தலைப்பு

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி. கீதா மோகன்ராம் அவர்களின் அனுபவங்கள்


ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் கீதா மோகன்ராம். பத்மநாபனுடைய மாமா சேஷகிரிராவ் இன்றும் பிரபலமானவர்.

ஒரு வருடம் நவம்பர் மாதம் 22ம் தேதி U.S.A வில் உள்ள செளத் பெத்லேயாவில் கீதா பழங்களும்  பூக்களும் வாங்கிக்கொண்டு, ATMக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டு  அருகே நிறுத்தி இருந்த தனது காரில் ஏறி அமர்ந்ததும், வேகமாக கண்ணாடி கதவின் வழியே பின்புறமாக ஒருவன் ஏறி ஒரு கையால்  கீதாவின் கழுத்தை சுற்றிப் பிடித்துக் கொண்டு வலது கையில் கத்தியை வைத்துக் கொண்டு "எடு, எடு, வண்டியை எடு" என்றான். கீதா நிதானமாக " பணம் வேண்டுமானால் தருகிறேன். போய்விடு" என்றாள். அவன் பணம் வேண்டாமென்றும் போலீஸ் தன்னைத் துரத்தி வருவதாகவும் உடனே வண்டியை எடுக்குமாறும் மிரட்டினான். கீதா நிதானமாக "போலீஸில் மாட்டிக்கொண்டால் 2,3 வருடங்கள் தண்டனையோடு போய் விடும். ஆனால் தன்னை கத்தியால் குத்தினால் ஆயுள் முழுவதும் ஜெயிலில் இருக்க நேரிடும்" என்றாள். அந்த மனிதன் சற்றே பின்வாங்கினான். தன்னால் இவளை ஒன்றும் செய்ய முடியாது; தானும் தப்பிக்க முடியாது என்று உணர்ந்து "உனக்கு பயமாக இலலையா" என்றான். "நான் பயந்து என்ன செய்வது? நீ என்னை கட்டுப்படுத்தி கத்தியை காண்பிக்கிறாய்.  இப்படித்தான் நான் போக வேண்டுமென்றால் என்ன செய்ய முடியும்.  என் குழந்தைகள் நன்கு செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் நீ எங்கும் போக முடியாது. நீ என்னை விட்டு விட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை" என்று நிதானமாக கூறினாள்.  அந்த வார்த்தைகள் யாவும் சுவாமி தன் மூலம் பேச வைத்ததுதான் என கீதா உணர்ந்தாள். பிறகு அவன் தானே இறங்கி கைகளை உயரே தூக்கி போலீஸிடம் சரணடைந்தான்.

அவ்வளவு நேரமும்  கீதா தன் ஒரு கையை கார் கண்ணாடியில்   ஒட்டியிருந்த சுவாமி படத்தின் மேல் வைத்திருந்தாள்.
போலீஸ் இவளிடம் வந்து " எப்படி இவன் சரணடைய முற்பட்டான்?" எனக் கேட்க, கீதா "சுவாமியின் உதவியால்தான்" எனக் கூறியதை நம்ப மறுத்தனர். அனைத்தும் சுவாமியின் பிறந்தநாளுக்கு முந்தைய தினம் நடந்தது.

பின்னர் சில நாட்கள் கழித்து நாங்கள் ஒருமுறை புட்டபர்த்திக்கு சென்றபோது சுவாமி இதனை உறுதிப்படுத்தினார். அப்போது சுவாமி விளையாட்டாக "எல்லோரும் என் பிறந்த நாளை  கொண்டாடுவார்கள். ஆனால் அன்றும் நீ எனக்கு வேலை கொடுக்கிறாய்" என்றார்.

ஆதாரம் : Talk on Radio Sai
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக