தலைப்பு

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 3 | உலகின் ஒரே பாதுகாவலன்!


ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. சைலேஷ் சந்த் தர்ஷன் அவர்களின் அனுபவங்கள்.

நடனம் செய்வோரில் வல்ல நடராசன் நானே! நடன
 அடியினை ஒவ்வொன்றாக அவரவர் புத்திக் கேற்ப
படிப்படியாய்ப் பயிற்றநான் படும் பாடு யாரறிவார்?
கடினமே எனினும் நடனம் பயிற்றவே வந்தேன் நானே!
 - பாபா

 ஆண்களிடையே ஆண் என்பேன் பெண்களிடையே பெண்ணே
ஈண்டு குழந்தைகளிடையே  குழந்தையாய் ஆகின்றேன்
யாண்டும்  தனித்திருக்கும் போது  கடவுள்  நான் என்றறிவாய்
ஆண்டவனென் உண்மை நிலை  யாருக்கும்  புரிந்ததில்லை!  
- பாபா


திரு. சைலேஷ் சந்த் தர்ஷன் 










🌹இளமையும் வறுமையும்:

ஆஸ்திரேலியாவின்  ஆன்மீகமணம் கமழும்  வர்ஜீனியாவிலிருக்கும் 'கராஜ்' கோயிலின் ஸ்தாபிதம் அற்புதமானது.  சைலேஷ் சந்த் தர்ஷன்(Sailesh Chan Darshan) என்ற அருமந்த பக்தர் பர்த்திசாயியிடம்  பத்து மாதங்கள் தங்கி போதிய ஞானம் பெற்று சுவாமியின் அருளாசியோடும் வழிநடத்தலோடும் புறப்பட்டு வந்தவர். ஃபிஜியில் ( Fiji) பிறந்தவர். ஃபிஜியில் உள்ள சிறு கிராமத்தில் தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் ஏழாவது குழந்தையாய்ப் பிறந்தவர். குடும்பத்தினருக்கு சிவனே குலதெய்வம். சிறு போதிலிருந்தே சைலேஷ் வருக்கு சிவ வழிபாடு செய்வதில் ஈடுபாடு இருந்திருக்கிறது.   ஷ்யூ தர்ஷன், ராம் கட்டி தர்ஷன் அன்பான பெற்றோர் சைலேஷ்வருக்கு பத்து வயதாகியிருந்தபோது, அவருடைய தந்தை தன் 48 வயதில் இருதய அடைப்பில் தூக்கத்திலேயே இறந்து போனார். இளம் வயதில் கணவரைப் பறிகொடுத்த துக்கத்தோடு பெரிய பொறுப்பும் இவர் தாய்க்கு வந்து சேர்ந்தன. நான்கு பெண்கள் சைலேஷ்வ ரோடு சேர்ந்து மூன்று பிள்ளைகள் ஆகிய பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு தாயார் ராம் கட்டி தர்ஷனுக்கு வந்து சேர்ந்தது. மூத்த சகோதரி வேலையிலிருந்ததால் அந்த வருமானம் ஓரளவு பயன்பட்டதே ஒழிய குடும்பத்தை நடத்துவது பெரும்பாடாக இருந்திருக்கிறது. எப்படிப் படித்தோம் உண்டோம் செயல்பட்டோம் என்பது தெரியாமல் பத்து வருடங்கள் போராட்டத்திலேயே வாழ்க்கை நடந்தது என்கிறார். ஒன்பது வயதில் சைலேஷ்வர் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.


🌹சாயி தர்ஷன்:

இந்த சாயி பக்தருக்கு சுவாமி தந்திருக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை. எத்தனையோ பேருக்குள் தெய்வீக அருளுணர்வை வளர்த்தவை, வளர்த்து வருபவை, கராஜ் கோயிலில் சீரடி பாபாவையும் சத்யசாயி பாபாவையும் வணங்கி வழிபட்டு சைலேஷ் வரிடம் சுவாமி தந்த அனுபவங்களைக் கேட்கத் தொடங்கியதும் ஆனந்தமும் ஆச்சரியமும் வளர்ந்து கொண்டேயிருந்தது. கோயிலுக்குள் இன்னொரு கோயில் இருப்பதைப் போலவே மிகப்பெரிய தெய்வச் சிலைகள் விபூதி குங்குமம் பொழியும் படங்கள் விக்ரகங்களோடு  புனிதப் பட்டிருக்கிறது சைலேஷ்வரின் வீடு. தெய்வங்கள் இங்கு ஆனந்தமாய் வந்து குடியிருந்து அருள்பாலிக்கின்றன. கனிந்து முதிர்ந்த பாசமே உருவான அன்னை ராம் கட்டி தர்ஷன், குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்கிறார். மனைவி மரீனா வேலைக்குப் போயிருக்கிறார். சைலேஷ்வருக்கு  சாயி பக்தர்களே நெருங்கிய உறவினர்கள். இடது காலை இழந்திருக்கும் சைலேஷ் வருக்கு சுவாமிதான் ஊன்றுகோலாயிருக்கிறார். எல்லாமாயிருக்கிறார். 'சைலேஷ்' என்று அன்போடு அழைத்தபடி சாயிபக்தர்கள் அடிக்கடி வந்து கோயிலுக்கான பணிகளைச் செய்துவிட்டுப் போகிறார்கள்.
சைலேஷ் வரின் குடும்பம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே இருந்தது. வாழ்க்கைக் கடலில் சமாளித்துத் திணறித் திணறி நீச்சலடித்து மூழ்கி எழுந்தபடி வந்து கரை சேர்ந்து கொண்டிருந்தது. இவருக்கு 11 வயதாக இருக்கும்போது, இசைக்குழுவில் சேர்ந்து இரண்டு வருடங்கள் பாடகராக இருந்திருக்கிறார். சைலேஷ் சொல்கிறார்- ஜூலை 1991ல் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்த போது, இடது காலில் வலி ஏற்பட்டு தாங்கமுடியாமல் போனது. எத்தனை மருந்துகள், எத்தனை மருத்துவர்கள், பிசியோதெரபி.. இந்த வைத்தியம் அந்த வைத்தியம் என்று எல்லாம் முயன்றேன். இன்னும் பலனில்லை. இடதுகால் மிகப் பெரிதாக வீங்கிக் கொண்டே வந்தது.'Bone Tumer' என்றார்கள். உடனிருப்பவர்கள் இவரைப் பார், அவரைப் பார் என்றார்கள். பில்லி சூனியம் ஏவல் என்று பயமுறுத்தினார்கள். நம்பிக்கையற்ற நிலையிலும் மந்திரவாதிகளிடம் சென்றேன். இது செய்வினை இதனால் வந்தது என்று ஒவ்வொருவரும் ஒன்று சொன்னார்கள். ஒரு முறை கிருஷ்ண பஜன் பாடியபடி குளித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்தேன். காலிலிருந்த கட்டி உடைந்து வலி உயிர் போகும் வலி. முழங்காலில் இருந்த கட்டி உடைந்து உள்ளிருந்த சீழ் ரத்தமெல்லாம் வெளியே வந்தது. ஆபரேஷன் செய்வதற்கு எல்லாம் தயாராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். ஆபரேஷன் செய்யும் நாளும் நெருங்கியது.

1992, 27ஆம் தேதி ஜூலை காலை 6 மணிக்கு சுவாமி என் கனவில் வந்தார். அதுதான் சுவாமி எனக்குத் தந்த முதல் கனவு. ஃபிஜியில் உள்ள வீட்டுக்கு சுவாமி வந்தார். பெண்கள் ஹாலில் நிறைந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு கொண்டாட்டம் 'ராம்லீலா' கொண்டாட்டம் போலிருக்கிறது. அந்த ராம்லீலா வைபவத்திற்காக ஒரு நாடகம் நடக்க அதில் நானும் நடிக்கிறேன். கனவிலும் எனக்கு கால் சரியில்லை வீங்கிப் போயிருக்கிறது. சாயிபாபா 'Chief Guest' ஆக வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன். எல்லாரும் சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து கொள்கிறார்கள். விபூதி வரவழைத்துத் தந்தபடி சுவாமி நடந்து வருகிறார். ஒரு மோதிரம் என் முதுகின் மேல் விழுந்தது. என் பக்கத்திலிருந்த இருவருக்கும் அவர்கள் பக்கத்தில் சென்று நெஞ்சைத் தடவி விட்டு இனி இருதயக் கோளாறு சரியாகிவிடும் என்றார். என்னிடம் வந்து சுவாமி எதுவும் சொல்லவில்லை. எதுவும் அன்போடு செய்யவில்லை என்று 'அப்செட் 'ஆனேன். மன வருத்தமடைந்தேன். ஏக்கம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு... சுவாமி ஏன் என்னிடம் வரவில்லை. ஏக்கம் மனதைத் துழாவியது. பாபா என் முன் வந்து நின்று என் இடது தோளைத் தட்டினார். என் நெஞ்சிலும், தோளிலும் அன்போடு தடவினார். என்னிடம் வெகு அன்போடு இந்தியில் பேசினார்.' என் மகனே உன் காலின் வேதனையை நான் மட்டுமே ஒருநாள் சரிசெய்ய முடியும் என்று சொன்னார். அவர் பேசிய இந்தி இதமாகவும் ஆழமாகவும் இருந்தது. கனவு முடிந்தது. எழுந்துவிட்டேன்.

மருத்துவமனையில் என் பக்கத்திலிருந்த ஆன்ட்டியிடம் ஆபரேஷன் செய்துகொள்ள மாட்டேன் பாபா என் கனவில் வந்து என்னை குணமாக்குவதாகச் சொன்னார் என்றேன். மருத்துவர்களிடமும் சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். அந்த நாளிலிருந்து சத்யசாயி பாபாவின் பக்தனானேன். சுவாமியின் நாம மந்திரத்தை சதா உச்சரிக்கத் தொடங்கினேன். சுவாமி விபூதியே மருந்தானது. என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் சாயி பக்தை. அவர் மூலம் சாயி விபூதி கிடைத்தது. சாயி சென்டர்களுக்கு தொடர்ந்து போதல், பஜனையில் கலந்து கொண்டு பாடுதல் நாராயண சேவை என என் வாழ்க்கை மாறத்தொடங்கியது. சுவாமி என்னைப் பாட வைத்த முதல் பஜனைப் பாடல் 'விநாயகா விநாயகா'. சாயியின் கருணை சைலேஷ்வரின் வாழ்வில் பிள்ளையார் சுழி போட்டு விட்டது.
ஒருமுறை குளித்துக் கொண்டிருந்தபோது முழங்காலிலிருந்த ட்யூமர் கட்டி கீழே விழுந்துவிட்டது. ஆறு மாதங்களில் ஏதேனும் ஆகலாம் என்ற அச்சமும் போனது. காலில் வலி குறையத் தொடங்கியது. 1994 ல் நவம்பர் 27ல் சுவாமி இவருக்கு முதல் பேட்டி தந்திருக்கிறார். சுவாமியிடம் இவர் போய்ச் சேர்ந்ததே சுவாரசியமானது. சைலேஷ் சொல்கிறார்.


🌹பூமியின் காவலர்:

1994 ஆம் ஆண்டு ஃபிஜியில் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை செய்து கொண்டிருந்தேன்.(charted Accountant ) கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அலுவலக மேனேஜர் என் உடல் நிலையை கவனித்து அன்போடு என்னை நடத்தினார். தொடர்ந்து அங்கு பணிபுரியச் சொன்னார். ஒரு நாள் வேலை நேரம் முடிந்ததும் என்னை அழைத்துப்போக வரும் சகோதரருக்காக சாலையருகே காத்திருந்தேன். அருகில் நின்ற சகோதரிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த சாலை முடிவடையும் இடத்தில் சீரடிபாபா கோயில் இருந்தது. அப்போது கோயிலுக்கு இப்புறமிருந்து ஒரு ஃபிஜி மனிதர் முதியவர் என்னை நோக்கி வந்தார். வெண்ணிறத்தில் அரைக்கை சட்டையும் அரைக்கால் சராயும் அணிந்திருந்தார். கையில் சங்கு வைத்திருந்தார். முகத்தில் மெல்லிய வெண்ணிறத்தாடி இருந்தது. என்னை நீண்ட நேரம் உற்றுப்பார்த்தார். சாலையைக் கடந்து வந்து என் முன் நின்றார்.
உனக்கு என்ன ஆனது என்று அன்பொழுகக் கேட்டார். திகைத்துப்போயிருந்தாலும் நிலைமையை அந்தப் பெரியவரிடம் சொல்லிப் புலம்பினேன். 'என் காலில் வீக்கம்..டியூமர்.. டாக்டரிடம் சென்றேன். நியூசிலாந்தில் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.' தொடர்ந்து என்னைக் கேள்வி கேட்டார். நானும் பணிவோடு பதில் சொன்னேன்.

உனக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்கிறதா?'

'ஆமாம் ஆமாம் தெய்வத்தை நம்புகிறேன்'

'என்னை நன்றாக உற்றுப் பார். உனக்கு சாயிபாபாவிடம் நம்பிக்கை இருக்கிறதா?'

'ஆம் ஆம் அவர் இந்திய குருமார்களில் ஒருவர்'

'ஓ இல்லை இல்லை என் மகனே.. இந்த பூமியைக் காக்கவல்ல ஒரே காவலர் அவர்தான். (oh no my child HE IS the only one saviour on Earth)மூன்று முறை சொன்னார். அந்தக் குரலின் பரிவைத் தாளமுடியாமல் நான் அழத்தொடங்கினேன்.

'நீ சாயிபாபாவிடம் போ (you go to Sai Baba)என்னால் எப்படிப் போக முடியும். இங்கிருந்து இந்தியா மிகத்தொலைதூரம் 'பணம்' சேர்த்து பயணப்படு. இந்தியாவிற்குப் போ. இந்த வருடத்தின் முடிவில் இந்தியாவிற்கு போய்விடு. நீ என் மகன் நான் சாயிபாபாவின் மகன்.

உன்னை சாயிபாபாவிடம் போகச் சொல்லவே இங்கு வந்தேன். எப்படியாவது நீ சாயிபாபாவிடம் செல்' என்னிடம் அன்போடு சொல்லிவிட்டு இடது தோளில் தட்டி அவர் சீரடி பாபா கோயிலை நோக்கிச் சென்றார். பார்த்துக்கொண்டிருந்த போதே எப்படி நடந்தார் போனார் என்பது தெரியாமல் மறைந்து விட்டார். ஆச்சரியத்தில் மூழ்கினேன். இங்கு முதியவர் மறைந்த க்ஷணத்தில் அதேநேரம் சீரடி கோவிலில் இரவு 7.30 பஜன் தொடங்கிவிட்டது. அதிர்ந்தேன். வந்தவர் சீரடிபாபாவா? ஜீசஸா? சத்ய சாய்பாபாவா? திகைப்பிலும் வியப்பிலும் மூழ்கிப் போனேன். அப்போதிருந்து நான் சாயிபாபாவிடம் போகப்போகிறேன் சாயிபாபாவிடம் போகப் போகிறேன் என்று அனைவரிடமும் சொல்லத் தொடங்கினேன். இனம்புரியாத பரவசத்தில் மனம் ஆழ்ந்து போகத் தொடங்கியது.


🌹பர்த்தியை நோக்கி:

இடம் மொழி புரியாத நெடுந்தொலைவிலிருக்கும் இந்தியாவிற்குப் போய் வருவது என்பதில் உறுதியாக இருந்தேன். சுவாமிக்கான இந்தத் தவிப்பும் ஏக்கமும் கிளம்பி விட்டால் அதுவே வேகமாக சுவாமியிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ஃபிஜியிலிருந்த சாயி மையம் சாயி நிறுவனத்தினரிடம் போய் இந்த ஆவலைத் தவிப்போடு சொன்னேன்.. விசாரித்தேன்.. அவர்கள் என்னை உற்சாகப்படுத்தவோ நம்பிக்கையைத் தரவோ இல்லை. நீ சாயி பக்தனில்லை எந்த சாயி அமைப்பிலும் உறுப்பினனுமில்லை.. சுவாமியைப் பார்க்க முடியாது என்றனர். பாபிக்யூ அனுபவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா சாயிபாபாவிடம் செல்ல முடியும் என்று இழிநிலையில் கிடப்பவனாய் என்னைச் சுட்டிப் பேசினார் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி. எல்லாரும் என்னை அதைரியப்படுத்தி என் நம்பிக்கையை அசைத்தார்கள். மிக உயர்ந்த நிலையில் ஆச்சார அனுஷ்டானங்களோடு கூடிய உயர் வர்க்க பக்தர்களாக இருந்த அவர்கள் முன், என்னை மிகவும் தாழ்வாகவும், கீழானவனாகவும் உணர்ந்தேன். இருந்தாலும் என் மனதில் கிளம்பிய தவிப்பு நெருப்பாய் வளர்ந்து கொண்டே இருந்தது. எப்படியும் போக வேண்டும் என்ற தீவிரம் வளர்ந்தது. 'இந்தியா 'சாயிபாபா' என்று புலம்பியபடியிருந்தேன். வேறு சில சாயி பக்தர்களையும் விவரம் கேட்டபடி இருந்தேன்.

என் கிராமத்து மக்கள் என் கவலையையும் நம்பிக்கையையும் பக்தியையும் என் உடல் நிலையையும் பார்த்து என் மீது அன்பும் அக்கறையும் மனிதாபிமானமும் கொண்டவர்களாய் என் இந்தியப் பயணத்திற்குப் பணம் திரட்டத் தொடங்கினார்கள் .என் அலுவலக மேலாளர் கொஞ்சம் பணம் தந்தார். பாபா மீண்டும் கனவில் வந்தார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி என்னிடம் வந்து சேர். உனக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வந்து சேர் என்றார்.


🌹கனவிலும் கருணை:

அம்மாவுடன் இந்தியாவிற்குப் புறப்படத் தயாரானேன். கிராமத்து மக்கள் என் அலுவலக, 'பாஸ்' ரோட்டரி கிளப் எல்லாம் சேர்ந்து திரட்டிய பணம் 5700 டாலர் என் பயணத்திற்குரிய மிகச்சரியான தொகையாய் வந்திருந்தது. அவர்கள் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. எப்பேர்ப்பட்ட அன்பு அந்த என் கிராமத்து மக்களுடையது. எல்லாம் பாபாவின் ஏற்பாடல்லவா? 27 ஆம் தேதி பாபா சொன்னபடி என்னால் போக முடியவில்லை. ஆனால் அதே நாளில் சுவாமி கனவில் வந்துவிட்டார்.

மிகப்பெரிய பூரணசந்திரஹால் தெரிந்தது. அது பூரணசந்திர ஹால் என்ற விவரமே அப்புறம்தான் எனக்குத் தெரியவந்தது. அந்த மிகப்பெரிய ஹாலில் அனைவரும் வெள்ளைநிறத்தில் உடையணிந்தபடி குழுமியிருந்தார்கள். நடுவில் நீளமாய் சிவப்பு நிறக் கம்பளம் விரித்திருந்தது. சுவாமி சிவப்பு சிம்மாசனத்தில் மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். அந்த மாணவர்களுக்கு ஏதோ இன்ஸ்ட்ரக்‌ஷன் தந்தபடி இருந்தார். சுவாமி என்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக இப்புறமும், அப்புறமுமாய் சென்றேன். முதலில் அழைத்தவர் பின்னர் நெடுநேரம் பாராமுகம் காட்டினார். என்ன இப்படி என்னை வரச் சொல்லிவிட்டு அலட்சியப்படுத்துகிறாரே என்று நொந்தேன். கோபம் வந்தது. ஏக்கம் வந்தது. தவிக்கத் தொடங்கினேன். திடீரென்று பார்த்து 'ஓ சைலேஷ்' என்று ஆச்சரியத்தோடு அழைத்தார். பிரசாந்தி நிலையத்தைச் சுற்றி நட என்றார் .எப்படி என்னால் நடக்க முடியும் புரியவில்லை. கால்பற்றிக் கேட்க நினைத்தேன். ஊன்றுகோல்களை அலுவலகத்தில் போட்டுவிட்டு பிரசாந்தி நிலையத்தைச் சுற்றி நட இங்கேயே என்னுடன் தங்கி விடு உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் சுவாமி. அதோடு கனவு முடிந்தது.
பிரசாந்தி நிலையம் கைலாசமல்லவா! கைலாசபதி சாயியைத் துதித்தபடி கைலாசத்தை வலம் வந்தால் நலம் பெறுவாய் என்ற உண்மையான பலனே சைலேஷுக்கு கனவில் சொல்லப்பட்டிருக்கிறது.











🌹அந்த இரண்டு  பேர்:

27 ஆம் தேதி செப்டம்பரில் இந்தியாவிற்குக் கிளம்பினோம். சென்னைக்கு வந்ததும் எல்லாம் புதியதாய் பிரமிப்பூட்டுவதாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தன. அங்கிருந்து பெங்களூருக்குப் போகவேண்டும். பாபா 'ஒயிட் ஃபீல்டில்' இருப்பதாகச் சொல்லப்பட்டதால் அங்கு போயாக வேண்டும். எப்படிப் போவது? யார் உதவுவார்கள்? என்று திகைத்தபடியிருந்தேன். பாபாவின் நாமம் நாவிலும் நெஞ்சிலும் வளர்ந்து நிறைந்து கொண்டிருந்தது. பாபாவின் நாமத்தை உச்சரித்தபடியிருந்தேன். சாயிகாயத்ரி சொல்லியபடியிருந்தேன். அப்போது ஸ்ரீலங்காவிலிருந்து வந்த இரண்டு பேர் என்னை நோக்கி வந்தார்கள். இயல்பாக ஏதோ பேச வருகிறவர்களை போல.. என்ன பிரச்சினை என்று கேட்டார்கள். சொன்னேன். ஃபிஜிலிருந்து அம்மாவுடன் வந்திருக்கிறேன் சாயிபாபாவைப் பார்க்க பெங்களூர் போகவேண்டும். பாபாவின் அழைப்பின்படி மிகுந்த சிரமத்திற்கிடையே கிளம்பிவிட்டேன் எப்படி பெங்களூர் போவது என்று புரியவில்லை என்றேன். பெங்களூர் போவதற்கான டிக்கெட்டு பற்றிக் கவலைப்படாதே என்று அன்போடு சொன்னார்கள். சென்னையிலிருந்து பெங்களூர் போவதற்கான டிக்கெட்டுகளை எப்படியோ வாங்கி வந்து என்னிடம் தந்துவிட்டு நடந்ததும் போனதும் புரியாமல் க்ஷணத்தில் என் பார்வையிலிருந்து மறைந்து போயினர். சீரடிபாபாவும் சத்ய சாயிபாபாவும் தான் வந்தவர்கள் என்பது உள்ளுணர்வில் உறைத்தது. ஒன்றும் புரியாமல் கலங்கி நின்றேன்.

அம்மாவும் நானும் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஒயிட்பீல்டு செல்வதைப் பற்றிக் கேட்க நினைத்த போது ஒரு பெண்மணி டாக்ஸியில் வந்தவர் என்னிடம் தானாக வந்து விவரம் கேட்டார். அம்மாவுடன் என்னை டாக்சியில் ஏற்றிக்கொண்டார். 'ஒயிட் ஃபீல்டு'சாயிபாபா ஆசிரமத்திற்குத் தான் போகிறேன் உங்களை ஆசிரமவாசலில் இறக்கிவிடுகிறேன் என்று அன்போடும் நம்பிக்கையோடும் பேசியபடி எங்களை சுவாமியின் ஆசிரம வாசலில் இறக்கிவிட்டுக் கையசைத்துவிட்டுப் போனார். இது சுவாமியின் அடுத்தகட்ட உதவி. ஆசிரமத்தை அடைந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. அன்று நாள் முழுவதும் பஜன் நடந்துகொண்டிருந்தது. நடுப்பகல்பொழுதில் நாங்கள் சென்றோம்.தங்குவதற்கான இடம்   பற்றி அலுவலகத்தில் விசாரித்தபோது டார்மென்ட்டரியில் தங்கிக் கொள்கிறாயா என்று கேட்டார்கள். இந்திய உணவு சாப்பிட்டுவிட்டு சுவாமி தரிசனத்திற்கு விரைந்தோம்.


🌹இவர்தான் கடவுளா?:

மாலை 4 மணிக்கு சுவாமி தரிசனத்திற்குச் சென்றோம். மாணவர்களுக்குப் பக்கமாய் முன்னாலேயே என்னை உட்கார வைத்தார்கள். வெள்ளை உடை அணிந்த பக்தர்கள் மாணவர்கள் அதே சிவப்புக் கம்பளம். அதே சிவப்பு சிம்மாசனம். பஜன் தொடங்கிவிட்டது. ஓம் சாய்ராம்.. சாயிபாபா மிக நிதானமாய் மிகச்சின்ன உருவமாய் நடந்து வந்துகொண்டிருந்தார். எனக்குள் வெகுவாகக் குழம்பிப் போனேன். இதென்ன இந்தச்சின்ன உருவமாய் அசைந்து வரும் இவர்தான் கடவுளா? ஆண்டவனா? உலகத்தின் பாதுகாவலரா? இவர் என்னைக் காப்பாற்றுவார் என்றா இவ்வளவு தூரம் வந்து சேர்ந்திருக்கிறேன். எப்படி இவர் கடவுளாக இருக்க முடியும் என்று அவநம்பிக்கையிலும் குழப்பத்திலுமாக மூழ்கிப்போனேன். இவரை நம்பி இங்கு வந்தது சரியா என்று கலவரப்பட்டேன். மனம் ஒருவழியாய்க் குழம்பிக் கலங்கிப் போனது. காலிலிருந்த டியூமர் சற்றே வெடிப்பு கண்டது. சந்தேகம் குழப்பமிருந்தாலும் அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் தரிசனத்திற்கு சென்றேன். என்னை பாபா கண்டுகொள்ளவே யில்லை. அதுதான் உள்ளே சந்தேகம் வேலை செய்கிறதே இருந்தாலும் மூக்கின் மேல் கோபம் வந்தது எனக்கு. பாபா பலருக்குப் பாதநமஸ்காரம் கொடுப்பதும், அன்போடு பேசுவதும், ஆசீர்வதிப்பதும் விபூதி தருவதுமாக இருந்தார். எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. இப்படி எங்கேயோ ஒரு தீவில் இருக்கும் பாமரனை வரச்சொல்லிவிட்டு கவனிக்காமல் இப்படியும் அப்படியுமாகச் சென்று கொண்டிருக்கிறாரே என்று கோபம் வந்தது.
அவருக்கு ஒரு கடிதம் எழுதி நீ உண்மையில் பகவானாயிருந்தால் மனமுறிந்து போயிருக்கும் என்னிடமிருந்து கடிதத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாய் நினைத்தேன். என்னை சட்டை செய்யவேயில்லை. பெண்கள் பக்கமும் மாணவர்கள் பக்கமும் பாபா சென்றுகொண்டிருந்தார். கோபம் எனக்குள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ஏன் இவரை நம்பி இப்படி வந்தோம் என்று மனமார நொந்து கொண்டேன். என் நிலைமையை எண்ணி வேதனை தாளமுடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. சுவாமி திரும்பி என்னை நோக்கி நடந்து வந்தார். என்முன் நின்றார். என் தலையில் ஒரு தட்டு தட்டினார். அதிர்ந்தவனாய் கண்களைத் திறந்து பாபாவைப் பார்த்தேன். நேராக என் கண்களை உற்றுப் பார்த்தார் பாபா. அதென்ன பார்வை? அதென்ன காட்சி? அவர் விழிகள் அழகிய நீல வண்ணத்தில் ஒளிர்ந்தன. உலகம் பச்சை உருண்டையாய் அவர் கண்களுக்குள் உருள்வது தெரிந்தது. எப்பேர்ப்பட்ட காட்சி அது. ஆண்டவனே, அந்தக் காட்சியை என்னால் தாங்க முடியவில்லை. திரும்பவும் என் தலையைத் தட்டி, கையில் கொடுக்காமல் வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டார். என் முதுகில் தட்டினார். அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் மூல்கியவனாய் அழத் தொடங்கினேன்.


🌹ஷீரடி கோயிலுக்கு ஆசி:

இன்னொரு நாள் தரிசனத்திற்கு அமர்ந்திருந்த போது வித்தியாசமான அனுபவம். என் காலின் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. வீக்கம் அதிகமாகி வலி தாங்க முடியாததாக இருந்தது. தரிசன வரிசையில் உட்கார்ந்திருந்த போது பாதுகா ட்ரஸ்ட் சுப்பிரமணியச் செட்டியார் சுவாமியுடனான பேட்டி முடிந்து பேட்டியறையிலிருந்து சந்தோஷமாக வெளியே வந்தார். சுவாமி மிகவும் சந்தோஷமாயிருக்கிறார் என்று சொல்லியபடி தன் கையில் சுவாமி பிரசாதமாகக் கொண்டு வந்த ரோஜாப்பூக்களை அப்படியே என் கையில் கொடுத்துவிட்டு போனார். இது பின்னால் ஆஸ்திரேலியாவில் சீரடி பாபா கோயில் கட்டுவதற்கான ஆசீர்வாதம். சில ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி சங்கல்பப்படி  எழுப்பிய ஷீரடி கோவிலுக்கு சிவசக்தி விக்ரகம் பாதுகா ட்ரஸ்ட் செட்டியாரின் மகன் மூலமாகவே ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்தது. பின்னால் நடக்கப்போகும் தெய்வச் செயலுக்கான நல்ல சூசகமாகவே சுப்பிரமணியச் செட்டியார் என் கையில் ரோஜாப்பூக்களைக் கொடுத்திருக்கிறார். இன்னொரு நாள் இன்னொரு பக்தர் சுவாமி ஆசீர்வாதத்திற்குக் கொண்டுவந்த பாதங்களை, என் வழிபாட்டிற்குக் கொண்டுவந்து தந்தார். மூன்று பாதுகைகளை சுவாமி ஆசீர்வதித்துத் தந்தார். ஒன்று சாயிமையத்திற்கும், ஒன்று என் சகோதரருக்கும், ஒன்று எனக்கும் என்று கொண்டு வந்தேன். ஆனால் சுவாமி இந்த பாதுகையை உங்களுக்கு தர வேண்டும் என்று விரும்புகிறார் என்று பாதுகையை என்னிடம் தந்துவிட்டுப் போனார். இது சாயியின் கருணை!!


🌹சோதனை தொடங்கியது:

ஆசிரமத்தில் மேற்குப் பிரசாந்தியில் 14 ஆம் எண்ணுள்ள அறையில் அம்மாவும் நானுமாக தங்கினோம். அடுத்த நாள் காலையில் தரிசனத்திற்குப் போகவேண்டும் என்ற நினைப்போடு உறங்கத் தொடங்கினேன். மெல்ல மெல்ல காலின் வலி அதிகரித்தது. பீறிட்டடிக்கும் ரத்தத்தைப் பார்த்து பயந்து போய் அம்மா 'சைலேஷ்' 'சைலேஷ்' என்று சத்தமிட்டார். இடது காலிலிருந்து ரத்தம் பீறிட்டுப் பொங்கி தரை முழுவதும் கொட்டத் தொடங்கியது. பீதியிலும் மிரட்சியிலும் வலி தாங்காமல் நடப்பது புரியாமல், 'சாயிராம் சாயிராம்' என்று கத்தத் தொடங்கினேன். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். என்ன கட்டுப்போட்டும் கட்டை மீறிக்கொண்டு ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. அனேகமாக உள்ளிருந்த ரத்தமெல்லாம் நஞ்செல்லாம் வெளியே வந்து கொட்டுவதைப் போல கொட்டியபடியிருந்தது. தரையெல்லாம் ரத்தம். ஓடிவந்து பார்த்த பக்தர்கள் அனைவரும் பயந்து போனார்கள். ஆம்புலன்ஸ் வந்தது. ஹாஸ்பிடலில் 'அட்மிட்' செய்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் காலை வைத்துக்கொண்டு ஏன் வந்தீர்கள் என்று டாக்டர் திட்டினார். சுவாமி என்னை குணப்படுத்துவதாய்ச் சொல்லியே வந்தேன். சுவாமி சொல்லித்தான் வந்தேன் என்று சொன்னதை அவர் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. சுவாமியின் படத்தைப் பார்த்து அழுதபடியிருந்தேன். சாயிகாயத்ரி சொல்லியபடியிருந்தேன். துர்கா மாதாவைத் துதித்தேன். ஒரு மாணவ பக்தர் சுவாமி தனக்குத் தந்த பிரவுன் வண்ண ஸ்படிக லிங்கத்தை என் மேல் வைத்தார். அந்த லிங்கம் கறுப்பாக மாறியது. என்னை பாபாவிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று அழுதேன்.சுவாமி தந்த  மோதிரத்தையும் பவுச்சையும் ஒரு பக்தை என் நெஞ்சின் மேல் வைத்தார். 'பவுச்சிலிருந்து விபூதி பொங்கி வர தொடங்கியது. பொங்கிப் பொங்கி எங்கும் விழத்தொடங்கியது விபூதி... விபூதி  விபூதிமயமானது அறையெல்லாம். தரையெல்லாம் 'கும்'மென்று விபூதி மணம் சூழ்ந்தது.

அங்கிருந்த பக்தர்கள் சுவாமி வந்து விட்டார், சுவாமி வந்துவிட்டார் என்று குரலெழுப்பினர். என் உடம்பிலிருந்த நஞ்சினையெல்லாம் எடுத்துவிட்டு சுவாமி என்னை குணப்படுத்தியிருக்கிறார். பெங்களூர் ஹாஸ்பிடலுக்குப் போகும்படி டாக்டர் சொல்ல மறுத்தேன். இல்லை இல்லை நான் சுவாமியைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று பதில் சொன்னேன். சற்றுத் தேறியதும் வீல்சேரில் போய் தினமும் சுவாமியை தரிசித்தபடியிருந்தேன். அதற்கொரு குந்தகம் வந்தது. இரு மாதத்திற்கு மேல் வீல்சேர் கிடையாது.அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றார்கள். நவம்பர் 27ஆம் தேதி திருப்பிக் கொடுக்கவேண்டும்.பாபா இதென்ன சோதனை? இப்படி நடக்க முடியாமல் வீல்சேரில் வருகிறேன். இன்னும் என்னை சுவாமி கவனிக்கவில்லை. நடந்த பயங்கரத்தை விசாரிக்கவில்லை.காலை சரி செய்வதாகச் சொல்லிவிட்டு என்னை இன்னும் அழைத்துப் பேசாமலிருந்தால் என்ன செய்வேன். இன்றோடு வீல்சேரை திருப்பிக் கொடுக்கச் சொல்கிறார்களே, நாளையிலிருந்து எப்படி உன்னைப் பார்ப்பேன். ஓ பாபா உன்னை நாளையிலிருந்து எப்படிப் பார்ப்பேன் என்று மதியம் அறையிலிருந்தபடி கையில் சுவாமி படத்தை வைத்துப் பார்த்தபடி ஓவென்று அழுதேன். அழுதபடியிருந்தேன்.


🌹 பேட்டியும் பேரன்பும்:

சுவாமி பிறந்தநாள் கூட்டநெரிசலில் 22, 23, 26 ஆம் தேதி வரை சுவாமி அருகில் வரவே இல்லை. 27 ஆம் தேதி மாலை தரிசனத்திற்குப் போகும்போது நியூசிலாந்து இளைஞர் குழுவினர் வந்தனர். நீங்கள் எந்தக் குழுவிலிருக்கிறீர்கள் என்று கேட்டனர். ஃபிஜி குழுவில் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை எனவே எந்தக் குழுவிலும் இல்லை என்றேன். நியூஸிலாந்து இளைஞர் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். அம்மாவை இந்த குழுவில் சேர்ப்பது சிரமம் என்று என்னை் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டனர். இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் எங்கிருந்து வந்தீர்கள், நீங்கள் எத்தனை பேர் என்று சுவாமி கேட்டாராம். அவர்கள் 22, 23, 24 என்று சொல்லிக்கொண்டே வந்தனராம். சைலேஷ் சேர்ந்ததும் 25 என்று அவர்கள் சொல்ல சுவாமி உள்ளே செல்லுங்கள் என்று இன்டர்வியூவிற்கு அழைத்துவிட்டார். இப்படி என்னைக் குழுவோடு சேர்த்து அழைத்துக்கொண்டது சுவாமியின் ஏற்பாடு.

நியூசிலாந்தை News island என்றார் சுவாமி. இன்டர்வியூ அறைக்குள் மெல்ல என்னை அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். அது 1994 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, 25 ஜப்பானியரோடு 50 பேர் அறையிலிருந்தோம். அறை சிறியதாக இருக்கிறது என்று சொல்லியபடியே சுவாமியே மின்விசிறியை போட்டார். அவருடைய நாற்காலியில் உட்கார்ந்தார். பெண்களும் ஆண்களும் தனித்தனியாக உட்கார்ந்திருந்தோம். என்னுடைய லுங்கியின் ஓரம் பக்கத்திலிருந்த பெண்மணியின் மேல் விழுந்திருந்தது எனக்குத் தெரியவில்லை. சுவாமி பார்த்துவிட்டார். 'பாய்ஸ்' 'கேர்ள்ஸ்' 'செப்பரட் செப்பரட்' ஆண்களும் பெண்களும் தனித்தனியாக உட்காருங்கள் என்றதும் தள்ளிக் கொண்டேன்.

சுவாமி விபூதி உருவாக்கிப் பெண்களுக்கு தந்தார். என்னருகில் உட்கார்ந்திருந்த ஜப்பானியப் பையனைப் பார்த்து என்ன மோதிரம் வேண்டுமென்று கேட்டார். ஓம் ஓம் ஓம் என்று ஊதி சிவலிங்க மோதிரம் வந்ததும் என்னைப் பார்த்தபடி இந்த சிவலிங்க மோதிரம் உனக்கில்லை என்று என்னிடம் தந்து pass செய்யச் சொன்னார். திரும்பி வந்ததும் என்னைக் குறும்பாக பார்த்தபடியே அந்த ஜப்பானியப் பையன் விரலில் போட்டார். எனக்கு ஏக்கமும் பொறாமையுமாக வந்தது.

மோதிரத்தை என் கைகளில் கொடுத்து வாங்கி எனக்குத் தராமல் அவனுக்கே போடுகிறாரே என்று கோபம் வந்தது. என் காலை எப்படியாவது சுவாமிக்குக் காட்டவேண்டும் என்று முயற்சித்தேன்.  உடனே சுவாமி,உன் காலை எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருக்காதே என்று அதட்டினார். 'come get up' என்று என்னை எழுந்திருக்கச் சொன்னார். என்னை மற்றவர்கள் எழுப்பி நிறுத்தினர்.

உள்ளே தனியறையில் இன்டர்வியூக்குப் போகச் சொன்னார். அங்கு நடுங்கியபடியிருந்தேன். பயந்தேன்...சுவாமி உள்ளே வந்து அறைக்கதவை மூடினார். என்னைத் திரும்பிப் பார்த்து சுவாமி சிரித்தார். அடாடாடா ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டார். சுவாமி உங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்றேன். பயப்படாதே வா. என்னை அணைத்துக் கொள் உன் தந்தையாய் என்னை நினைத்துக்கொள் என்று பாசம் ததும்பச் சொல்லி என்னை அணைத்துக் கொண்டபோது என்னை மறந்தேன். அந்தப் பொழுதில் உண்மையில் என் தந்தையைத் தான் ஆரத்தழுவிக் கொண்டிருந்தேன். 13 வருடங்களுக்கு முன் இறந்து போன என் தந்தையை உயிரோடு பார்த்ததும் அவரைத் தழுவிக் கொண்டிருந்ததும் எனக்குள் பாசத்தையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது. என் தந்தையை அணைத்து முத்தமிட்டேன். ஆனந்த பரவசத்தில் அழத் தொடங்கினேன். என் தந்தை பாபா எனக்கு தந்தையானார். தந்தை என்ற உறவைத் தந்தார்.மிகுந்த அன்போடும் பாசத்தோடும்  சுவாமி என்னிடம் பேசினார்.ஆம் ஆம் உனக்கு நான் எல்லாமாக இருப்பேன்.'

சற்றே நான் அமைதியடைந்தவுடன் நிதானமாய் என்னிடம் பேசினார். 'எங்கிருந்து வருகிறாய்' தெரிந்தும் தெரியாதது போன்ற கேள்வி. ஃபிஜியிலிருந்து வருகிறேன் சுவாமி 'Figi Figi island' சுவாமி தான் உன்னை இளைஞர் குழுவில் சேர வைத்தேன். 'உனக்கு என்ன பிரச்சனை' புரிந்தும் புரியாதது போன்ற விசாரிப்பு.

சுவாமி காலில் ட்யூமர் 6 மாதத்திற்கு மேல் உயிரோடிருக்க மாட்டேன் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.. பிழைப்பேனா சுவாமி? 'டாக்டர்கள் சொல்வார்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர்களின் டாக்டர் நான்,(Doctor of Doctors) எல்லாம் சரியாகிவிடும் என்னுடன் தங்கிவிடு' என்றார் சுவாமி.
இன்னும் அன்பு வளர்ந்தது பரிவு பொங்கியது சைலேஷ் உன்னை மிகவும் விரும்புகிறேன். என் இடது கையைப் பிடித்துக் கொள். உன்னைக் குணப்படுத்துவேன் என்று உத்தரவாதம் தந்தார். கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாயா எனக்குள் merge ஆக விரும்புகிறாயா (ஆண்டவனை நினைந்து வழிபட்டபடி வாழ்வது  marriage ஆண்டவனுடன் ஐக்கியமாவது merge ஆவது) என்று கேட்டார். mergeஆக விரும்புகிறேன் சுவாமி என்றேன். என் கண்களைப் பார்த்தார். பார்த்தபடியே இருந்தார். அன்பு அன்பு அன்பு அப்படி ஒரு அன்பை எங்கும் பார்த்ததேயில்லை. என்னைப் பார்த்தபடியே நான் விரும்பிய சிவலிங்கமோதிரம் வரவழைத்துப் போட்டார். அந்த க்ஷணத்தில் என் உடல் மனம் ஆன்மாவெல்லாம் சுவாமிக்கு சமர்ப்பணமாகிவிட்டது.
சுவாமி என் தோளைத் தட்டினார். 'எப்போது புறப்பட போகிறாய்?' 'சுவாமி ஜனவரியில் புறப்படவேண்டும்'  'இல்லை என்னுடனேயே தங்கிவிடு'

அனைவரும் உன்னிடம் அன்பு செலுத்துவார்கள். உன்னிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நீ என்னிடம் அன்போடிருக்கிறாய். உன் மீது பெருகும் அன்பு அளவுகடந்ததாயிருக்கிறது என்றார். தன்னிலை மறந்து சுவாமியிடம் சம்பூர்ண சரணாகதியடைந்தேன். என் கையைப் பிடித்து நடக்க வைத்தபடி மஹாராஜா வருகிறார் என்று சொன்னபடி வராந்தாவில் என் கையைப் பிடித்து நடக்க வைத்தபடி நடந்தார் பாபா. 'பிரசாந்தி நிலையத்தைச் சுற்றி நட..... ஓ அந்தக் கனவு! பாபா ஓ சாயிபாபா! எனக்கு இனி நீயே எல்லாம். அழுதேன். கதறினேன். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிப் போனேன். சுவாமி பேரானந்தம் தந்து, பெரு மாற்றம் தந்து, என்னைத் தன் பாதங்களில் இழுத்துப்போட்டுக்கொண்டார்.









🌹ஸ்ரீ பாத சேவை:

அடுத்த நாளைக்கு அடுத்த நாள் 29ஆம் தேதி எங்களில் 4 பேரை இன்ட்டர்வியூவிற்கு அழைத்தார். எல்லாரிடமும் பேசினார். அம்மாவை அழைத்தார். ஜெபமாலையை உருவாக்கி அம்மாவிற்கு அன்போடு ஆசீர்வதித்து தந்தார். அருகிலிருந்த ஒரு மாணவருக்கு சுவாமி ஏற்கனவே தந்திருந்த நவரத்தின மோதிரத்தைச் சரிசெய்து போட்டார். சுவாமி தந்த மோதிரம் புதிதாக இருந்தது. பழைய மோதிரத்தை அவர் எங்கே போட்டார் என்று என் குரங்கு மனம் சுவாமியின் நாற்காலியின் பக்கம் தேடியது.சுவாமிக்கு தெரியாதா என்ன என் சந்தேக புத்தி 'யூ பேட் லெக் பாய்' அங்கே போய் உட்கார் என்றார். 'சுவாமி சுவாமி ப்ளீஸ் இங்கு உங்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்கிறேன், 'நோ யூ பேட் லெக் பாய் அங்கே போய் உட்கார்' என்று சொல்ல, கெஞ்சியும் மறுக்கவே அடுத்தவர் உதவியுடன் நடந்து சற்றுத்தள்ளி உட்கார்ந்தேன். அம்மாவை சுவாமி அழைத்தார். தன் பாதங்களுக்கருகே அவரை அமர்த்தி அவருடைய இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லி அம்மாவின் விரித்த கைகளில் தன் பாதங்களை வைத்தபடி இருந்தார். 45 நிமிடங்களுக்கு சுவாமியின் பாதங்களை ஏந்தும் பாக்கியத்தை என்தாய் அடைந்தார்.எந்த சக்தியை  எதைத் தாங்கும் உறுதியை அம்மாவிற்கு அவர் தந்தாரோ அவர் பாத ஸ்பரிசத்திற்காக கோடானு கோடி மக்கள் காத்திருக்க தவித்திருக்க தவமிருக்க 45 நிமிடங்களுக்கு அந்த தெய்வத்தின் பாதங்களைத் தாங்கும் மகா பாக்கியம் கிடைத்தது என் தாய்க்கு! சாய்ராம்! மெல்ல மெல்ல இருக்கையிலிருந்து இறங்கி நகர்ந்தபடியே சுவாமியின் பாதங்களுக்கருகே வந்து விட்டேன். அன்பு வடிவமல்லவா சுவாமி ஒன்றும் சொல்லவில்லை என்னைப் பார்த்துச் சிரித்தார்.

 சுவாமி என்னையும் இன்னொரு இளைஞரையும் அருகில் வரச்சொல்லி தன் இரு பக்கங்களிலும் அன்போடு அணைத்துக் கொண்டார். சுவாமியின் இடதுபக்கத் திருமேனியை குழந்தையாய் அணைத்தபடி மிக நெருக்கத்தில் நெக்கு நெகிழ்ந்துருகிப் பேசினேன்.'சுவாமி நான் பிழைக்க மாட்டேன் என்கிறார்களே, கேன்சர் வந்திருக்கிறது உடல் முழுவதும் பரவிவிடும் என்கிறார்களே, சுவாமி நான் பிழைப்பேனா? தந்தையின் வாத்சல்யத்தோடு நெருக்கமாய் என்னைப் பார்த்தபடி சுவாமி மிருதுவாக சொன்னார், 'உனக்கு வந்திருப்பது கேன்சர் இல்லை. Bonecist உனக்கு அவசியம் ஆபரேஷன் செய்யப்படவேண்டும். நானே உனக்குரிய மருத்துவராய் வந்து அதைச் செய்வேன். நீ உயிர் பிழைப்பாய். அதன்பிறகு ஆபத்தில்லை. நான் உன்னைக் காப்பாற்றுவேன்' என்று அன்போடு மொழிந்தார். எங்கள் இருவரையும் தன் பாதங்களுக்குப் பக்கத்தில் அமரச் சொன்னார். இருவரையும் தனக்குப் பாதசேவை செய்யச் சொன்னார். அந்த தெய்வத்தின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து பாத சேவை செய்யத் தொடங்கினோம். என்ன ஆனந்தமான புனிதப் பொழுது அது!.

அம்மா எப்போதும் வாசிக்கும் ஷீரடிசாயி சத்சரித்திரத்தைத் தொட்டு சுவாமி ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அம்மா எப்போதும் அந்தப் புத்தகத்தைத் தன் பையிலேயே வைத்திருப்பார். சுவாமி அம்மாவிற்கு புத்தகத்தை ஆசீர்வதித்துத் தரவேண்டும் என்று சொல்வதற்குள் புத்தகத்தை எடுப்பதற்குள் சுவாமி வேகமாய்ச் சொன்னார்.

 'சீரடி சாயி சத்சரிதம் தானே.. மிகவும் நல்லது.ஓ நான் ஆசீர்வதித்து விட்டேன்' என்று சொல்லியபடி சுவாமி எழுந்து நின்றார். என்னை அறியாமல் ஃபிஜியில் சாலையோரமாய் வந்து நின்ற ஃபிஜி முதியவரின் நினைப்பு அதிகமாக வந்தது. அந்த முதிய ஃபிஜி முதியவரைப் பற்றி நினைக்கிறாயா அதுதான் என்னிடம் வந்து விட்டாயே என்றார். இது அவருடைய எல்லாமறிந்த நிலைக்கும் வந்தவர் அவரே என்பதற்குமான உறுதிப்பாடு!.

 சாயி பாபாவிடம் 8 இன்டர்வியூக்கள் கிடைத்திருக்கிறது சைலேஷ் வருக்கு. இன்டர்வியூக்களை விடவும் சுவாமியின் அன்பு தனக்குள் ஏற்படுத்திவிட்ட தெய்வீக மாற்றங்களை கண்ணீரோடு நினைவு கூர்கிறார் சைலேஷ்வர். சைலேஷ்வருக்கு பாஸ்போர்ட் எக்ஸ்பயர்டு ஆனது தெரியாமல் இரண்டு மாதங்களாகியும் ஆசிரமத்திலேயே இருந்திருக்கிறார். கோடைப் பொழிவுகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது. சுவாமி தரிசனம் பேட்டி வழிபாடு என்று ஆனந்தம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. சுவாமிதான், தன்னை இங்கே தங்கச் சொல்லி விட்டாரே என்ற நினைப்பு பாஸ்போர்ட் பற்றிய சிந்தனையைத் தரவே இல்லை. அதன்பிறகு ஒரு பக்தர் இதை வற்புறுத்திப் பார்க்கச் சொல்ல பகீரென்றது எனக்கு என்கிறார். தரிசனத்தின்போது சுவாமியிடம் சொல்ல எனக்குத் தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக்' பண்ணச் சென்றேன். அங்கு counter ல் இருந்த பெண்மணி என்னைப் பார்த்ததும், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்காக... உங்கள் டிக்கெட்டுக்காக யாரோ பணம் அனுப்பி வைத்தார்கள்.  'one year extension' ...எனக்கு ஒன்றும் புரியவில்லை திகைத்துப் போய் நின்றேன். சுவாமியின் அடுத்த லீலை! சுவாமியைத் தவிர வேறு யார் பணம் கட்டியிருக்க முடியும்?! extension... வாங்கியிருக்க முடியும்! நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாரல்லவா அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


🌹ஷீரடி கோயில்:

சைலேஷ்வரின் சீரடி கோயில் சுவாமியின் அனுக்ரஹத்தால் உருவாக்கப்பட்ட அற்புதமான கோயில். கிண்டியிலிருக்கும் சீரடி கோயிலைப் போன்றதொரு உன்னதமான கோயில் 'வர்ஜீனியாவில்'சுவாமியின் உத்தரவின்படி சைலேஷ்வர் பக்தர்களின் உதவியுடன் எழுப்பியுள்ள இந்தக் கோவிலில் மிகப்பெரிய ஆளுயரப் பளிங்கு ரூபத்தில் சீரடி சுவாமி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் தோரணை மிக ஆனந்தமானது. ரோஜாப்பட்டு, வெண்பட்டு, பச்சைப்பட்டு, மஞ்சள்பட்டு வஸ்திரங்களோடும் சகல அலங்காரங்களோடும் தாமரை போன்ற மிகப்பெரிய செம்பருத்திப் பூக்களோடும் மல்லிகை மாலையோடும் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருப்பது போல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெரியவர் சீரடிசாயி.. பளிங்கு ரூபத்தில் அதிலாவண்ய தேவியாய் அருள்பொழியும் துர்கா.. வலதுபக்கம் கணேஷ்.. இடதுபக்கம் சத்யசாயிபாபாவின் மஞ்சள் உடையணிந்த மிகப்பெரிய படம்... அதிலிருந்து சதா விபூதி பொழிந்த வண்ணமிருக்கிறது.. கீழே வைத்த கும்பம் வஸ்திரங்களெல்லாம் விபூதிக் குவியலில்...விபூதியை அள்ளி அள்ளி சிறுசிறு பாத்திரங்களில் போட்டு வைத்திருக்கிறார்கள்.. பக்தர்களுக்கான சாயிபிரசாதமாய்... சுற்றிலும் சுவாமியின் மிகப்பெரிய படங்கள்.. சுவாமி தனக்கு சிலை அங்கு வேண்டாம் அதற்கு பதில் சிவசக்தி சிலை வைக்கவேண்டும் என்று சொல்ல அதுதான் இந்தியாவிலிருந்து பாதுகா ட்ரஸ்ட் மூலம் வந்து சேர்ந்திருக்கிறது. அழகிய அர்த்தநாரீஸ்வரர் விக்ரகத்திற்கு முன் சுவாமியின் வஸ்திரம், சுவாமி தந்த பாதங்கள் விக்ரகங்கள்... சிவராத்திரியில் சைலேஷுக்கு தரப்பட்ட சிவலிங்கம். சுற்றிலும் சர்வதேவதா ஸ்வரூபங்கள் சர்வாலங்காரங்களுடன் ஜொலிப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது. காலிழந்த சைலேஷுக்கு அன்போடு ஓடிவந்து உதவும் பக்தர்கள் அனேகம். இங்குள்ள சுவர் திரைச்சீலை படி கார்பெட் சிலைகள் கோயில் உருவாக்கம் எல்லாம் பக்தர்களுடைய பங்களிப்பே. கோயிலைத் தூய்மை செய்தல் விசேஷ தினங்களில் தங்கி உதவுதல் என்று பக்தர்களின் அன்பும் சேவையும் பெரிது என்கிறார் சைலேஷ். நித்ய வழிபாடு, வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு, குரு பூர்ணிமா, சீரடி பாபா பிறந்தநாள், சத்யசாய் பாபா பிறந்தநாள், ஈசுவரம்மாதினம், புத்தாண்டு போன்ற விசேஷ வைபவங்களில் அபிஷேக ஆராதனைகள் விசேஷ ஆரத்தி என்ற தெய்வீகம் நிறைந்து பொலிகிறது அங்கே. திருமணமாகிக் குழந்தைகளிருந்தும் பற்றற்றவராய் வாழும் சைலேஷ்வரின் வாழ்க்கையே வழிபாடாக இருக்கிறது.

சற்றுத் தணிவான குரலில் கேட்டேன் சைலேஷ் உங்கள் இடது கால் ஆபரேஷனில் நீக்கப்பட்டுவிட்டதே சுவாமி ஆபரேஷன் செய்யாமலேயே  சரி செய்வதாகச் சொன்னாரல்லவா? நீங்கள் அவசரப்பட்டு காலை எடுத்துவிட்டீர்களா? இது எதனால்?எந்தக் கர்மவினையால் நேர்ந்தது என்று கேட்ட போது அமைதியாகச் சொன்னார்.

 'இல்லை.. சுவாமி என்னை குணப்படுத்துகிறேன், நானே ஆபரேஷன் செய்கிறேன்.. உனக்கு கேன்சர் இல்லை உயிர் பிழைப்பாய் உன்னைக் குணப்படுத்துவேன் என்றார். அதன்படியேதான் குணப்படுத்தியிருக்கிறார்...       இதுஇப்படி நடக்க வேண்டியிருக்கிறது' கண்களை மூடியபடி தெளிவான குரலில் சொன்னார். 'என் அகங்காரம் நீக்கப்பட்டதென்றே நினைக்கிறேன். சுவாமி என் அகங்காரத்தை நீக்கியிருக்கிறார்'சுவாமி அந்த ஆபரேஷன் நேரத்தில் நியூசிலாந்து மருத்துவமனையில் தந்த அனுபவத்தை மிகவும் உருக்கத்தோடு விவரித்தார்.


🌹சர்வதர்ம சாயி:

 சுவாமியிடம் ஓராண்டு வரை தங்கியிருந்து அவருடைய அருளோடும் ஆசீர்வாதத்தோடு காவலோடும் ஃபிஜி போய்ச் சேர்ந்தேன். சாயிபாபாவின் சத்யம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையைக் கடைப்பிடித்து வாழத் தொடங்கினேன். என்னுடையதான எல்லாவற்றையும் மானசீகமாக சாயிபாபாவிற்கு சமர்ப்பணம் செய்தேன். உடம்புணர்ச்சி பற்று என்பதெல்லாம் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. ஓராண்டு  உடல்நலமாகவே இருந்தது. காலின் வேதனையும் என்னைத் துன்புறுத்தவில்லை. ஓராண்டிற்கு பிறகு மீண்டும் நோய்வாய்ப்பட்டேன். மூன்று மாதங்களுக்கு மருத்துவமனையில் கிடந்தேன். காலிலிருந்து மீண்டும் ரத்தம் வரத் தொடங்கியது. உடம்பிலிருந்து ரத்தமெல்லாம் வெளியானது போல் பெருகி வழிந்தது. இந்தச் சீர்கேடான சூழ்நிலையிலும் சாயியின் நாமஸ்மரணையிலேயே மூழ்கியிருந்தேன். 7 பேர் எனக்கு ரத்தம் கொடுத்தார்கள். வெள்ளையர், ஹிந்து, பஞ்சாபி, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்களின் ரத்தம் உடலுக்குள் சேர்ந்து சர்வதர்மமானது. அம்மா என்னை மிகவும் இதத்தோடும் அன்போடும் கவனித்துக் கொண்டார்கள். சிறுநீர் போக எழுந்திருந்து செல்லமுடியாது. படுக்கையிலேயே எல்லாம்... ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பாட்டில் வைக்க வேண்டும்.

திடீரென்று வயிறு புடைத்துக்கொண்டாற்போல் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரத்தவிப்பு ஏற்பட்டது. இரவு மூன்று மணி அப்போது. அம்மா ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததுபோல் தெரிந்தது. எழுப்ப மனமில்லை. இப்போது பாட்டில் இல்லையென்றால் படுக்கையிலேயே நனைத்துவிட நேரிடும். அதை நான் விரும்பவில்லை. தவிப்பு தாளாமல் திணறினேன்.ஓ பாபா இதென்ன சோதனை எழுந்திருக்கவும் முடியாது..என்ன செய்வேன் என்று அழுதேன் அழுதேன் உறக்கத்திற்குப் போனதுபோல் பாதிக் கண்கள் மூடத் தொடங்க எதிரே இருந்த பாத்ரூமிலிருந்து பாபா வந்துகொண்டிருந்தார். பிரத்யட்சமாய்... நேராக என்னிடம் வந்து யூரினரை வைத்தார் 'டோன்ட் வொர்ரி சைலேஷ் டூ யுவர் யூரின்' என்று சொல்லி உதவி விட்டு திரும்பவும் பாத்ரூமிற்குள் சென்று மறைந்தார். உப்பியிருந்த வயிற்று உபாதை அடங்கி கண்களிலிருந்து நீர் பொங்கி வழிய 'சாய்ராம்' என்று அவர் சென்ற திசையைப் பார்த்தபடி அழுதேன். அப்படியே உறங்கிப் போனேன். காலை 11 மணி வரை தூங்கியிருக்கிறேன். சிறுநீர் கழிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விழிப்பு வந்து கொண்டிருந்த எனக்கு அடுத்த நாள் காலை 11 மணி வரை உறங்கியது அதிசயமாயிருந்தது. சுவாமியின் எல்லையற்ற பரிவல்லவா அது. எப்படிப்பட்ட கருணை அது!தாயன்பு அது என்று சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தார் சைலேஷ்.


🌹சாயி வைத்தீஸ்வரன்:

 27 ஆம் தேதி ஜூலை காலை பிரிஸ்பேனில் இடது காலில் ஆபரேஷன்  rod வைத்து கொள்கிறாயா என்று கேட்டபோது மறுத்துவிட்டேன். காலை நீக்கப்போவது தெரியும். இளம்வயது.. எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்ற குழப்பம் அடியோடில்லை. இது கேன்சரல்ல bonecist  என்றார் டாக்டர். டாக்டர்களின் டாக்டரான பாபா என்னிடம் இன்டர்வியூவில் சொன்னது போலவே. சில தினங்களுக்கு முன் என் கனவில் கூட்டமான டாக்டர்களோடு சுவாமி வந்து ஆபரேஷன் செய்தார். அதேபோல்.. chife doctor மிகவும் வயதானவர் அன்போடு வந்து என் தலை தடவி முகம் தடவி தைரியம் தந்தார். எப்போதும் என்னை கவனித்துக் கொள்ளும் டாக்டர் மைக்கேலின் அருகாமையில் உணர்ச்சிவசப்பட்டேன். ஏதோ ஒரு சந்தோஷமே கூட வந்தது. அவர் தன் இரு கைகளையும் தேய்த்து என் முகத்திலும் நெற்றியிலும் நெஞ்சிலும் வைத்தார்.சுவாமியின் வைப்ரேஷனை உணர்ந்தேன்.அவருக்குள்ளிருந்து சுவாமிதான் ஆபரேஷன் செய்யப்போவது...மைக்கேல் அருகிலிருந்து என் தலை தடவி உடல் தடவியபடி சொன்னார் 'சைலேஷ் உனக்கு இந்த ஆபரேஷன்  உன் கடவுளால் செய்யப்படுகிறது' அப்படியே நடந்தது. கால் போனதே தவிர வேறு எந்தச் சிக்கலும் ஆபத்தும் வரவில்லை. ஊன்றுகோலாய் சுவாமி சைலேஷைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

சைலேஷின் வாழ்க்கை ஒரு ஞானியின் வாழ்க்கையாக மாறியது. அவர் சிரத்தையோடு நடந்து வந்து அபிஷேக ஆராதனையும் செய்து கணீரென்ற குரலில் பஜனைப் பாடல்களைப் பாடும்போது கோயில் முழுவதும் தெய்வீக அதிர்வுகளால் நிறைந்து விடுகிறது. 2005 ஆம் ஆண்டு சுவாமியை தரிசித்தேன். என்னை பார்த்து'சால சந்தோஷம்' என்றார். சோதனை எத்தனை இருந்தாலும் இத்தனை பேரு பெறுவதற்கு சுவாமியின் இந்த அருளைப் பெறுவதற்கு பூர்வ புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஆம் என்றார் பகவான் கனவில் ஒருமுறை சொன்னாராம்_  நீ ஒரு நட்சத்திரம்.. பகவான் நான் அவதரிக்கக் கீழிறங்கி வந்தேன். என்னுடன் இருக்க நீ இங்கு வந்து விட்டாய்.

 பத்ரிநாத்தில் ஒரு மலைச்சிகரத்தில் சைலேஷ் ஷைலா என்ற மலைத் தெய்வமாக இருந்ததாகவும், அங்கு ஓடிய நதியே மனைவி மரீனாவாக வந்ததாகவும் அங்கு தன்னிடத்து வந்தவர்களே வர்ஜீனியாவில் இந்தக் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார். 1998 குருபூர்ணிமாவன்று சுவாமி இவர் கனவில் விரட்டு புருஷனாய் விஷ்ணுரூபனாய் தரிசனம் தந்து மந்திரம் ஓதியிருக்கிறார். சிவா விஷ்ணு பிரம்மாவாய் சுவாமி அருள்பாலித்திருக்கிறார். செல்வவிநாயகர் கோயிலில் விநாயகரை வழிபட்டு சுற்றி வரும்போது துர்க்கையின் சந்நிதியில் ஒளி கிளம்பி எனக்குள் வந்து சேர்ந்தது என்கிறார் சைலேஷ். ஏதோ நான் சும்மா பேசி ஏமாற்றுவதாய் சிலர் நினைக்கிறார்கள். எனக்கு வந்த சோதனையும் சுவாமியின் கருணையும் எனக்கல்லவா தெரியும். சுவாமி அடிக்கடி கனவில் வருகிறார். வழிகாட்டுகிறார்.  சுவாமி சொல்கிறார் நான் ஆண்களுக்கிடையே ஆண், பெண்களுக்கிடையே பெண், குழந்தைகளுக்கிடையே குழந்தை உண்மையில் பரம்பொருள். நீ உன்னை அப்படி நினைத்துக்கொள் என்கிறார்.


🌹சாயியின் பேரருள்:

 கூரையிலிருந்து அமிர்தம் பொழிகிறது. படங்களிலெல்லாம் விபூதி குங்குமம், மஞ்சள், சந்தனம் வந்து நிறைந்தபடியிருக்கிறது. பிரத்யேக பூஜையறையிலிருக்கும் சுவாமியின் மிகப்பெரிய படமோ விபூதிக்குள் மூழ்கிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. கோயிலுக்குள்ளிருக்கும் சத்யசாயி படத்தில் நவராத்திரியன்று விபூதி வரத்தொடங்கியது சுவாமி முதல் நாள் வந்து கனவில் சொன்னதைப் போலவே.. விபூதி கொட்டுவதைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் போய் ஓவென்று அழத்தொடங்கினேன் என்கிறார் சைலேஷ். திடீரென்று வீட்டில் புல்லாங்குழல் வாசிப்பு கேட்கத் தொடங்கும்,'கலீர்' கலீரென்று கொலுசுச்சத்தம் தொடர்ந்து கேட்கும். சமையலறையில் பாம்பு வந்து விட்டுப் போகும். கோவிலுக்குள் வாழும் சைலேஷுக்கு எல்லாம் சாயிபாபாதான் எல்லாமே சுவாமிதான். சுவாமியின் கருணையைப் பற்றி பேசும் போதெல்லாம் அழுகிறார்.சைலேஷிடம் இனி எதை நோக்கியது அவர் பயணம் என்று கேட்ட போது, கண்களை மூடியபடி சொன்னார் 'இறைவன் சாயியை அடைவதே'( to attain God)

கோயிலுக்கு முன்பிருந்த மாமரத்தின் ஒரு பகுதி வெட்டப்பட்டு கீழே கிளைகளும் இலைகளுமாகக் கிடந்தன சைலேஷிடம் பேசுவதற்காக சென்றபோது.. பேசி முடித்துத் திரும்பிய போது தரையிலிருந்த எல்லாம் எடுக்கப்பட்டு சுத்தமாய் தூயதாய் மாறியிருந்தன. எல்லாம் நிர்மலமாயிருந்தது. வானம் பளிங்கு நீலமாயிருந்தது. நுனி வெட்டப்பட்ட மாமரத்தின் மேலே உச்சி வானத்தில் பௌர்ணமி நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது.சைலேஷின் குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.சுவாமி இந்த பக்தரின் வாசஸ்தலத்தில் கோயிலில் முன்னும் பின்னும் மேலும் கீழும் உள்ளும் வெளியிலும் சுற்றிலும் நிறைந்திருக்கிறார். 

ஜெய் சாய்ராம். 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீசத்யசாயி புக்ஸ் அண்ட்
பப்ளிகேஷன் டிரஸ்ட்,
தமிழ்நாடு,
சென்னைகேந்திரம்,”சுந்தரம்”
சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக