தலைப்பு

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஸ்ரீ ராமர் - ஏற்றமிகு கதாநாயகர் -ஸ்ரீ சத்ய சாயி பாபா


ஸ்ரீ மத் இராமாயணத்தை ஸ்ரீ இராம கதா ரச வாஹினியாக பாபா அளித்ததே துல்லியமான இராமாயணம்...! காரணம் தன் முந்தைய அவதாரத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி அவரை விட வேறு யாரால் அவ்வளவு தெளிவாக விளக்கிவிட முடியும்?! ஸ்ரீ ராம நிகழ்வுகளைக் குறித்து நாம் அறியாத பல ஆச்சர்ய அதிசய ரகசியங்களை எல்லாம் நம்மை பரவசமாக்கிட பேரிறைவன் பாபாவே விவரிக்கிறார் இதோ...

🌷கபந்தன் கதை:

ராமரும் லக்ஷ்மணரும் சீதையை தேடி காட்டில் அலைந்து கொண்டிருந்தனர்.  அப்போது அவர்கள் முன் வயிற்றில் முகம் வைத்துக் கொண்டு, வித்திரமான நபர் ஒருவர் வந்தார். அவரது உருவத்தைப் பார்த்து, அந்த நபர் ஒரு அரக்கன்  என்று அவர்கள் முடிவு
செய்தனர்.
ராமரும் லக்ஷ்மணரும் அந்த அரக்கனை நோக்கி, "நீ யார்? உனக்கு தலை இல்லையே, எப்படி உயிர் வாழ்கிறாய்?  மற்றவர்களுக்கு  உள்ளது போல் உனக்கு கழுத்து இல்லாத காரணம் என்ன?“ எனக் கேட்டனர்.


அதற்கு அந்த விசித்திர பிராணி பதில் கூறியது, "எனது பெயர் கபந்தன், எனது கைகளை பத்து மைல் தூரம் வரை நீள வைக்க முடியும். அப்போது எனது விருப்பமான இரையை என்னால் கைப்பற்ற முடியும். நான் இது போல் நகர்ந்து, எனது வயிறை நிரப்பிக் கொள்வேன். நீங்கள் இருவரும் யார்? இந்த  பயங்கரமான அடர்ந்த காட்டில் எதற்காக வந்தீர்கள்? நீங்கள் இளம் வயதினராக  இருக்கின்றீர்கள், உங்களை பார்த்தால், இளவரசர்கள் போல் தெரிகிறதே?  நீங்கள்  எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?“ என வினவியது.

அதற்கு, எப்போதும் உண்மையே பேசும் ஸ்ரீ ராமர் பதில் சொன்னார். "எங்களது தந்தையின் ஆணையை நிறைவேற்ற நாங்கள் காட்டிற்கு வந்தோம். எனது  மனைவியின் பிரிவின் வேதனையால் நான் துன்பம் அடைந்துள்ளேன். யாரோ அவளை கடத்தி சென்று விட்டனர். அவள் எங்கிருக்கிறாள், அவளுக்கு நடந்தது என்ன என்பது  பற்றி உன்னால் சொல்ல முடியுமா?

அதற்கு கபந்தன் ராமரிடம் சொன்னார், 'எனது உடலில் நெருப்பு வைத்து என்னை சாம்பலாக்கி விடுங்கள், அதன் பிறகு,  உங்களுக்கு தேவையான எல்லா விவரங்களும் கூருகிறேன்“.

உடனே ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணரும் கபந்தனை கொன்று, அவரது உடலை எரித்தனர்.  அப்போது, சாம்பலில் இருந்து,  ஒரு அழகான உருவம் தோன்றியது.

அது ராம லக்ஷ்மணரை பார்த்து கூறியது, "முனிவர்களின் சாபத்தால் நான் இந்த அருவருப்பான தோற்றத்தை எடுக்க வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது. என்னை கொன்று சாம்பலாக்குபவர் கடவுளாகத் தான் இருப்பார் என என்னிடம் கூறப் பட்டது. ஓ ராமா!  உனது சீதை இலங்கையில் உள்ளார். அவர்  கற்புக்கரசி.  அவரை யார் தொட்டாலும் சாம்பல் ஆகி விடுவர். நீங்கள் விரைவில்  சீதையை காண்பீர்கள் அயோத்திக்கு திரும்புவீர்கள், எனது வார்த்தைகள் பொய்க்காது. நீங்கள் சுக்ரீவனின் உதவியை நாடுங்கள். உங்களுக்கு நலமும் அமைதியும்  ஏற்படட்டும்.'

இந்த வார்த்தகளை கூறியவுடன், கபந்தன் கண்ணில் இருந்து மறைந்து விட்டார்.


🌷சுக்ரீவனுடன் கூட்டணி:

வாலி மற்றும் சுக்ரீவன் பற்றி பார்ப்போம். வாலி மிகுந்த பலமும் அதிகாரமும் கொண்ட வானர அரசன் . ஆனால் அவனிடம் ஒழுக்கம் இல்லை, பல தீய செயல்களை செய்து  வந்தான்.  துந்துபி என்ற வலிமையான அரக்கனுடன் வாலி போரிட்டான். சண்டையில் அந்த அசுரனைக் கொன்று, அவனது உயிரற்ற உடலை விட்டெறிந்தான். மதங்க  முனிவர் தவம் செய்து கொண்டிருந்த ரிஷ்யமுக மலையின் மீது அந்த உயிரற்ற உடல் விழுந்தது.  அந்த அரக்கனின் உடலில் இருந்து சொட்டிய ரத்தம் மதங்க முனிவரின் மீது விழுந்தது. அவர் மிகவும் கோபமுற்று,  துந்துபி அரக்கனை கொன்றவன் எவராயினும்,  ரிஷ்யமுக மலையின் மீது அடியெடுத்து வைத்தால், அவன் தலை சுக்கு நூறாக  உடைந்து சிதறும் என சாபமிட்டார்.


வாலி தனது சொந்த சகோதரன் சுக்ரீவனுடன் சண்டையிட ஆரம்பித்தார். சுக்ரீவனை நாட்டை விட்டு துரத்தினான். வாலி நிச்சியமாக ரிஷ்யமுக மலைக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில் சுக்ரீவன் அங்கு வாழ ஆரம்பித்தார். (மதங்க முனிவரின் சாபத்தின் காரணமாக வாலி வர வாய்ப்பு இல்லை என சுக்ரீவன்  எண்ணியதே இதற்கு காரணம்)  சுக்ரீவன் தனது சகாக்கள் மற்றும் அனுமனுடன்  ரிஷ்யமுக பர்வதத்தை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். வாலியை எவ்வாறு  தோற்கடிக்கலாம் என்று பல விதங்களிலும் யோசித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அனுமனும் சுக்ரீவனும் தூரத்தில் காட்டில் இரண்டு அழகான நபர்கள் நடந்து செல்வதை பார்த்தனர். அவர்கள் யார் என யோசித்தனர், அவர்கள் வேட்டைக்கு  வந்திருக்கலாம் என சுக்ரீவன் நினைத்தார். சுக்ரீவன் அனுமனை அனுப்பி அவர்கள் யார் என விவரம் தெரிந்து வர சொன்னார். அனுமன் ஒரு அந்தணரின் தோற்றத்தில் ராம  லக்ஷ்மணரை ச்ந்தித்தார். அனுமனின் பேச்சு மிக்க கண்ணியமானதாகவும் மென்மையாகவும் இருந்தது.

அனுமன் ராம லக்ஷ்மணரிடம் தன்னை சுக்ரீவனின் அமைச்சர் என்று அறிமுகப்  படுத்திக் கொண்டார். ராம லக்ஷ்மணரை தனது தோளில் தூக்கிக் கொண்டு  சுக்ரிவனிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டார். அப்போது ஸ்ரீ ராமருக்கும்  அனுமனுக்கும் ஸமஸ்கிருதத்தில் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அந்த உரையாடலில்  இருந்து, வாலி சுக்ரீவனிடம் நியாயம் இல்லாமல் நடந்திருப்பதை ஸ்ரீ ராமன் புரிந்து  கொண்டார். வாலி சுக்ரீவனிடமிருந்து ராஜ்யத்தை பறித்துக் கொண்டு, கிஷ்கிந்தாவை விட்டு சுக்ரீவனை விரட்டியதை தெரிந்து கொண்டார்.

சுக்ரீவன் செய்யாத குற்றங்களை செய்ததாக வாலி குற்றம் சாட்டினார். தேசத்தில்  இருந்து மறைந்து வாழும் சுக்ரீவனுக்கு, வாலியை விட பலசாலியான நண்பன்  தேவைப் பட்டது. சுக்ரீவன் ஸ்ரீ ராமரிடம், "எனது சகோதரன் மிகுந்த அதிகாரமும் பலமும் கொண்டவன். எனவே தாங்கள் எனது  சகோதரனை விட பலசாலியா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான்.  ஸ்ரீ ராமரும் சரி என்றார்.

சுக்ரீவன் மேலும் கூறினார்,  எனது சகோதரன் வாலி ஒரு முறை அம்பு எய்த போது  ஐந்து ஸால் மரங்களை பிளந்து கொண்டு வெளியே வந்தது .ஸால் மரத்தை பிளந்து  அம்பு விடுவது மிக கடினம், ஏனெனில், ஸால் மரம் மிக வலிமையானது. சுக்ரீவன்  ஸ்ரீ ராமரிடம், நீங்கள் அம்பு விட்டு நான்கு ஸால் மரங்களை பிளந்தால் கூட தாங்கள் வாலிக்கு சமம் என எடுத்துக் கொள்கிறேன், என்றார். ஸ்ரீ ராமர் சிரித்துக் கொண்டே  அம்பு விட்டார், அது ஏழு ஸால் மரங்களை பிளந்தது.

ஸ்ரீ ராமரின் செய்கையால் சுக்ரீவன் மிகவும் ஈர்க்கப் பட்டார். அவர் வாலியை  தோற்கடிக்க ஸ்ரீ ராமரின் உதவியை நாடினார். சீதா தேவியை கண்டுபிடிப்பதற்கு  ஸ்ரீ ராமருக்கு உதவுவதாகவும் வாக்களித்தார். ஸ்ரீ ராமர் சுக்ரீவனை வாலியுடன்  சண்டைக்கு வரச் சொல்லி சவால் விடுமாறு ஆலோசனை வழங்கினர். ஆனால்  சண்டை நடைபெறும் இடம் கிஷ்கிந்தாவில் இருந்து பத்து மைல் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் சுக்ரீவனுக்கு ராமர் நிபந்தனை  விதித்தார்.
ராமர் அவ்வாறு ஆலோசனை வழங்கியதற்கு காரணம் நாடு கடத்தப் பட்டு மறைவாக இருக்கும் எவரும் நகரம் மற்றும் கிராமங்களுக்கு உள்ளே வருவது தடை செய்யப்  பட்டுள்ளது. அந்த சட்டங்களின் படி, நாடு கடத்தப் பட்டவர் காடுகளில் மட்டுமே வசிக்க வேண்டும். எனவே வாலியை சுக்ரீவன் அவனுடைய ராஜ்யத்தை விட்டு வெளியே  அழைத்தால் மட்டுமே, ராமரால் சுக்ரீவனுக்கு உதவ முடியும்.
ஸ்ரீ ராமரின் ஆலோசனைப் படி, சுக்ரீவன் கர்ஜனை குரலில் வாலியை சண்டைக்கு  அழைத்தான். தாரா வாலியின் நம்பிக்கைக்குறிய மனைவி ஆகும். சுக்ரீவனுடன்  சண்டைக்கு போக வேண்டாம் என வாலியை தாரா தடுத்தாள்.

தாரா வாலியிடம் கை  கூப்பி, “தாங்கள் இப்போது சண்டைக்கு செல்ல வேண்டாம், சுக்ரீவன் மிக பலசாலியான ஒரு இளவரசரை நண்பன் ஆக்கியுள்ளார், அவசரப் பட வேண்டாம், அது அபாயத்தில்  கொண்டு விடும். எந்த செயலையும் செய்யும் முன் நிதானமாக யோசித்து செய்யுங்கள். அவசரம் தீமையை விளைவிக்கும். அது அபாயகரமானதாக இருக்கும்" என்றாள்.

தாரா இந்த வார்த்தைகளை கூறி வாலியை சண்டைக்கு செல்லாமல் இருக்க  முயன்றாள். தாரா பல நற்பண்புகள் உடைய கற்புடைய மனைவி.  அவள் மிகுந்த  புத்திசாலி. ஆனால் சுக்ரீவன் அடுத்த நாளும் தன்னை சண்டைக்கு வருமாறு  கூப்பிட்டவுடன், வாலி சண்டையிட ஒடி வந்தான். சுக்ரீவன் மிகுந்த தீரத்துடன்  சண்டையிட்டாலும், வாலியின் கை மெதுவாக ஒங்கியது.  வாலி சுக்ரீவனுக்கு மிக  பலமான அடிகளை கொடுத்து ஒட ஒட விரட்டினான். சுக்ரீவன் போர்களத்தை விட்டு  ஒடி விட்டான்.

ஸ்ரீ ராமர் தனது உதவிக்கு வரவில்லை என்று சுக்ரீவனுக்கு மிகுந்த வருத்தம். ஸ்ரீ ராமர் அதற்கு, 'சுக்ரீவா, உனக்கும் வாலிக்கும் தோற்றத்தில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. "அவர்கள் பார்க்க ஒரே மாதிரி இருந்தனர். ராமர் சுக்ரீவனிடம் மிக அன்பாக பேசி,  அவனை தேற்றினார். சுக்ரீவனிடம் " நீ தைரியமாக இரு. அடுத்த போரில், நீ (சுக்ரீவன்) வாலியை கொல்வாய்' எனக் கூறினார். ஆனால் அடுத்த முறை  சுக்ரீவன்  கழுத்தில் மாலையுடன்  போரிட வேண்டும்.  அப்போது தான் தன்னால்  வாலியையும்  சுக்ரீவனையும் வித்தியாசம் காண முடியும் என்றார்.  லக்ஷ்மணரிடம் காட்டில் உள்ள  பூக்கள் கொண்டு சுக்ரீவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னார். அடுத்த நாள் போரில்  சுக்ரீவன் இரண்டாவது தடவையாக வாலியுடன் போரிட்டான்.

இரு சகோதரர்களிடையே போர் நிகழ்ந்தது. மரத்தின் மறைவில் இருந்து ராமர் எய்த  அம்பு வாலியை கீழே விழ வைத்தது. அப்போது ராமர் வாலியிடம், " உனது சகோதரன் சுக்ரீவனுக்கு நீ தீங்கு விளைவித்திருக்கிறாய். நீ அவரது  மனைவியை அபகரித்தாய்.  உனது தம்பியின் மனைவி உனது மகள் போன்றவள்  அல்லவா? நீ அவனது ராஜ்யத்தை அபகரித்தாய், அவனை நாட்டை விட்டு விரட்டினாய், அவனது மனைவியை கவர்ந்தாய், அவன் செய்யாத குற்றங்களை அவன் மீது  சுமர்த்தினாய், உன்னிடம் சத்தியம் இல்லாதவற்றை நான் பேச விரும்பவில்லை.  அதனால் உன்னை கொல்ல நான் தீர்மானித்தேன், உனது சகோதரனுக்கு உதவி  செய்வதாக வாக்களித்தேன். "எனக் கூறினார்.

வாலி ஸ்ரீ ராமரிடம் பலவிதமான விவாதங்களை எழுப்பினான். கடைசியில், வாலி  ராமனிடம்," ஒ ராமா! எனது வாழ்வு முடியப் போகிறது. கிஷ்கிந்தை ராஜ்யத்திற்கு எனது மகன் அங்கதனுக்கு இளவரசர் பட்டம் கொடுப்பதாக எனக்கு சத்தியம் செய்து கொடு என வேண்டினான். ராமர் அதை ஏற்றுக் கொண்டு, வாலிக்கு கொடுத்த சத்தியத்தை  காப்பாற்றினார்.  ஸ்ரீ ராமர் சுக்ரீவனை அரசனாகவும் அங்கதனை இளவரசராகவும் முடி சூட்டினார்.


🌷ராவணனுக்கும் சீதா தேவிக்கும் நடந்த உரையாடல்:



ஆதாரங்களின்  அடிப்படையில் அறிஞர்கள் ராமாயணத்தின் சில தத்துவங்களை கூர்ந்து  நோக்கியுள்ளனர்.  ராவணனுக்கும் சீதைக்கும் நடந்த உரையாடலின் அடிப்படையில்  ராமாயண கதாபாத்திரங்களின் வயது ஒரளவுக்கு புலனாகிறது. ராவணன் சீதையிடம், "எனக்கு இரண்டாயிரம் வயது, உனது கணவன் ராமனின் வயது நாற்பது, உனது வயது  முப்பத்து ஒன்பது," என்றார்.


🌷பூமியின் அளவிட முடியாத சக்தி:

பூமி பல விதமான சக்தி கொண்டது. ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் பல  சக்தி வயல்கள் உள்ளன. பூமியின் சக்தி கற்பனைக்கு அப்பாற்பட்டது. என்வே தான் பூமியை  சக்தியின் களஞ்சியம் எனக் கூறலாம். இந்த சக்திகளில் முதன்மையானது காந்த சக்தி ஆகும்.



சீதை பூமாதேவியின் மகள். அவளை பூஜாத்தா என்று அழைப்பர். ஸ்ரீ ராமர் ஈஸ்வரன்  சிவனின் வில்லை தூக்க வந்த போது,  பூ தேவிக்கு அளவற்ற மகிழ்ச்சி. அங்கே  குழுமியிருந்த எந்த ஒரு ராஜாவோ இளவரசனோ சீதைக்கு வயதில் ஏற்றவர்களாக  இல்லை. அவர்களின் தோற்றமும் சீதைக்கு பொருத்தமானதாக இல்லை. ராமர் மட்டுமே இளமை பொருந்தியவராக காணப் பட்டார். அவரது உடல் வாகு விவரிக்க முடியாத அளவு  சிறப்பாக இருந்தது. அவர் மிக அழகாக இருந்தார். பூ தேவி ராமரே சீதைக்கு ஏற்றவர் என  முடிவு செய்தார். 

ராமர் சபையில் வெற்றி பெற எந்த தடையும் இல்லாதவாறு பூ தேவி பார்த்துக் கொண்டாள். மற்றவர்களால் தூக்க முடியாத சிவ தனுசை தனது இடக் கரத்தால் மட்டுமே  தூக்கி தனது பலத்தை நிரூபித்தார். இது  சாத்தியப் பட்டது பூதேவியின் பலத்தால் ஆகும். வில்லின் கனத்தை பூ தேவி தாங்கியதால் இது சாத்தியமாயிற்று.

மண்டோதரி - ஏற்புடைய மனைவி

ராவணன் கடல் தாண்டி சீதையை கடத்திக் கொண்டு வந்திருந்தான். அவன் பொருள்சார் மனமுடையவன். தனது செல்வம், அதிகாரம், செழுமை, கையகப்படுத்தியவை  இவற்றை சீதையிடம் காண்பித்து, தன் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்த  முயற்சித்தான், இந்த எண்ணத்துடன் சீதையை தனது அரண்மனையின் உள்ளே  அழைத்துச் சென்றான். அவற்றை சீதை ஏளனத்துடன் நோக்கினாள். இந்த நிகழ்வால்  மண்டோதரி மிக வருத்தம் அடைந்தாள்.


மண்டோதரி ராவணனிடம் அறிவுரை கூறினாள். "பிரபு!  தங்களது  விதியை  நீங்களே ஏன் வரவழைக்கிறீர்கள்? அழிவு வரும்  வேளையில் பகுத்தறிவு இன்றி இப்படித்தான் நடக்கும் என்பது சரியாகத் தான்  சொல்லியிருக்கிறார்கள். (வினாச காலே விபரீத புத்தி)  சீதை போன்ற கற்புடைய தெய்வ நம்பிக்கை உள்ள பெண்ணை ஏன் கொண்டு  வந்தீர்கள்? இது நமது விதி. சீதா அன்னையின் உண்மையான தன்மையை அறிய தாங்கள் முயற்சிக்கவில்லை. இதற்கு முதலில் நீங்கள் கட்டுப்பாடுடன் தங்கள்  நிலைமை தெரிந்து நடக்க வேண்டும்.  சீதை இந்த அரண்மனையின் உள் பகுதியில்  இருக்கக் கூடாது. அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அவளை தங்கச்  செய்யுங்கள்." என்றாள்.

மண்டோதரியின் அறிவுரைப்படி, ராவணன் சீதைக்கு அசோக வனத்தில் ஒரு சிறிய குடில்  (வீடு) அமைத்து, அங்கு சீதை அமைதியாக தங்க ஏற்பாடு செய்தான். அபாயங்களை சுட்டிக்  காட்டும் ஒரு அமைச்சர் போல், மண்டோதரி ராவணனுக்கு அறிவுரை வழங்கினாள். அவள்  ராவணனை நோக்கி, "ராம சிந்தனை செய்யாமல் காம சிந்தனை செய்கிறீர்களே. இன்று முதல் உங்களுக்கு நல்ல காலம் இல்லை. உங்களின் விதி நெருங்குகிறது. உங்களிடம் பொல்லாத அழிவு எண்ணங்கள் வந்து விட்டன. ஒரு பெண்ணை அழ விட்டு கண்ணீர் சிந்த வைக்கவே கூடாது. அதை  செய்யும் தாங்கள் அதைப் போல் ஓராயிரம் முறை கண்ணீர் விட வேண்டி வரும். பெண்களை  புண்படுத்தாதே" என கூறினாள். ராவணனின் தவறைத் திருத்த மண்டோதரி தன்னால்  இயன்றவரை முயற்சித்தாள்.


ஒரு நாள் மண்டோதரி சீதையை காண சென்றாள். சீதையை கண்டு,
 "பூமாதேவியின் மகளே, எனது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் கற்புடைய  உன்னத பெண்.  தாங்கள் பவித்திரமானவள், பரிசுத்தமானவள், எனது கணவர் பாவி. அவரது பாபச் செயல்கள் அவரை நரகத்திற்கு இழுத்துச் செல்லும். நல்ல செயல்கள் செய்தால்,  மகிழ்ச்சி கிடைக்கும். பாபச் செயல்கள் செய்பவருக்கு பாபமே கிடைக்கும். அவரின் தவறான எண்ணங்கள் அவரை பாவி ஆக்குகின்றன. அவரை மன்னித்து, நான் விதவை ஆகாமல் காப்பாற்றுங்கள்" என கூறினார்.

மண்டோதரி சீதையை சந்தித்த நிகழ்வு இதற்கு முந்தைய ராமாயணங்களில் கூறப்  படவில்லை. சீதை ராமரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால், மண்டோதரியின் மனு சீதையின் காதில் ஏறவில்லை.

(தொடரும்)

மூலம் :  பகவான் பாபாவின் கோடை வகுப்பு 2002 (Summer course 2002, Brindhavan)

தமிழாக்கம்:  Prof. N.P.ஹரிஹரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக