தலைப்பு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

கை நிறைய ரேகை; பை நிறைய செல்வம்!


ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையில் பகவான் நிகழ்த்திய அற்புதம். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த வைசியர் அவர். ரொம்ப நல்லவர். சாய் பக்தர். ஆனால் அவருக்கு ஆரம்பம் முதலே பணக் கஷ்டம் இருந்தது.
என்ன தொழில் செய்தாலும் எல்லாமே லாஸ்தான். நொந்து போனார். துவண்டு போனார்.

வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. பேசாமல் தற்கொலை செய்து கொண்டுவிடலாம் என்ற முடிவும் வந்தார்.
அதற்கு முன்னால் ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடலாம் என்று, ஹைதராபாத்திலேயே சிறந்த, கைரேகை சாஸ்திர நிபுணரைப் போய்ப் பார்த்தார்.

வைசியரின் கைரேகையைப் பார்த்த நிபுணர் உதட்டைப் பிதுக்கினார். “என்னப்பா, நீ என்ன செய்தாலும் அது நஷ்டத்தில் போகிறதா? மிகவும் நொந்து போயிருக்கிறாய்? தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று மனம் சொல்கிறதா?’ பேசிக் கொண்டே போனார் நிபுணர்.
அரண்டு போனார் வைசியர். “நான் என்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இன்னும் பேசக் கூட ஆரம்பிக்கவில்லை. என் மனத்தில் உள்ளதைக் கூட சரியாகச் சொல்கிறார். நிச்சயம் என் கஷ்டத்துக்கு இவர்மூலம்தான் விடிவு கிடைக்கும்’ வைசிகர் முகத்தில் தன்னம்பிக்கை வந்தது.

ஆனால் கைரேகை நிபுணர் அடுத்து சொன்னது அதிர்ச்சியான விஷயம், “இதோ பாருங்கள் வைசியரே, உங்கள் வாழ்க்கை முழுக்க அப்படித்தான் கஷ்டம் தொடரும். நீங்கள் முன்னேறவே முடியாது. இப்படி நான் சொல்வதற்காக வருத்தப் படாதீர்கள். காரணம் உங்கள் கையில் தனரேகையே இல்லை. எல்லாம் பூர்வ ஜென்ம பலன். இந்த ஜன்மம் உங்களுக்கு இப்படித்தான். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கைவிரித்து விட்டார், அந்த நிபுணர்.
தலையில் இடி, மின்னல், பூகம்பம் எல்லாம் விழுந்தது மாதிரி இருந்தது வைசியருக்கு மனம் சிதறினார். கையில் தனரேகையே இல்லை என்றால் தனம் எங்கிருந்து வரும்?
நடைப்பிணமாக வீட்டுக்குப் போனார். படுக்கையில் விழுந்தார். தேம்பித் தேம்பி அழுதார். கடவுளே என்னை ஏன் படைத்தாய் என்று கலங்கினார்.
நள்ளிரவு.
அந்த வைசியரின் கனவில் சத்ய சாய்பாபா வந்தார். பாபாவின் கையில் ஒரு கத்தி இருந்தது!
திடுக்கிட்டார் வைசிகர். பாபா அவர் அருகில் சென்றார். அவரது கையைப் பிடித்து இழுத்து கத்தியால் வைசியரின் உள்ளங்கையில் அழுத்தமாக ஒரு கீறு கீறினார். “ஆ’ என்று அலற ஆரம்பித்த வைசியர். “ண்டவா’ என்று முடித்தார். அப்படியே தூங்கிப் போனார்.
காலையில் கண் விழித்தவர் உள்ளங்கையைப் பார்த்தார். ஏதோ அதில் மாறுதல் தெரிவது போல் இருந்தது. மனதில் இருந்த கவலைகள் எல்லாம் மறைந்து தனக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டிருப்பதையும் தன்னம்பிக்கை மிளிர்வதையும் அவர் உணர்ந்தார்.

மறுபடியும் போய் அந்தக் கைரேகை நிபுணரிடம் கையை நீட்டினார். நிபுணர் அதிர்ந்து போனார். காரணம் வைசியரின் கையில் தனரேகை அழுத்தமாக, மிக அழுத்தமாக பதிந்திருந்தது. இப்படிப்பட்ட தனரேகையைக் கொண்டவர்கள் கோடீஸ்வரர்களாக கட்டாயம் ஆவார்கள் என்பது சாஸ்திரம். அப்புறம் என்ன? அந்த வைசியர் தொட்டது எல்லாம் துலங்கியது. லாபம் லாபம் லாபம்!
கையெழுத்தை பாபா திருத்தும்போது, பிரம்மனும் தலையெழுத்தைத் திருத்தி விட்டான்.

இன்றைக்கும் அந்த வைசியரின் குடும்பம், கோடீஸ்வர குடும்பமாக ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறது!

ஆதாரம்:  ஜனவரி 08,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக