தலைப்பு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

💧தண்ணீர் தண்ணீர்!


"சாயி நிறுவனங்களின் மாவட்ட தலைவராய் நான் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத ஒன்று.

மதுரைக்கு, சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு கிராம சேவைக்காக சென்றிருந்தோம். அது ஒரு குக்கிராமம். எளிய மக்கள். அங்கு கடுமையான குடிநீர் பஞ்சம். நாங்கள் சாயி சேவையை பற்றி பேசத் தொடங்கும் போது, “உங்கள் பேச்சு இருக்கட்டும். நாங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் வாடுகிறோம். உங்களால் எங்களுக்கு தண்ணீர் வரவழைத்துத் தரமுடியுமா?” என்று கூட்டத்தினர் கேட்டனர்.

நான் சொன்னேன். “அரசாங்கத்திடம் மனு ஒன்று கொடுக்க வேண்டுமானால் கூட, வழிமுறை இருக்கிறது. எப்படி எழுத வேண்டும், யார் மூலமாக கொடுக்க வேண்டும்? எந்தத் துறைக்கு? இப்படி பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், பகவானிடம் விண்ணப்பித்த அடுத்த நிமிடமே நீர் வரவேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? கட்டாயம், பகவான், நம் பிரார்த்தனைக்கு இணங்கி நீரை வரவழைப்பார். ஆனால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. நாம் அனைவரும் மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்திலிருந்து தண்ணீர் வேண்டி பிரார்த்தனை செய்வோம். 20 அடியில் இளநீர் மாதிரி தண்ணீர் கிடைக்கும்” என்று என்னை அறியாமல் சொல்லிவிட்டேன்.

மனமுருகி பிரார்த்தித்தோம். ஸ்வாமியைப் பற்றியும் அவரது சேவையைப் பற்றியும் பேசினேன். கூட்டம் கலைந்தவுடன், அந்த கிராமத்தை சேர்ந்த சமிதி தலைவர், “என்ன சார் இது. 20 அடியில் இளநீர் மாதிரி தண்ணீர் கிடைக்கும்னு கூட்டத்தில் சொல்லிட்டீங்களே வரல்லன்னா…உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்களே சார்” என்றார்.
நான் “பகவான் நிச்சயம் செய்வார். இந்த கிராமத்தின் துயர் தீரும். தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்” என்று கூறி ஊர் திரும்பினேன்.

சில நாட்கள் கழித்து நள்ளிரவில் ஒரு தந்தி!
பிரித்துப் படித்தால் எனக்கு இன்ப அதிர்ச்சி! அந்த கிராமத்தில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது 20 அடியில் சுவையான நீர் கிடைத்திருப்பதாகவும் அந்த நீர்க்குடத்தை காவடி எடுத்து விழாவாகக் கொண்டாடப் போகிறார்கள் என்றும் அதற்குத் தலைமை தாங்க நான் வரவேண்டும் என்றும் இருந்தது.
பகவானின் கருணைக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்னேன். நான் அங்கு சென்ற போது, கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிய பகவானை எல்லோரும் வாழ்த்தினார்கள். இன்று அந்தக் கிராம மக்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.

- திரு. P.S.லட்சுமணமூர்த்தி. (முன்னாள் மாவட்டத் தலைவர், SSSSO, மதுரை மாவட்டம்) (ஆதாரம் – இறைவனுடன் இனிய அனுபவங்கள், பக் – 136)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக