தலைப்பு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடிதம் பெற்று திருமணம் நிகழ்த்திய சாயி தெய்வம்!


சுவாமி அனுகிரகம் செய்த கல்யாண வைபவங்கள் அநேகம்.. அதில் ஓர் அனுபவம் நெஞ்சைத் தொடும்படி இதோ..

கூடலூர் சமிதியின் ஆரம்ப காலம்தொட்டு, சமிதியின் உறுப்பினராகவும், 1960 முதல் பகவானின் பக்தராகவும், முக்கியமாக சமிதியில் பூஜையை காலம் தவறாமல் செய்து கொண்டு வந்திருக்கும் மூத்த சகோதரர், ஸ்ரீ M.P. மேனன் அவர்கள், மிகவும் வறுமையில் இருந்த காலத்தில், வயதாகி கொண்டிருக்கும் தனது மகளின் திருமணத்திற்கு வரன் அமையவில்லையே என மிகவும் வருந்தி, பகவானிடம் கோரிக்கை வைத்துள்ளார் .1986 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நான் அவரிடம், பகவானை தரிசிக்க புட்டபர்த்தி போகிறேன் எனக் கூறினேன். அப்போது அவர் ஒன்றும் பேசவில்லை. பிறகு நானாக அவரிடம், பகவான் எப்படியும் இண்டர்வியூ தருவார், நீங்கள் பகவானிடம் ஏதாகிலும் கேட்பதாக இருந்தால், ஒரு கடிதத்தை தாருங்கள். நான் அதை பகவானிடம் அளிக்கிறேன் என கூறினேன். அவர் சந்தோஷப்பட்டு மறுநாள் ஒரு கடிதத்தை தந்தார்.


நானும் அதை எடுத்து சென்றேன். பகவானும் இண்டர்வியூ தந்தார். இன்டர்வியூ முடிந்து வெளிவரும் சமயம், நான் கடைசியாக வரும் பொழுது, திடீரென அந்த கடிதம் எனது பாக்கெட்டில் இருப்பதை உணர்ந்து பகவானிடம் அந்த கடிதத்தை அளித்தேன். என்ன அதிசயம் பகவான் நடத்தினாரோ தெரியவில்லை. 15 நாட்களுக்குள், அக்டோபர் மாதம் 22ம் தேதி அவரது மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது. எந்த ஒரு நிலையிலும் மனம் தளராமல் பகவான் மேல் நம்பிக்கை வைத்து வைராக்கியத்துடன் காலம் தவறாமல் பூஜை செய்து வந்துள்ள பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவான் நல்ல வரனை கொடுத்து எல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணத்தை நடத்தி உள்ளார். பக்தரை பகவான் கைவிடுவதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும். தற்போது தனது இரு மகன்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களின் மற்றொரு மகளுக்கும் மணம் முடித்துள்ளார். தனது 75 ஆவது வயதிலும் தினமும் சமிதிக்கு  வந்து சுத்தம் செய்து விளக்கேற்றுகிறார்.

ஆதாரம்: ஸ்ரீ.ஜோகையா லிங்கராஜ் அவர்கள் எழுதிய 'இதயத்தோடு  இதயம்' என்ற புத்தகத்திலிருந்து..


🌻சுவாமி எதையும் பக்தரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்ட அனுகிரகிக்க வேண்டிய அவசியமே இல்லை... சுவாமிக்கு அனைத்தும் தெரியும் என்பதற்கு இந்த சம்பவ அனுகிரகம் ஓர் சிறந்த உதாரணம்... வாழ்வில் ஒருவருக்கு திருமணம் முக்கியமானது... அதில் "மணம்" எனும் இரண்டாம் பாதி பெயரை சுவாமியின் அனுகிரகம் எனும் நறுமணமே நிகழ்த்துகிறது! 🌻



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக