தலைப்பு

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

🚔 போலீஸ்காரர் ரூபத்தில் சோதிக்க வந்த சாயி பகவான்!


வெற்றியிலும் தோல்வியிலும் லாபத்திலும் நஷ்டத்திலும் இன்பத்திலும் துன்பத்திலும் நிலை தடுமாறாது ஒரே மாதிரியாக இருங்கள். உங்கள் மனதை அதற்கேற்ப ஜாக்கிரதையாகப் பழக்குங்கள். ஆனந்தத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி இதுதான்!

- ஸ்ரீ சத்ய சாய் பாபா 

புது தில்லியைச் சேர்ந்த ஆட்டோ காரர் திரு அசோக்குமார் அவர்களின் சாய் அனுபவங்கள்...

புது டில்லியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தான் சோக்குமார். அவன் பலே ஆசாமி. ஆட்டோவில் சூடு போடுவது அவனுக்கு கை வந்த கலை. எப்படியும் பாதிக்குப் பாதி காசு பார்த்துவிடுவான்.

அது 1972ஆம் ஆண்டு. ஆட்டோ டிரைவர் அசோக்குமாருக்கு வயது 21.
அன்றைய தினம் கோல்ஃப் லிங்க்ஸ் செல்ல சவாரி ஒன்று வந்தது. வழக்கம்போல் சூடு மீட்டரை ரெடி செய்து கிளம்பினான். பயணி இறங்கிய இடத்தில் நல்ல கூட்டமாக இருந்தது. வழக்கம்போல் டபுள் காசை வாங்கியபடியே “என்னங்க இங்க கூட்டம்? வி.ஐ.பி. யாரும் வந்திருக்காங்களா?’ என்றான்.

“ஆமாம்பா. ஸ்வாமி வந்திருக்காரு. சத்யசாய்பாபா.’
அவனுக்கு ஏதோ ஓர் ஆர்வம் உந்தித்தள்ள உள்ளே நுழைந்தான். பாபாவை நேரில் பார்த்தது அவனுக்கு அதுதான் முதல் முறை.
தூரத்திலிருந்து பாபாவைப் பார்த்தவுடனேயே அசோக் குமாருக்குள் அலை அடித்தது. ஷாக் அடித்தது. உடல் துடித்தது. கண்களை மூடி அப்படியே உட்கார்ந்தான். அவன் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தொலைவில் காட்சி தரும் பாபாவைப் பார்த்தபடியே அவன் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டான்.
என்ன அது?


“நான் இனிமேல் ஆட்டோவில் சூடு வைக்க மாட்டேன். எந்தப் பயணியையும் ஒரு பைசா கூட ஏமாற்ற மாட்டேன. இது சத்தியம்.’
எவ்வளவு பெரிய மாற்றம் பாருங்கள். அசோக்குமாரை பாபா பேட்டிக்கெல்லாம் அழைக்கவில்லை. அவனும் அதற்கெல்லாம் ஆசைப்படவுமில்லை. கூட்டத்தில் கடைசியில் நின்று அவரைப் பார்த்தான். அவ்வளவுதான். அதற்குள் அவன் மனசுக்குள் பாபா புகுந்த கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார். எத்தனை பேருக்கு இப்பேர்ப்பட்ட மன உயர்வை பாபா இதுபோல் நிறைவேற்றியிருக்கிறாரோ, யாரிடம் இருக்கிறது கணக்கு?
புத்துயிர் பெற்றது போல் எழுந்தான் அசோக்குமார். நடந்தான். வாசலில் பளபளவென பாபாவின் படம் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அதை வாங்க வேண்டும் போல் அவனுக்க தோன்றிற்று. நெருங்கினான். விலை கேட்டான். சொன்னார்கள். அவ்வளவு காசு அவனிடம் அப்போது இல்லை. ஏமாற்றத்துடன் நடந்தான்.

ஆட்டோ மீட்டரை சரி செய்தான். அன்றைய தினம் யாரிடமும் ஒரு பைசா கூட அவன் வாங்கவில்லை.

மறுநாள் ஆர். ராமானுஜர் என்ற சாயி பக்தரை ஏற்றிக் கொண்டு பயணித்தான். அவரிடம் பாபாவின் முன்னால் தான் ஏற்றுக் கொண்ட சத்தியத்தைப் பற்றியும், பாபா தனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதையும் நெகிழ்ச்சியுடன் சொன்னான். பயணிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் வீட்டு பூஜையறையிலிருந்து ஒரு பாபாவின் புகைப்படத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகவும் வழங்கினார். அது அவன் வாங்க ஆசைப்பட்ட படம்! காசு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிப் போன படம்.

சந்தோஷமாகக் கிளம்பிய அசோக் குமாரிடம் ஆட்டோ கட்டணமாக பத்து ரூபாயைக் கொடுத்தார் ஆர். ராமானுஜம். அவன் ஒழுங்காக மீதி காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். இன்னொரு சவாரியை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானவன் தன் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தவன், வண்டியைக் கிளப்பாமல் மீண்டும் ராமானுஜத்திடமே வந்தான். “சார், நீங்க பத்து ரூபாய் நோட்டைக் எங்கிட்ட கொடுக்காமலேயே மீதி காசை வாங்கிட்டீங்க. மறந்துட்டீங்க போலிருக்கு. எங்கிட்ட இல்லை சார்.’ என்று தன் சட்டைப் பையைக் காட்டினான்.


ராமானுஜத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயமாக தான் பத்து ரூபாய் கொடுத்திருக்க இவன் எங்கேயாவது மறைத்து வைத்துவிட்டு கதை கட்டுகிறானோ? பாபா பற்றி பரவசமாகப் பேசியவன் அதற்குள்ளாகவா ஏமாற்றுவனா? அல்லது ஒ வேளை தான்தான் கொடுக்க மறந்துவிட்டோமா? குழப்பத்துடன் பத்து ரூபாயை கொடுத்து அனுப்பி வைத்தார்.
மறுநாள் காலை டிரைவர் அசோக்குமார் அவரது வீடு தேடி வந்தான். ஒரு பத்து ரூபாய் நோட்டை அவர் முன் நீட்டினான். அது ஒரு விசித்திரமான முறையில் சுருட்டப்பட்டிருந்த அடையாளம் தெரிந்தது.

“சார், என்னை மன்னிச்சுடுங்க. நேத்திக்கு நீங்க முதல்ல கொடுத்த பத்து ரூபாயை நான் ஆட்டோவுலயே தவற விட்டுட்டேன் போலிருக்கு. உங்களுக்கு அப்புறம் வண்டியில் ஏறின ஒருத்தர் அதை எப்படியோ அபேஸ் பண்ணிட்டாரு. நான் என் கையில் எப்ப காசு வந்தாலும் அதை ஒரு மாதிரி சுருட்டி வைக்கிறது வழக்கம். அப்புறம் அந்த ஆளு என்ன மீட்டர் காசு தரப்போ, நான் சுருட்டி வச்சிருந்த நோட்டையே கொடுத்தான். நான் விடுவேனா? அந்த ஆள் கிட்ட சண்டை போட்டு காசை வாங்கிட்டேன். அதற்குள்ள ஒரு கூட்டமே கூடிடுச்சு. ஒரு போலீஸ்காரர் கூட வந்துட்டாரு.

அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா சார்? அந்த பத்து ரூபாயை என்னடா பண்ணப்போறேன்னு போலீஸ்காரர் கேட்டாரு. நான் உடையவர்ட்ட ஒப்படைக்கப் போறேன்னு சொன்னேன். உடனே அந்த போலீஸ்காரர், “டேய், அது பழைய கதை. அந்த ஆசாமி காசு திரும்பக் கிடைச்சதை வந்து பார்க்கப் போறானா என்ன? அதனால ஆளுக்கு அஞ்சு ரூபாயா நாம எடுத்துப்போம்’னு சொன்னாரு.


போலீஸ்னா நான் பயந்துடுவேன்னு நினைச்சாரு போல. பழைய ளா இருந்தா நானும் சரீன்னு சொல்லியிருப்பேன். போலீஸ்காரர் வேற ஏதாவது கேஸ்ல நம்மளை மாட்டி விட்டுடுவார்னு பயந்து போய் காசை கொடுத்திருப்பேன். நான் இப்ப பாபா ஆளு சார். என்ன சொன்னேன் தெரியுமா? என்ன சார், மிரட்டறீங்க? என்னை எல்லாம் எதுவும் பண்ண முடியாது. எந்த ஆபத்து வந்தாலும் காப்பாத்த எனக்கு பாபா இருக்கார் சார். அநியாயமா வர காசு ஒட்டாது என்று சதம் போட்டேன். அந்த போலீஸ்காரர் பதிலே சொல்லலை. ஒரு அஞ்சு நொடி தான் இருக்கும் நான் பார்க்கப் பார்க்க போலீஸ்காரர் அப்படியே மாயமா மறைஞ்சுட்டாரு. அப்புறம் தான் புரிஞ்சது பாபா தான் என்னுடைய நேர்மையை சோதனை செய்ய போலீஸ்காரர் ரூபத்தில் வந்து இருக்கிறார் என்றான்.

🌻 இந்தச் சம்பவம் நமக்கு எல்லாம் ஒரு பாடம்.  ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறை பாபாவிடம் சொல்லி பிரார்த்தனை செய்து இனிமேல் இதுபோன்று தவறைச் செய்ய மாட்டேன்  என்று சத்தியம் செய்வார்கள். அப்படியே அந்த சத்தியத்தை காற்றிலும் விட்டுவிடுவார்கள்.  இது மிகப்பெரிய தவறு. பகவான் ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்.  நம்மை சோதிக்க எந்த ரூபத்திலும் பகவான் வருவார் என்பதை இந்த சம்பவம் நமக்கு தெளிவுபட  உணர்த்துகின்றது.  🌻

ஆதாரம்: சத்யம் சிவம் சாய்பாபா - ப்ரியா கல்யாணராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக