தலைப்பு

சனி, 10 ஆகஸ்ட், 2019

வானில் சில தேவதைகள்!


ஷீர்டி சாயிபாபாவின் மிகச் சிறந்த பக்தை கலி சாரதா தேவி. அவர் ஒரு யோகினி. ஷீர்டி பாபா வாழ்ந்த காலத்தில், அவருக்குப் பல வருடங்கள் பணிவிடை செய்து, அந்த மாண்புமிகு தெய்வீகத்தை நேரடியாக கண்ட பாக்கியசாலி.

ஷீர்டி பாபா அவதாரத்தை நிறைவு செய்த பிறகு, 20 வருடங்கள் கழித்து சத்யசாய்பாபாவை தரிசிக்க புட்டபர்த்திக்க வந்தார் சாரதா தேவி. பிரசாந்தி நிலையத்தில் அம்மையாருக்குத் தங்க இடம் அளிக்கப்பட்டது. பாபா, கலி சாரதா தேவி அம்மையாரை “பெத்த பொட்டு’ என்றுதான் அன்பாக அழைப்பார்.
அது என்ன பெத்த பொட்டு?
சாரதா தேவி, நெற்றியில் பெரிதாக குங்குமப் பொட்டு வைத்திருப்பார். பெரிய பொட்டு! பெத்த பொட்டு!
ஒரு நாள் அதிகாலை!
பெத்தபொட்டு, புட்டபர்த்தியில் மலைமேல் இருக்கும் தபோவிருட்சத்தின் அடியில் அமர்ந்து கண் மூடி தியானம் செய்து கொண்டிருந்தார். இருள் இன்னும் விலகவில்லை.
தியானத்தை முடித்துக் கண் விழித்த பெத்த பொட்டு, ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார்.

பிரசாந்தி நிலையத்தில் பாபா இருக்கும் அறைக்கு மேலாக வானத்தில் சில தேவதைகள் நடமாடுவதை அவர் கண்டார். அவர்களிடமிருந்து வெண்ணிறப் பிரகாசம் வெளிப்பட்டு, வானத்திற்கே வெளிச்சம் தந்தது. மிகுந்த அழகுடன், மலர் மாலைகளை அணிந்து காணப்பட்ட அவர்கள் அப்படியே கிழக்குப் பக்கமாக வானத்தில் பறந்து சென்றார்கள்.

பெத்த பொட்டுவுக்கு விஷயம் புரிந்தது. தேவகணங்கள், சத்யசாய்பாபாவை தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள் என்பது அவருக்குப் புலனாகியது.
பரவசத்துடன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்த பெத்தபொட்டு, பஜன் ஹாலின் கதவை மெல்லத் திறந்தாள். அங்கே பக்தர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஆனால் வியக்கும்படியாக ஒரு சங்கீத ஒலி மட்டும் அங்கே கேட்டுக் கொண்டேயிருந்தது. உள்ளே இன்னும் சில தேவர்கள், பாபாவை தரிசனம் செய்துவிட்டு, தங்கள் இனிய சங்கீதத்தால் ஆராதித்து மகிழ்கிறார்கள் என்பது அவருக்குப் புரிந்தது.
காலையில் சாய்பாபாவைக் காணும்போது, பெத்தபொட்டு, “ஸ்வாமி, அதிகாலையில் தேவர்களும், தேவதைகளும் தங்களைச் சந்தித்து விட்டுத் திரும்பிச் செல்வதை பார்த்தேன்’ என்றார்.

“ஓ, அப்படியா, நீ பார்த்தாயா?’ என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார் பாபா.

ஆதாரம்: Autobiography - Peddabothu

பெத்த பொட்டு அம்மையாரின் அனுபவங்களை விரிவாக படிக்க.  அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்து "Autobiography of Peddabothu" என்று புத்தகம் ஒன்று இருக்கிறது. இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கிறது.

புத்தகம் கிடைக்குமிடம் : சென்னை சுந்தரம் கோவில்.

No.7, Sundaram Salai, RA Puram, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028

044 2434 6255 https://g.co/kgs/EABmh5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக