தலைப்பு

புதன், 11 டிசம்பர், 2019

சாயி சாஸ்திரிகள் - திரு. ரா. கணபதி


'108' என்று விரல் ரேகைகளில் சரியாக கணக்கிட்டவாறுதான் காயத்ரீ ஜபம் செய்யவேண்டுமா என்ன? எண்ணிக்கை பாராமல் எண்ணம் ஒருமுகப்பட்டு நிற்கும் வரை செய்தால் தேவலை போலிருக்கே!’ என்ற எண்ணம் எனக்குத் தலைதூக்கியிருந்த காலம்.

அச்சமயத்தில் ஸ்வாமி எனக்கு பேட்டியருளினார்.

பேட்டி தொடக்கமே அவரது இக்கேள்விதான்: “காயத்ரீ ஜபம் யதோக்தம் பண்ணிக் கொண்டிருக்கிறாயா?”

யதோக்தம்! அதாவது (சாஸ்திரத்தில், சான்றோர் வழக்கில்) எப்படிச் சொல்லப்பட்டுள்ளதோ, அப்படி! அதாவது கணக்குத் தப்பாமல் நூற்றெட்டு ஆவிருத்தி ஜபிப்பது!

நான் பதில் சொல்லத் தெரியாது அசடு வழிந்து கொண்டு நிற்க அவகாசமே அளிக்கவில்லை, அளப்பருங்கருணையாளர். பதிலை எதிர்பாராமல், கேள்வி கேட்ட கையோடேயே தமது வலது திருக்கையைப் பெரிதாக மேலும் கீலும் எழுப்பித் தாழ்த்திச் சுழற்றினார்.

உதித்தது அக் கரத்தில் நீ..ளமான அக்க மாலை; ருத்திராக்க மாலை!

மணிக்கு மணி வெள்ளிக் கம்பி கொண்டு முடிச்சுப் போட்டு முறுக்கி இணைத்த நூற்றெட்டு ருத்ராக்ஷம் கொண்ட அந்த ஜபமாலையைத் தமது திவ்ய நயனம் மலரப் பார்த்தார். “ரொம்ப நல்ல மாலை!” என்று அந்தத் தமது சிருஷ்டியைத் தாமே வியந்து கொண்டார்.

அப்புறம் அதன் முதல் மணியைத் தமது வலக்கையின் நடு விரல் மேல் ரேகைப் பக்கவாட்டத்தில் வைத்து, ஜப எண்ணிக்கையைக் கணக்கிட எப்படி ‘யதோக்தம்’ மணிகளை உருட்டிப் போக வேண்டுமோ அப்படி அழகுற ‘டெமான்ஸ்ட்ரேட்’ செய்து காட்டினார். அதன் தத்வார்த்தனகங்ளும் அன்புக் குரலில் ஊற வைத்து விளக்கமாகச் சொன்னார். தொடர்ச்சியாகவே தேவ-ரிஷி-பித்ருக்களுக்கான மூவகை தர்பணங்கள் எந்தெந்த விரல்கள் வழி செய்ய வேண்டுமென்றும் விளக்கினார்.

நான் காஞ்சி மஹா பெரியவாளின் சீடனாக முதற்கண் நிற்கவேண்டும் என்பதே பேதமறியா சாயி மாஹப் பிரபுவின் திருவுளம் போலும், அதனால்தான் இந்த ‘மாடர்ன் ஸ்வாமி’ இதுபோல் பல சந்தர்பங்களில் எனக்கு என்னவோ சாயி சாஸ்திரிகளாகவே இருந்திருக்கிறார்!

ஆராத ஆதரவுடன் என்னை அருகழைத்தார். திவ்யமான ஜப மாலையை தெய்வக் கரத்தாலேயே கழுத்திலிட்டார்.

அந்நாள்களில் என் மனத்தடியிலிருந்த எண்ணத்துக்குத் தீர்ப்பு சொல்லாமல் ஸ்வாமி விடுவாரா? நான் எண்ணியது தவறு என்று குற்றப் பத்திரிக்கை படிக்காமல், இயல்பாகப் பேசிப் போவது போலவே சொன்னார்: “விரல் ரேகையைவிட இந்த மாதிரி மாலையில் ‘ஆட்டோமேடிக்’கா ஸங்கியா (கணக்கிடுதல்) அது பாட்டுக்கு போகும். மனஒருமைபாடு தடங்கல் ஆகாது. ஃபுல் ரெளன்ட் முடிஞ்சு சிங்கிள் ருத்ராக்ஷம் வரும்போது மட்டும் சட்டென்று டிஃபரன்ஸ் தெரியும். அஷ்டோத்தர சதம் (108) பூர்த்தி ஆகிவிட்டதென்று தெரியும். யதா விதி அப்படிப் பூர்த்தி பண்ணிய பிறகு கணக்கு வைத்துக் கொள்ளாமல் எவ்வளவு வேண்டுமானாலும் (ஜபம்) பண்ணலாம்.”

ஆதாரம்: ஸ்ரீ சாயி – 108, அத்யாயம் 41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக