தலைப்பு

திங்கள், 30 டிசம்பர், 2019

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

புட்டபர்த்தியைப் புகைப்படத்தில் கூடப் பார்க்காத இவருக்கு, நம் அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா புட்டபர்த்தியை முழுவதும் கனவில் சுற்றி காண்பித்திருக்கிறார். இவரின் அனுபவங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த பதிவை தவறாமல் படித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

இன்று (28/12/2019) (மதியம் 1.45)
ஒரு மீட்டிங் சாலிகிராமத்தில்.. கோடம்பாக்கத்திலிருந்து ஓலா ஆட்டோ புக் செய்தேன்..
அது ஓலா அல்ல சுவாமி லீலா என பிறகு தான் புரிந்தது ...

ஸ்டான்ட் ஆட்டோவை விசாரித்தேன் வருவதற்கு ஆட்டோ விலை கேட்டான்..
முதலில் ஓலா ஆட்டோ இல்லை என செல்லில் வந்தது.. மீண்டும் முயற்சித்தேன்.. ஒருவரை அடையாளம் காட்டியது ஓலா..

ஓலா வந்தது.. உள்ளே அமரும் போதே சாய்ராம் என சத்தமாகச் சொன்னேன்.. சுவாமி ஸ்டிக்கர் இரண்டு சிரித்தபடி அடியேனை வரவேற்றது

உட்கார்ந்தபிறகு அடியேனும் அந்த ஆட்டோக்காரரும் சுவாமியைப் பற்றியே பேசிக் கொண்டே வந்தோம்..

அவர் சுவாமியை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதும் .. சுவாமி எப்படி அவருக்கு அருள் செய்து வருகிறார் என்பதும் அவர் சொல்லச் சொல்லப் புல்லரித்தது..

குபேரனோ குசேலனோ சுவாமிக்கு அனைவரும் சமம் தான் ...
பேரறிஞருக்கு மட்டுமல்ல அடியேனைப் போல முட்டாளுக்கும் சுவாமி ஞானமாகவே நிறைந்து கொண்டிருக்கிறார்...

அவர் பெயர் வேலன். வளசரவாக்கம்.

முதன்முதலில் அவர் ஆட்டோவில் ஏறிய ஒரு சுவாமி பக்தை பகவான் படம் தந்து வழிபடச் சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் நம் சுவாமி தன் கருவி மூலம் உரியவரைத் தன் பக்தனாக்கிக் கொள்கிறார்.

இவர் அதை வாங்கி வீட்டில் வைத்து இவரைப் போய் ஏன் வணங்குகிறார்கள் என நினைத்திருக்கிறார்.

பிரச்சனைகளை கேஷுவலாக அவர் வைத்திருந்த சுவாமி படத்திடம் சொல்ல ஒவ்வொன்றாய் நிறைவேறிக் கொண்டு வந்திருக்கிறது..

அதை அவருக்கு உணர வைத்திருக்கிறார் பாருங்கள் அது தான் சுவாமி சங்கல்பம்..

 சுவாமி எல்லோருக்கும் அருள்கிறார்.. ஆனால் பிராப்தம் இருப்பவர்களே அதை உணர்கிறார்கள்...

நாங்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோவை அவர் முதன்முதலில் வாங்கிக் (2008) கொண்டு சென்ற இடம் சுந்தரம்..

"சாமி நீ தான் பாத்துக்கனும் சாமி" என்றிருக்கிறார்..

ஒருமுறை எஃப் சி பார் ஆகி அவர் ஆட்டோவை ஆர்.டி.ஓ சீஸ் செய்து விட்டார்கள்..
என்மேலும் தவறிருக்கிறது சார் என்றார் என்னிடம்..

சுவாமி பக்தர்கள் தன் தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்வார்கள் அதற்கு சப்பைக் கட்டு கட்ட மாட்டார்கள்.. பக்தியின் ஒரு அம்சம் தான் நேர்மையும்..

பிறகு சுந்தரம் வந்து சுவாமியிடம் புலம்பி இருக்கிறார்.. சாமி காப்பாத்து சாமி.. தப்பு நடந்து போச்சு என சந்நதியில் அவர் கண்நதி புறப்பட்டிருக்
கிறது..

வீட்டுக்கு வருகிறார் .. அழுத அயர்ச்சியும்.. துக்கக் களைப்பும்.. தூங்கிவிடுகிறார்.

சுவாமி கனவில் வருகிறார்..

பக்தர்கள் புடைசூழ சுவாமி அமர்ந்திருக்கிறார்.. பாவம் போல இவர் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கிறார்..

சுவாமி கை காட்டி யோவ் இங்க வாய்யா.. என்ன பிரச்சன உனக்கு? எனக் கேட்டிருக்கிறார் ஏதும் அறியாதது போல ..

சாமி என் ஆட்டோவ புடிச்சு வெச்சிட்டாங்க சாமி.. காப்பாத்துங்க சாமி என அதே சுந்தரத்தில் சுவாமி முன் புலம்பியதை கனவில் இன்னமும் உருக்கமாகப் பதிவு செய்கிறார்..

சரி பாத நமஸ்காரம் எடுத்துக்கோ இது நம் கருணா மூர்த்தி

உன் ஆட்டோ உன்னவிட்டு எங்கயும் போய்டாது .. புரியுதா என தீர்க்கமாய் சொல்லியிருக்கிறது நம் தெய்வம்..

அடுத்த நாள் ஆர்.டி.ஓ விற்கு பயந்து கொண்டே போயிருக்கிறார்...

வழக்கமாக ஃபைன் அதிகமாகத் தீட்டுவார்களாம்.. என்ன செய்யப் போகிறோம் .. சாமி சாமி எனக் கையைப் பிசைந்திருக்கிறார்..

 கை விடுவாரா நம் கடவுள் ..

அவருக்கு வெறும் ஐநூறு ரூபாய் அபராதம் விதித்து ஆட்டோவைத் திரும்பக் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். அடுத்தடுத்த நாளில் ஆர்சி புக் என எல்லாவற்றையும் மீட்டு இருக்கிறார்..

"எங்கூட 2008ல ஆட்டோ வாங்கி ஓட்டினவங்க எல்லாம்.. ஆட்டோவ வித்து வேற தொழில் பாக்கப் போய்ட்டாங்க சார்.. என்ன சாமி கைவிடவே இல்ல சார்" என்றார் வேலன்.

"சார் நான் நடுகாட்டுல தெரியாம மாட்டிக்கிட்டா கூட சாமி என்ன காப்பாத்திருவார் சார்" என்றார் என்னிடம்

எவ்வளவு சத்தியம் .. இதை என் வாழ்க்கையில் அணு அணுவாக அனுபவித்திருக்கிறேன்..
சுவாமியை அந்த இக்கட்டு நேரத்தில் அழைக்க மறந்தாலும் தன் பக்தருக்கு ஏதேனும் ஒன்றென்றால் கரம் நீட்டிக் காப்பாற்றி விடுகிறார் நம் சத்தியக் கடவுள்

அவர் அனுபவம் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல நம் சுவாமியின் சாந்நித்யம் உணர்ந்தேன்.. புருவ மத்தியில் புறப்பட்டு வந்தார் சுவாமி..

ஒரு முறை ஆட்டோ ஓட்டுகையில் ஒரு காரை இடித்து விடுகிறார்..

வெளியே இருந்து அந்த காரின் உரிமையாளர் வருகிறார்.. என்ன சண்டை வரப்போகிறதோ எனப் பதை பதைத்திருக்கிறார்
வேலன்.

இவரிடம் அவர்.. "சார் மன்னிச்சிருங்க ஏம் மேல தான் தப்பு"..  சரியா கவனிக்கல..
அதற்கு அவர் "ஒண்ணும் பரவால்ல .. இத்தோட போச்சே "..
சார் டேமேஜ் ஆகியிருக்குமே சார் இது வேலன்
"அப்படி ஒண்ணும் இல்ல.. பாத்துக்கலாம்" எனச் சொல்லி காரை எடுத்திருக்கிறார்..

என்ன இவர் டேமேஜ் ஆகியும் கோபமே இல்லாமல் பேசிவிட்டுப் போகிறார் என ஆச்சர்யப்பட்டு அவர் வண்டியைப் பார்த்திருக்கிறார்..

அந்தக் காரில் சுவாமி சிரித்துக் கொண்டே ஆசீர்வதிக்கும் (ஸ்டிக்கர்) படம் ...

மிரண்டு போயிருக்கிறார்...

நானும் மிரண்டு போனேன்..

சுவாமி பக்தர்கள் பக்குவமானவர்கள். உத்தம சீலர்கள்.. இந்த நேரத்தில் அனைத்து சுவாமி பக்தர் பாதம் தொட்டும் வணங்குகிறேன்...

அடியார்களின் அடியார் அல்லவா நம் அவதார மூர்த்தி..

ஒரு முறை ஒரு வெளி நாட்டுக்காரர் வண்டி இன்றி தவித்திருக்கிறார். ஒரே டென்ஷன் .. விமான நிலையம் செல்ல வேண்டும்..இவர் அந்த வழியில் வர‌‌.. அவர் நிறுத்த .. இவர் ஏற்றிக் கொள்ள..
வண்டியில் சுவாமி ஸ்டிக்கரைப் பார்த்து அந்த வெளிநாட்டவரின் மகள் .. எதுக்கு டென்ஷன் ஆகறீங்க .. சுவாமி தான இப்ப இந்த வண்டிய அனுப்பியிருக்காரு ... அங்க பாருங்க எனக் காட்டி இருக்கிறார் சுவாமி ஸ்டிக்கரை..
இறங்கிய பின் பணம் கொடுப்பதற்கு முன் தன்னிடம் 30வருடமாக இருக்கும் சுவாமி பாக்கெட் சைஸ் படத்தைத் தந்திருக்கிறார். இன்னமும் அதைத் தான் தன் பர்சில் வைத்திருக்கிறார் ஆட்டோக்காரர் வேலன் சாய்ராம்..
(படம் இணைக்கப்பட்டிருக்கிறது)


ஒருமுறை ஒரு பக்தர் புட்டபர்த்தியிலிருந்து பிரசாதம் தர .. சுந்தரத்தில் ஒரு சுவாமி பக்தரிடம் "சாமி என்ன மட்டும் புட்டபர்த்திக்கே கூப்ட மாட்டேங்கிறார் சார்" என்றிருக்கிறார்..
அதற்கு அந்த பக்தர் சுவாமி நிச்சயம் அழைப்பார் என சொல்லி விட்டுப் போயிருக்கிறார்..

அடுத்த நாள் வியாழன் இவருக்கு சுவாமி மீது ஒரே வருத்தம் ..கோபம்... "சாமி என்ன மட்டும் ஏன் வரவிடாம ஒதுக்கற" எனக் கவலைப்பட்டு அன்றைய சாப்பாட்டை ஒதுக்கி இருக்கிறார்.. ஆட்டோவிலேயே தூங்கி இருக்கிறார்..

கனவில் சுவாமி இவருக்கு புட்டபர்த்தியில் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்...
"சார் அப்படியே கேமரா போகுற மாதிரியே இருந்தது சார் என்கிறார்"

இதற்கு முன் புட்டபர்த்தியைப் புகைப்படத்தில் கூடப் பார்க்காதவர் வேலன் ..
"சார் அந்த ஆர்ச் எல்லாம் நல்லா தெளிவா தெரிஞ்சுது சார்.. புள்ளையாரு .. ஆஞ்சனேயரு"
அவர் சொல்லச் சொல்ல நம் கடவுளின் கோகுலத்தை மனக் கண்ணால் ஒரு முறை பிரதக்ஷணமாய்ச்  சுற்றிப் பார்த்தேன்.

இரவு ஒன்பதரை மணி வீட்டுக்குக் கிளம்பலாம் என முடிவெடுத்த உடன் அவசரமாக ஒரு சவாரி வருகிறது .. ஏதோ ஏற்ற வேண்டும் போல தோன்றியது என்று வேலன் ஏற்றிக் கொள்ள..

அவர்கள் சுவாமியின் ஸ்டிக்கரைப் பார்த்து நீங்க சுவாமி பக்தரா எனக் கேட்டு.. (அடியேன் இன்று கேட்டதைப் போல்) ஆம் என்றிருக்கிறார்...

அதற்கு அவர்கள் "நாங்க புட்டபர்த்திக்குத் தான் போயிட்ருக்கோம்.. ஆட்டோவே கிடைக்கல.. நல்ல வேள சுவாமியே உங்கள அனுப்பியிருக்கார்" என்றிருக்கிறார்கள். ஒரு சிறு படமும் தந்திருக்கிறார்கள்...

"சார் நான் எப்பயாவது அடிப்பேன்"..
எத அடிப்பீங்க? இது அடியேன்..
எல்லா ஆட்டோக்காரங்களும் அடிப்பாங்களே அதத் தான் சார்
எனக்கு புரிந்தது இவர் சோம பானத்தைத் தான் சொல்ல வருகிறார் என்று ..

அன்னிக்கு அப்டித்தான் சார் அடிச்சிட்டு தூங்கிட்டேன்..
கனவுல வந்துட்டார் சார் .. மாட்டிக்கிட்டேன் சார் என்கிறார்

சுவாமி கனவில் வந்து
" என்னய்யா.. இன்னிக்கு ரொம்ப ஜாலியா இருந்த போல.. ஜாக்ரத.. 

வசமா மாட்டிருக்கேன் சார் என்றார்..

நானும் தான் சார் .. மாட்டிக்கிட்டு கனவுல வெள வெளத்துப் போய் நின்னுருக்கேன்.. சுவாமி கோபமா ஒரு பார்வ பாத்தார் பாருங்க .. இப்ப நெனச்சா கூட ஒடம்பு நடங்கும் சார் " இது அடியேன்..

சுவாமியிடம் நாம் அனைவரும் மாட்டிக் கொண்டுதானே இருக்கிறோம்..
அந்த மாட்டுதல் சுவாமிக்கும் நமக்குமான மாலை மாற்றுதல்.

"சாமி எதுக்கு சார் அய்யானு கூப்டறாரு. என்ன.. வாடா போடா னு தானே கூப்டனும் .. அது தான் சார் கரக்ட் என்றார்..


ஆமா சார்... நம்ம சுவாமி எப்பவுமே இப்படித்தான் சார்.. நமக்கும் போய் அருளறாரு .. பத்திரமா புடிச்சு வெச்சிருக்காரு..‌ காப்பாத்தராரு.. நெனச்சாலே அழுகையா வருது சார் " இது அடியேன்

ஆனா ஒண்ணு சார் நம்ம சாமி நல்ல தமிழ் பேசறாரு.. அவருக்கு தெரியாத மொழியா சார் ! என்றார் வேலன் சாய்ராம்

எனக்கு ஒரு நிமிடம் வண்டியை ஓட்டுவது வேலனா இல்லை கண்ணனா என நினைக்கத் தோன்றியது .. இப்படி சுவாமியின் பேராற்றலை சாயி கீதையாக  விவரிக்கிறாரே எனத் தோன்றியது..

இறங்கும் இடம் வந்தது..

இப்போது அடியேனின் சிறு அணில் சேவை சுவாமியின் உத்தம பக்தர்களை நம் சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைப்பது..

வேலனும் குரூப்பில் இணைந்து கொண்டார்..

இருவரும் சுவாமியைப் பற்றிப் பேசப் பேச குழந்தையாகிப் போனோம்..

சார் சாமி மோதிரம் என்றார் விரலைக் காட்டி..
சாய்ராம் இங்க பாருங்க என அடியேன் மோதிரத்தையும் காட்டினேன்..

சுவாமி தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொள்வதைப் போல்
இரண்டு சுவாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

எனக்கு வெள்ளி மோதிரத்த விட பத்து ரூபா மோதிரம் தான் சார் புடிக்கும்..
இந்த மோதிரம் கூட சின்ன வயசுல கிடைக்காம ரொம்ப தவிச்சிருக்கேன்.. ஸ்க்ரேச் ஆனாலும் அதத் தான் போட்டுட்ருப்பேன் என்றேன்..

அவரும் ஆமோதித்தார்..

அவருக்கு சுந்தரம் விபூதி பிரசாதம் .. 2020 பாக்கெட் சைஸ் படம் .. இன்னொரு சுவாமி படம் என அனைத்தும் சுவாமி அடியேன் மூலமாக அளிக்கச் செய்தார்..

கோடம்பாக்கத்திலிருந்து சாலிகிராமத்திற்குமான
வழி நிரம்ப சுவாமி எனக்கு வேலனின் பக்தியையேப் பகவத் கீதை வகுப்பு எடுத்தார்..

உங்கள பத்தி சத்ய சாயி யுகம் பிளாக்கில் எழுதப் போறேன்.
எழுதுங்க சார் என்றார்

இறங்குகையில் வேலன் இன்று சொன்ன கடைசி வார்த்தை "சாமி என்ன ரொம்ப திருப்தியா வெச்சிருக்கார் சார்" 

எவ்வளவு சத்தியம்..
திருப்தியாக இருப்பவனே உண்மையான செல்வந்தன்.. 
திருப்தியோடு இருப்பவனே நிஜமான சுவாமி பக்தன்..

சுவாமி கடவுள் என்பதைத் தாண்டி .. சுவாமி மட்டுமே கடவுள் எனும் நிலைக்கு அந்த ஆட்டோ பயணம் அடியேனைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது

சாய்ராம்🙏🏻

பக்தியுடன்
வைரபாரதி✍🏻

2 கருத்துகள்:

  1. Excellent. Really enjoyed the above experience.SWAMI BLESSED.SAIRAM

    பதிலளிநீக்கு
  2. xlent.Very great devotee of Swami.I have travelled once n his auto..It was very dark when i returned home from Valasaravakkam sanithi..I was not feeling well..I was praying to Swami.then suddenly this auto turned up..I said Sairam when i sat n d auo to my surprise i found Swami's pic ... I was pleasantly surprised ...Then we spoke about Swami all through our journey..Jai Sai Ram
    Chandra Banu

    பதிலளிநீக்கு