தலைப்பு

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சத்திய சாயியின் தூதுவர்கள் (மெசஞ்சர்ஸ் ஆப் சத்யசாய்)


ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் whitefieldல் இருந்தேன். ( ஒயிட்பீல்டு பெங்களூர் அருகே உள்ளது). "மெசஞ்சர்ஸ் ஆப் சத்ய சாய் " அமைப்பின் தலைவர் உலகின் பல்வேறு பகுதிகளில் சேவை நடவடிக்கைகள், அவ்வமைப்பினரால் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கினார். அவர்கள் உண்மையான மனிதாபிமான சேவை செய்கிறார்கள். அன்பிற்குரிய சுவாமி தன்னுடைய அருளுரையில் அவர்களைப் பாராட்டினார்.

"இன்று மெசஞ்சர்ஸ் ஆஃப் சத்யசாய்" அமைப்பினர் நிறைவு நாளை கொண்டாடுகிறார்கள். அவ்வியம், சினம், வெறுப்பு போன்ற தீய குணங்களுக்கு அவர்கள் இடமளிக்கக்கூடாது. இவ் வமைப்பின் சார்பாக வெளிநாட்டில் சேவை செய்துவரும் உறுப்பினர்கள் ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஜப்பான் மற்றும் அமெரிக்க நாட்டின் முன்னாள் மாணவர்கள் பேசிய உரையை கேட்டீர்கள். அவர்களுடைய எண்ணங்களும், அவர்களுடைய உணர்ச்சிகளும், உயர்ந்தவையாக இருக்கின்றன. அவர்களுடைய உரைகள் முழுவதும் இனிமை நிறைந்திருந்தது. இதற்கு முன் பேசிய ஜப்பான் மாணவி (பிஎச்டி) பட்டம் பெற்றவர். அவர்கள் அதிகம் படித்திருந்தாலும், அவர்கள் சிறுதகையுடன் இருக்கின்றனர். அவர்களுடைய பக்தியும் சரணாகதியும் மற்ற அனைவராலும் பின்பற்றக்கூடிய முன்னுதாரணமாக திகழ்கிறது.
தீய குணங்களான பொறாமையையும், மற்றவரைப் பற்றி புறம் கூறுகளையும் விட்டு விடாமல் இருந்தால், ஒருவன் அதிக கல்வித் தகுதிகளையும், முனைவர் பட்டங்களையும் பெற்று என்ன பயன்?  இத்தகைய தீய குணங்களை நான் வெறுக்கிறேன். மனித குலத்திற்கு சேவை செய்வதற்காக அன்புடனும், உற்சாகத்துடனும், புனிதமான உணர்வுகளுடனும் சத்யசாயி என்ற நாமத்தில் பெயரால் ஒரு அமைப்பினை துவங்கி உள்ளீர்கள். நீங்கள் நிறைய நற்பணிகள் செய்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய உயரிய எண்ணங்கள் கீழ்நிலைக்கு வந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் பணிக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்களுடைய குணநலன்களே எனக்கு முக்கியமானது. நீங்கள் எங்கிருந்தாலும் சரி, கானகத்திலோ அல்லது வானத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ, நீங்கள் உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறாமை என்பது உண்மையில் ஒருவன் உயிரோடு இருக்கும்போதே, இறப்பதற்குச் சமமாகும். மற்றவர்களை தூற்றும் குணம் உங்களிடம் இருந்தால் நீங்கள் துன்பப்பட நேரிடும். எதற்காக நீங்கள் மற்றவரை விமர்சிக்கிறீர்கள்? அதற்கு பதிலாக உங்களது தீய குணங்களை விமர்சித்து கொள்ளுங்கள். உங்களது கெட்ட எண்ணங்களையும், தீய சிந்தனைகளையும் விட்டு விடுங்கள். நீங்கள் மற்றவரை தீய குணம் உள்ளவராக சித்தரித்து அவதூறு பேசாதீர்கள். நான் பலமுறை அறிவுரை கூறியும், பல மனிதர்களிடத்தில் எவ்வித மாற்றமுமில்லை. கடந்த 5 வருடங்களாக இது போன்ற மனிதர்களின் நடத்தையை கண்டு நான் வெறுப்படைந்து உள்ளேன். இது போன்ற அமைப்புகளை நிறுவுவதால் என்ன பயன்? சத்ய சாய் சேவா சமிதிகளையும் பஜனா மண்டலிகளையும் நடத்துகிறீர்கள். சமூக பணிகளை மேற்கொண்டு வாசகர் வட்டத்தையும் நடத்துகிறீர்கள். ஆனால் மனதில் அன்பு இல்லாமல் இப்பணிகளை செய்வதால் எவ்வித பயனும் இல்லை. "அன்பே கடவுள்" "அன்புடன் வாழ்க்கை நடத்து". ஆனால் மக்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பினை வளர்த்துக் கொள்கின்றனர். இத்தகைய மனிதர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டி தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஏனெனில் இத்தகைய தீய மனிதனைப் பார்த்து மற்ற நல்ல மனிதர்களும் கெட்டுப் போகிறார்கள்.

நீங்கள் உங்களது தீய குணங்களை விட்டு விட்டால் என் உயிர் உட்பட எதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். சத்ய சாய் என்ற நாமத்தை ஏற்றுக் கொண்டால், ஒர் அமைப்பு எத்தகைய உயரிய வகையில் செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல முறையில் நடந்து அமைப்பிற்கு உயர்ந்த மதிப்பினை ஈட்ட வேண்டும். ஆகையால் இன்றிலிருந்தாவது உண்மை, அன்பு, நீதி ஆகிய நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தெய்வீக நாமத்தில் அமைப்பின் பெயரினை வைத்துக்கொண்டு, அரக்கத்தனமாக செயல்களில் ஈடுபடக்கூடாது. இன்று உலகில் எங்கும் அமைதி காணப்படவில்லை. எங்கும் பிரிவினையே உள்ளது. மக்கள் தங்கள் இதயங்களை துண்டு துண்டாக உடைக்கிறார்கள். பின் எவ்வாறு அமைதி கிட்டும்? இந்த பிரச்சினைகளுக்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. இறைவனை நேசியுங்கள். இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணடைந்து விடுங்கள். உங்களது வாழ்க்கை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பினால் மற்றவருடைய நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.இதுவே உண்மையான சேவை."

ஆதாரம்: ஸாயி ஸ்மரண் - மருத்துவர் தி.ஜ. காடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக