தலைப்பு

புதன், 25 டிசம்பர், 2019

பாகம் 1 | ஸ்ரீமதி. M. S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


'திருப்பதியானது புட்டபர்த்தி ' - கவிஞர் பொன்மணி

பிரபல வார இதழான குமுதத்தில் "வெற்றிப் பெண்மணிகள்" என்ற வரிசையில் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு சிறப்பான பெண்மணியைப் பேட்டி கண்டு தொடராக எழுதியிருந்தேன். அவர்களுள் சாயி பக்தர்களாயிருந்தவர்களிடம் சுவாமி தந்த அனுபவங்களைக் கேட்டு எழுதினேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. இசைத்துறைக்கு இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களைப் பேட்டிகாண முயன்றேன். அதற்குமுன் 'கல்கி' குடும்பத்தின் பேட்டிக்காக குடும்பத்தோடு அவர்கள் இல்லம் சென்றபோது... எம்.எஸ். அம்மாவும் அங்கு வந்து எங்களோடு அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

பிரபல பாடகி M.S சுப்புலட்சுமியின் நேர்காணலில் கவிஞர் பொன்மணியின் நேரடி அனுபவம்...


அதன்பிறகும் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன். இருந்தாலும் தனிப்பட அவரைப் பேட்டி எடுக்க முயன்றபோது அவருடைய செயலர் குறுக்கிட்டார். தாயா மகளா வந்து பேசிட்டு போங்க இப்போது அவருக்கு உடல்நலம் சரியில்லை பேட்டியெல்லாம் பிறகு பார்க்கலாம்' என்றார். சரி... எப்படியும் இவரைப் பற்றி எழுதியாக வேண்டும் என்று நான் உறுதியாக இருந்ததால்... சுவாமியிடம் உதவிகோரிப் பிரார்த்தித்தேன். 'ஹிந்து' ஆங்கில நாளிதழில் பணிபுரிந்த எம்.எஸ்.ஸின் பேத்தி கவுரி ராமநாராயணன் இன்னொரு பேத்தியான 'கல்கி' ஆசிரியராயிருந்த சீதாரவி இருவரிடமிருந்தும் ஆதியிலிருந்து எம். எஸ். அவர்களின் வாழ்க்கையை அனுபவங்களை... சிறப்புச் செய்திகளை.. படங்களைச் சேகரித்தேன்.எனக்கு அவருடைய 'மதுராஷ்டகம்' பிடிக்கும் என்பதாலும் அவர் மதுரைக்காரர் என்பதனாலும் 'மதுர மதுர மீனாட்சி' என்ற தலைப்பில் இரண்டு வாரங்களுக்கு எழுதினேன். பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. அந்த இரண்டு இதழ்களையும் படித்துவிட்டு எம்.எஸ்.அம்மா தொலைபேசியில் 'நீ என்னைப்பத்தி எழுதினத நிறையதரம் படிச்சுட்டேன் படிச்சு அழுதுட்டேன் பொன்மணி' என்று நெகிழ்ச்சியோடு பாராட்டி மகிழ்ந்தார். வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தார். வீட்டிற்குச் சென்றதும் சிற்றுண்டி தந்து உபசரித்து செந்தாமரை முகம்மலரச் சிரித்தபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இப்போது முழுக்க முழுக்க சுவாமி பற்றிய பேச்சாக இருந்தது.
பத்தாண்டுகளாக சுவாமியைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கியது சதாசிவம் அவர்கள் மறுத்தது... பிறகுதானே சுவாமியிடம் கணவர் அழைத்துப் போனது... சுவாமி அவரை ஆனந்தமாக வரவேற்றது... 'பத்து வருடங்களாக என்னைப்பார்க்கத் தவித்தாயல்லவா வா வந்து பாத நமஸ்காரம் எடுத்துக்கொள்' என்று அன்போடு சொல்லி ஆசீர்வதித்தது என்று.. ஒவ்வொன்றாகச் சொல்லி வந்தார். 


கணவர் சதாசிவம் காஞ்சிமகாப்பெரியவரிடம் எம்.எஸ். அடிக்கடி புட்டபர்த்தி போய் வருவதைப் பற்றிச் சொல்லி  'திருப்பதிக்குப் போறத விட புட்டபர்த்தி போறதுதான் அதிகமா இருக்கு' என்று குறை பாடியிருக்கிறார். அதற்கு மகாப் பெரியவர் பதில் சொல்லியிருக்கிறார். 'அங்கே போறது சரிதான் திருப்பதியில் இருக்கறவர் தானே புட்டபர்த்தியில் இருக்கறதும் என்று சொல்லி சுவாமி தெய்வம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். புட்டபர்த்தியில் எம்.எஸ். அம்மா 'மீராபஜன்' பாடியபோது சுவாமி மகிழ்ந்து அவருக்கு நவரத்தின மாலையை உருவாக்கித் தந்திருக்கிறார்.


சுவாமிபாபா சென்னைக்கு வரும்போதெல்லாம் எம்.எஸ். அம்மாவின் வீட்டிற்கு வந்து தரிசனம் தந்து ஆசீர்வதித்து விட்டுப் போவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். 'சுவாமி வந்தா முதலில் பூஜை ரூமுக்குப் போய் உட்கார்ந்துவிட்டு வருவார். கிருஷ்ண பரமாத்மாதான் அவர்... என் வாழ்வில் பட்ட கஷ்டங்களையெல்லாம் சுவாமி சொன்னார். புட்டபர்த்தியிலேயே வந்து தங்கிவிடு என்று சொன்னார் அதை நான் கேட்கவில்லை. கணவர் சதாசிவம் தவறியபோது அழுதபடியேயிருந்திருக்கிறார். இவரை புட்டபர்த்திக்கு வரவழைத்து சுவாமி  வெகு அன்போடு ஆறுதல் கூறியிருக்கிறார். ஒரு தங்கச் சங்கிலியை  உருவாக்கித் தந்திருக்கிறார். பாட்டுப்பாடச் சொல்லியிருக்கிறார். இவர் தன்னால் பாட முடியவில்லை என்று துன்பப்பட்டாராம். கணவரோடு புட்டபர்த்தி செல்லும் போதெல்லாம் சுவாமி தமக்குப் பாத நமஸ்காரம் செய்ய அனுக்கிரகித்ததைச் சொல்லி சுவாமி நான் பாடும் போது எங்கள் இருவருக்குமிடையே அமர்ந்து தலையசைத்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருமுறை தரிசனத்தின்போதும் அன்போடு அழைத்துப் பேசுவார். உலகப் புகழ்பெற்ற இந்த மாதர்  சிரோன்மணியின் சுவாமி மீதான மகாபக்தியை சுவாமி இவர் மீது கொண்ட பேரன்பை வியந்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.


இதோ சுவாமி போட்ட தங்கச் சங்கிலி என்று என்னைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சுவாமி எழுதி சுந்தரத்தில் அவர் பாடிய சாயி நவரத்தின மாலையில் இருந்து... இரண்டு பஜன் பாடல்களை... சுதிப்பெட்டி வைத்துக்கொண்டு வெகு அற்புதமாக தன் மதுரக் குரலில் எனக்குப் பாடிக்காட்டினார். சுவாமியைப் பார்க்கப் போக எத்தனை முயன்றும் போக முடியாமல் இருக்கிறது என்று அவரிடம் நான் சொல்லி வருந்தவும் என்னை மாதிரியே நீ ஏங்குகிறாய் உன்னை சீக்கிரம் சுவாமி அழைப்பார் என்றார். சுவாமியைப் பற்றி இரண்டு மணி நேரமாகப் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டுமிருந்த போதில்... வீடு முழுவதும் விபூதிவாசனை 'கும்'மென்று பரவியது...பார் பார் சுவாமியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோமில்லையா சுவாமி வந்து விட்டார் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். மனமெல்லாம் தெய்விக அதிர்வுகளில் மூழ்கியது. என்னைப்பற்றி இரண்டு பேர் பேசும்போது மூன்றாவது நபராக இருந்து நான் கேட்டுக் கொண்டிருப்பேன் என்கிறார் சுவாமி... அதனால்தான் அங்கு பிரத்யட்சப்பட்டிருக்கிறார். அந்த அருமையான இசையரசியின் ஆத்மார்த்தமான பேச்சும் பாட்டும் என் உள்மனதை உழுது சுவாமி பாபாவின் மீதான என் அன்பையும் பக்தியையும் மேலும் பரவலாக விதைத்தன.


ஆதாரம்: 'சாயி கல்பதரு' - எழுதித் தொகுத்தவர் கவிஞர் பொன்மணி 
(இந்தப் பதிவு சனாதன சாரதி விழா மலருக்காக எழுதியது..)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக