தலைப்பு

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன். என் அருள் உனக்கு எப்போதும் உண்டு!’’


தஞ்சாவூரில் இருந்து ஓர் அம்மையார் சென்னையில் குடியிருக்க வந்தார். அவருடைய அன்னையார் நெடுநாட்களாகச் சுவாமியை வழிபடுபவர். மகளுக்கும் சுவாமியைப் பற்றிப் பலபல கூறியிருக்கிறார். மகளும் ஓரளவு சுவாமி பக்தைதான். எனினும் அவர் சுவாமியை அதுவரை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவர் சுவாமியிடம் அத்துணை ஈடுபாடு கொள்ளாதிருந்தார்.
சென்னைக்கு வந்த பிறகு, குடும்பத்தினர் சிலருடன் பிரிந்தாவனம் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வரிசையில் அமர்ந்திருந்தபோது, தரிசனம் தந்துவந்த சுவாமி, அம்மையாருடன் வந்தவர்களை நேர்காணலுக்குச் போகச் சொல்லிப் பணித்தார். அம்மையாருக்கு அந்த சூழ்நிலை புதிது. அதனால் நம்மைக் குறிப்பிட்டுக் கூப்பிடாததால், நான் மற்றவர்களோடு செல்வது சரியாகாது , என்று அவர்களுடன் போகாது நின்றுவிட்டார். அவர் உடன் வராததை மற்றவர்களும் கவனிக்கவில்லை.

நேர்காணலுக்குப் போனவர்களின் இடையே, புட்டபர்த்தியில் படிக்கும் மாணவர் ஒருவரும் இருந்தார். அவர் தஞ்சாவூர் அம்மையார் உடன் வராததைக் கவனித்தார். சுவாமியிடம் மெதுவாக, ''உறவினர் ஒருவர் வெளியிலேயே நின்றுவிட்டார். அவரையும் கூப்பிடலாமா ?'' என்று கேட்டார். ''நான் எல்லேரையும்தான் வரச்சொன்னேன். அவர் மட்டும் வராது நின்றுவிட்டார்! போ! போய்! அழைத்து வா!'' என்று மாணவரைப் பணித்தார் சுவாமி. 

மாணவரைத் தொடர்ந்து உள்ளே சென்ற பின்னரும், அம்மையாருக்குத் தயக்கமாகவே இருந்தது. அதற்கேற்ப,சுவாமி, மற்ற எல்லோரிடமும் பேசிவிட்டு, அம்மையாரை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட்டார் . அம்மையாருக்கும் மிகவும் வருத்தமாகிவிட்டது. நைந்த உள்ளத்துடன் கைகளைக் கூப்பியவாறு நின்றிந்தார்.

வெளியே சென்ற சுவாமி, மீளவும் உள்ள வந்தார். அம்மையார் அருகே வந்து, அவருடைய கூப்பிய கைகளைத் தம் திருக்கரங்களால் பற்றிக்கொண்டார். ‘’உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன். என் அருள் உனக்கு எப்போதும் உண்டு!’’ என்று வாழ்த்தி விட்டு, மறுபடியும் வெளியே போய் விட்டார். சுவாமி தொட்டுப் புனிதப்படுத்திய தன் கரங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்ட, அம்மையார் பரவசத்துடன் சென்னை திரும்பினார்.

சென்னை சேர்ந்த மறுநாளே அவருடைய உடல்நலம் குன்றியது. காலையில் படுக்கையிலிருந்தே அவரால் எழ முடியவில்லை. அன்று அவருடைய மகள் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இயலாது போகவே மாலையில் செல்லலாம் என்று மீளவும் படுத்துவிட்டார். பயண அசதியாக இருக்கலாம் என்று மற்றவர்களும் நினைத்தனர்.

ஆனால் அன்று மாலையே நிலைமை மோசமாகிவிட்டது, இரண்டு கால்களும் மரத்துப் போனது போல இருந்தன. தரையில் கால்களை ஊன்றவே முடியவில்லை. உடனே மருந்தரிடம் அழைத்து சென்றனர். அம்மையாரை நன்கு பரிசோதித்த மருந்தர், நரம்புகள் பாதிக்கப் பெற்றுள்ளன, என்றும், அந்தப் பாதிப்பு மூளைவரை சென்றுவிட்டால்,உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்றும், உடனே மருந்தகத்தில் சேர்த்துச் சிகிச்சை துவங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர், மேலும் நிலைமை எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதை மூன்று நாட்கள் சென்ற பிறகுதான் சொல்ல முடியும் என்று அச்சுறுத்தினர்.

மூன்று நாட்கள் மெதுவாகக் கழிந்தன. அன்று கண் விழித்தவர்,  ''இன்று சுவாமி என் கனவில் வந்தார், ஒரு பாக்கெட் விபூதியைப் பிரித்து என் தலையிலிருந்து கால் வரை தூவினார். பிறகு, ''எல்லாம் சரியாகி விடும்!''  என்றும் கூறினார்,'' என்று உறவினர்களிடமும் ஆனந்தமாகக் கூறினார் அம்மையார். அதுவரை நாக்கு உள்ளுக்கு இழுத்துக் கொண்டு சரவரப் பேசமுடியாமலிருந்தவர், தெளிவாக பேசினார். அதன் பிறகு, படிப்படியாக நலமுற்று வரவும் தொடங்கினார்.

''என்னை ஆட்கொண்டருளிய என் தெய்வமே! தாங்கள் பற்றிய என் கைகளை எப்போதும் நெகிழ விட்டேன்,  ஐயனே! தங்கள் திருவருள் என்றென்றும் என்மேல் நிலைத்து இருந்து, நான் நலமுடன் வாழ அருள்புரியுங்கள்,

''எம்பிரானே!'' என்று எல்லாம் வல்ல எந்தை பிரானை மனம் கனிந்து தொழுது வருகிறார், அந்த அம்மையார்.

ஆதாரம் : புத்தகம்  -  புஷ்பராகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக