தலைப்பு

சனி, 17 ஆகஸ்ட், 2019

வாய் வழியே வெளியேறிய வலி!


பாபாவின் அனந்தபூர் பெண்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி திருமதி. தீபா அவர்களின் அனுபவங்கள். 

சாயி பகவானின் அனந்தபூர் பெண்கள் கல்லூரிக்கு நான் விண்ணப்பம் செய்ய நினைத்தேன். அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டேன். அப்போது பாபா சென்னையில் ஆபட்ஸ்பரிக்கு வந்திருந்தார். அவரது தரிசனம் பெறுவதற்காக அங்கே போய் இருந்தோம். வழக்கம்போல பாபா வெளியே வந்து கூட்டத்தினர்  ஏற்படுத்தியுள்ள வழியில் தரிசனம் கொடுத்தவாறு நடந்து சென்றார். என் தாயாரை பார்த்தார். அவள் கையில் உள்ள கவரை பார்த்தவுடன் புன்னகையோடு கையை நீட்டினார்.

கவருக்குள் இருந்ததோ விண்ணப்பத்தாள். அதை கொடுக்க விரும்பாத என் தாயார் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள். வீட்டுக்கு வந்தபின் கவரை என் தாயார் பத்திரமாக ஒரு இடத்தில் வைத்திருந்தாள். தேதி நெருங்கியதும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணி எடுத்தோம். ஆச்சரியம்! கவர் முழுவதும் விபூதியால் நிரம்பி இருந்தது. விண்ணப்ப தாளை எடுத்து அதை தட்டி தட்டி தான் எடுக்க வேண்டி இருந்தது. நிச்சயம் கல்லூரியில்' சீட்' கிடைக்கும் என்று எண்ணினோம். அதேபோல் பாபாவின் அருளால் கல்லூரியில் அட்மிஷனும் கிடைத்தது. 

நான் அடிக்கடி வயிற்று வலியால் அவஸ்தைப் படுவேன். பாபாவிடம் அதை போக்குமாறு வேண்டிக்கொள்வேன். ஒருநாள் கனவில் பாபா தோன்றினார்.
அப்போது நான் கனவில் வயிற்று வலியோடு துடித்துக்கொண்டிருந்தேன். பாபா வந்தார். என்னை (தொங்கபில்லா) திருட்டு பெண்ணே என்று செல்லமாக அழைத்து, என் தலையில் குட்டினார். நான் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறேன். 'என் வயிற்றுவலியை போக்குங்கள்' என்று வேண்டிக் கொள்கிறேன். அவர் என் அருகில் உட்கார்ந்தார். தன் கையில் விபூதியை வரவழைத்தார். என் வயிற்றில் தடவினார். 'வாய்வழியே கொண்டுவா, கொண்டுவா, என்று கூறினார்.

என் வயிற்றில் இருந்து ஏதோ எழுந்து வாய் வழியே வெளி வருவது போல் தோன்றியது. எனக்கு ஒரே வலி. வாய் வழியே அது வந்த பிறகு என் வலியும் முடிகிறது. என் கனவும் முடிகிறது. மறுநாளிலிருந்து என் வயிற்று வலி முழுவதுமாக மறைந்து விட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக