தலைப்பு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

காயத்ரி மந்திரம் எனும் பாதுகாப்புக் கவசம்!!


மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரமே... காயம் எனும் உடம்புத் திரிக்கு ஞான ஜோதியும்.. காவல் பிரகாசமும் தருகிற காயத்ரி மந்திர உச்சரிப்பால் ஒருவருக்கு நிகழ்ந்த பாபாவின் பாதுகாப்பு மகிமை இதோ...

ஆங்கில விரிவுரையாளராக செகந்திராபாத்திலுள்ள ப்ரீதா சேதுராம் சிறந்த பாபா பக்தை. கல்லூரிக்கும் மற்ற இடங்களுக்கும் ஸ்கூட்டரில் செல்லும் போது இறைவன் திருநாமத்தை ஓதிக்கொண்டே செல்வது அவர் வழக்கம்... 

ஒருமுறை, பள்ளியில் படிக்கும் நான்கு வயதான குழந்தை சங்கீதாவை ஸ்கூட்டரில் முன்புறம் நிற்க வைத்து கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் ப்ரீதா. வழக்கம் போல அன்னையும் மகளும் , காயத்ரி மந்திரத்தை வாய்விட்டுச் சத்தமாக ஓதிக்கொண்டு வந்தனர். போக்குவரத்து மிகுந்த சாலை அது, எதிரே வந்த ஒரு பெரிய லாரி, ஸ்கூட்டர் மேல் மோதுவதுபோல வந்தது. அதைத் தவிர்க்கத் தடையை மிதித்து, சற்று வளைத்து நிறுத்தினார் ப்ரீதா.

அப்போது, ஸ்கூட்டர் பிடியை லேசாகப் பிடித்திருந்த குழந்தை ஒரு குலுங்குக் குலுங்கி நின்ற வண்டியிலிருந்து, கீழே உருண்டு போய் விழுந்துவிட்டாள். அங்ஙனம் அவள் விழுந்ததும், அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார், அவள் அருகே 'க்ரீச்' சென்று பேரொலியுடன் வந்து நின்றது. மயிரிழையில் உயிர் தப்பினாள் குழந்தை. கார் ஓட்டுனர், விழிப்பாகத் தடையை அழுத்தி மிதித்து வண்டியை நிறுத்தியிராதிருந்தால், குழந்தையின் மீது இடிப்பது போல, அருகில் வந்துவிட்ட காரின் கீழ் அகப்பட்டுக் குழந்தை கூழாகியிருப்பாள்.

காயத்ரி மந்திரத்தின் மகிமையால், தான் குழந்தை உயிர் பிழைத்தாள் என்று உறுதியாக உணர்கிறார் ப்ரீதா. ''காயத்ரி மந்திரம் என்பது பாதுகாப்புக் கவச மந்திரம்'', என்று சுவாமியின் அருளுரைப்படி தான் அன்று ஓதி வந்ததை வியந்து போற்றி, தன்னை அங்ஙனம் ஓதவைத்த பகவானையும் மனம் கனிய வணங்குகிறார் ப்ரீதா

மற்றொருமுறை ப்ரீதா மட்டும் கல்லூரியிலிருந்து ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்... ஒரு திருப்பத்தில் கண்மூடித்தனமாக வந்த ஒரு சைக்கிள்காரன், ஸ்கூட்டர் மேல் மோதி விட்டான். இருவரும் வாகனங்களோடு கீழே சரிந்தனர். சைக்கிள் காரனுக்கு ஒன்றுமே நேரவில்லை. எனவே  சைக்கிளோடு  அவன் பறந்து சென்றுவிட்டான். ஆனால் இடித்துக்கொண்டு விழுந்த வேகத்தில் ப்ரீதா, முதலில் விழ, அவர்மேல் ஸ்கூட்டர் சரிந்தது. கன்னத்தில் கண் அருகில் எல்லாம் சிராய்ப்புக் காயங்கள்.வலது முழங்கைக்குக் கீழே சதை பிய்ந்து, சற்று பெரிய காயமாக பட்டுவிட்டது. அவ்வளவுக் கனமான ஸ்கூட்டர் கைமேல் விழுந்ததற்கு ஏதேனும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சினார். மருந்தர் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர் அருகிலிருந்தவர்கள். நல்லகாலமாக எலும்பில் ஏதும் ஊறின்றி வெறும் மேல்காயம்தான் என்று மருந்திட்டுக் கட்டுப்போட்டு அனுப்பினர் மருந்தர். ஒரு சில நாட்களில் காயங்களும் ஆறிவிட்டன.

சுவாமியின் நாமத்தை ஓதிக்கொண்டே சென்றதால்தான், பெரிய அடியாக ஏதும் நேராமல் தப்பிக்க இயன்றது என்று பகவானுக்கு நன்றி செலுத்தினார் ப்ரீதா


ஆதாரம்: 'புஷ்பராகம்' புத்தகம் 


காயத்ரி எனும் மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது பிரபஞ்ச சக்தியானது நமது உடம்பைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பு வளையத்தை இடுகிறது... ஆன்மாவுக்கும் அதுவே அரணாக மாறுகிறது! உதடு அசையாமல் வெறும் மனதால் (அஜப முறை) காயத்ரி மந்திரத்தை நாம் ஜபிக்கிற போது நமது சரீரமே மந்திர சரீரமாக மாறிவிடுகிறது... மூன்று உலகத்திற்கும் உரிய மேன்மையான ஞான பிரகாசத்தை தியானிக்கிறேன் என நாம் இதனை மீண்டும் மீண்டும் ஜபிக்கிற போது அறியாமை விலகுகிறது.. மனம் பக்குவப்படுகிறது... இதனையே சூர்ய காயத்ரி எனவும் அழைக்கிறார்கள்... எவர் இதை தொடர்ந்து ஜபிக்கிறார்களோ அவர்களை பாதுகாப்பது மாதா காயத்ரியின் கடமை.. இந்த மகா மந்திரம் தேச/மத/மொழி/ குல/பால் பேதம் கடந்து அனைவரும் உச்சரிக்க வேண்டும் என அதனை பரப்பி முதன்முதலில் சமூக ஆன்மீகப் புரட்சி புரிந்தது இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே என்பதும் குறிப்பிடத்தக்கது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக