தலைப்பு

சனி, 14 டிசம்பர், 2019

உலகில் முதன்முதலாக நிறுவப்பட்ட ஷீரடி பாபா சிலை!

கிண்டி ஷீரடி பாபா திருக்கோயில், சென்னை. 

அன்பெனும் கங்கையும் கருணையாம்
யமுனையும் அருள் என்னும் சரஸ்வதியும்
சங்கமம் ஆகும் சாயியின் திருவடி.
இங்கவர் நிகழ்த்தியது ஒரு அற்புத ரக்ஷணம் கதையையும் மிஞ்சிய ஒரு உண்மை வாழ்க்கை கதை... 

🌹பகவானின் இந்த அற்புத கருணையை காணும் முன் கிண்டி பாபா கோயிலின் சிறப்புகளைக் காண்போம்:

கிண்டி ஷீரடி பாபா கோயில் கிண்டி புறநகர் ரயில் நிலையத்திற்கு வெளியே, கிண்டி தொழிற்பேட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.

ஷீரடி பாபாவை பற்றி பலரும் அறியாத அக்காலத்தில் உலகிலேயே முதன்முதலில் ஷீரடி பாபா சிலை இங்குதான் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின்  திருக்கரங்களால் பிப்ரவரி 3, 1949 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவும் கருங்கல்லால் ஆன சிலை. ஷீரடி பாபாவின் சமாதியில் நிறுவப்பட்டிருக்கும்(அக்டோபர் 7, 1954) வெள்ளைப் பளிங்கு சிலைக்கு 5 ஆண்டுகள் முன்னரே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


விநாயகர், மற்றும் நவக்கிரஹம் சந்நிதிகளும் , சர்வமத ஸ்தூபியும் இந்த கோயிலில் உள்ளன. ஒரு புற்றும் இங்கு அமைந்துள்ளது.

ஒவ்வொரு வியாழன் அன்றும் மற்றும் குறிப்பிட்ட விசேஷ நாட்களிலும் ஸ்ரீருத்ரம் வேத கோஷங்கள் மற்றும் சாய் பஜன் இன்னிசையுடன் அபிஷேக அலங்கார ஆராதனை நடை பெறும். அப்போது பக்தர்கள் ஆண்/பெண் தனி வரிசையாக அமர்ந்தபடியே தரிசிக்கலாம். வியாழன் மாலையில் பக்தர்கள்  பகுதி பகுதியாக வரிசையில் வந்து  ஹாரத்தி தரிசனம் செய்யலாம். வியாழனன்று சுமார் 2000 பக்தர்களுக்குமேல் தரிசனம் செய்வர். கோயிலில் உண்டியல் மற்றும் தட்டு காணிக்கை இல்லை.

🌹தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்... தானாக வந்து அங்கு  
துயர்தீர்த்த தெய்வம்:

சாயிபக்தர்களை சற்று பின்நோக்கி பயணிக்க வைக்கிறோம். அது 1943ம் ஆண்டு. சென்னை ராயப்பேட்டாவில் வசித்து வந்த திரு. லோகநாத முதலியார் என்பவர் திடீரென சித்தப்பிரமை பிடித்தவர்போல் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார். அதுவரை நல்ல நிலைமையில் இருந்த அவர் இவ்வாறு மாறவே , குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். வேண்டாத தெய்வங்கள வேண்டினர். முதலியாரின் நிலையில் மாறுதல் இல்லை. அன்றியும் அவரது பேச்சும் செயலும் கட்டுக்கு அடங்காமல் போய்விடவே, அவரை ஒரு மனநல  நிபுணரிடம் காட்ட முடிவு செய்தனர்.

இரண்டு நாட்கள் இவ்வாறு கழிந்த நிலையில்.. இரண்டாம் நாள் நள்ளிரவில்
திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்த லோகநாத முதலியார் "நான் குணமாகி விட்டேன்" என்று மிக மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தார். ஆரஞ்சு உடையணிந்த ஒருவர் தனக்கு துளசிநீர் அருந்தக் கொடுத்ததாக கூறினார். அங்கு யாரையும் காணாததால் அது அவர் கண்ட கனவு என மற்றவர் அறிந்தனர்.


மறுநாள் மதியம் சத்ய சாயிபாபா அவர்கள் திரு.முதலியார் இல்லத்திற்கே சென்னைக்கு வந்துவிட்டார். அப்போது பாபாவிற்கு சரியாக 20 வயது. முதலியார் பரவசத்துடன் பாபாவைப் பார்த்து இவர்தான் இவர்தான் என் கனவில் நேற்று வந்து என்னைக் குணப்படுத்தியது என்றார். ஏற்கெனவே கால் எலும்பு முறிவினால் படுக்கையிலிருந்த அவரால் எழ இயலவில்லை. பாபா அவரை சாந்தப்படுத்தி தன் திருக் கையினால் அவர்காலை இழுத்துவிட முதலியார் உடனே குணமாகி எழுந்து நின்றார்.( ஓம் ஸ்ரீ சாயி சர்வ ரோக நிவாரிணே நமஹ).பாபா கனவில் வந்தது தானே என்றும் அவர் இனி பயப்படத் தேவையில்லை என்றும் கூறி பிரசாந்தி நிலையம் வருமாறு பணித்தார்

🌹பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து:

ஏன்  திரு.லோகநாத முதலியார் மனப் பிராந்தி அடைந்தார். அதே 1943ம் ஆண்டு கிண்டிக்கு செல்வோம். தற்போதைய சென்னையின் இதயமாக பரபரப்போடு இயங்கும் கிண்டி அப்போது மரங்கள் அடர்ந்து சென்னையின் ஒதுக்குப் புறமாக இருந்தது. அங்குதான் திரு. முதலியாருக்கு சொந்தமான நிலப்பரப்பை ஒரு குஜராத் இரும்பு கடைக்காரருக்கு குத்தகை விட்டிருந்தார். நிலத்தை தன் உபயோகத்திற்காக திரு.முதலியார் கேட்டபோது குத்தகைதாரர் மறுப்பு தெரிவிக்க, விவகாரம் வழக்காகி இறுதி தீர்ப்பு முதலியாருக்கு சாதகமாக வந்தது. பலவந்தமாக காலி செய்யச் சொன்னதால் அந்த குத்தகைதாரர் ஆவேசமாகி இன்னும் இரு நாட்களில் முதலியார் பைத்தியம் பிடித்து அவைவார் என சாபமிட்டு சென்றார்.


அவர் செய்த தீச்செயலை பாபா கூறுகிறார்.
"அந்த மனிதர் உங்களுக்கு செய்வினை செய்து உள்ளார். உங்கள் நிலத்தில் உள்ள ஒரு மரத்தின்கீழ் தோண்டுங்கள்.அங்கு புதைக்கப்பட்ட ஆடு மற்றும் கோழியின் தலையை அகற்றிவிட்டு, பின் விபூதி தூவுங்கள்" என்றார். அவ்வாறே செய்யப்பட்டது.

இதன்பிறகு லோகநாத முதலியார் பரிபூர்ண சரணாகதி தத்துவத்துடன் பாபா
பக்தரானார். பர்த்தி சென்றார் பலமுறை. ஐயன் சென்னை வந்தால் தங்குவதற்காக ஒரு மாளிகை கட்டித்தருவதாக கூறினார்.
ஒப்புக் கொண்ட பாபா பிறகு ஒரு கடிதம் எழுதி அந்த இடத்தில் தன் முந்தைய அவதாரமான ஷீரடி பாபாவுக்கு ஒரு கோயில் எழுப்பச் சொன்னார். ஐயன் ஆணையை ஏற்றார் திரு முதலியார்.

🌹அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்:

பாபா கூறிவிட்டார் கோயில் கட்டு என்று. ஆனால் அது அத்தனை எளிமையான காரியாக இல்லை. ஆனால் ஐயன் அருள் மலையையும் பொடியாக்கும் அன்றோ? அப்போது இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. தளவாடங்கள் தட்டுப்பாடு.

இப்போது பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஷீரடி நாதருக்கு எங்குமே ஒரு விக்ரஹமோ கோயிலோ இல்லை. ஏன் அவரைப்பற்றிய நிறைய பேர்கள் அறிந்திருக்கவில்லை குழம்பிய முதலியாருக்கு அபயஹஸ்தம்
காட்டினார் பாபா. ஷீரடி நாதரின் ஒரு களிமண் சிலையை வரவழைத்து திரு.முதலியாருக்கு அளித்தார்.

திரு. லோகநாத முதலியார்

மாடல் தயார். ஆனால் விக்ரஹம் செய்ய ஸ்தபதி கிடைக்கவில்லை. இதற்கும் பாபாவின் அருள் சுரந்தது. திரு.முதலியாரைக் காண ஒரு ஸ்தபதி வந்தார். முகம்மதிய பக்கீர் போன்ற ஒருவர் தம்மிடம் வந்து, கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒருவர் கோயில் கட்ட முனைவதாகவும்  அதற்குறிய தெய்வச்சிலையை நீ வடிக்க வேண்டும் என்றும் கூறியதாகச் சொன்னார். ஐயனின் திருவருள் இது என தெளிந்தார் திரு.முதலியார். அச்சிற்பி ஷீரடி பாபா மற்றும் விநாயகர் சிலைகளை வடித்தார்.


இதற்கிடையே 1946 ஜூலை 10 ம்தேதி கோயில் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.
பாபா ஸ்ரீசக்ரம் , குங்குமம் இவற்றை தன் கை அசைவினால் வரவழைத்து கடைக்காலில் இட்டு அருளினார். கோயில் எந்தவித சுணக்கமும் இன்றி கட்டி முடிக்கப்பட்டது. 


3-9-1949 சாயி யுகத்தின் மற்றொரு பொன்னான நாள். தற்போது சாய்கங்கை எப்படி சென்னை வந்ததோ அதுபோல் அருட்கங்கை ஆர்பரித்து கிண்டியில் வந்தது. ஆம் கிண்டிபாபா கோயில் ஷீரடி பாபாவுக்கு ப்ராணப் பிரதிஷ்ட்டை நடந்த தினம் அது. பாபா தம் அருட்கரத்தை சுழற்றி நவ ரத்தினங்கள், பொன்னாலான தும்பைப் பூக்கள் மற்றும் ஸ்ரீசக்ரம் முதலியவற்றை சிலையின் பீடத்தில் சொரிந்தார். பிறகு கருவறையை விட்டு வெளிவந்தார்.


பிறகு நம்ப இயலாத அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார்.பாபா கூறினார் "நான் இந்த சிலா ரூபத்திற்கு உயிரோட்டம் கொடுக்கிறேன்" என்று கூறியவாறு தன் திருக்கரத்தை மேல் நோக்கி எழுப்ப, பீடத்தில் இருந்த ஷீரடி பாபா சிலை சில அங்குலங்கள் தானாக மேலே எழந்து பிறகு பீடத்தில் அமர்ந்தது. (ஓம் ஸ்ரீசாயி அற்புதசர்யாய நமஹ) ப்ராணப் பிரதிஷ்டை முடிந்து பாபா திரு.லோகநாத முதலியார் இல்லம் சென்றார். அங்கு அவரின் பாதங்களை சந்தணக் குழம்பில் பதித்துத் தருமாறு  வேண்டினர். சில நிமிடம் கண்மூடி மோன நிலைக்கு சென்ற பாபா "இன்று நான் ஷீரடி பாபா பிரதிஷ்டை செய்துள்ளேன். அவரது காலடி தடத்தை தருகிறேன்" என்று கூறி சந்தணக் குழம்பு பதித்த துணியின்மீது ஏறி நின்றார். என்ன ஆச்சர்யம் பகவானின் இளவயதின் சிறிய கால் தடங்களுக்குப் பதிலாக அத்துணியில் பெரிதான இரண்டு கால் தடங்கள் பதிந்திருந்தன. இதை சட்டமிட்டு சந்நிதியில் மாட்டியுள்ளதை இன்றும் காணலாம். 


மேலும் பாபா தருவித்துக் கொடுத்த ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் ஷீரடி நாதரின் கழுத்தில் கண்டு பரவசம் கொள்ளலாம்.


விமர்சையாக நடைபெற்ற ப்ராணப் பிரதிஷ்டைக்கு பின் பாபா ஒரு மாதகாலம்
தினந்தோறும் எழுந்தருளினார். இந்தக்கோயில் ஷீரடிக்கும் பர்த்திக்கும் இடையிலான ஆத்ம பாலம். இருவரும் ஒருவரே என்பதை உணரச் செய்யும்
புனித சாட்சி.

ஓம் ஸ்ரீ சாய்ராம்.

பின்குறிப்பு..

>உலகிலேயே முதல் முதலான ஷீர்டி பாபா
கருங்கல் விக்ரஹம்..ஷீர்டியில் கூட 5 ஆண்டுகளுக்குப் பின்தான்..

>முதன் முதலாக சர்வதர்ம ஸ்தூபி.. பர்த்தியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தான்
.

ஆதாரம்: "Lokanatha Sai" by Smt.Leela and "Sai Baba: The Man of Miracles" written by Howard Murphet.

தொகுத்து அளித்தவர்: குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

1 கருத்து: