ஒரு விசிட்டர்: குரு என்பவர் யார்?
பாபா: குரு என்பவர் வழிகாட்டும் விளக்காகும்; ஆனால் அடைய வேண்டிய இலக்கு இறைவனே. ஒருவன் குருவிடம் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அவன் பூஜிக்க வேண்டியது இறைவனையே. இக்காலத்தில் குருவை பூஜிக்கிறார்கள். இது மிகவும் தவறு.
ஹிஸ்லாப்: அந்த குருவே இறைவனாக இருப்பின், எப்படி அது மாறுதலை ஏற்படுத்துகிறது?
பாபா: (சிரிக்கிறார்) அப்பொழுது அது பெரும் மாறுதலை தோற்றுவிக்கிறது. இறைவனே ஒருவனுக்கு குருவாக இருப்பின், எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். ஒருவன் கடவுளிடம் முழு நம்பிக்கையுடன், தன்னுடைய வாழ்வை அவரிடம் சரணடைய செய்துவிட்டால், அன்புள்ளம் கொண்ட தாய் தன்னுடைய குழந்தையை பேணுவது போல் ,இறைவன் தனது பக்தனை ரக்ஷிக்கிறான். எதைப்பற்றியும் கவலை கொள்ள தேவை இல்லை. உண்மையில் இறைவன் தான் குரு. ஈசன் உன்னுள் உறைகிறான். வெளியில் இருப்பவர்கள் குருமார்கள் அல்ல. அவர்கள் ஏதோ ஒரு விதமாக கற்பிப்பவர்கள். குரு என்றால் 'இருளை போக்குபவர் எவரோ அவரே' கடவுளே உள்ளே இருக்கும் இருளை போக்க முடியும்: அது கடவுளின் அருளே.
ஹிஸ்லாப்: சாதனா செய்பவர்கள், ஆரம்ப கட்டத்திலிருந்தே இறைவனை குருவாக தேர்ந்து, தங்கள் வாழ்வை அவரிடம் சரணடைய செய்ய ஏன் முடிவதில்லை?
பாபா: ( மறுபடியும் சிரித்து) அது அவ்வளவு சுலபம் அல்ல! செய்வதற்கு மிகவும் கடினமானது. முதலில் ஒருவன் மனத்தை கட்டுப்படுத்த வேண்டும். அது காட்டில் உள்ள ஒரு காட்டு யானையை போன்றது. அதை பிடித்து பழக்க வேண்டும். அதை அடக்கி பழக்கிய பின், சர்க்கஸில் இருக்கும் யானையைப் போல் அதை ஒரு சிறுவன் கூட ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார வைக்க முடியும். அது பயிற்சி மற்றும் பழக்கத்தின் பலனாகும்.
ஒரு விஸிட்டர் : மனதை பழக்குவது என்பது ஒரு பிரச்சினையாகவும், மிகவும் கடினமாகவும் தெரிகிறது. அன்பு என்னும் வழியை ஏன் பின்பற்றலாகாது?
பாபா: அன்பு அவ்வளவு சுலபமான வழி அல்ல. உலகில் அபரிமிதமான அன்பு ,நிதானமற்ற செயல்களுக்கு காரணமாக அமையலாம். இந்திய பண்பாடானது, மனைவிமார்களை முற்றும் வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களது அன்பை சமாளிக்கிறது. ஆனால் தெய்வத்தின் மீது அன்பு எல்லையற்றதாக இருக்கலாம் .அதனால் அபாயம் இல்லை. உலக வழக்கிலான அன்பு, ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். ஆனால் கடவுள் மீதான அன்பு எல்லையில்லாதது. கட்டுப்படுத்தப்படாதது. ஒன்றை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது பெரிய அபாயகரமானது அல்ல. ஆனால் தவறாக புரிந்து கொள்வது மிகவும் ஆபத்தானது. அமெரிக்காவில் பேசும்படம் மோசமாக இருப்பினும், அது இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் அது பெண்களிடம் உள்ள மதிப்பை சீர்குலைய செய்து, அழிக்கிறது.
ஹிஸ்லாப்: அமெரிக்க நாட்டு குருமார்கள் எப்படிப்பட்டவர்கள்?
பாபா: அமெரிக்காவில் இருந்து வருபவர்கள் சில யோக முறைகளை கற்று, அமெரிக்கா திரும்பி, 'யோகா நிலையம்' என்னும் விளம்பரம் செய்து கொண்டு, தலைவர்கள் ஆகிறார்கள். அவர்கள் சில புத்தகங்களைப் படித்துவிட்டு, எல்லா பிரச்சினைகளுக்கும் விடை தர முன் வருகிறார்கள். உண்மையான தலைவன் தன்னுடைய தத்துவத்தின்படி வாழ்ந்து காட்டியும், அப்யசித்தும் வந்தால், அவன் சொல்வதில் உண்மை தெரிவதால் மக்கள் அவனை கவனிப்பார்கள்.
ஹிஸ்லாப்: உலகில் நெடுகிலும் இருக்கும் இந்த பல குருமார்களை நாம் எப்படி கருதவேண்டும்? இவர்களில் சிலர் மிகவும் நல்ல செயல்கள் செய்வதாக தெரிந்தாலும், சுவாமி அவர்களை பற்றி சில நல்ல வார்த்தை கூட சொல்லவில்லை. அவர்கள் தெய்வத்தைப் பற்றி மிகவும் நன்றாக பேசுகிறார்கள். அவர்களை சுற்றி அனேக சீடர்கள் சேர்கிறார்கள்.
பாபா: தனக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று ஒப்புக் கொள்வதும், தானும் தன்னுடைய சீடர்களும் கூட்டாக விசாரணை செய்து, சாதனாவை அப்யசித்து, வரலாம் என்று சொல்வதும், அம்மாதிரியானவர்களுக்கு சரியான வழியாகும். ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. அவர்களுடைய வழியானது, இங்கொன்றும் அங்கொன்றுமாக விடைகளைத் தேடிக் கொள்வதும், பிறகு அதை தங்களுடைய சொந்த அறிவுச் செல்வம் போல் பாசாங்கு செய்து கொண்டு, அவற்றை கிராமபோன் தட்டு போல ஒப்புவிப்பதுமாகும். அம்மாதிரி ஒரு மனிதனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அந்த மகன் மீது அவனுக்கு எந்தவித செல்வாக்கோ, ஆளுமையோ இல்லை. தன்னுடைய குடும்பத்தாருக்கே வழி காட்ட முடியாத ஒருவன், தன்னை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நியமித்து கொள்கிறான். இது பரிகாசத்திற்குரியது.
ஆதாரம்: 'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக