தலைப்பு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அட்மிஷன் கொடுக்க மறுத்த கல்லூரி முதல்வருக்கு கனவில் டோஸ் கொடுத்த சுவாமி!


அந்த மாணவி, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஓர் இந்துத் தோழி உண்டு. அந்தத் தோழி, சத்ய சாய் பாபாவின் பக்தை. அவளது பக்தியைப் பார்த்து, அந்த மாணவிக்கும் பாபாமேல் இனம் புரியாத மதிப்பு வந்து விட்டது.

அந்த மாணவி, நகரத்தின் பிரபலமான கல்லூரியில் மேல்படிப்புக்காக விண்ணப்பித்திருந்தாள். நேர்காணலில் அவளுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் கல்லூரி முதல்வி மறுத்துவிட்டார். மாணவி நொந்து போனாள். தன் எதிர்காலமே கருகிவிட்டதாகக் கலங்கி போனாள். பாபாவைத் தீவிரமாகப் பிரார்த்தித்தாள்.

அன்றிரவு, அவளது கனவில் பாபா வந்தார். “நாளைக்கு மறுநாள் அதே கல்லூரிக்குச் செல். ஒரு தமாஷ் பார்ப்பாய்’ என்றார். மாணவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் எப்போதும் தன்னுடனேயே வைத்திருக்கும் பாபாவின் புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பாபாவை வணங்கியபடியே அந்தக் கல்லூரிக்குச் சென்றாள். இவள் உள்ளே நுழைந்ததும், ஒரு ஆசிரியை இவளிடம் வந்து “நீ இன்றைக்கு வருவாய் என்றுதான் பிரின்ஸிபால் மேடம் அதோ அந்த சர்ச் பக்கம் காத்திருக்கிறார். உடனே செல்’ என்றார்.

தன் காதுகளையே நம்பாமல் மாணவி சர்ச் நோக்கிச் சென்றாள். சில தினங்களுக்கு முன்னால் தன்னிடம் கண்டிப்பாக நடந்து கொண்ட கல்லூரி முதல்வர் இன்றைக்கு அன்பே வடிவமாக இவளை நோக்கி வந்தார்.
அவர் ஆங்கிலத்தில் கூறியது இதுதான்!

“குழந்தே! அன்றைக்கு உன்னைப் புறக்கணித்ததற்காக மனமார வருந்துகிறேன். மன்னிப்புக் கோருகிறேன்’ என்றார்.
மாணவிக்கு ஒன்றுமே புரியவில்லை. “மேடம், மேடம்..’ என்றாள்.
கல்லூரி முதல்வரம்மா பேசினார். “குழந்தே, நேற்று எனக்க விசித்திரமான கனவு வந்தது. அதில் ஒரு மகான் எனக்கு தரிசனம் தந்தார். ஹிந்து மாதிரிதான் தோன்றினார். அழகான சுருட்டை முடியே அவருக்கு ஜோதிப்பிரபை போல முகத்தைச் சூழ்ந்திருந்தது. அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் தெய்வீகமாக இருந்தார். அவர் என்னிடம் “பார், என் பாதத்தில் தஞ்சம் புகுந்த அந்தச் சிறு குழந்தையை நீ புண்படுத்திவிட்டாய். சத்தியமும் ஈகையுமே குறிக்கோள் என்று நீ உறுதி எடுத்துக் கொண்டிருந்தும் அந்தப் பெண்ணை நிராகரித்துவிட்டாயே. இதனால் நீ கடவுளையே புண்படுத்திவிட்டாய்’ என்று கூறினார்.
அது மட்டுமல்ல, அப்படிச் சொன்னவர் திடீரென கடவுள் போலவே காட்சியளித்தார். பிறகு நான் உனக்கு சீட் தருவதாக வாக்குறுதி அளித்தவுடன் அவர் மறைந்து விட்டார்.’

இப்படிக் கூறிய முதல்வி, அதை வெறும் கனவென்று தன்னால் தள்ள முடியாததைக் கூறி, “குழந்தே, அவர் யார்? விவரமாக என்குச் சொல்லேன்’ என்றார்.

மாணவிக்கு கண் மங்கிற்று. உடம்பு வியர்த்தது. கைகள் வெடவெடத்தன. அந்த நடுக்கத்தில் அவள் கையில் வைத்திருந்த பாபாவின் புகைப்படம், நழுவிக் கீழே விழுந்தது.
அதைப் பார்த்த கல்லூரி முதல்வி. “ஓ அதிசயம் பார். அன்புக் குழந்தையே, நேற்று என் கனவில் வந்தவர் இவர்தான்!’ என்றார்.
அப்புறம் என்ன? அந்த மாணவிக்குக் கல்லூரியில் சீட் கிடைத்தது. பாபாவுக்கு, முதல்வியின் இதயத்திலும் சீட் கிடைத்தது.

மாணவி, புட்டபர்த்தி செல்லும்போதெல்லாம் முதல்வி, அவள் மூலமாக பாபாவுக்குத் தன் வணக்கத்தை தெரிவிப்பார். கோரிக்கைகள் இருந்தாலும் சொல்வார்.
ஒரு முறை, மாணவி புட்டபர்த்தி புறப்பட்டபோது, “குழந்தாய், எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. அது என்னவென்று நான் சொல்ல மாட்டேன். அதை பாபா நிறைவேற்ற வேண்டுமென்று நான் பிரார்த்திப்பதாக நீ அவரிடம் சொல்’ என்றார், முதல்வி.
மாணவி, அதை அப்படியே பாபாவிடம் சொன்னாள்.

பாபா புன்னகைத்தார். “உன் மதர் பிரின்ஸிபல் கோரிக்கையை நான் சொல்லட்டுமா? அவருக்கு ரோம் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர் பஸிலிகாவிலேயே மரணம் அடையவேண்டும் என்பது ஆசை. அதோடு நானும் அவரது அந்திமத்தில் தரிசனம் தரவேண்டுமாம். அவரது இரண்டு கோரிக்கையும் கட்டாயம் நிறைவேறும் என்று சொல்’ என்றார் பாபா.

ஊருக்குத் திரும்பிய மாணவி, பாபா சொன்னதைக் கூறியபோது முதல்வி ஆடிப் போய்விட்டார்.

நாட்கள் நகர்ந்தன. அந்த முதல்வி, ரோமுக்குச் சென்றார். அங்கே பாபாவின் தரிசனம் தனக்குக் கிடைத்ததாக அவர் மாணவிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது மட்டுமல்ல, அவர் விருப்பப்படி அங்கேயே அவரது உயிரும் பிரிந்தது.
ஆமாம். பாபாவுக்கு மதம் எல்லாம் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவருடையது தனி மதம். அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பாபாவை தரிசிக்க புட்டபர்த்திக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். வணங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஆதாரம்:   மார்ச் 09,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக