிந்த நபராக இருந்தார். பாபா மணலில் நடந்து போகும்போது மணலில் பதிந்திருக்கும் அவருடைய சித்திரப் பாதச்சுவடுகளைப் பார்த்து ரசிப்பதுண்டு என்கிறார் மோயா.

மோயா மட்டும் இந்தியா போகும்போது சுவாமி ஓ... வந்துவிட்டாயா? உன் சகோதரி எப்படியிருக்கிறார்? உன் தாய் எப்படி இருக்கிறார் என்று அக்கறையோடு விசாரிப்பார். புருவங்களை உயரத் தூக்கியபடி பாபா எப்போது வந்தாய் என்று கேட்பதே அழகாயிருக்கும். ஒரு முறை தன்னிடம் பாத நமஸ்காரம் எடுத்துக்கொள் என்று பாபா சொன்னபோது மூட்டுவலியால் உடனே குனிந்து பாத நமஸ்காரம் செய்ய முடியவில்லை. நான் குனிந்து பாபாவின் சிறிய பாதங்களைத் தொட்டு வணங்கி முத்தமிட சற்று நேரமானது. இருந்தாலும் சுவாமி பரிவோடு நின்றார். ஒரு முறை பாபா சொன்னார் நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள் எப்போதும் கடவுளோடு இருப்பதால்... ஓ..பாபா உங்களை நாங்கள் மிகவும் விரும்புகிறோம் என்று சொல்ல ஓ நானும் உங்களை அப்படியே விரும்புகிறேன் என்று இனிமையாகப் பதிலளித்தார்.

ஒரு கிறிஸ்துமஸ் விழாவிற்குப்  பிறகான பேட்டியில் ஓ பாபா! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அலங்காரங்கள் பிரமாதம் பாபா அது உங்கள் பிரசாதம் என்று சொன்னோம். சுவாமி புன்னகையோடு என் பேச்சு எப்படியிருந்தது என்று கேட்டார். உங்கள் பேச்சு அற்புதமாக இருந்தது. ஜீசஸ் பற்றி பேசினீர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் பாபாவின் அன்பான ஏற்பாடுகளை நாங்கள் பாராட்டிய போது அது எனக்காகச் செய்து கொண்டதல்ல உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்றார்.
ஒருமுறை பாபா சொன்னார்... கடுமையாக உழைக்கிறேன் எல்லா நாட்களும் எனக்கு பணி நாட்களே... மைல் கணக்கில் பாத நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்கிறேன்.


ஒரு முறை ஆஸ்திரேலியப் பயணத்திற்கு புறப்படத் தயாரான போது பேட்டிக்கு அழைத்தார். அவர் அழைப்பிற்குச் சற்று தாமதமான போது ஏக்கம் அதிகமானது. நாளைக்குக் கிளம்புகிறோம் பாபாவோ நம்மைப் பார்க்கவில்லை
பேசவுமில்லை.அவரிடம் ஆசி கேட்டுப் புறப்படுவதற்கு அழைக்கவில்லை என்று தானே நினைத்தீர்கள். ஆமாம் பாபா எங்கள் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அது ஆனந்தக் கண்ணீர் என்றார்.எங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். அதுவே அவருக்கு முக்கியம் என்பதாய்... பாபா எங்களிடம் அப்படிக் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் சொல்வோம் ஓ பாபா உங்களோடு இருக்கும் போது எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறோம்.
திருமணம் பற்றிப் பேசும்போது இருவிதத் திருமணங்களைப் பற்றி பாபா குறிப்பிட்டார். ஆன்மீகத் திருமணம்,லௌகிகத் திருமணம்.  லௌகிகத் திருமணத்தில் எடுப்பது எடுப்பது எடுப்பது, ஆன்மீகத் திருமணமோ கொடுப்பது கொடுப்பது கொடுப்பது. கடவுளைப் பற்றிய சிந்தனையோடும் நினைப்போடும்  சதா வாழும் ஆன்மீக மணமே மேன்மையானது என்றார். டோரதி பாபாவிடம் சொன்னார்..'பாபா எங்களுக்கு எல்லாம் நீங்களே எங்கள் மகிழ்ச்சி முழுமை நீங்களே எங்கள் ஒளி.. எங்கள் நன்மைக்காகவே எதையும் செய்கிறீர்கள்... நீங்களே எங்கள் வானவில் என்று சொல்ல,பாபா உடனே 'வானவில்? ஓ சந்தோஷம் சந்தோஷம் என்றார். மகிழ்ச்சி என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். ஓ பாபா உங்களோடிருப்பதே எங்கள் மகிழ்ச்சி என்று சொல்ல அதுவே சரி. மகிழ்ச்சி என்பது ஆண்டவனோடு ஒன்றியிருத்தல் என்றார். கோடைப் பொழிவுகளில் நாங்கள் கேட்ட பாபாவின் அற்புதமான சொற்பொழிவுகளில் இந்தியாவின் ஆன்மீக மேன்மையை அறிந்து மகிழ்ந்தோம். பாரதத்தின் மேல் எங்களுக்கிருந்த அன்பு அதிகரித்தது. உலகத்தைப் பாதுகாக்கும் கடவுளான நான் உங்களை கவனித்து வரும்போது ஏன் எதற்காகவும் பயப்படுகிறீர்கள் என்று சுவாமி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். சிலர் மூட்டு வலி எப்படியிருக்கிறது என்று கேட்கும் போது ஓ மிகவும் நன்றாக இருக்கிறது என்று புன்னகையோடு சொல்லிவிட்டு பாபாவிடமான எங்கள் நினைப்பை ஒருமுனைப் படுத்துவோம்.


🌹எப்போதும் பாபா:

மிக அதிகமான பணிகளில் களைப்போ தளர்ச்சியோ அடையும்போது சக்தியை ஒரேயடியாய் இழந்ததாய் நினைக்கும்போது, பாபாவின் பொன்னொளியில் குளிப்பதான காட்சியைக் கற்பனை செய்துகொள்ள, பொன்னொளி எங்கள் மேல் பொழிந்து கொண்டிருக்கும். சக்தியோடும் புத்துணர்ச்சியோடும் எழுந்து அடுத்த பணிகளை வேகமாய் செய்யத் தொடங்குவோம்.
பாபா சொல்வார்: 'yesterday is history and tomorrow is a mystery, but today is a gift, a real present. So enjoy it and be happy and make others glad that you are here' …………பாபா சொல்வதை எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். பாபாவோடு இந்த உலகத்தில் இந்த நேரத்தில் வாழ நாங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள். எத்தனையோ ஆத்மாக்கள் சுவாமிக்காக தவித்தபடி இருக்கின்றன. இருந்தும் எத்தனையோ மக்கள் சுவாமியின் அவதார ரகசியத்தை தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'தெய்வம் பாபா' என்பதை உணர்ந்து கொண்டதும் இதயத்தில் வைத்து வழிபட்டு வருவதும் அவரையே எங்கள் வாழ்வின் எல்லாமாகக் கொண்டிருப்பதும் சுவாமி எங்களுக்குத் தந்த பாக்கியமே அல்லவா!

அன்பிலே நிறைந்த சூரியனாய் ஒளிரும் பாபாவை எங்கள் இதய தெய்வமாய் வழிபடுவது எங்கள் நல்லதிருஷ்டமே அல்லவா? பாபா சொல்கிறார்: நான் அழைத்தாலொழிய யாரும் என்னிடம் வர முடியாது. எங்களுக்குரிய நேரம் வந்தபோது நாங்கள் சுவாமியிடம் அழைக்கப்பட்டுவிட்டோம். பாபாவை முதன்முதலில் பார்த்தபோது எங்களுக்குள் ஒளிரத் தொடங்கிய சுடர் சுவாமியை உணர உணர அனுபவிக்க அனுபவிக்க இன்னும் பெரிதாய் அகண்ட ஜோதியாய் வளர்ந்து பிரகாசிக்கிறது.

பாபாவிடமிருந்து திரும்பி வரும்போது மீண்டும் பாபாவிடம் போகவேண்டும் என்ற நினைப்போடு வருவதே ஆனந்தமான அனுபவம். பாபாவிடம் இருக்கும்போதே எங்களை பூரண மானவர்களாக உணர்கிறோம். பாபாவின் அன்பும் ஆதரவும் கவனிப்பும் இனிமையும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒருமுறை பாபாவிடம் சொன்னோம்.பாபா ஏன் எங்களிடம் இவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. மிகவும் இனிமையாக இதமாக அன்பாக மிகுந்த அன்பை எங்கள்மேல் பொழிகிறீர்கள். இந்தப் பிறவியில் இதற்குத் தகுதியாக எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடுத்த பிறவியில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று மோயா சொல்ல, சற்றுநேரம் எங்களைப் பார்த்த பாபா சொன்னார்: நீங்கள் இருவரும் மன சேவை செய்கிறீர்கள் என்றார்.you two serve with the mind என்றார்.


🌹ஆனந்த அன்பு:

பாபா எங்களிடம் ஒரு பேட்டியின்போது கேட்டார் தெய்வத்துடன் ஒன்றி விடுகிறீர்களா? நாங்கள் சொன்னோம் ஆமாம் பாபா ஆனால் இப்போது இல்லை. நீங்கள் பூமியில் இருக்கும்போது உங்களை உங்கள் தெய்வீகத்தை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும். காரில் விமானத்தில் சுவாமியோடு பயணப்பட்ட இனிய அனுபவங்களும் இவர்களுக்குண்டு. மோயாவிடம் பேசும்போது பேச்சுக்குப் பேச்சு பாபா பாபா பாபாதான். சுவாமி லிவிங் காட் சுவாமி ஈஸ் ஸ்வீட் என்று க்ஷணத்திற்கு க்ஷணம் சொல்லிக்கொண்டிருந்தார். மோயா எனும் இந்த முதிர்ந்த ரோஜாவின் வாசம் முழுவதும் சாயிவாசமாகவே நிறைந்திருக்கிறது. இப்போது மோயாவின் வயது 83 ஆரோக்கியமான பிரகாசம் நிறைந்த அழகு முகம் ஆனந்தம் பொங்கும் சிரிப்பு அடடா அவர் நம் சாயி குடும்பத்தின் உன்னதமான பொக்கிஷம்!
புத்தகங்கள் பூக்கள் சாக்லேட்டுகள் தந்து எங்கள் தலை தொட்டு ஆசீர்வதித்து வாசல்வரை வழியனுப்ப வந்தார். சுவாமியின் ஆனந்தமே மோயாவாக நடமாடுகிறது.


மோயா ஓர் இடத்திற்குப் போனால் அங்கு சுவாமி வந்து விட்டார் என்ற உணர்வும் ஆனந்தமும் சாயிபக்தர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. மோயா எங்களை ஆசீர்வதித்து வழியனுப்ப வாசற்கதவைத் திறந்தார். அவருடைய அழகிய தோட்டத்திலிருந்து நறுமணம் சூழ்ந்த சுகந்தக் காற்று அதிபலமாய் வந்து எங்கள் முகத்தில் மோதியது. அவர் ஒரு ஆனந்த அனுபவம்! மோயா சாயியின் ஆனந்த தெய்வீகத்தினை சதா வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய ரோஜா! அங்கிருந்து புறப்பட்டேன் இன்னும் சுவாமியின் மேல் அன்பு பொங்கத் தொடங்கியது.

ஜெய் சாயிராம்!

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 
(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக